சோத்துக்கணக்கு

    சோத்துக்கணக்கு

"ஒரு மாசமா உங்க அம்மா 
இங்கேயே இருக்குறாங்க...
ஊருக்கு எப்ப போவாங்களாம்?"
காலையிலேயே தன் கோபத்தை
சுரேஷ் முன் கொட்டினாள் பாலா.

பாலா தாயம்ம பாட்டியின்
இரண்டாவது மகன் சுரேஷின்
மனைவி. சுரேஷ் நல்ல வேலையில்
இருப்பதால் வசதியான குடும்பத்திலிருந்து
பெண் பார்த்து திருமணம்
முடித்து வைத்தார் தாயம்ம பாட்டி.

பாலாவுக்கு சுரேஷ் குடும்பத்தைப்
பார்த்தாலே ஆகாது.
நாங்க பெரிய குடும்பம் என்று
எப்போதும் சிலுப்பிக் கொள்வாள்.

 சந்தோசமாக தன் குடும்பதோடு
இருப்பதற்கு சுரேஷ் குடும்பம்
தடையாகிவிடக்கூடாது என்று
ஆரம்பத்திலிருந்தே முகம் கொடுத்து
யாரிடமும் பேசமாட்டாள்.

கிட்ட நெருங்க விட்டுட்டா பணம்
காசை அள்ளி கொடுத்துருவானோ
என்ற பயம்.

பத்து நாளைக்கு முன்னர்தான்
தாயம்ம பாட்டி மவனையும் 
பேரனையும் பாத்துட்டுப் போகலாம்
என்று வந்துருந்தாவ...
நாலு நாளையில போயிரணும்
என்றுதான் வந்தாவ...
சுரேஷ்தான் அங்கே போய்
என்ன செய்யபோறா...
கூட பத்துநாளு இருன்னு
வலு கட்டாயமா இருக்க வச்சான்.

பத்துநாளு பொறுக்கல...
அதுக்குள்ள சண்டையைத்
தொடங்கிட்டா...

சுரேசுக்கு என்ன செய்வதென்றே
தெரியல..

"போவாங்க...போவாங்க...
சத்தமா பேசாத அம்மா 
கேட்டுற போறாங்க"

"கேட்டா கேட்கட்டுமே எனக்கென்ன
பயமா ? கேட்டாலாவது
இங்கிருந்து கிளம்புறாங்களா
என்று பார்ப்போம்."

"ஒரு குத்துபோல சோறு திங்க
போறாவ....இங்க இருந்துட்டுப்
போகட்டுமே...ஊருல கையால
ஆக்கி சாப்புட்டுகிட்டு
ஒத்த ஆளா முடங்கி கிடப்பாவ "

"அப்போ நான் ஆக்கிப் போடணுங்கிய...
இல்லியா?"

"அம்மக்கின்னு தனியாவா ஆக்கிடப்
போற...நமக்கு பொங்குறதுல
ஒரு குத்து அவங்களுக்கும்
கொடுக்கப் போறோம்"

"ஏன் உங்க அண்ணன் மனைவி
அந்த ஒரு குத்துச் சோறையும் 
கொடுக்கமாட்டாவளோ ? "

"இப்போ அண்ணனை எதுக்கு
இழுக்குற....
அவனே இரண்டு பிள்ளைகளை வச்சுகிட்டு
படிக்க வைக்க முடியாம கண்ண கண்ண
தள்ளிகிட்டு கிடக்குறான்."

"நீங்க மட்டும் மகராசனா
வாழுறீயளாக்கும்."

"நீ சொன்னாலும் சொல்லலைன்னாலும்
நான் மகராசனாத்தான் வாழுறேன் "

"அப்படி ஒரு நினைப்பு இருக்கா?"

"எதுக்கு இப்படி ஏட்டிக்குப் போட்டி
பேசிகிட்டு நிக்கிறா...?"

"ஆமாம் ...எனக்கு ஏட்டிக்குப்
போட்டிக்குப் பேசணும்னு தலை
எழுத்து..."

"உன் தலையெழுத்துக்கு என்ன குறைச்சல்?"

"ஒண்ணும் குறையல சாமி.
நான் மகாராணியாத்தான்  வாழுறேன்."

"அதை ஒத்துகிட்டா சரி "

"ஆமா....நேற்று உங்க
அக்கா  ராணி  போன் பண்ணிப்
பேசுனாங்களே....என்ன கேட்டாவ?"

"என்ன கேட்பா? எல்லாரும் 
சுகமா இருக்கியளா தம்பி? 
பிள்ளையை நல்லா  
பார்த்துக்கன்னா..."

"அதான பார்த்தேன் என்னை
ஒரு வார்த்தைகேட்டுருக்க
மாட்டாவள....கேட்டா அவங்க
குலம் குன்னிப் போயிருமில்ல"

"எதுக்கு இப்படிக் காலையில் இருந்தே
சண்டையை இழுக்குற...
உன்னையும் கேட்டாவ...போதுமா?"

"போதும் சாமி. போதும்.
பொய் சொன்னது போதும்"

"நீ என்னைக்குத்தான் நான் 
சொல்லுறதை நம்புன... "

"நம்பாமத்தான காலக்காலச் சுத்திகிட்டுக்
கிடக்கிறேன் "அழுதபடியே உள்ளே
 சென்றாள் பாலா.
 
"எப்பா இவளைச் சாமாளிக்கு முன்னர்
உயிரே போயிரும் போலிருக்கு"
மெதுவாகச் சொல்லியபடி
சோபாவில் போய் உட்கார்ந்தான்
சுரேஷ்..

"அங்க என்ன முணுமுணுப்பு...."
குரலோடு கரண்டியின் ஒலியும்
வந்து எச்சரித்தது.

அப்போது,
"சித்தப்பா....எப்படி இருக்கிய"
என்று குரல் கொடுத்தபடியே 
வீட்டுக்குள் வந்தாள் அண்ணன்
மகள் பூரணி.

"அடே...வா...வா...ஏது
இந்தப் பக்கம்?
வீட்டுல எல்லாரும் நல்லா
இருக்காவ இல்லியா ?"

"நல்லா இருக்கோம் சித்தப்பா...
எங்க...குட்டியைக் காணோம் "
என்ற படியே கண்கள் வீட்டிற்குள்
குட்டியைத்  தேட ஆரம்பித்தது.

பூரணி குட்டி என்றது சித்தப்பாவின்
மகன் ஆதவனைத்தான்.

"குட்டி தூங்குறான்."

" பாட்டியும் தூங்கவா செய்யுறாங்க? 
 பாட்டி சாமக்கோழியில்லா...
 சாமத்திலேயே எழும்பி வேலை
 செய்துகிட்டு கிடப்பாவள....
 இங்கேயும் அப்படித்தானா ?இல்லை
 இங்க வந்த பிறகு தூக்கமா?"
 பாட்டியைப்பற்றி இப்படி ஒரு
 விசாரிப்போடு கண்கள் பாட்டியைத்
 தேட ஆரம்பித்தன.
 
"உங்க பாட்டியாவது தூங்குறதாவது.
முதல் ஆளா விழிச்சாச்சு.
பின்னால் நிற்கும்  பூஞ்செடிகள்
பக்கத்தில் கிடக்கும் சண்டுசருகு எல்லாம்
பெருக்கி சுத்தம் பண்ணிகிட்டு
நிக்குறாவ...சும்மா இருங்கன்னா
ஒரு நிமிசம் இருக்க மாட்டாவ...
கையி ஏதாவது செய்துகிட்டே இருக்கும்."

"ஊருல நல்லா வேலை பார்த்த கை.
சும்மா இருக்காதுதான். பாவம் பாட்டி.
பாட்டியப் பார்த்து
ஒரு மாசமாவுது..."என்றபடியே வீட்டுக்குள்
சென்றாள் பூரணி.

அங்கே சித்தியைப் பார்த்ததும்,
"சித்தி ....எப்படி இருக்கிய....
இந்தாங்க அம்மா கொடுத்தனுப்புனாங்க"
என்று கைப்பையில் இருந்து
ஒரு  பார்சலை எடுத்து நீட்டினாள்.

"உங்க சித்தப்பாவுக்குப் பிடிக்கும்
என்றுதானே கொடுத்து அனுப்பி
இருப்பாவ...அதை உங்க சித்தப்பா
கிட்டேயே கொடு..."
முகத்தை ஒரு திருக்கு திருக்கினாள் பாலா.

"வாங்கிக்கங்க சித்தி.
எல்லோருக்கும்தான் கொடுத்து
அனுப்புனாவ...."

"அங்கே வை.."மேசையை நோக்கிக்
கையைக் காட்டிவிட்டு் முகத்தைத்
திருப்பிக் கொண்டார் சித்தி.

கொண்டு வந்தப் பண்டத்தை
மேசைமீது வைத்துவிட்டு
தோட்டத்தை நோக்கிச் சென்றாள்
பூரணி.

பாட்டியைப் பார்த்ததும் "பாட்டி..."
என்று அழைத்தபடியே
ஓடிச் சென்று கட்டிப்பிடித்தாள்.

"வாம்மா...வா..
ஒத்தைக்கா வந்தா...அப்பா வரல..."
என்று கேட்டபடியே கண்கள்
மகனைத் தேடின.

"வரல பாட்டி..ஒத்தைக்குத்தான்
வந்தேன்...."

"ஏதும் விசயமா? 
இல்லன்னா உங்க அப்பா
ஒத்தைக்கு அனுப்பி வைக்கமாட்டான.."

" சும்மாதான் பாட்டி.
 எனக்கு ரிசல்ட் வந்துருக்கு.
 நல்ல மார்க் வாங்கி பாஸாகியிருக்கேன்.
 அதுதான் சித்தப்பாகிட்ட சொல்லிட்டு
 மேல என்ன படிக்கலாம்ன்னு
 கேட்டுட்டு வான்னு அனுப்புனாவ..."

"எம் புள்ள பாஸாயிட்டியாம்மா.
எப்படியாவது ஒரு டீச்சர் வேலைக்குப்
படிச்சிரு..."

"பாப்போம் ..சித்தப்பா என்ன 
சொல்லியாவளோ
அத படிக்கணும்."

"நம்ம யாலுவுக்கு தக்கனதான் படிக்கணும்
தாயி. பெரிய பெரிய படிப்பெல்லாம்
நமக்கு ஆவாது. சித்தப்பா சொல்லுவான்...
நான் சொல்லியத கேளு..."
என்றபடியே மருமகள் வருகிறாளா
என்று தலையை நீட்டி உற்றுப் பார்த்தார்
தாயம்ம பாட்டி.

"என்ன பாட்டி ஒரு மாதிரி
பேசுறிய...? ஏதும் பிரச்சினையா?

"ஒண்ணுமில்ல நம்ம 
விரலுக்குத் தக்கதான்
வீங்கணும் என்னு சொல்லுறேன்"

"அம்மையும் இதத்தான் சொன்னாவ..
அப்பாதான் சித்தப்பாவ நான்தான்
படிக்க வச்சேன். அவன் நமக்கு
கண்டிப்பா உதவி பண்ணுவான்னு
சொல்லி அனுப்பி வுட்டாவ"

"வந்ததுல தப்புல்ல...
சித்தப்பாகிட்ட எந்த உதவியும்
எதிர்பார்த்து இருக்காதுங்க....
நான் சொல்லியத சொல்லிபுட்டேன்.
அப்புறம் உங்கபாடு ...உங்க சித்திபாடு
சித்தப்பா பாடு.."

"ஏம் பாட்டி... சித்தி சண்டை
 போடுவாவளோ? "

"ஷ்...சத்தமா பேசாத...பகலுல
பக்கம் பாத்து பேசணும்."

"ஆமா...சித்தி வந்து மெதுவா
எட்டிப் பாத்துட்டுப் போறாவ..."

"வா...வந்த தேரத்துல இருந்து
வெளியில நின்னே பேசிகிட்டு
இருக்கோம்...சந்தேகப்படுவா.
ஏதும் சாப்பிட்டுட்டு
வந்தியா...வெறும் வயித்துலதான்
வந்தியா?

"சாப்பிட்டுட்டுதான் வந்தேன் பாட்டி."

"வாங்க..."பாட்டி கையைப் பிடித்து
வீட்டுக்குள் கூட்டி வந்தாள் பூரணி.

"பூரணி ...அம்ம என்ன சொல்லுறாவ..."
கேட்டார் சித்தப்பா.

"ஒண்ணும் சொல்லல்ல சித்தப்பா.
நாலு கோழியை பக்கத்து வீட்டுக்கார
தங்கத்துக் கிட்ட பாத்துகிடச்
சொல்லி குடுத்துட்டு வந்தாவளாம்.
வேளாவேளைக்கு இரை போட்டாளோ
அந்தால காட்டோட போய் 
இரை பொறுக்கிட்டி
வரட்டும் என்று பத்திவிடுறாளோ 
என்று புலம்புறாவ..."

"அதுதான் தம்பி ...காட்டுக்கு
அனுப்பி வுட்டுட்டான்னா விருவுகிருவு
பிடு்ச்சி தின்னுபிட பிடாது.
ஒரு ஆட்டுகுட்டி வாங்கிவுட்டேன்.
நான் அங்க இருந்தேன்னா ஒரு 
கொளகிள பறிச்சு போடுவேன்"

"இந்த வயசுல உங்களுக்கு இதுல்லாம்
தேவையா? "

"கோழிமுட்டைய வித்தா...
ஒரு கைச்செலவுக்கு ஆவுமில்லையா...."

"இன்னும் இந்த ஆடு ,மாடு ,கோழி
ஞாபகம் போகமாட்டேங்குது..
கைச்செலவுக்கு பணம்
எதுக்கு? என் கூடவே இங்க
இருங்கன்னாலும் அதுவும்
கேட்க மாட்டேன் என்கிறீய..."

"கால் கை தெடமா இருக்கச்சுல 
யாருக்கும்
பாரமா இருக்கப்புடாது தம்பி..."

"பிறகு பிள்ளைகள்ன்னு நாங்க
இருந்து எதுக்கு?"

"நல்லா சொல்லுங்க சித்தப்பா.
எங்க அப்பாவும் இதத்தான்
சொன்னாவ....ஒரு ஆட்டுகுட்டி
கெடக்கு...கோழி கெடக்குன்னு
எங்க வீட்டுலேயும் 
நாலு நாளு இருக்க மாட்டேன்னுட்டாவ..."

"உங்க அப்பாவே இரண்டு பிள்ளைகளை 
வச்சுகிட்டு பள்ளி கூடத்து பீசு
வீட்டு வாடகை...அது இதுன்னு
சமாளிக்க முடியாம கண்ண 
கண்ண தள்ளிகிட்டு
கெடக்கான். இதுல நானும் ஒருத்தி
பாரமா வந்து இருக்கணுமா?"

"ஓ....அப்படியா சமாச்சாரம்.
வாங்க..வாங்க..அப்பா கிட்ட போயி
சொல்றேன்...விடாதுங்க சித்தப்பா.
இங்கேயே இருக்கச் சொல்லுங்க..."

"ஏன் உங்க வீட்டுல வைக்க
முடியாதோ ..."என்றபடி விவாதத்தில்
கலந்து கொள்ள வந்தார்
சித்தி.
 
இந்த நேரத்துல இவள இங்க யார்
வரச் சொன்னது ?என்பதுபோல
முறைத்தான் சுரேஷ்.

"என்னைய எதுக்கு முறைக்குறிய
உள்ளததான சொன்னேன்.
உள்ளதச் சொல்லுற நான் ஊருக்கு
ஆகாதவா....?"

"உங்களுக்குள்ள எதுக்குச் சண்டை
போடுறிய...
எனக்கு இந்த ஊரு ஒத்து வராது.
அங்கன்னா நாலு சனத்துகூட
பேசுனோமா ....இருந்தோமான்னு இருக்கும்.
இங்க முனி மாதிரி அப்படியே
இருக்க வேண்டியது இருக்கு.
காலு கை 
அப்படியே வலிச்சு போவுது.
அதுதான் ஊருக்குப் போறேன்
என்கிறேன். வேறு ஒண்ணு
நீ நினைக்காத தம்பி."

அம்மா எதுக்கு இப்படி
சொல்லுறாவ என்பது
சுரேசுக்குப் புரியாமலில்லை.

"அவுகதான் ஊருக்குப் போறேன்...
ஊருக்குப் போறேன் என்கிறாவள...
நீங்க ஏன் வலிய பிடிச்சு இழுத்து
வைக்கிய..."

"எம்மோ நான் சொல்லியத கேளுங்க.
நீங்க என் வீட்டுல இருக்கதுல
எனக்கு ஒரு கஷ்டமும் இல்ல.
நல்லா படிக்க வச்சுருக்கிய...
உங்களுக்குச் சோறு போடுறதுல
பெருசா என்ன
செலவு வந்துடப் போவுது..?"

"செலவு இந்த மாசம் அதிகமாயிடுச்சு.
பால் , காபித்தூள் என்று எல்லாம்
கூடுதல் வாங்கியிருக்கேன்.
கேஸ் முப்பது நாள் கூட வரல... 
அதெல்லாம் உங்களுக்கெல்லாம்
எங்க தெரியப் போகுது?"
வரவு செலவு கணக்கு வாசிக்க
ஆரம்பித்தாள் பாலா.

"சோத்துக்கணக்குப் பார்க்காத..பார்க்காத
என்று எத்தனை நாள் சொல்லியிருக்கேன்."
கோபப்பட்டான் சுரேஷ்.

"நான் வேறு என்ன கணக்கு பார்க்க
முடியும் ? 
உங்க ஆபீஸ் கணக்கா பார்க்க முடியும்?"

அவர்களுக்குள் சண்டை வலுப்பதைக்
கண்ட தாயம்ம பாட்டி 
என்னால நீங்க சண்டை
போட்டுகிடாதங்கப்பா....நான்
ஒத்த ஆளு....ஆழாக்கு அரிசகயை
 கஞ்சி ஆக்கிப் வைச்சேன்னா நாளு
முழுதும் குடிச்சுகிட்டு அப்படியே
காலத்தை கடத்திபிடுவேன்.
வீட்டையும் பாத்துகிடுவேன்.
வீட்டுல ஒரு ஆளு இல்லன்னா
வீடும் அழிஞ்சு போயிரும்.
என்றபடி வீட்டிற்குள் சென்று விட்டார்.
பின்னாலேயே பூரணியும் சென்றாள்.

"இங்க பாரு...அம்ம முகம்
அப்படியே வாடிப் போச்சு.
எதை எப்ப பேசணும்னு
தெரியாது... நீ மட்டும்தான்
சோறு போட்டுட்டியா?
எங்க அம்மையும் இருபத்து எட்டு
வருசமா சோறு போட்டுதான
வளர்த்தாவ...ஒவ்வொரு வீட்டுலேயும் அம்ம சோத்துக்கணக்கு பார்த்தாவன்னா
அந்தக் கடன் எங்கே போய் முட்டும்
தெரியுமா?
தங்களை வளர்க்க அம்மா பட்ட
கஷ்டம் மனதுக்குள் வந்துபோக
நெஞ்சுக்குள் ஏதோ ஒன்று பிசைவதுபோல்
இருந்தது.
அதுக்கு மேல பேச முடியாமல்
அப்படியே உட்கார்ந்திருந்தான்.

"என்னத்த சொல்லிபுட்டேன்னு இப்படி
இடிஞ்சு போய் உட்கார்ந்துருக்கிய..."
மறுபடியும் வம்புக்கு இழுத்தாள் பாலா.

"தாய்க்கு மட்டுமல்ல...யாருக்கும்
சோறு கொடுத்ததைச் சொல்லிக்
காட்டக்கூடாது.அப்படி தின்னதை 
சொல்லிகாட்டுனா அந்த வீட்டுல
யாரும் மறுபடியும் கை நனைக்க மாட்டாவ...புரிஞ்சுக்க.."

"நாம மட்டும்தான் கொடுக்கணுமா?
ஏன் இரண்டு பிள்ளைகள்
பெத்துருக்காவ இல்லியா?"

"ஏதோ எனக்கு ஒரு நல்ல வேலை 
இருக்கு ....இல்லியா...
அதுவும் அண்ணன் படிக்காமல் போய்
வேலை செய்து என்னை படிக்க
 வச்சதுனால ஒரு
அரசாங்க வேலையில கஷ்டமில்லாம
ஓட முடியுது.
அவனைப் பாரு இண்ணைக்கும்
ஒரு கேரேஜில் கிடந்து பாடாபட்டுதான்
சாப்பாட்டுக் கதையையே ஓட்டுறான்.்."

"அது அவங்க தலை எழுத்து. 
அதுக்கு நாம என்ன செய்ய முடியும்? "

"அப்படிச் சொல்லாத...
என் தலையெழுத்த மாற்றத்தான்
அண்ணன் அவன் தலையெழுத்தை
அப்படி அமைச்சுகிட்டான்.
நம்மால முடிஞ்ச உதவிய 
அண்ணனுக்கும் செய்யணும்? "

"அப்போ நீங்க மாறப்போறது இல்ல...
உங்க குடும்பத்தை கட்டிகிட்டு
அழுங்க ...
நான்   எங்க
அப்பா வீட்டுக்குப் போறேன்"

"போ..தாராளமா போ....
நான் தடுக்கல...."

"சித்தப்பா..."வந்து எட்டிப்பார்த்தாள்
அண்ணன் மகள்.
"நான் வீட்டுக்குப் போறேன் சித்தப்பா.
பாட்டியும் என்கூட வாராவ"
என்று தயங்கியபடி கூறினாள்.

"எதுக்கு? இப்போ உடனே
போகணும்?"

"வந்தாச்சி...உங்கள எல்லாம்
பாத்தாச்சி....இனி அண்ணன்
வீட்டுல போயி இரண்டு நாள்
இருந்துட்டு ஊருக்குப் போறேன்"

"நீங்க ஊருக்கு போகணுன்னு
முடிவு பண்ணியாச்சு.
இனி உங்கள யார் தடுத்தாலும் 
நிற்கவா போறீய?" என்றான் சுரேஷ்.

 வாய் அப்படி சொன்னாலும் உன்னை
என்கூட வச்சு சோறு போட
முடியாத கையாலாதவனாகிட்டேம்மா.
என்னை மன்னிச்சிடு என்று
உள்ளுக்குள் அழுதபடி
கையெடுத்துக் கும்பிட்டான் சுரேஷ்.

"வாறேன் தம்பி...வாறேம்மா..."
என்றபடி  சுரேஷ்
வீட்டைவிட்டு வெளியேறினார்
தாயம்ம பாட்டி.

கண்கள் கலங்க வாசலிலேயே
நின்றிருந்தான் சுரேஷ்.

"என்ன அங்கேயே நின்னுகிட்டு
இருக்கிய..உங்க அம்மா போயி
அரை மணி நேரம் ஆயிடுச்சி..."
கையைப்பிடித்து இழுத்தாள்
பாலா.

நிமிர்ந்து மனைவியைப் 
ஒரு பார்வை பார்த்தான்.

அந்தப் பார்வையில் பெத்த தாய்க்கு
சோத்துக்கணக்கு
பார்க்கிற நீ எல்லாம் ஒரு மனுஷியா?
என்ற கேள்வி இருந்தது.










Comments

  1. உண்மையை உணர்த்தும் அருமையான பகிர்வு. நன்றி.

    ReplyDelete
  2. அருமையிலும் அருமை

    ReplyDelete
  3. The reality of human behaviour is described in this story. She made the story very interesting to read. The language used in this story is Tamil language spoken by the people of some remote village of Tamilnadu. She is talented in this way of writing
    too. Very interesting and realistic story. Excellent.

    ReplyDelete
  4. இந்த உலகில் சுயநலமற்ற ஒரு ஜீவன் தாய் மட்டுமே.அந்த தாய்க்கே சோற்றுக் கணக்கு பார்ப்பது மிகக் கொடுமை.மிக அருமையான பதிவு.

    ReplyDelete

Post a Comment