உண்பது நாழி உடுப்பவை இரண்டே...

உண்பது நாழி; உடுப்பவை இரண்டே...


உண்ண உணவும் உடுக்க உடையும்

இருக்க வீடும் இருந்தால் போதும்.

இந்த மூன்றும் மனிதனின் அத்தியாவசிய

தேவைகளாகும்.

இந்த மூன்று தேவைகளையும் நிறைவு

செய்வதற்குதான் மனிதன் ஓடி ஓடி

உழைக்கிறான்.

ஆனால் இந்த மூன்றும் கிடைத்தால்

போதும் என்று நாம் திருப்திப்பட்டுக்

கொள்கிறோமா?

ஆடம்பரங்களை நோக்கி நம்
கண்கள் அலை பாயும்.

முதலாவது ஏதோ இருப்பதற்குச்

சொந்தமாக ஒரு வீடு இருந்தால்

போதும் என்ற மனநிலையில்

இருப்போம்.

 சொந்தவீடு கட்டியாயிற்று.

இப்போது கண்கள் அங்குமிங்கும்

தேடும்.அந்த வீட்டைப் போல் கட்டியிருக்கலாமோ?

இந்த வீட்டைப்போல் கட்டியிருக்கலாமோ?

இரண்டு மாடி எழுப்பி இருக்கலாமோ?

என்று எதிலும் ஒரு திருப்தி இல்லாத

மனநிலையிலேயே இருப்போம்.

உடை விசயத்திலும் இதே நிலைதான்.

ஆடம்பரங்களை நோக்கிய

பயணம்தான் நம்மை இருக்கவிடாமல்

துரத்திக் கொண்டிருக்கிறது.

நாளொரு உடை தேவையாக இருக்கிறது.

ஆனால் அந்த உடை ஆடம்பரமாக

இருக்க வேண்டும் என்பது அவசியம் அல்ல.

எளிமையாக இருந்தால் போதும்

என்று மனம் ஏற்றுக் கொள்கிறதா?இல்லையே..


ஒருவன் உலகம் முழுவதையும்

பிறருக்கு இல்லாமல் தனக்கே உரியதாக

தன் வெண்கொற்றக் குடையின்கீழ்க்

கொண்டு வந்து ஆண்டு அனுபவித்துக்

கொண்டிருக்கிறான்.மற்றொருவன் இரவு

பகலாக உழைத்து உண்கிறான்.

யாராய் இருந்தால் என்ன ?

உண்பதற்கு ஒரு படி அளவு உணவு போதும்.

உடுப்பதற்கு மேலாடை கீழாடை என

இரண்டு மட்டும்தான்.

எண்ணிப் பார்ப்போமானால்  இருவருக்கும்

அவ்வளவு பெரிய வேறுபாடு இல்லை.

இருவருடைய நுகர்வும் ஒன்றாகத்தான்

இருக்கிறது. அப்படி இருக்கும்போது

செல்வத்தைச் சேர்த்து வைத்து என்ன

செய்யப் போகிறோம்.?

முழுவதையும் நாமே அனுபவிக்கலாம்

என்றால் முடியாத காரியம் அல்லவா!

மிஞ்சிப் போகுமே!அது  தவறல்லவா?

அதனால் இருக்கும் ஒரே வழி பிறருக்கு 

கொடுத்து உதவுவதுதான்..

அரசனாக இருந்தாலும் ஆண்டியாக

இருந்தாலும் அளவுக்கு அதிகமாக 

சாப்பிட முடியாது.

நான் பணக்காரன் என்று பத்து மீட்டர்

 துணியை வாங்கி உடலில்

சுற்றிக் கொண்டு திரிய முடியுமா?

உங்களிடம் அதிக பணம் இருக்கிறதா?

இல்லாதவர்களுக்குக் கொடுத்து

உதவுங்கள் என்ற அருமையான அறிவுரை

வழங்கியுள்ளது ஒரு புறநானூற்றுப் பாடல்.


தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி

வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்

நடுநாள் யாமத்துப் பகலும் துஞ்சான்

கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்

உண்பது நாழி ; உடுப்பவை இரண்டே

பிறவும் எல்லாம் ஓரொக் குமே

செல்வத்துப் பயனே ஈதல்;

துய்ப்பேம் எனினே , தப்புந பலவே.

மதுரை கணக்காயர் மகன் நக்கீரனார்

எழுதிய பாடல்.

இப்போது ஔவை உண்பதையும்

 உடுப்பதையும் பற்றி என்ன 

சொல்லியிருக்கிறார் என்று  கேளுங்கள்.

உண்பது நாழி உடுப்பது நான்கு முழம்

எண்பது கோடி நினைந்து எண்ணுவன

கண்புதைந்த மாந்தர்குடி வாழ்க்கை

மண்ணின் கலம்போலச் 

சாந்துணையும் சஞ்சலமே
                                          நல்வழி.   :  28

மனிதன் உண்பது ஒரு ஆழாக்கு சோறு.

உடுப்பது நான்கு முழ

 அளவு உள்ள துணி....

ஆனால் அவன் எண்ணம் மட்டும்

எண்பது கோடியாக  இருக்கிறது.

அது வேண்டும்...

இது வேண்டும் என்று எதிலும்

திருப்தி கொள்ளாத நிலை.

பேராசை. அதன் விளைவு ஓயாச்

சஞ்சலம் . இதுதான் மானிட வாழ்க்கை

என்கிறார் ஔவை.

மனித வாழ்க்கை மண்கலம் போன்றது.

இன்று முடியுமோ? நாளை முடியுமோ?

யாருக்குத் தெரியும்?

இருப்பதைப் பேணி ஒப்பேற்றி

இருந்தால் இன்னும் கொஞ்சம் காலம்

வாழலாம்.

அல்லது மண்கலத்தை உடைத்துவிட்டு

மாய்ந்து போக வேண்டியதுதான்.

இதில் எதற்குப் பேராசை.?

இருக்கிறது என்று இரண்டு பக்கா

அரசியைப் பொங்கிச் சாப்பிட்டுவிட

முடியுமா?

நாலு முழத்துக்கு அதிகமாக

 நாற்பது முழ சேலையைக் கட்டிக்கொண்டு

திரிய முடியுமா?

இருவரும் கேட்கும்

கேள்வி நன்றாகத்தான் இருக்கிறது.


"செல்வத்துப் பயனே ஈதல்"

அருமையான வாழ்வியல் உண்மையை

உணர்த்தும் வரிகள்.!

"உண்பது நாழி;உடுப்பவை இரண்டே "

 வாழ்க்கைத் தத்துவத்தை உலகுக்கு

உரக்கச் சொல்லிச் செல்லும்  வரிகள் !

"உண்பது நாழி;உடுப்பது நான்கு முழம்"

சிக்கனத்தைச் சிக்கெனச் சொல்லிச்

சென்ற வரிகள்!


உண்பதிலும் உடுப்பதிலும் வேறுபாடு

இல்லாத நிலையில் நமக்குள் எதற்கு

வேறுபாடும் மாறுபாடும் என்று கேட்கும் 

தொனியில் சொல்லப்பட்ட

பாடல்கள்!

ஒத்துக் கொள்ளும் மாதிரியாகவா

இருக்கிறது?

காலத்திற்கு ஏற்ற கோலம்

போட வேண்டாமா? என்ற

உங்கள் மனவோட்டம் எனக்குப் புரிகிறது.

Comments

  1. பேராசை தான் மனிதனை தன்னிறைவு அடையாமல் அலைக்கழிக்கச் செய்கிறது.இதற்கான மாற்றத்தை மனிதன்தான் செயல்படுத்த வேண்டும்.

    ReplyDelete
  2. Human's nature is wanting more. He has no self satisfaction. But one should know that we did not bring anything into this world and we cannot take anything from here. Very nice moral is brought by the poet. Whatever we have we should be satisfied with that and be self content. Then he can live happily. The poem selection was good. Her writing with references are superb.

    ReplyDelete

Post a Comment

Popular Posts