அடியிற்கினியாளே அன்புடையாளே ....

   அடியிற்கினியாளே அன்புடையாளே....

திருவள்ளுவர் என்றதும் நம் கண்முன்
வந்து நிற்பது ஒன்றே முக்கால் அடி
கொண்ட திருக்குறள் .

ஏழு சொற்கள் கொண்டது.
எந்த இடத்திலும் குறள் வெண்பாவுக்கான
இலக்கண மரபை உடைக்காத
சொல்லாட்சித் திறன்.
பார்த்துப் பார்த்துச் செதுக்கப்பட்ட
வரிகள். அதிகார அமைப்பிலும் பகுப்பிலும்
கடைபிடிக்கப்பட்ட
ஒரு கட்டுக்கோப்பான ஒழுங்கு.

இப்படி வரம்புமீறாக் கவி படைத்துத் தந்த
வள்ளுவர் தன் இலக்கண 
வரம்பைக் கடந்து 
 நான்கு வரிகளில் ஒரு பாடல்
எழுதி வைத்துள்ளார்.
திருவள்ளுவர் நான்கு வரிகளில் பாடல்
எழுதியுள்ளாரா? 
ஆச்சரியமாக இருக்கிறதல்லவா!
அந்த நான்கு வரிகளும் யாருக்காக
எழுதப்பட்டது என அறிந்தால்....
வியந்து போவீர்கள்.

தன் காதல் மனைவி வாசுகிக்காக
எழுதியதுதான் இந்த நான்கு வரிகள்
கொண்ட பாடல்.

வள்ளுவர் தன் மனைவி வாசுகி 
இறந்ததும் மனம் உடைந்து போனார்.
நேற்றுவரை பார்த்து பார்த்து
சமைத்துத் தந்தவள்.
ஒரு வார்த்தை எதிர்த்துப் பேசாதவள்.
தான் தூங்கும்வரை தூங்காமல் இருந்து,
கண் விழிக்கும் முன்னர் முன் வந்து
நின்று பணிவிடை செய்தவள்.

இல்லாள் அகத்திருக்க இல்லாதது
எதுவும் இல்லை என்று பேச வைத்தவள்.

"தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற 
சொற்காத்துச்  சோர்விலாள்  பெண் "
என்று கொண்டாட வைத்தவள்.

"பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பெனும்
திண்மை யுண்டாகப் பெறின் "

என்று பெருமைபட வைத்தவள்.

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை "

என்று நம்பிக்கையோடு பேச வைத்தவள்.

மீளாத் துயில் கொண்டாள்.
வள்ளுவரை மீளாத் துயரில்
தள்ளி விட்டாள்.

கண்முன்னே கட்டியவள் கட்டிலிலே
விழிமூடிக் கிடக்கின்றாள்.
கடைசிவரை காத்திருக்க மனமில்லாது
சென்று விட்டாள்.
காலனுக்குத் தெரியுமா இந்தக் காவிய
நாயகியைப் பிரிந்து 
இந்த நாயகனால் எப்படி வாழ முடியும் என்று...?

காலனுக்கு நாட்கணக்குப் பார்க்கத்
தெரியும். வாழ்க்கைக் கணக்குத்
தெரிந்திருக்க ஞாயமில்லை.
வாழ்க்கைக் கணக்குத் தெரிந்திருந்தால்
வாழும் நெஞ்சங்களை இப்படி பிய்த்து
எறிந்திருக்க மாட்டான்.

அன்பு உள்ளங்களை அழ வைத்து
பார்ப்பதில் ஆனந்தம் கொள்ளும்
காலனுக்கு இந்த அன்பு உள்ளங்களைப் பற்றி
என்ன தெரியும் ?
நாட்காட்டியில் தாளைக் கிழிப்பதுபோல்
கிழித்தெறிந்து வாசுகியின் 
வாழ்க்கைக் கணக்கை முடித்துவிட்டான்.
வாசுகியின் வாழ்க்கைக் கணக்கை மட்டுமா
முடித்துவிட்டான்?
நம் ஐயனின் மன உறுதியையும் அல்லவா
ஆட்டம் காண வைத்துவிட்டான்.

நாநலம் பாடிய நம் ஐயனை
சொல்லாடாது சற்று நேரம் 
அப்படியே அமர வைத்துவிட்டான்.

எத்தனை மணி நேரம்  இத்துணைக்காய்  
இப்படியே இருப்பது?

தன் மனதின் வலியை 
யாரிடம் சொல்வது?
எப்படிச் சொல்வது?

"இத்தனை நான் நான் பேச
நீ கேட்டுக்கொண்டிருந்தாயே....
இதோ இறுதியாக இன்னொரு முறை
பேசுகிறேன் .கேள் வாசுகி...கேள்"
என்று  பேச நினைத்தார்.

வார்த்தைகள் வர மறுத்தன.
தொண்டை வறண்டு போனது போல
இருந்தது.
வலிய இழுத்து வந்து வார்த்தைகளைக்
கொட்டினார்.சோகத்தில் பிறந்த கவியில்
அடிக்கணக்கு பார்க்க முடியுமா ?
இதுவரை ஒன்றே முக்கால் அடியில்
நின்றவர் இன்று நான்கு அடியில்
ஒரு பாடல் பாடி நம்மையும்
கண்ணீர்விட வைத்துவிட்டார்.

பாடல் இதோ உங்களுக்காக:

அடியிற்கினியவளே அன்புடையவளே
படிசொல் தவறாத பாவாய் - அடிவருடி
பின்தூங்கி முன்னெழும்பும் பேதாய் - இனிதா ( அ)ய்
என் தூங்கும் என்கண் இரவு "

 தன் துயரத்தை நான்குவரி கவியாக
 வடித்தார்.
தன் வலியை நம் கண்முன் 
கொண்டுவந்து நிறுத்தி
நம்மையும் கண் கலங்க 
வைத்துவிட்டார்.

"அடியவனாகிய எனக்கு இனியவளே !
என் அன்பின் திரு உருவே!
என் சொல்லுக்கு மாற்றேதும் 
பேசாப் பாவாய் !
நித்தம் என் கால்களை வருடி 
என்னை உறங்க வைத்து,
நான் உறங்கிய பின்னர் நீ உறங்கி,
அதிகாலை நான் எழும்பும் முன்னர்
எழும்பும் பேதைப் பெண்ணே!
என்னைக் தனியாக விட்டுவிட்டு
நீ மட்டும் போய்விட்டாயே...
நீ இல்லா நாட்களில்
என் கண்கள் இனி
இரவினில் எப்படி மூடும்?
இனி எனக்கு தூக்கம் ஏது?
நீ இல்லாத இரவுகளில் எனக்கு
இனிமை ஏது?
நீ இல்லாத  என் தனிமையான
நாட்களை என்னால் நினைத்துப் பார்க்க
முடியவில்லையே"
என்று ஆற்ற முடியா துயரத்தில்
 கண்ணீர் வடித்தார்.

"நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு "
என்ற வள்ளுவரா
இப்படி கண் கலங்கி நிற்கிறார்?

நேற்று உயிரோடு இருந்தவர் இன்று இல்லை.
அப்படிப்பட்ட பெருமை கொண்டதுதான் இவ்வுலகு
என்று உலகை எல்லாம் தேற்றிய
வள்ளுவர்  பாடிய பாடலா இது ?
ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது
இல்லையா?

"தாயோடு அறுசுவை போம் 
தந்தையொடு கல்வி போம்
சேயோடு தான் பெற்ற செல்வம்போம்
ஆயவாழ்வு
உற்றாருடன் போம்
உடன்பிறப்பால் தோள்வலி போம்
பொற்றாலி யோடெவையும் போம்"

என்ற பாடலில்
யார் யாரோடு எவைஎவை எல்லாம்
போகும் என்று பட்டியலிட்ட 
ஔவை இறுதியாக மனைவியோடு
எல்லாமே போயே போகும் என்று சொன்னாரே!
அது இதற்காகத்தானோ?
அது எவ்வளவு பெரிய உண்மை பாருங்கள்.

வாசுகியின் பிரிவு
வள்ளுவரைக்  கலங்க வைத்தது
குறள் வரம்பை மீற  வைத்தது.
அடிக்கணக்குப் பாராது
பாடல் எழுத வைத்தது.
ஈரடி நாலடியாய் நீண்டு போனது.

நம்மையெல்லாம் நாவாடாது
உறைய வைத்தது.
உள்ளுக்குள் ஊமையாய்ப்
புலம்ப வைத்தது.

அன்பிற்குரியவர்களின் பிரிவை 
யாரால்தான்  தாங்கிக் கொள்ள முடியும் ?
திருவள்ளுவர் மட்டும் விதிவிலக்கா என்ன?

பின்தூங்கி முன்னெழும்பும் பேதாய் - இனிதாய்
என் தூங்கும் என்கண் இரவு 

படிக்கும்போதே கண் கலக்குது இல்ல....

Comments

  1. Idayathai thotta varigal. Very nice.

    ReplyDelete
  2. அரிய,அருமையான ,அன்புடையாள்....

    ReplyDelete
  3. மிக்க அருமையான பதிவு.

    ReplyDelete

Post a Comment

Popular Posts