வையத் தலைமை கொள்

"வையத் தலைமை கொள் "


"வையத் தலைமை கொள்"

என்பது மகாகவி பாரதியாரின்  புதிய ஆத்திசூடி வரி.

தலைமைத்துவத்துக்கான ஒரு அறைக்கூவல் என்றே சொல்ல வேண்டும்.

இந்த மூன்று எளிய தமிழ் சொற்களும் ஒரு வலிமையான செய்தியைத் தாங்கி நிற்கின்றன: "உலகிற்குத் தலைமை தாங்குங்கள்."  என்று வெறுமனே சொல்லிவிட்டுச் செல்வதற்காக இந்த வரிகள் சொல்லப்படவில்லை.


நான் தலைவனாக இருக்க வேண்டும் என்று கனவு காணக் கூறவில்லை .தலைமை தாங்குவதற்குத் தேவையான துணிச்சல், அறிவு, ஒழுக்கம் மற்றும் உறுதிப்பாடு ஆகியவற்றை வளர்த்துக்கொள்ளுமாறு நம்மை வலியுறுத்துகிறார்.

தலைமைத்துவம் என்பது மற்றவர்களைவிட ஒருபடி  மேலே நிற்பதல்ல.

சரியானவற்றிற்காகக் குரல் கொடுப்பது.

முழு பொறுப்பையும் தானே ஏற்றுக் கொள்வது. தனது தொண்டர்களை  ஊக்குவிப்பது மற்றும் அவர்களுக்கான சிறந்த எதிர்காலத்தை உருவாக்கித்தருவது போன்ற ஒட்டுமொத்த பண்புகளையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

"தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழி"

ஆதலால் தலைவர்  சிறந்ததொரு வழியை அறிந்தவராக இருக்க  வேண்டும்.அதே வழியில் தானும் பயணிக்க வேண்டும். மற்றவர்களையும் அதே வழியில் பயணிக்க வைக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

 ஒரு உண்மையான தலைவன் வெறும் கட்டளைகளை மட்டும் பிறப்பிக்கக்கூடாது. அவர் செயல்கள் தன் தொண்டர்களுக்கு  முன்மாதிரியாக அமைந்திருக்க வேண்டும்.

தானும் முன்னே சென்று   மற்றவர்களையும் தன்னைப் பின்தொடருமாறு ஊக்குப்படுத்த வேண்டும்.


தலைமைத்துவம் தன்னம்பிக்கையில் இருந்துதான்  தொடங்குகிறது.

மனித முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கும் மிகப்பெரிய காரணிகளில் ஒன்று 'பயம்' என்று பாரதியார் நம்பினார். அவரது எழுத்துக்கள் தனிமனிதனிடம் துணிச்சலையும் தன்னம்பிக்கையையும் மீண்டும் மீண்டும் தட்டி எழுப்புவதாகவே இருக்கும்.

அதைத்தான் வையத் தலைமை கொள் என்று வரிக்குள்ளும் புதைத்து வைத்துள்ளார்.

தன்னையே நம்பாத ஒருவரால் மற்றவர்களை ஊக்குவிக்க முடியாது. எனவே, தலைமைத்துவத்தை நோக்கிய முதல் படி, நமது சொந்தத் திறன்களைக் கண்டறிந்து அவற்றின் மீது நம்பிக்கை வைப்பதாகும்.

தன்னம்பிக்கை என்பது நாம் குறையற்றவர்கள் என்று நம்புவதல்ல; மாறாக, நம்மால் கற்றுக்கொள்ளவும், நம்மை மேம்படுத்திக்கொள்ளவும், சவால்களை முறியடிக்கவும் முடியும் என்று நம்புவதே ஆகும்.

தலைமைத்துவத்தின் அடித்தளம் அறிவு:

இந்த உலகம் வலிமை மிக்கவர்களுக்கு மட்டுமல்ல; மாறாகக் கற்றுக்கொள்பவர்களுக்கும், சிந்திப்பவர்களுக்கும், படைப்பாளிகளுக்கும் உரியதாக இருக்கிறது.

கல்வி அறிவு பெற்ற, விழிப்புணர்வுள்ள ஒரு சமூகத்தையே பாரதியார் கனவு கண்டார். அவரைப் பொறுத்தவரை, கல்வி என்பது வெறும் வாழ்வாதாரத்திற்கான வழிமுறை மட்டுமல்ல; அது சுதந்திரம் மற்றும் முன்னேற்றத்தை நோக்கிய ஒரு பாதையாகவும் இருந்தது.

"உலகை மாற்றுவதற்கு நீங்கள் பயன்படுத்தக்கூடிய மிக வலிமையான ஆயுதம் கல்விதான்."

என்பார் நெல்சன் மண்டேலா.

எனவே, ஒரு தலைவர் வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொள்பவராக இருக்க வேண்டும். உலகம் ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டே இருக்கிறது; கற்றுக்கொள்வதை நிறுத்தும் ஒரு நபர், படிப்படியாகத் தனது வளர்ச்சியையும் நிறுத்திக்கொள்கிறார்.  

தலைமைத்துவம் என்பது பொறுப்புணர்வு :

முன்னின்று வழிநடத்துதல் என்பது மட்டும் தலைமைப் பண்பல்ல.

புகழுக்கான இடமும் அல்ல.அதிகாரத்தை தேடுவதல்ல; மாறாக, மற்றவர்கள் தயங்கும் சூழலில் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

மகாத்மா காந்தியின் வார்த்தைகள் நமக்கு நினைவூட்டுகின்றன:

"உலகில் நீங்கள் காண விரும்பும் மாற்றமாக நீங்களே இருங்கள்."

பெரும் மாற்றங்கள் பெரும்பாலும் ஒரு நபர் எடுத்துவைக்கும் முதல் அடியிலிருந்தே தொடங்குகின்றன.

கருணை கலந்த தலைமைத்துவம்

மனிதநேயம் இல்லாமல்   இருக்க முடியாது.

ஒரு தலைவரிடம் அறிவு, செல்வம் மற்றும் அதிகாரம் இருக்கலாம்.ஆனால் 

தலைவரிடம் கருணை இல்லையென்றால், அந்தத் தலைமைத்துவம் அர்த்தமற்றதாகிவிடும்.

சமத்துவம், கண்ணியம் மற்றும் பரஸ்பர மரியாதையுடன் மக்கள் வாழும் ஒரு சமூகத்தையே பாரதியார் கனவு கண்டார். எனவே, அவரது தலைமைத்துவக் கண்ணோட்டம் என்பது வெறும் தனிப்பட்ட வெற்றியை நோக்கியதாக மட்டுமல்லாமல், கூட்டு முன்னேற்றத்தை நோக்கியதாகவும் இருந்தது.

மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் கூறியது போல,

"அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்டவர் சிறந்த தலைவர் அல்ல; மாறாக, மற்றவர்களன்  சொந்த வலிமையைக் கண்டறிய உதவுபவரே சிறந்த தலைவர் ஆவார்.

இளைஞர்களும் எதிர்காலமும்:


இளைஞர்கள் நாளைய தலைவர்கள் மட்டுமல்ல; அவர்கள் இன்றைய உலகிற்கும் பங்களிப்பவர்கள்.

உண்மையுடன் கற்கும் ஒவ்வொரு மாணவரும், ஒரு குழந்தைக்கு ஊக்கமளிக்கும் ஒவ்வொரு ஆசிரியரும், நேர்மையாகத் தன் கடமையைச் செய்யும் ஒவ்வொரு குடிமகனும், அநீதிக்கு எதிராக நிற்கும் ஒவ்வொரு தனிமனிதரும் சமூகத்தின் முன்னேற்றத்திற்குப் பங்களிக்கின்றனர்.

துணிச்சலாகக் கனவு காணுங்கள்.

தொடர்ந்து கற்றுக்கொள்ளுங்கள்.

தைரியமாகச் செயல்படுங்கள்.

மனிதகுலத்திற்குச் சேவையாற்றுங்கள்.

பொறுப்புணர்வுடன் வழிநடத்துங்கள்.

வையத் தலைமை கொள் ஒரு வாழ்க்கை தத்துவம்.

மனிதர்கள் பயம், அறியாமை மற்றும் பலவீனத்தைத் தாண்டி, சிறந்ததொரு உலகை உருவாக்கும் தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாற வேண்டும் என்று பாரதியார் விரும்பினார்.

தலைமைத்துவம் என்பது ஒரு பதவியிலிருந்து தொடங்குவதில்லை.

அது ஒரு நோக்கத்திலிருந்தே தொடங்குகிறது.

அது அதிகாரத்திலிருந்து தொடங்குவதில்லை. பொறுப்புணர்விலிருந்து தொடங்குகிறது.

அது மற்றவர்களுக்கு ஆணையிடுவதிலிருந்து தொடங்குவதில்லை; தன்னைத்தானே  கட்டுப்படுத்துவதிலிருந்து தொடங்குகிறது.

ரால்ப் வால்டோ எமர்சன் அழகாகக் கூறியது போல,

"நமக்குள்ளே இருப்பவற்றுடன் ஒப்பிடும்போது, ​​நமக்குப்பின்னால் இருப்பதும் நமக்கு முன்னால் இருப்பதும் மிகச் சிறிய விஷயங்களே."  ஆகவே, பாரதியாரின் அறைகூவலை ஏற்று, நமக்குள் இருக்கும் ஆற்றலைத் தட்டி எழுப்புவோம்; வெறும் வாழ்வை வாழ்வதோடு மட்டும் நின்றுவிடாமல், நமது அறிவு, துணிச்சல் மற்றும் சேவையின் மூலம் இவ்வுலகை ஒரு சிறந்த இடமாக மாற்றப் பாடுபடுவோம்.வையத்துச் சிறந்தோராகத் திகழ்ந்து உலகை வழிநடத்தும் வகையில் நம் தரத்தை உயர்த்திக் கொள்வோம்.

கருத்துகள்

Popular Posts