எது நம்பிக்கை துரோகம்



எது நம்பிக்கை துரோகம்?



"விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்தொழுகு வார்"
என்பார் வள்ளுவர்.

ஒருவர் உன்மீது எந்தவித ஐயப்பாடுமின்றி
நம்பிக்கை வைத்திருக்கிறார்.
.அப்படிப்பட்டவர்க்கு ஒரு தீமை
செய்பவர் இறந்தவரினும் வேறு அல்லர்.
அவர் இருந்தும்
இல்லாமல் இருப்பவருக்கு ஒப்பினவராகவே
கருதப்படுவார்.

இதுதாங்க நம்பிக்கைத் துரோகம்.
நம்மை நம்பி இருப்பவர்களுக்கு
ஒருபோதும் துரோகம் செய்தல் கூடாது.

துரோகங்களில் பெரிய துரோகம்
நம்பிக்கைத் துரோகம் தாங்க.
துரோகமே கடுமையான 
மன உளைச்சல் தரக்கூடியதுதான்.
இதில் பெரிய துரோகம் ஒன்று என்றால்...
தாங்க முடியாமல் மனவலிமையை
ஏற்படுத்தும். காலத்துக்கும் வலிக்கும்.
நினைத்த உடனே கண்ணீர் வழியும்.
பேச வாய் எழாது.
சொல்லும்போது 
அப்படியா?...
என்று சாதாரணமாக கேட்டுவிட்டு
கடந்து போகலாம்.
தலைவலியும் காய்ச்சலும் தனக்கு 
வந்தால் தானே தெரியும்.


துரோகம் நண்பர்கள் இழைத்துவிட்டால்...
நாலுநாள் வலிக்கும்.
துடைத்துப் போட்டுவிட்டு 
கடந்து போய்விடலாம்.

பணியிடங்களில் துரோகிகள்
இருக்கலாம்.எத்தனை மணிநேரம்
அவர்களோடு இருக்கப்போகிறோம்?
கண்டும் காணாமலும் கடந்து
போய்விடலாம்.

அவர்கள் துரோகத்தால் 
மிஞ்சி மிஞ்சி போனால்
பணி உயர்வு ஓராண்டு தடைபட்டுப்
போகலாம். அல்லது நம்மைப் பற்றி
நாலுபேரிடம் அவதூறாகச்
சொல்லி வைக்கலாம்.
அவ்வளவுதான். அதற்குமேல் அவர்களால்
ஒன்றும் செய்துவிட முடியாது.

காலம் அதற்கு மருந்தாக அமையும்.
இடமாற்றல்கூட அதைத் 
துடைத்துப் போட்டுவிடும்.

நண்பர்கள் துரோகம் செய்துவிட்டால்....
ஒருமாதிரி வலிக்கும்.
மாதக்கணக்கில் இந்த
வலி இருக்கும்.
கூடவே இருந்து என்னைப் புரியாமல்
இப்படி சொல்லிவிட்டார்களே
என்று புலம்புவோம்.
இந்த உலகத்தில் யாரையுமே
 நம்பக்கூடாதுப்பா
என்று நம்மைச் சுற்றி ஒரு பாதுகாப்பு
வளையத்தைப் போட்டுக்கொண்டு
பத்திரமாக இருக்க முயற்சிகள்
மேற்கொள்வோம்.

 உடன்பிறப்புகளால் துரோகம்
இழைக்கப்பட்டால் காலத்துக்கும்
மறக்க முடியாத வலியை ஏற்படுத்தும்..

உடன்பிறப்புகள் ஒருவர் மேல் ஒருவர்
நம்பிக்கை வைத்திருப்பர்.
அதுவும் பெற்றோர் இல்லாத வீடுகளில்
ஒருவரை ஒருவர் சார்ந்து வாழும்
சூழல் இருக்கும்.

 மூத்த அண்ணனோ அல்லது
அக்காளோ குடும்ப பாரம் முழுமையையும்
தூக்கிச் சுமப்பர்.
கூலிவேலை செய்து கடனைவுடனை
வாங்கிப் படிக்க வைப்பர்.
இப்போது அவர்களின் 
மொத்த நம்பிக்கை தன்
தம்பியோ அல்லது தங்கையோ தான்.

ஆனால் எத்தனை வீடுகளில் அந்த
நம்பிக்கைக்கு உரியவர்களாக 
அந்த உடன்பிறப்புகள்
நடந்திருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்.?

என்ன பெருசா செய்துட்டான் .
நான் அதற்கு அவன் மகள்
திருமணத்திற்கு பத்தாயிரம் தந்தேன்.
அல்லது வீடு கட்டும்போது இருபதினாயிரம்
கொடுத்தேன் என்று பெருசாக
 ஈடுகட்டிவிட்டதாகப் பேசுவார்கள்.
நிராதரவான நிலையில் நின்றபோது
தன் சுகங்களை மறந்து
 சுயநலமில்லாது தனது கடமை
 என்று பெற்றோர் இடத்திலிருந்து
 எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து
 செய்திருப்பார்கள்.
 
படிக்க வைத்து
கைதூக்கி விட்ட அண்ணனை கண்டும் 
காணாமல் உடன்பிறப்புகள் 
செல்வார்கள் பாருங்கள். அதுதான் மிகப் பெரிய 
நம்பிக்கை துரோகம்.

அந்த அண்ணனோ அக்காவோ
செய்த உதவியை எதைக் கொடுத்தும்
ஈடுசெய்ய முடியாது.

 திருமணம் முடித்து
போகும்போது நீ யாரோ ?
நான் யாரோ என்ற மனநிலையில்
அப்படியே கடந்து போய்விடும் உறவு
கொடுக்கும் வலிதாங்க காலத்திற்கும்
வலிக்கும் பெரும் வலியாக இருக்கும்.

இந்தத் துரோகத்தை யாராலும்
எளிதாகக் கடந்து சென்றுவிட முடியாது.



அதிலும் நாங்க எல்லாரும்
சேர்ந்து உன்னைப் படிக்க வைத்தோமே...
ஏன் தம்பி எங்களை நினைத்துப் பார்க்க மாட்டேன்
என்கிறாய் என்று கேட்கும் 
நிலையில் அண்ணன்
இருந்தால்..... 
இந்தத் துரோகத்தை அந்த அண்ணனால்
எளிதாக எடுத்துக்கொண்டு
கடந்து சென்றுவிட முடியுமா?

இப்படிப்பட்ட துரோகம் ஒவ்வொரு
இரவையும் நரகமாக்கும்.

நினைவு வரும்போதெல்லாம்
ஆயிரம் சம்மட்டியால் அடித்தது போல்
இருக்கும்.

இது பெற்றோருக்குச் செய்யும்
துரோகம் போன்றதுதான்.

அடுத்து,
தாய்தந்தை  பிள்ளை மீதுள்ள நம்பிக்கையில்
ஐந்து பைசா வங்கியில் சேர்த்து வைக்காமல்
பிள்ளைகள் படிப்புக்காக அத்தனை
பணத்தையும் செலவு செய்திருப்பர்.

வீடு கட்டி வைக்க .....நிலபுலன்
வாங்கி வைக்க  தெரிந்த உள்ளத்துக்கு
பிற்காலத்தில் பாதுகாப்பு கையில்
வைத்திருக்கும் பணம் மட்டும் தான்
என்று தெரியாமல் போயிருக்கும்.

கடைசியில் வெறுங்கையில் நிற்கும்
பெற்றோருக்கு ஒரு நோய் வந்துவிட்டால்
கணக்குப் பார்த்து ஒதுங்கி நிற்கும்
பிள்ளைகள் செய்வது 
நம்பிக்கைத் துரோகம் என்பதன்றி
வேறென்ன சொல்வது?


 ஒற்றை மனிதன் மேல்தான்
மொத்த நம்பிக்கையும் வைத்தது
தவறு என்று உணரும் காலம் வரும்போது
அந்த உள்ளம்  உடைந்து போகும்.
நொடிந்து போகும்.
எதிர்காலமே இடிந்து கண்முன்
வீழ்ந்து கிடப்பது போல தோன்றும்.
வேறு வழியின்றி பரிதவிக்கும்.


அக்கறையெடுத்து அல்லும் பகலும்
பார்த்துப் பார்த்து
வளர்க்கப்பட்ட மகன்.
கணக்குப் பார்க்காமல் 
மகனுக்காக...மகனுக்காக என்று
கையில் இருந்ததை எல்லாம்
செலவழித்து விட்டு,இன்று
அவன் கையை எதிர்பார்த்து
வாழும் நிலை.

அவனோ தாய்தந்தையருக்குச்
செய்ய கணக்குப் பார்க்கிறான்.
தாய்தந்தையரிடம் கணக்குக் கேட்கிறான்.
இது எவ்வளவு பெரிய கொடுமை.?
பெற்றோருக்குச் செய்வதற்குக்
கணக்குப் பார்க்கும் பிள்ளைகள்
வாய்த்துவிட்டால்......



திருமணம் முடிந்ததும்
நீங்கள் யாரோ நான் யாரோ என்று
போய்விடும் பிள்ளைகள் 
பெற்றோருக்குச் செய்வது
மிகப் பெரிய நம்பிக்கைத் துரோகம்.


 அடுத்தவர் நம்பிக்கைத்
துரோகம் ‌ செய்திருந்தால் 
மீண்டு வந்துவிடலாம்.
மீள முடியாத  துயரில் கொண்டுவிடுவது
பெற்றோருக்கும்  உங்கள்
வளர்ச்சிக்காக தங்கள் 
வாழ்வையே பலிகொடுத்திருக்கும்
உடன்பிறப்புகளுக்கும் செய்யும் 
துரோகம்தாங்க.

இன்றைய காலகட்டத்தில் 
நிறைய வீடுகளில்  சர்வசாதாரணமாக
இந்த நம்பிக்கைத் துரோகம் நடந்துகொண்டிருக்கிறது.
அதனை துரோகமாக எடுத்துக் கொள்ளும்
மனநிலையோ மனபக்குவமோ இல்லாமல்
போய்விட்டதா?

"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு"

என்ற குறள் சொல்லும் 
நீதியும் அறமும்  காணாமல் போய்விட்டதா?

வாழ்க்கைத் தேவைகளும் சுயநலமும்
குடும்பங்களில் இத்தகைய துரோகங்கள்
நிகழ்வதற்குக் காரணமாக 
அமைந்துவிடுகின்றன.

காலம் கொடுத்துச் செல்லும்
பாடங்களில் கொடுமையான பாடம்
நம்பிக்கைத் துரோகம் என்பதுதான்.

நமக்கு யாரும் நம்பிக்கைத் துரோகம்
செய்து விடக்கூடாது என்று விரும்புகிற நாம் 
வீடுகளில் இத்தகைய நம்பிக்கைத்
துரோகம் நிகழ்ந்துவிடக் கூடாது
என்பதில் கவனமாக இருந்தால் போதும்.
துரோகங்கள் தொலைந்து போகும்.







Comments