நன்றி சொல்ல வார்த்தை இல்லை

நன்றி சொல்ல வார்த்தை இல்லை





"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு "


"எந்த நன்மையை மறந்தவர்க்கும்
வாழ வழி உண்டு.
ஆனால் ஒருவர் செய்த நன்மையை
மறந்தவர்க்கு ஒருநாளும் 
வாழ்வு இல்லை"
என்றார் வள்ளுவர்.

எதற்கு நன்றி சொல்ல வேண்டும்?
யாருக்கு நன்றி சொல்ல வேண்டும்?
அப்படி நான் நன்றி சொல்லும் அளவிற்கு
யாரும் எனக்கு எந்த 
உதவியும் செய்யவில்லை.

நான் உழைத்தேன்.
 நான் வளர்ந்தேன்.
இன்று இந்த இடத்தில் வந்து
நிற்கிறேன்.
யாருடைய உதவியையும் எதிர்பார்த்து
நான் என்றுமே இருந்ததில்லை.
இப்படி ஒரு தன்மான உணர்வு
குறுக்கே வந்து கேள்விகளைக்
கேட்டு நிற்கும்.

இந்தக் கேள்விகளும் அதற்கான
மறுப்புகளும் குறுக்கும் நெடுக்குமாக
 ஓடி ஒரு குழப்பமான மனநிலைக்குள்
நீங்கள் நின்று கொண்டிருக்கலாம்.

எத்தனைக் கேள்விகள் கேட்டாலும்
மறுப்புரைகளை அள்ளி வீசினாலும்
 நீங்கள் பெற்ற
உதவியை மறுதலித்துவிட்டுக்
கடந்து போய்விட முடியாது.
அப்படியே நீங்கள் நன்றி சொல்ல
மறுத்து நின்றால்,

"உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு "
என்று வள்ளுவர் எழுதிய வரி 
உங்களுக்காக  மட்டுமே
எழுதப்பட்டது என்பதை நினைவில்
வைத்துக் கொள்ளுங்கள்.

என்ன பயமுறுத்தலா?

நன்றி கெட்டவன் நன்றிகெட்டவள்
என்ற முத்துரை குத்தப்படும்.
பரவாயில்லையா?

நானா...?  .நானா....?
நான் நன்றி கெட்டவனா?
நான் நன்றி  கெட்டவளா?
எகிறுது இல்ல....சும்மா எகிறுது இல்ல....

யார் சொன்னது?
நீங்கள்தான்  ஏற்கெனவே நன்றி
சொல்லிவிட்டீர்களே....
நன்றி  மறவா நல்லுள்ளம்
உங்களுடையதாக  இருக்கும்போது
யார் உங்களைக் கை நீட்டி
குற்றப்படுத்திவிட முடியும்?

சரி.... வாருங்கள் . 
நீங்கள் நன்றி சொன்னவர்கள் பட்டியலில்
யார் யாரெல்லாம் இருந்திருப்பார்கள் ...
இருந்திருக்க வேண்டும் என்பதை
நினைவுபடுத்திப் பார்ப்போம்.

கடந்த ஜனவரி ஒன்றாம் நாள் 365
பக்கங்கள் கொண்ட ஒரு குறிப்பேடு
நம் கைகளில் கொடுக்கப்பட்டது என்பது
அனைவருக்கும் நினைவிருக்கலாம்.

அந்தக் குறிப்பேட்டின் ஒவ்வொரு பக்கத்திலும்
நாம் ஏதோ ஒன்றை எழுதிக் கொண்டே வந்தோம்.
வெறுமனே கிறுக்கல்களாக சில
பக்கங்கள் எழுதப்பட்டிருக்கலாம்.

முத்திரை பதித்த நிகழ்வுகள் 
பதிவு செய்யப்பட்ட
பக்கங்கள் இருந்திருக்கலாம்.
அழுகை,மகிழ்ச்சி,கோபம்,விரக்தி,
அவமானம்,எரிச்சல் என்று
பக்கத்திற்குப் பக்கம் மாறுபட்ட
உணர்வுகளின் பதிவுகள் இருந்திருக்கலாம்.
இருந்திருக்கும். 

எது எப்படியோ 
எல்லாப் பக்கங்களையும் எழுதி முடித்துவிட்டு,
ஒரு நாவலை முடித்துவிட்ட மனநிலையில்
இன்று நின்று கொண்டிருக்கிறோம்.
நாவலை முடித்துவிட்டோம்.
அதுவே நமக்குக் கிடைத்த வெற்றி
என்றுதான் சொல்ல வேண்டும்.


இப்போது முடித்து வைத்த 
365 பக்க நாவலை மறுபடியும்
புரட்டிப் பாருங்கள்.

இந்தக் குறிப்பேட்டைக் 
கையில் வாங்கிக் கொண்டு  
ஜனவரி முதலாம் நாள் நம்மோடு 
பயணத்தைத் தொடங்கியவர்கள் 
பலர் உண்டு. அவர்கள் அனைவரின்
நினைவுகளும் நம் மனக்கண்முன் 
வந்து போகும்.

சில பக்கங்களைப் படிக்கும்போது 
மகிழ்ச்சி ஏற்படும். 
சில பக்கங்கள் வேடிக்கையான
நிகழ்வுகளின் அணிவகுப்பாக இருந்திருக்கும்.
மெல்லிய புன்னகை அரும்ப வைக்கும்.
இப்படியேதான் இந்த நாவல்
 செல்கிறதா என்றால்
திடீரென்று திருப்புமுனையாக
கண்களில் கண்ணீர்த் துளிகள்
கன்னங்களைத் தழுவி 
குறிப்பேட்டின் மீது வந்து விழுகின்றன.

சில கசப்பான சம்பவங்கள்.
நம்மை கனமாக்கிய நாட்கள் வந்து
போகின்றன. மறக்க நினைத்தும்
மறக்க முடியாத நினைவுகளில் 
துவண்டு போய் நிற்கிறோம்.


இனிமையும் கசப்பும் கண்ணீரும்
வேடிக்கையும் என்று பக்கத்திற்குப் பக்கம்
மாறுபட்ட சுவை கொண்ட நிகழ்வுதான்
பதிவு செய்யப்பட்டிருக்கும்.
யாருமே என் நாவல் முற்றிலும் இனிமையாக
இருந்தது என்றோ முற்றிலும் 
கவலையும் கண்ணீரும் தான்
என்றோ சொல்லிவிட முடியாது.
சில இடங்களில் கோபம்.
சில இடங்களில் விரக்தி.
சில இடங்களில் மகிழ்ச்சி.

நான் கடந்து வந்தப் பாதையா இதுவா?
கேள்வி மேல் கேள்வி வந்து பிடறியில்
அடித்து உலுக்குகிறது.
முதலில் நம்மோடு பயணப்பட்டு வந்த பலர்
இந்த எல்லைக் கோட்டை வந்து 
எட்ட முடியவில்லை.
இறுதிவரை என்னோடு பயணிப்பார்
என்று நாம் எதிர்பார்த்த பலர் இன்று
நம்மோடு இல்லை.


நாலு தலைமுறைக்குச் சொத்து சேர்த்து வைத்த
சித்தப்பாவால் எல்லைக் கோட்டைத்
 தொட முடியவில்லை.
எப்போதும் துள்ளலும் மகிழ்ச்சியுமாக
 உலாவரும் எதிர்வீட்டுத்
தம்பி இன்று நம்மோடு இல்லை.
பள்ளிக்கூடம் சென்று வருகிறேன் என்று
கையசைத்து மகிழ்வோடு சென்ற
அடுத்தத் தெரு
சிறுவன் பள்ளிக்கூடத்திலிருந்து
வீடு திரும்பவில்லை.
இறுதிவரை நம் பயணத்திற்குத்
துணை இருப்பார்கள் என்று நம்பியிருந்த
பலர் இன்று நம்மிடையே இல்லை.

நினைக்கும்போதே நெஞ்சு கனக்கிறது
இவை எல்லாம் நிகழ்ந்திருக்கக்கூடாது.
நிகழ்ந்து விட்டது.

"நெருநல் உளனொருவன் இன்றில்லை  என்னும் 
பெருமை உடைத்து இவ்வுலகு"

"நேற்று இருந்தார் இன்று இல்லை.
இதுதான் உலகு"
என்று வள்ளுவர் சாதாரணமாகச்
சொல்லி விட்டுப் போய்விட்டார்.

அவ்வளவு எளிமையாக கடந்துபோய்விட
நாம் என்ன கல்நெஞ்சுக்காரர்களா?
மறந்து போக முடியுமா?

மறந்து போகமுடியாது தான்.
அதற்காக......?
அந்த இடத்திலேயே நின்றுவிட முடியுமா?

காலம் யாருக்காகவும்.... எங்கேயும் ...
காத்திருப்பதில்லையே!

பயணங்களில் நம்மோடு
வந்தவர்கள் அவர்களுக்கான
இடம் வந்ததும் இறங்கிப் போய்விட்டனர்.
இதுதான் எதார்த்தம்.

நாம் பயணப்பட வேண்டிய தூரம் இன்னும்
உள்ளது.இதுவரை கடந்து வந்த பாதை,
அந்தப் பாதையைக் கடக்க
நமக்கு உதவியவர்கள் பலர் இருக்கலாம்.


கடந்து வந்தப் பாதையைத் திரும்பிப் பார்த்து,
இப்போது நாம் நன்றி சொல்ல வேண்டிய
இடத்தில் நின்று கொண்டிருக்கிறோம்.


இவர் இல்லாவிட்டால் இந்தப் 
பாதையை இத்தனை
எளிதாகக் கடந்து வந்திருக்க முடியாது
என்று எண்ணும் நபருக்கு நாம் கண்டிப்பாக
நன்றி சொல்லியே ஆக வேண்டும்.

இந்த அவமானங்களைத் தந்தவர்
இடையில் குறுக்கிடாவிட்டால்
என்னால் சவால்களை 
இத்தனை நேர்த்தியாகக் கையாளும் 
திறன் வந்திருக்காது என்று எண்ணும்
நபருக்கும் நன்றி சொல்ல வேண்டும்.

தடுக்கிவிழ இருந்த நேரத்தில் 
கைதாங்கி ,இந்த இடம் வரை 
கொண்டு வந்து நிறுத்தி,
திரும்பிப் பார்க்க வைத்த
நட்புக்கு  நன்றி சொல்ல வேண்டும்.

மழையோ வெயிலோ
இரவோ பகலோ
இன்பமோ துன்பமோ 
அழுகையோ ஆனந்தமோ 
அத்தனை நேரங்களிலும்
உடன் நடந்த உறவுக்கு நன்றி
சொல்ல வேண்டும்.

துவண்டு நின்றபோது 
தோள்கொடுத்த
குடும்பத்திற்கு நன்றி சொல்ல வேண்டும்.

மொத்தத்தில் நம்மோடு 
இன்றுவரை நடைபயின்ற அத்தனை
பேருக்கும் நன்றி சொல்லும்
தருணம் இது.

இவர்களுக்கு மட்டும் நன்றி
சொன்னால் போதுமா?

நாம் நன்றி சொல்ல வேண்டிய
முதல் நபர்  இறைவன் அல்லவா?

இறைவன் இன்றுவரை நம்மைக் காத்து
வந்திருக்காவிட்டால் நம்மாலும் இந்த
எல்லைக் கோட்டை வந்து எட்டியிருக்க
முடியாது.நமது வாழ்வும்
முடிக்கப்படாத நாவலாக 
இடையிலேயே நின்று போயிருக்கும்.
நம்மை முழுமையாக எழுத வைத்து 
அழகுபார்த்த
பெருமை இறைவனையே சாரும்.

தடுமாற்றங்களில் கீழே விழாமல் காத்து,
இயற்கைப் பேரிடர்களை
நம் இல்லம் வந்து 
எட்டிப்பார்க்கவிடாமல்
தடுத்த இறைவனுக்கு நன்றி.
மகிழ்ச்சியான தருணங்களைக்
கொடுத்து நமது வாழ்வை 
அர்த்தமுள்ளதாக்கிய
 இறைவனுக்கு நன்றி.
 365 நாட்களும்  நம்மோடு நடந்து,நம்
 பாதம் கல்லில் இடறாதபடிக் காத்து,
365 பக்கங்களையும் எழுதி முடித்துவிட்டேன்
என்று பெருமிதப்பட வைத்த
இறைவனுக்கு நன்றி
என்று சொல்லி, 
நன்றியோடு இந்த ஆண்டை
நிறைவு செய்தால்தான்
நமக்கு உய்வுண்டு. 
அதாவது வாழ்வு உண்டு.
நம் வாழ்வுக்கு அர்த்தமும் உண்டு.

அப்படியே நன்றி சொல்லாமல் 
கடந்து போய்விட்டால்...
"உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு"
என்ற வரி  உங்களுக்கானதாகிவிடும் என்பதை
 நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

"இறைவன்  நன்றியுள்ள மனிதன்
இதயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்"
என்பார் ஐசக் வால்டன் என்ற
மேலை நாட்டு அறிஞர்.

நன்றி சொல்வோம்.
இறைவன் வாழும் இதயம்
என்னுடையது என்ற பெருமிதத்தோடு
இந்த ஆண்டை நினைவு
செய்வோம்.
வாழ்த்துகள்!


Comments

  1. யார்யாருக்கெல்லாம் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம் என்பதை எடுத்துரைத்த கட்டுரையின் ஆசிரியருக்கு முதற்கண் நன்றி.மிக அருமையான பதிவு.

    ReplyDelete

Post a Comment

Popular Posts