களவு போன கனவு


          களவு போன கனவு


வீட்டின் ஒரு மூலையில்
கண்மூடி கிடந்தேன்.

ஏதேதோ நினைவுகள் வந்து
என்னென்னவோ பேச ஆரம்பித்தன.
வேண்டாம்....போதும்...போதும்..
என்று உரக்க கத்த வேண்டும் போல்
இருந்தது.
இனி உரக்க கத்தி என்ன பயன் ?
கத்துவதற்கு வார்த்தைதான் வருமா ?

எத்தனைமுறை அம்மாவையும்
தங்கைகளையும் உரக்க பேசி
வாயை மூட வைத்திருப்பேன்.
எதற்கெடுத்தாலும் எதிர்த்துப் பேசுவது...
யார் என்ன சொன்னாலும் ஏற்பதில்லை....
தான் சொல்லுவது மட்டும்தான் சரி
என்ற ஆணவப் போக்கு.
அந்த பேச்சு ...ஆணவம்....எல்லாம்
ஒரே நாளில் மொத்தமாய்
அடங்கிப் போயிற்று..

வேலைக்குப் போகிறோம் என்று எவ்வளவு
துள்ளலாக புறப்பட்டு வந்தேன்.
முதல்முறையாக தான் சுயமாக
சம்பாதிக்கப் போகிறேன்....அப்பப்பா
இனி ஒரு சேலை எடுப்பதற்கு அம்மாவிடம்
கெஞ்ச வேண்டியதில்லை.
நினைத்த நேரத்தில்... நினைத்த கலரில்
வாங்கிக் கொள்ளலாம்.
யாரும் ஏன்? எதற்கு என்று கேட்க
முடியாது.
எத்தனை எத்தனை கற்பனைகள்.
எவ்வளவு எதிர்பார்ப்புகள்....
எல்லாம் பொசுக்கென்று தீயின் முன்
இருக்கும் தாள் போல கருகி காணாமல்
போனது.

இப்படி ஒரு வேலை என்று நினைத்துக்கூட
பார்க்கவில்லை.

எதுதான் நாம் நினைத்துப் பார்த்ததுபோல்
நடக்கிறது.?

எல்லாமே எதிர்பாராமல்தான் நடந்திருக்கிறது.

எதிர்பாராமல் யோகம் அடிக்கும் என்பார்கள்.
எனக்கு யோகம் அடிக்காவிட்டாலும் பரவாயில்லை.
குறைந்தபட்சம் எதுவும் நடக்காமல்கூட
இருந்திருக்கலாமே.

அன்றுமட்டும் அந்த நிகழ்வு நடந்திராதிருந்தால்.....
நடந்து முடிந்தபின் நடந்திராதிருந்தால் என்று
புலம்பி என்ன பயன் ?
புலம்ப வைக்க வேண்டும் என்று கடவுள்
தலையில் எழுதிவிட்டார்.
இனி யாரை நொந்து என்ன செய்ய
முடியும்.
விதி வலியது என்று சொல்லுவது
சரிதான்.
அல்லது விதி அப்பா வடிவில் வந்து
விளையாடியதுதான் வேதனை.

அப்பா .....அந்தப் பெயரைச் சொல்லவே
கோபமாக வருகிறது.

அவரால்தானே எல்லாம் எங்கள் தலையில்
வந்து விடிந்திருக்கிறது.

அதுதான் எல்லாவற்றிற்கும்
முடிவுரை எழுதி வைத்தாயிற்றே....

இனி நான்...இனி நான்...
நினைக்க நினைக்க நெஞ்சே வெடித்துச்
சிதறியதுபோல
இருந்தது.

அம்மா...பொம்பிள்ளை பிள்ளைகளைப்
பெத்து வச்சுருக்கேன்....பொம்பிள்ளைப் பிள்ளைகளைப்
பெத்து வச்சுருக்கேன் என்று புலம்பும்போது
அட...போம்மா உனக்கு வேறு வேலையில்லை.
இந்தக் காலத்தில்போயி பொம்பளைப்
பிள்ளைகளைப் பெத்து
வச்சிருக்கேன்....பொம்பளைப் பிள்ளைகளைப்
பெத்து வச்சிருக்கேன் என்று சொல்லிவிட்டு....
இப்போ எல்லாம் ஆம்பளையும் பொம்பளையும்
சமம்.

வாய்க்குவாய் எப்படி பேசியிருக்கிறேன்.

இதுக்குத்தானா.....

சேலை முள்ளில் விழுந்தாலும் சேலையில்
முள் விழுந்தாலும் சேதாரம் என்னவோ
சேலைக்குத் தானே !

சேலையில் முள் விழுந்துவிட்டது.
சேலைக்குத்தானே சேதாரம்.

கிழிந்த சேலை...இனி யார் உடுத்திக்
கொள்வார்கள் ?

அப்பா ராணுவத்தில் வேலை பார்த்தார்.
மாதம் ஐயாயிரத்திற்குமேல் ஐந்து பைசா
அனுப்ப மாட்டார்.
அம்மாவுக்கும் தையல் தொழில் கையில்
இருந்ததினால் ஓரளவுக்கு கஷ்டமில்லாமல்
வீட்டை ஓட்டி வந்தார்.

சேமிப்பு என்று காலணா கிடையாது.
ஆனால் அன்றன்றுபாடு கவலை
இல்லாமல் ஓடிக் கொண்டிருந்தது.
பன்னிரண்டாவதுவரை உள்ளுர் பள்ளியில்
படித்ததால் படிப்புச் செலவு என்று
பெரிதாக இருக்கவில்லை.

கல்லூரியில் சேர்ந்து  இளங்கலை பட்டப்படிப்பு
தட்டுத் தடுமாறி...முட்டி மோதி
படித்து முடித்தேன் என்றுதான் சொல்ல வேண்டும்.

மேல் படிப்பிற்கு  போக
விரும்பியபோதுதான் அந்த நிகழ்ச்சி
நடந்து எங்கள் குடும்பத்தை அப்படியே
புரட்டிப் போட்டுவிட்டது.

இருபத்தைந்து வருட வேலையை முடித்துவிட்டு
வந்தவர் கையோடு வடநாட்டுக்காரி ஒருத்தியைக்
கையோடு கூட்டி வந்தார்.

தனியாக வீடும் எடுத்து வைத்து
பக்கத்துத் தெருவில் அவளோடு குடித்தனர்
நடத்தினார்.

அப்படியே அவமானத்தால் கூனி
குறுகிப் போனோம்.
அம்மா அழுதுப் பார்த்தார்.
அவர் அவளோடு வாழ வேண்டும்
என்று ஒரு முடிவோடு வந்திருக்கிறார்.
இனி அழுது என்ன பண்ண முடியும்?

அதுவரை அப்பா ராணுவத்தில் இருக்கிற
தெம்பில் பயமில்லாமல் நடந்தோம்.
கவலை தெரியாமல்
வளர்த்திருந்த அம்மா பிள்ளைகள்
கலியாண வயசுல நிற்கும்போது
இப்படி இன்னொருத்திக்கூட வந்து
நின்னுட்டாரே....சொல்லிச்
சொல்லி கண்ணீர் வடித்தார்.
கண்ணீர் வடிப்பதைத் தவிர
எங்களுக்கும் வேறு வழி தெரியவில்லை.

என்னால இதற்கு மேல படிக்க வைக்க இயலாது.
தங்கைகளையும் உன்னைப் போல்
படிக்க வைக்க வேண்டும். அவளும் இந்தவருடம்
பன்னிரண்டாவது முடிக்கிறாள்.
அதனால் நீ வேலை பார்த்துகிட்டே
ஏதாவது படிக்க முடியுமா என்று பார்
என்றார்.
குடும்ப பொறுப்பை நீயும் கொஞ்சம்
கையில் எடுத்துக்கொள் என்பது
அம்மாவின் வார்த்தையில் தெரிந்தது.

அதுவரை இளவரசி என்ற நினைப்பில்
சுற்றிக் கொண்டிருந்த என்  நினைப்பில்
அப்படியே  ஒரு கீறல்
விழுந்ததுபோல் இருந்தது.

மேற்படிப்புக்கு பெரிய பூட்டாகப் போட்டு
முடிவு கட்டிவிட்டார் அம்மா.

ஆகாயத்தில் பறந்து கொண்டிருந்த பறவையை
அந்தரத்தில் சிறகொடிந்து விழ வைத்து
விட்டு அவர் பாட்டுக்குப் போய்விட்டார்.

அப்போதுதான் அப்பாவின் நண்பர் என்று் ஒருவர்
அப்பாவைப் பற்றிய செய்தியை கேள்விப்பட்டு
ஆறுதலாகப் பேசுவதுபோல் பேசி
வீட்டிற்குள் வந்து நுழைந்தார்.

"இனி  சாப்பாட்டிற்கு
என்னம்மா செய்யப் போறீங்க.....
இப்படி பண்ணிபுட்டானே....
நானும் எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டேன்
அவன் கேட்பதாகத் தெரியல...?"என்று கரிசனையோடு
அம்மாவிடம் பேசினார்.

"அதுதான் என்ன செய்வதென்று
தெரியல....
முன்ன மாதிரி துணி தைய்ப்பதற்கு
நிறைய பேர் வருவதில்லை.
வேறு ஒரு தொழிலும் தெரியாது.
எத்தனை நாளைக்கு ஒருத்தர் முகத்தை ஒருத்தர்
பார்த்துக் கொண்டு பட்டினி கிடப்பது?"
என்று வீட்டு நிலைமை முழுவதையும்
மூன்றாவது நபர்முன்
ஒப்பித்துவிட்டுக் கையைப் பிசைந்தபடி
நின்றார் அம்மா.

அப்பாவின் நண்பர் என்று வந்த அங்கிள்
சற்று நேரம்
எதையோ யோசிப்பதுபோல தாடையை
நீவிக் கொடுத்துக் கொண்டிருந்தார் .

பின்னர் ஏதோ நினைவு வந்தது போல "அம்மா...
எனக்கு ஒரு யோசனை இருக்கு...
ஆனால் அதுக்கு நீங்க ஒத்துப்பீங்களா
என்பதுதான் தெரியல...."என்று ஒரு
தயக்கத்தோடு தான் வீட்டுக்கு வந்த
நோக்கத்தை அம்மாவிடம் சொல்ல தயக்கம்
காட்டினார் .

"என்ன என்றாலும் சொல்லுங்கங்க......"என்ற
அம்மாவின் வார்த்தையில்  எந்த வழியிலாவது
ஒரு உதவி கிடைக்காதா ?
.நம்ம புள்ளைகளுக்கு யாராவது ஒரு
வழியைக் காட்ட மாட்டார்களா?"
என்ற ஏக்கம்
இருந்ததைப் புரிய முடிந்தது.

"அம்மா...பக்கத்தில் மூணாறில் எனக்குத்
தெரிந்த ஒரு நண்பர் கோச்சிங் கிளாஸ்
வைத்து நடத்துகிறார்.
அவர் வேலைக்கு படித்த பெண் வேண்டும்.
உங்களுக்குத் தெரிந்த பெண் யாராவது
இருந்தால் சொல்லுங்கள்  என்றார்.
நம்ம ரதியை அனுப்பினால்
இப்போதைக்கு உங்க கஷ்டத்துக்கு
கை கொடுப்பது மாதிரி இருக்குமே...
நீங்க என்னம்மா சொல்றீங்க
"என்று அம்மா முகத்தைப் பார்த்தார்.

"அவள் டீச்சருக்குப் படிக்கலியே...
வேலை கொடுப்பார்களா..."
சந்தேகத்தோடு கேட்டார் அம்மா.

" அதெல்லாம் பரவாயில்லை..
டியூட்டோரியல்தானே ....
நான் பார்த்துகிடுறேன்"

"இப்படி பண்ணிட்டு வந்து நிப்பாரு
என்று நினைக்கல...மொத்தமா
எங்களைக் கை கழுவிட்டாரு"
சொல்லிட்டு முத்தானையால்
கண்ணீரைத் துடைத்தார் அம்மா.

"அவன் கிடக்கிறான்....அவன் பேச்சை எடுத்தாலே
கோபம் கோபமாக வருகிறது.....
இப்போ நடக்கிற காரியத்தைப் பார்ப்போம்....
ரதி வேலைக்குப் போனால்
உங்க கஷ்டம் எல்லாம்
நீங்கிடுச்சி என்று நினைச்சுகிடுங்க"

" யாருகிட்ட போயி வேலை கேட்டு
நிற்க என்று தெரியாம முழிச்சுகிட்டு
இருந்தேன்.உங்களை அந்த கடவுள்தான்
அனுப்பியிருக்கார் "
கையெடுத்துக் கும்பிட்டார் அம்மா.

" என்னை போய் கும்பிட்டுகிட்டு....
அப்படி என்ன பெரிய உதவி செய்கிறேன்
என்று சொல்லிபுட்டேன் ....
என் நண்பன் புள்ளைகளுக்கு
உதவாம வேறு யாருக்கு
உதவப் போறேன்  " அங்கிள் குடும்பத்துக்கு ரொம்ப
நெருக்கமான உறவுக்காரர் போல பேசினார்.

"இந்த பிள்ளைகளுக்கு
ஒரு படிப்புக்கு ஒரு வழி கிடைச்சுது என்றால்..
அப்புறம் அவங்க பாட்டுக்கு பொழச்சுகிடுவாங்க"
இப்போது அம்மா என் தங்கைகளுக்கும்
ஏதாவது வழி செய்யமுடியுமா என்று
முதலாவதே விண்ணப்பம்
கொடுத்து வைத்தார்.

"ஒன்றுக்கும் கவலைபடாதீங்க....
முதலாவது ரதி போகட்டும்... அதற்குப் பிறகு
மற்றவர்களுக்கு என்ன செய்யலாம்
என்பதைப் பற்றி யோசிப்போம் "
தங்கைகளுக்குமான பொறுப்பைத் தன்
கையில் எடுத்துக் கொண்டார் அங்கிள்.

"மூணாறு  தூரமா இருக்கே.....பக்கத்தில் எங்கும்
வேலை கிடைக்காதோ?
காலையில் போயிட்டு சாயங்காலம் வீடு
வருகிற மாதிரி இருந்தா நல்லா இருக்கும்"
மறுபடியும் அம்மா என்னைத் தூரத்து
இடத்துக்கு அனுப்ப மனமில்லை என்பதை
வேறுவிதமாகச்
சொல்லிப் பார்த்தார்.

"உங்க பயம் எனக்குப் புரியுது.
எப்படி தெரியாதவங்க கூட நம்பி
பொம்பிள பிள்ளையை  அனுப்புவது
என்று நினைக்கிறீங்க..."

"இல்லங்க...அப்படி எல்லாம் இல்ல...
உங்களை நம்பாமல் வேறு
யாரை நம்பப் போறேன்.?"

"உங்க நல்லதுக்குத்தான் சொல்றேன்...
வேண்டாம் என்றால் உட்டுருங்க..."

"யாதுக்கும் ரதியை ஒரு வார்த்தை கேட்டுச்
சொல்றேன்."

"ரொம்ப அவசரமா உடனே அனுப்புங்க
என்று சொல்லல....
உங்கள் விருப்பம்போல நல்லா யோசித்து
ஒரு வாரத்துக்குள்ள சொன்னால் போதும்.
அப்போ நான் வரட்டும்மாம்மா"
அம்மா மனசில்  லேசான ஒரு ஆசையைத் தூண்டி
விட்டுவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

"ஆம்புள புள்ளன்னா பரவாயில்லை...
மூன்றும் பொட்டப்புள்ளையா போச்சு....
எட்ட போயி வேலை பார்த்துட்டு
வாங்க என்று அனுப்ப மனம் கேட்கல...
ரதி ...உனக்கு போக புடிச்சிருக்கா... "

" அவுங்கதான்  சொன்னாகள...அவங்களுக்குத்
தெரிஞ்சவுகதான் என்று. பிறகு நாம
எதுக்குப் பயப்படணும்? "
என்றாள் கடைசி தங்கை.

"தெரிஞ்சவுக என்றாலும் டியூட்டோரியல்
வைத்திருப்பவரை  நமக்கு
முன்னா பின்னா தெரியாதுல்ல.."
எனக்கு இருந்த அச்சத்தை மெதுவாக
சொல்லி வைத்தேன்.
.
" அவங்களுக்குத் தெரிஞ்சவுங்க
நல்லவங்களாதான்
இருப்பாங்க..."

"இந்த காலத்துல யார நல்லவுங்க என்று
நம்புறது.?..பச்ச புள்ளையையே ஒருத்தனையும்
நம்பி விட்டுட்டு போக முடியல...
காலம் கெட்டுக் கெடக்கு? "
நீங்க சின்ன புள்ளைகள். உங்களுக்கு
ஒன்றும் தெரியாது....." ஒரு தாயின் தவிப்பும்
பயமும் அம்மாவின் பேச்சில் இருந்தது.

உடன்பட முடியாமலும் விட்டுவிட முடியாமலும்
தடுமாறிக் கொண்டிருந்தார்
அம்மா.

"ஒருத்தரையும் நம்பல ன்னா இப்படியே முட்ட
கட்டிட்டிட்டு நாலுபேரும் ஒருத்தர்
மூஞ்சியை ஒருத்தர் பார்த்துட்டு பட்டினி
கிடக்க வேண்டியதுதான்.. நான் போறேம்மா
நீ பயப்படாத...."
ஒரு ஆம்பிள பிள்ளைபோல அம்மாவுக்குத்
தைரியம் சொன்னேன்.

ஆம்பிள இல்லாத வீட்டுல
ஆம்பிளையாக நின்னு வேலை செய்ய
வேண்டியதுதான்.

"அப்போ உனக்கு சம்மதமா ?
அது போதும்...நீ பேசாம போக்கா
எங்களுக்கு பணம் அனுப்பாட்டாலும் பரவாயில்லை.
உன்னையாவது நல்லா பாத்துக்க..."
பெரிய மனுஷியாட்டம் பேசி முடித்தாள்
கடைசி தங்கை.

"உங்கள எல்லாம் விட்டுட்டுப் போக
மனம் இல்லதான்...இருந்தாலும்
இப்ப நம்ம வீடு இருக்கிற நிலமையில
போயிதான ஆவணும்.
வேலை  என்ன...நம்ம நினைச்ச இடத்தில்
நினைச்ச மாதிரியா கிடைக்கும்?"

"டீச்சருக்குப் படிக்க வச்சுரணும் என்று
நினைச்சதுதான்
நடக்காமலே  போச்சு..."

"அது ஒண்ணு  பற்றியும் நீங்க
கவலைப்படாதுங்கம்மா...
தொலைதூரக்கல்வி மூலம் வேலை பார்த்துகிட்டே
படிச்சுகிறேன்."

வேலை பார்த்துக் கொண்டே மேற்படிப்பு
படித்து ஒரு நல்ல வேலைக்குப் போய்விடலாம்
என்ற ஆசைதான் என்னை பிடறியைப்
பிடித்துத் தள்ளியது.

|அம்மா போகிறேன் என்பதை அந்த அங்கிள் கிட்ட
சொல்லிடுங்க" என்றேன்.
அம்மா போய் சொல்லிட்டு வாரேன்
என்று அவர் வீட்டிற்குச் சென்றார்.
போறேன் என்று சொல்லிவிட்டேனே தவிர
உள்ளுக்குள் ஒரு உதறல் இருக்கத்தான்
செய்தது.

அங்கிள்கிட்டசொல்லிவிட்டு வந்த அம்மா
"நாளைக்கே புறப்படணும் "
என்று சொல்லி விட்டார் என்று கூறினார்.
எனக்கு தித்...திக் என்று மனசு
அடிக்க ஆரம்பித்தது.

"பாடம் எடுக்கத் தெரியாது...
வேறு என்ன வேலை கொடுப்பார்கள் ?"
என்று எனது சந்தேகத்தை என் தங்கையிடம் கேட்டு
வைத்தேன்.

"டியூட்டோரியலில் சட்டிப்பானை
கழுவவா சொல்வார்கள் ?
பேப்பர் திருத்த எடுக்க என்று
முதலாவது சின்ன சின்ன
வேலை தருவார்களா
இருக்கும்"
எங்க வீட்டு பெரிய மனுஷி எல்லாவற்றுக்கும்
டாண் டாண் என்று பதிலளித்துக்
கொண்டே வந்தாள்.

ஏதோ வெளி நாட்டுக்கு செல்கிறவளை
வழி அனுப்புவதுபோல ஆளாளுக்கு
என்ன எல்லாம் கொண்டு போகப் போகிறாய்?
என்னவெல்லாம் எடுத்து வைக்கணும்
என்று கேட்டுக்கொண்டே
பார்த்துப் பார்த்து பெட்டியை நிரப்பினர்.
.
என்னை ஒரு வேலை செய்ய விடல...
ஒருநாளும் என் துணியைக் கையால்
கூட தொடாத என் தங்கை
துணிமணிகளை எல்லாம் ஸ்திரி
போட்டு சரியாக பெட்டிக்குள் அடுக்கி வைத்து
தயார் பண்ணினாள்.

ஒரு மாசத்துக்கு வேண்டிய துணிமணிகளையும்
தின்பண்டங்களையும் எடுத்துக்கொண்டு
மறுநாளே ஆசிரியரோடு
புறப்பட தயாரானேன்.

ஆனாலும் தனியாக இவ்வளவு தூரம்
போகணுமா  என்ற கேள்வி
எங்கள் அனைவர் மனதிலும்
இருந்து கொண்டுடேதான் இருந்தது.
.

காலையில் அங்கிள்  ஒரு வாடகை
காரில்  வாசலில் வந்து இறங்கினார்.

" வாங்க...வாங்க..."வாசலில்
நின்று வரவேற்றார் அம்மா.

"இல்ல...பரவாயில்ல...
ரதி புறப்பட்டுட்டாளா....
உடனே வரச் சொல்லுங்க ..."அவசரப்படுத்தினார்
அங்கிள்.

"இதோ...ரதி..."அம்மா குரல்
கொடுக்கும் முன்னரே கையில் பெட்டியோடு
முதல் ஆளாய் வந்து நின்றேன்.

"அம்மா...போயிட்டு வாறேன்..".சொல்லுமுன்
கண்களிலிருந்து கண்ணீர் போலபொலவென்று
வடிய ஆரம்பித்தது.

"போகும்போது அழக்கூடாது..".கண்ணீரைத்
துடைத்துவிட்டபடி கூடவே வந்து
காரில் ஏற்றி விட்டார் அம்மா.

குடும்பத்தைப்  பிரிந்து ஒருநாள்கூட
வெளியில் எங்கும் இருந்ததில்லை.

கண்ணீரோடு வீட்டைப் பிரிந்து செல்லும்
மணமகள் போல..பொங்கிவரும் கண்ணீரை
அடக்கமுடியாமல்...கண்ணீரோடேயே
கடந்து வந்தேன்.

கார் மறையும்வரை அழாதே...அழாதே...
என்று ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்தார்
அம்மா...
அம்மா சொல்லச் சொல்ல
கூடுதலாக ஏதோ ஓர் கவலை வந்து
நெஞ்சை அழுத்தியது.

கண்கள் கண்ணீரை மழமழவென்று
கொட்ட ஆரம்பித்தன.

கார் புறப்பட்டதும் கண்ணீரில் வீடும்
ஊரும் காணாமல் போய்க் கொண்டிருந்தது.

ஊர் எல்லையைக் கடக்கும்வரை பேசாமல்
வந்த அங்கிள் முன்னால் சீட்டில்
இருந்து  முழங்கையை சீட்டின்
மேல் வைத்து  என்னைத் திரும்பிப் பார்த்தார்.

அட...இன்னும் அழுதுகிடா இருக்கிறா.....
வேறு எங்க போகிறா... வேலைக்குத்தானே போற....
என்று என்னை சமாதானப் படுத்த
முனைந்தார்.
என்னால் உடனடியாக இயல்புக்கு
வர முடியவில்லை.

வீட்டிலிருந்து ஏதோ ஒரு துணிச்சலோடு
இறங்கி வந்துவிட்டேன்.
இப்போதுதான் கூடுதலாக ஒரு
பயம் வந்து குடியேற ஆரம்பித்தது.
என்ன நடந்தாலும் என்ன ?....யாது என்று
கேட்க ஆள் இல்லாத அந்நிய இடத்துக்குப்
போறோமே என்ற கலக்கம் ரொம்பவும்
திணறடித்தது.

அந்த கலக்கம் கண்ணீராக வடிந்தது.

"முதல்ல அப்படித்தான் இருக்கும்.
போகப் போக எல்லாம் சரியாகிடும்.
முகத்தைத் துடைத்துட்டு சந்தோஷமா வா"
கையில் வைத்திருந்த கைக்குட்டையை
எடுத்து நீட்டினார் அங்கிள்.

வேண்டாம் என்றேன்.
கையில் வைத்திருந்த கைக்குட்டையால்
முகத்தைத் துடைத்தபடி  அங்கிளைப் பார்த்து
முதன்முறையாக சிரித்தேன்.

அங்கிள் தன் கைப்பையில் வைத்திருந்த
தண்ணீர் பாட்டிலை எடுத்துத்
தந்து "கொஞ்சம் தண்ணீர் குடி "என்றார்.

"வேண்டாம் அங்கிள் " கையை நீட்டி மறுத்தேன்.

கையைத் தட்டிவிட்டபடி,
"கூச்சப் படாதே....கொஞ்சம்போல குடி...
நார்மலுக்கு வந்துடுவா..."என்றார்.

மறுக்க முடியாமல் தண்ணீர் பாட்டிலை
வாங்கி மடமடவென்று குடித்தேன்.

அங்கிள் சொன்னது போலவே இப்போது
சிறிது ஆறுதலாகத்தான் இருந்தது.

இப்போது கார் மலைப் பாதை வளைவில்
சென்று கொண்டிருந்தது.
மெதுவாக வெளியில் எட்டிப்
பார்க்கத் துவங்கினேன்.

அந்த மலையும்...அதில் நிற்கும்
மரங்களும் என்னை வரவேற்றபடி
பின்னால் ஓடிக் கொண்டிருந்தன.

எவ்வளவு ரம்மியமான இடம்.
இவற்றையெல்லாம் பார்ப்பதற்கே
கொடுத்து வைக்க வேண்டும்....
மனம் அப்படியே அந்த இயற்கைச்
சூழலில் கரைந்து போனது.

எவ்வளவு அருமையான இடத்தை
இதுவரைப் பார்த்ததே இல்லை.

வேறு சிந்தனைகளை மழுங்கடித்து
மலை அழகு மட்டுமே இப்போது
என் மனதை ஆக்கிரமித்துக் கொண்டது.

எவ்வளவு நேரம் அந்த அழகைப்
பார்த்துக் கொண்டு வந்தேனோ நினைவில்லை.
கார் ஒரு குலுங்கலோடு நின்றபோதுதான்
நினைவு திரும்பியது.

மெதுவாக என்னைப் பார்த்த அங்கிள்
"இடம் வந்து விட்டது..வா "என்றார்.

வெளியில் எட்டிப் பார்த்தேன்.
ஊர் இருப்பதுபோல வீடுகள் அதிகமாகத்
தெரியவில்லை.
கையில் பெட்டியைத் தூக்கிக் கொண்டு
வெளியேறும் முன்னர் பெட்டியை வாங்கிக்
கொள்ள கையை நீட்டினார் அங்கிள்.

"பரவாயில்லை ....நான் வச்சுகிடுறேன்."

"நீ சும்மா வா.."என்ற
அங்கிளின்  பேச்சையும் கேட்காமல்
வலுக் கட்டாயமாக பெட்டியை
இழுத்துப் பிடித்துக் கொண்டேன்.

"அட போம்மா..உன் பெட்டியைத்
தூக்கிட்டு நான் எங்கவும் ஓடிட மாட்டேன்"
பெரிய ஜோக் அடித்துவிட்டதுபோல
சொல்லிவிட்டு சிரித்தார்.

நான் இப்போது சிரிக்கும் மனநிலையில்
இல்லை.
பழைய காட்சி மறைந்து இப்போது
புதியகாட்சி அரங்கேறிக்கொண்டிருந்தது.
என் கண்கள் எங்கே டியூட்டோரியல்
எனத் தேடுவதிலேயே இருந்தது.

அதற்குள் கையில் வைத்திருந்த வீட்டின்
சாவியை டிரைவர் கையில் கொடுத்து
திற என்றார் அங்கிள்.

நான் என்ன நடக்கிறது என்பதுபோல
நிமிர்ந்து பார்த்தேன்.
அவர் என்னைப் பார்க்காததுபோலவே
விடுவிடுவென
வீட்டிற்குள் நுழைந்தார்.

நான் வாசலிலேயே தயங்கி தயங்கி
நின்றேன்.
"வா உள்ளே..இனி இது உன் வீடுதான்"
என்றார் அங்கிள்.

இது என்ன...வேலைக்கு என்று அழைத்து
வந்துவிட்டு...பேசுவது புதுமையாக
தெரிந்தது.
.
உள்ளே செல்ல கால்கள் கூசின.
இது என்ன....டூட்டோரியல் என்று
சொல்லிவிட்டு ஒரு வீட்டுக்குக் கூட்டி
வந்துருக்கிறார்களே என்று
பயம் அதிகமாகியது.
முகம் குப்பென்று
வியர்த்துக் கொண்டு வந்தது.

வெளியிலிருந்து ஒரு மலையாள
சேச்சி வந்தார்.
"வாங்க....வா...மவளே வா.."என்றதோடு
நில்லாமல் என் கையில் வைத்திருந்த
பெட்டியைப் பிடுங்கிக் கொண்டு
கையைப் பிடித்து  இழுத்தபடி
வீட்டுக்குள் அழைத்துச் சென்றார்.

யாரிவர் ? ...ஒன்றுமே புரியவில்லை.

நெடுநாட்களாக ஆள் இல்லாத வீடு
போல இருந்தது.
உள்ளே சமையலுக்கான  பாத்திரங்கள்
எல்லாம் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.
அங்கங்கே ஒட்டடை தொங்கி
நெடுநாள் என்னைக் கவனிக்க
ஆளில்லை என்பதை சொல்லிக்
கொண்டிருந்தது.

வேறு யாரும் இங்கு இருப்பதற்கான
அடையாளமே தெரியவில்லை.
தனியாக இருக்கும் வீட்டில்
நான் மட்டும் தனியாகவா.....
ஏதோ விபரீதமாகப் பட்டது.

அங்கிள் தன் சொந்த வீடு போல
சோபாவில் சாய்ந்து உட்கார்ந்திருந்தார்.

நான் எட்டிப் பார்த்ததைப் பார்த்ததும் "வா....
வந்து உட்காரு "என்றார்.

"வேண்டாம் .இங்கே உட்கார்ந்து
கொள்கிறேன் "என்றபடி அருகில்
இருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்தேன்.

"இடம் நன்றாக இருக்கு இல்லையா...."
ஏதோ பிக்னிக் கூட்டி வந்ததுபோல
இடத்தைப் பற்றி என்னைக் கேட்டார்.

"ம்உம்...."..தலையை ஆட்டினேன்.

"தனியா இருக்கணுமே என்று பயமா
இருக்கா....பயப்படாதே.
சேச்சி உன்கூட இங்குதான் தங்குவாங்க"
என்றார்.

ஒரு குழப்பத்தோடு  அங்கிளைப் பார்த்தேன்.

"என்மனநிலையைப் புரிந்தவர்போல
ஒன்றுக்கும் கவலப்படாதே....நானும்
இங்கேதான் இருப்பேன் "என்றார்.

இப்போது கொஞ்சம் நஞ்சம் இருந்த
நம்பிக்கையும் அற்று போயிற்று.
கிளிக்கூண்டுக்குள் அடைக்கப்பட்ட
கிளிபோல வந்து அடைபட்டுவிட்டோமோ...

"அங்கிள் டூட்டோரியலுக்கு எப்போ போகணும்"
என்றேன்.

"இப்போதானே வந்திருக்கிறோம்.
நாளை போகலாம்"என்றார்.

ஓர் இரவுக்குள்  என் வாழ்க்கைக்கு
முடிவுரை எழுதி வைத்துவிட்டுச் செல்வார்
என்று அப்போது நினைத்துக்கூட பார்க்கவில்லை.

வயது வந்த பிள்ளைகளுக்குப் பாதுகாப்பாக
இருக்க வேண்டிய அப்பா
பொறுப்பில்லாமல் போய்விட்டால்....

காவல்காரன் காணாமல் போனால்...
ஊர் மாடுகள் எல்லாம் மேய்ந்து
பார்க்கத்தானே செய்யும் ?

இது எங்க அப்பா போன்ற அப்பாக்களுக்குப்
ஏன் புரியாமல் போனது?

முதல் பக்கத்திலேயே முடிவுரையை எழுதி
வைத்துவிட்டு
மூலையில் முடங்கிக் கிடந்தேன்.
காணாமல் போன கனவைத் தேடியபடி
எவ்வளவு நேரம்தான் இப்படியே கிடந்தேனோ..?.

மெதுவாக சன்னலைத் திறந்து
வெளியில் எட்டிப்பார்த்தேன்.

அங்கே....சேச்சி புதிதாக வேறு ஒரு
நபரிடம் பேச்சு வார்த்தை நடத்திக்
கொண்டிருந்தார்.

கண்கள் வானத்தை வெறித்துப் பார்த்தன.
அங்கே வானம் மேகத்தைப் பிய்த்து வீசி
வேடிக்கைக் காட்டிக் கொண்டிருந்தது.








.. 

Comments

Post a Comment

Popular Posts