மனதில் உறுதி வேண்டும்

மனிதில் உறுதி வேண்டும்


மனதில் உறுதி இருப்பவர்கள்
எதையும் சாதிக்கும் துடிப்பு 
மிக்கவர்களாக இருப்பர்.
தளர்ச்சி என்பது அவர்கள்
அகராதியில் இருக்காது.
வேகமும் துடிப்பும் அவர்கள்
செயலில் இருக்கும்.
 வெற்றி பெற வேண்டும்
என்ற தணியாத் தாகம் அவர்கள்
தேடலில் இருக்கும்.
மனதில் உறுதி இருந்தால்
எந்தச் சோர்வும் கிட்ட
அண்டாது. இதை மனதில்
வைத்துதான் பாரதி மனதில்
உறுதி வேண்டும் என்ற பாடல்
பாடியிருக்க வேண்டும்.


இதோ பாரதியின் அந்தப் பாடல்.

மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கினப் பொருள் கைப்பட வேண்டும்
கனவு மெய்ப்பட வேண்டும்
கைவசமாவது விரைவில் வேண்டும்
தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்
கண் திறந்திட வேண்டும்
காரியத்தில் உறுதி வேண்டும்
பெண் விடுதலை வேண்டும்
பெரிய கடவுள் காக்க வேண்டும்
மண் பயனுற வேண்டும்
வானகம் இங்கு தென்பட வேண்டும்
உண்மை நின்றிட வேண்டும்

அருமையான பாடலில்லையா?

மனதில் உறுதி வேண்டும்.

உறுதி மட்டும் இருந்தால்
போதுமா? 
பேச்சில் இனிமை வேண்டாமா?
பேச்சு ஒன்று நினைவு ஒன்று
என்று மாறுபாடாக இருக்கலாமா?
கூடாதல்லவா!
நினைவும் நல்லதாகவே இருக்க வேண்டும்.
அப்போதுதான் நம் மனம் விரும்பும் பொருள்
நமக்குக் கிடைக்கும்.
மனமும் மகிழ்ச்சியாக இருக்கும்.
 
எல்லோருக்கும் நாம் இப்படி இருக்க வேண்டும்.
அப்படி வாழ வேண்டும் என்று ஒரு கனவு
இருக்கும்.அந்தக்
கனவு  கனவாகவே கழிந்துவிடக் கூடாது.
கனவில் விரும்பியவை நனவில்
வந்து சேர வேண்டும்.கனவு 
நனவாவது எப்போது?
நெடுநாள் காத்திருத்தல் மனச்சோர்வை
தராதா?

அதனால் கனவில் நினைப்பவை
கைவசம் சீக்கிரமாகக்
கிடைக்க வேண்டும்.

செல்வம் இல்லா வாழ்க்கையில்
நிம்மதி இருக்குமா?
அதனால் வாழ்க்கை இனிமையாகக்
கடந்துபோகச் செல்வம் வேண்டும்.
செல்வத்தோடு கூடவே இன்பமும்
 இல்லத்தில் இணைந்து கூட்டாட்சி
நடத்திடல்  வேண்டும்.
 
இனிமையான வாழ்க்கை.
இனி என்ன வேண்டும் என்று
கேட்கிறீர்களா?
நாலுபேர் மெச்சும்படி வாழ வேண்டாமா?
வெளியிலும் நம்மைப்பற்றிப்
பெருமையாகப்
பேசும்படியான நிலை இருக்க வேண்டும்.
இப்படிப்பட்ட ஆசை எல்லோருக்கும்
உண்டு.

ஆனால் நாம் நினைப்பதெல்லாம் எளிதில்
நடந்துவிடுமா  என்ன? 

இவை எல்லாம் கிடைக்க வேண்டும்
என்றால் இறைவனின் கடைக்கண்
பார்வை நம்மீது விழ வேண்டும்.
அப்போதுதான் நன்மைகள்
நம்மை வந்தடையும்.
கல்விக் கண்கள்
திறந்திடல் வேண்டும்.
அப்போதுதான் அறியாமை ஒழியும்.
ஆக்கப்பூர்வமான சிந்தனைகள்
துளிர்க்கும்.நாடு நலம் பெறும்.
நல்லவை நடக்கும். அல்லவை தேயும்.

கடவுள் தருவார் என்று கையை மடக்கிச்
சும்மா இருந்தால் முடியுமா?
சோம்பேறியல்லவா சும்மா இருப்பான்!
நாம் செய்ய வேண்டிய காரியங்களைச்
செய்து கொண்டே இருக்க வேண்டும்.
அதுவும் செய்யும் காரியத்தில் உறுதி
 இருக்க வேண்டும். நேரத்திற்கு ஒன்று
 செய்பவராக இருக்கக் கூடாது.
 நேற்று ஒன்று இன்று ஒன்று
 என்று மாற்றி மாற்றி செய்யும்
மனநிலை  இருந்தால் தோல்விதான்
வந்து சேரும்.
செய்யும் செயலில் உறுதியான நிலைப்பாடு இருந்தால் மட்டுமே வெற்றி கிட்டும்.


நாம் வெற்றி பெற்றால் போதுமா?
 
வீட்டில் பெண்களுக்கு விடுதலை வேண்டாமா?
பெண்களுக்கும் விடுதலை வேண்டும்.
 பெண்கள் விடுதலை பெற்று வாழும்
 நாடுதான் முன்னேறிய நாடாகக்
 கருதப்படும்.வீட்டிலும் நிம்மதி இருக்கும்.
பெண்கள் அடிமைகளாக இருக்கும் நிலை
மாற வேண்டும்.

எது இருந்தாலும் பாதுகாப்பு என்பது
மிகவும் தேவையான ஒன்று.
மனிதனின் பாதுகாப்பு
நம்பகத் தன்மையற்றது. கடவுளின்
பாதுகாப்பு வேண்டும். கடவுளின் பாதுகாப்பு
 இருந்தால் மட்டுமே அச்சமில்லாமல்
நிம்மதியாக வாழலாம்.

அச்சமில்லா வாழ்க்கை இருந்தாலும்
கண்முன் பரந்து கிடக்கும் 
மண் விளைச்சல் மிக தந்து 
பூமியும் தன் பங்கிற்குச் செழிப்பாகிப்
பூரிப்புத் தந்திட வேண்டும்.
பூரிப்பால் வானம் வசப்பட
வேண்டும்.வானம் வசப்பட்டுவிட்டால்
வாழ்வே வசந்தமாகிப் போகுமல்லவா?

எல்லாம் கிடைத்துவிட்டது என்பதற்காக
பண்பில் குறைச்சல் இருக்கலாமா?
வாக்கினில் உண்மை இருந்திடல்
வேண்டும்.உண்மை மட்டும் இருந்தால்
போதுமா?
உண்மை மட்டும் இருந்தால் 
வேறு எல்லா நற்பண்புகளும் கூடவே
கைகோத்து நடக்கும்.அதனால்தான்
பாரதி உண்மை வேண்டும் என்கிறார்.

நம்மிடம் மட்டும் உண்மை இருந்தால்
போதுமா?
உலக மக்கள் நன்றாக இருக்க வேண்டாமா?
நன்றாய் இருத்தலுக்கு
உலகெங்கும் உண்மை நின்று
நிலை பெற்றிட வேண்டும்.

எல்லா தரப்பிலிருந்தும் சிந்தித்து
எழுதப்பட்ட பாடல். அதனால்தான்
பாரதியின் பாடல்கள் இன்றும்
கொண்டாடப்படுகின்றன.

வேண்டும்...வேண்டும்..வேண்டுமென்று
யாரிடம் கேட்டிட முடியும்?

இறைவனைத் தவிர யார் 
நம் வேண்டுதல்களை நிறைவேற்றப்
போகிறவர்கள் இருக்கப் போகிறார்கள்.?

அதனால்தான் இறைவனிடம்
தனது விருப்பத்தை விண்ணப்பமாக வைத்து
பாடலை முடித்திருக்கிறார் பாரதி.
 
பாரதி என்னென்ன விண்ணப்பங்கள் வைத்தார்
 என்பதை மறுபடியும் வாசிக்க வேண்டும்
 என்று தோன்றுகிறதல்லவா!

மனதில் உறுதி வேண்டும்....


Comments

  1. பாரதியாரின் பாடலில் வரும் அனைத்து வேண்டுதல்களும் நாமும் இறைவனிடம் விண்ணப்பித்து உள்ளோம்.வேண்டுதல் நிறைவேற தொடர்ந்து செபிப்போம்.அருமையான பதிவு.

    ReplyDelete
  2. Bharathiyar's request to God so that he wanted to live a prosperous, faithful and courageous life in this world. God can only provide all these things. So he presents his petition to God. But he should not be an idle man. He should work hard with a strong mind and a courageous heart. If he does his part and place his petition on God, pray sincerely God will do His part in his life. Super idea of the great poet. SUPERB

    ReplyDelete

Post a Comment

Popular Posts