நெல்லுக்கு இறைத்த நீர்....

நெல்லுக்கு இறைத்த நீர்.....


தீயவர்கள் மிகுந்துள்ள ஓர்
வழியாக ஒரு விவசாயி வந்து
கொண்டிருக்கிறார்.
ஊரில் நல்ல மழை பெய்திருந்தது.
வயல்களில் எல்லாம் பயிர்கள்
செழித்து வளர்ந்திருந்தன.
அமோக  விளைச்சல்.

இந்த ஊரின் செழிப்பான
சூழல் அந்த விவசாயியை ஆச்சரியப்பட
வைத்தது.

அக்கம்பக்கத்தில் எல்லாம்
அடாவடிக்காரர்கள் நிறைந்த ஊர் என்று
பெயர் எடுத்து வைத்திருக்கும் ஊர்.
அடிபிடி, வெட்டு குத்துக்குப் பஞ்சம்
இல்லாத ஊர்.

இந்தக் கொடுமைக்காரர்கள் வசிக்கும்
ஊர் இவ்வளவு செழிப்பாக இருக்கிறதே.
கடவுளுக்கு கண்ணே இல்லையா?
என்று சொல்லி ஒரு மரத்து நிழலில்
உட்கார்ந்து புலம்ப ஆரம்பித்துவிட்டார் விவசாயி.

"தம்பி...." குரல் கேட்டு
நிமிர்ந்து பார்க்கிறார்.
ஏதிரே ஒரு  பாட்டி கையில் கம்போடு
நின்று கொண்டிருந்தார்.

"என்ன..என்ன வேணும் ?"
படபடவென்று பேசினார் விவசாயி.

"கோபமாக இருக்கிறீர்களா....சரி
பரவாயில்லை .நான் வேறு யாரிடமாவது
கேட்டுக் கொள்கிறேன் "என்றபடி அங்கிருந்து
கடக்க நினைத்தார் பாட்டி.

"என்ன வேணும்.... சொல்லுங்க
எங்கே போகணும் ?" மறுபடியும்
அதே படபடப்பு.

"ஒண்ணும் இல்லை...இந்த ஊரு பெரியசாமி
வீட்டிற்குப் போகணும் .
அதுதான் எந்தப் பக்கமாகப்
போகணும் என்று விசாரிக்க நினைத்தேன்...
நீங்க யார் மேலேயோ கோபமாக
இருப்பது போல தெரிகிறது.
நான் தொந்தரவு கொடுத்திருந்தால்
மன்னிக்கவும்" தாழ்மையாகப் பேசினார்
பாட்டி.

"நம்ம பெரியசாமி ஐயா வீட்டுக்கா? "
பெரியசாமி ஐயா பற்றி
பச்சப் புள்ளையைக் கேட்டாலும்
சொல்லும்... தங்கமான மனுஷன்.
யார் வந்தாலும் இல்லை என்று சொல்ல
மாட்டார்.
கிள்ளிக் கொடுக்காமல் அள்ளிக் கொடுக்கும்
பெரிய மனசுக்காரர்."
புகழ்ந்து தள்ளினார் அந்த விவசாயி.

"ஓஹோ....அதுதான்
ஊரே செழிப்பாக இருக்கிறதா?"என்றார்
அந்த மூதாட்டி.

"அவர்மட்டும் நல்லவராக இருந்தால்
போதுமா ...
ஊருல இருக்கிறதுல பாதிபேர் அடாவடிக்காரங்க...
ம்...இந்த காலத்துல அடாவடிக்காரங்கதானே
நல்லா இருக்காங்க"
சொல்லிவிட்டு பெருமூச்சு விட்டார்
விவசாயி.

"ரொம்ப நொந்து போயிருப்பதுபோல
தெரிகிறது" சொல்லிவிட்டு
மறுபடியும் சிரித்தார் பாட்டி.

"ஏன் சிரிக்கிறீங்க...நான்
ஏதும் நான் தப்பாக  சொல்லி  விட்டேனா...?"

"நீ ஒன்றும் தப்பா சொல்லவில்லை தம்பி...
நீ உலக நடப்பைத்தானே சொன்னாய்.."

"அப்புறம் ஏன் சிரித்தீர்கள் ?..
கெட்டவங்க இருக்கிற ஊருல மழை பெய்யுது..
நல்ல விளைச்சல் இருக்கு...
ஏன் கடவுளுக்கு இவர்கள் செய்கிற அக்கிரமம்
கண்ணுக்குத் தெரியலையாக்கும் ?"
தன் கோபத்தைக் கடவுள் பக்கம் திருப்பினார்
விவசாயி.

"ஏன் தெரியவில்லை.....கடவுளுக்கு எல்லாம்
நன்றாகத் தெரியும்."

" கடவுள் இவர்களை எல்லாம்
மழை தண்ணி இல்லாமல்
நன்றாக காயப் போட்டிருந்தார் என்றால்
அடங்கி இருப்பார்கள் "

" அது எப்படி முடியும் ?"

"ஏன் முடியாது?
கடவுள் நினைத்தால் எல்லாம் முடியும் "

"உன் கேள்விக்கான விடை நீ சற்றுமுன்
பேசினாயே அந்தப் பேச்சில்
இருக்கிறது."

" என் பேச்சிலா ...நான் சொன்னேனா ?"

"ஆமாம் ...கொஞ்சம் முன்னால்
சொன்னாயே....பெரியசாமி தங்கமான
மனிதர் என்று.."

"இப்பவும் சொல்கிறேன் பெரியசாமி
தங்கமான மனிதர்.
அதில் மாற்றுக் கருத்தே இல்லை.
அதற்கும் ஊர் செழிப்பாக
இருப்பதற்கும் என்ன சம்பந்தம்?"

"அந்தப் பெரியசாமிக்காகதான்
இந்த ஊரில் மழையே பெய்கிறது. "

"அது எப்படி..."

" அதெப்படியா ?
சொல்கிறேன் கேள்..."

"நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்- தொல்லுலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லோர்க்கும் பெய்யும் மழை "

பாடிவிட்டு "உன் கேள்விக்கான பதில்
இந்தப் பாடலில் இருக்கிறது வருகிறேன் "
என்று திரும்பினார் பாட்டி.

"சும்மா பாட்டு பாடிட்டுப் போனால் எப்படி?
விட்டுருவோமா நாங்கள்...
விளக்கம் சொல்லிட்டுப் போங்க.. "
இடை மறித்தார் விவசாயி.

"உனக்குத் தெரியாததை நான்
சொல்லலியே.
இருந்தாலும் விளக்கம் கேட்பதால்
சொல்கிறேன் கேள்."

"நெல்லுக்கு நீர் பாய்ச்சும்போது
வாய்க்கால் ஓரம் செழித்து
வளர்ந்து நிற்கும் புல்லைப் பார்த்ததுண்டா ?"

"பார்த்திருக்கிறேன்..."

"நீ நெல்லுக்குத்தானே நீர்ப் பாய்ச்சினாய்.
புல் எப்படி வளர்ந்தது? "

"நெல்லுக்குப் பாய்ச்சிய நீரை உறிஞ்சி
புல்லும் வளர்ந்து விட்டது."

"புல் வளர்ந்துவிட்டதே என்பதற்காக
நெல்லுக்கு நீர் பாய்ச்சுவதை நிறுத்திவிட
முடியுமா ?"

"அது எப்படி முடியும்?
நாலு நாள் தண்ணீர் பாய்ச்சவில்லை என்றால்
வயலில் வெடிப்பு விழுந்து பயிர் பட்டுப்
போய்விடுமே !"

"நெல்லுக்கு கண்டிப்பாக  நீர்
பாய்ச்சணும்...  இல்லையா...?
அப்போது வயலோரம் நிற்கும் புல்லுக்கும் நீர்
கிடைக்கத்தானே செய்யும்."

"அதற்கும் பெரியசாமி ஐயாவுக்கும்
என்ன சம்பந்தம் ?"

"பெரியசாமி ஐயா நெல் வயல் மாதிரி.
அவரைப் போன்ற நல்லவர்களுக்காகவே
மழை பொழிகிறது. அதில் எல்லோரும்
பயன் பெறுகின்றனர். அதில் கெட்டவர்களும்
இருக்கத்தான் செய்வார்கள்.கெட்டவர்கள்
வாழ்ந்துவிடுவார்களே என்பதற்காக
பெரியசாமி ஐயாவை வாடப் போடலாமா "
என்று விவசாயிடமே திருப்பிக்
கேள்வி கேட்டார் பாட்டி.

விவசாயி அப்படியே வாயடைத்துப் போய்
உட்கார்ந்து விட்டார்.

அடேங்கப்பா... மழை பெய்வதிலும்
இவ்வளவு செய்தி இருக்கிறதா?
ஆச்சரியமான பதிலாக இருக்கிறதல்லவா!

எப்படி ...எப்படி எல்லாம் சிந்திக்க
வைக்கிறார் இந்த ஔவை.

நெல் வயலில் பாய்ச்சும் நீரானது வாய்க்கால்
வழியாக ஓடும்போது வாய்க்கால் கரையோரம்
உள்ள புற்களுக்கும் சேர்ந்தே பலனைத் தரும்.
அதுபோல நல்லவர் ஒருவருக்காகப் பெய்யும்
மழையால் எல்லோரும் பயன் பெறுவர்
இதுதான் பாடலின் நேரடியான பொருள்.

Comments

  1. Miga Arumaiyana Urai. Arputham. 👌👌👍🌷🌷🌷🌺🌺🌺🌺🌺🌺🌺

    ReplyDelete

Post a Comment

Popular Posts