பொண்ணு பொறந்தாச்சு

பொண்ணு பொறந்தாச்சு


முற்றத்தில் கிடந்த கட்டிலில்
படுத்துக் கிடந்தார் பாலு.
"இந்த முறையாவது நல்லது
நடக்கணும்"
கண்ட தெய்வத்தை எல்லாம்
வேண்டிக் கொண்டார்.

மனசுக்குள் திக்..திக் என்று
மரணபயம் கவ்விக் கிடந்தது.
ஒவ்வொரு நிமிடம் கடப்பதும்
ஒரு யுகம் கடப்பது போல் இருந்தது.
இதற்கு முன்னரும் இப்படிப்பட்ட
அனுபவங்கள் ஏற்பட்டதுண்டு.
ஆனால் இந்தமுறை அநியாயத்துக்கு
கூடுதலாக வியர்க்குது.
தொடர்ந்து பத்து நிமிடம் படுக்க
முடியவில்லை.
எழும்பி இந்தத் தெருவுவரை போயிட்டு வரலாம்
என்று வெளியில் வந்தார்.

அதற்குள் "எப்பா எங்கப் போறிய
நானும் வாரேன் "என்று ஓடி வந்து
கையைப் பிடித்தாள் பூரணி.

"எங்கேயும் போகல...
காலையிலயிருந்தே ஒண்ணும்
சாப்பிடலயில்ல...காப்பிக் கடையில போயி
உங்களுக்கு
ஏதாவது தின்பதற்கு வாங்கி வாறேன்."

"நானும் கூட வாரேன்....."அப்பாவை விட்டுட
கூடாது என்று கையைப் பிடித்து
இழுத்தாள் மூன்றாவது பெண் பூரணி.

"நான் ஒரு இடத்துக்கும் போகல
போதுமா.... "சொல்லிவிட்டு அப்படியே
பக்கத்தில் கிடந்த குறுங்கட்டிலில்
உட்கார்ந்தார்.

மடியில் ஏறி உட்கார்ந்து அப்பாவின்
மோவாயைத் தடவினாள்.
"குத்துதுப்பா..தாடி பண்ணிட்டு
வாங்க..''

"பண்ணலாம்....பண்ணலாம்"
குரலில் ஒரு சுரத்தில்லாமல் இருந்தது.

"வெள்ள முடியா இருக்கு...நீங்க
கிழவன் ஆயிட்டிய"
என்று சொல்லிச் சிரித்தாள்.

வேறு நேரமாக இருந்தால் பதிலுக்கு
ஏதாவது சொல்லி கிண்டலடித்திருப்பார்.
இப்போது கிண்டலடிக்கும் மனநிலையில்
அவர் இல்லை.

"வீட்டுக்குள்ள போயி அப்பாவுக்கு
குடிக்க கொஞ்சம் தண்ணி
கொண்டுவா.....தாகமா இருக்கு...போ.."

"நான் என்ன சொன்னாலும் சிரிக்க
மாட்டேங்கிய...போங்கப்பா "என்று பொய்க்
கோபங்காட்டி வீட்டுக்குள் சென்றாள்
பூரணி.

மகள் வீட்டுக்குள் சென்றதும் மாட்டுத்
தொழுவு பக்கம் கண்களைத்
திருப்பினார் பாலு.

அங்கே நேற்று பிறந்த கிடாரி ஒன்று
தாயின் மடுவில் முட்டி முட்டி பால்
குடித்துக் கொள்வதும் துள்ளிக்
குதிப்பதுமாக விளையாட்டுக்காட்டிக்
கொண்டிருந்தது.

கிடாரி ஈன்றதால் இரண்டு காம்பில்
மட்டும் பால் கறந்துவிட்டு மீதி
இரண்டு காம்பு பாலைக் கிடாரி
குடிக்கட்டும் என்று விட்டுடுடச்
சொல்லியிருந்தார் பாலு.
நல்லா தாய்ப்பால் குடிச்சாதான்
கிடாரி நல்லா மினுமினுன்னு
வளரும்.
அது என்னவோ கிடாரிக்குன்னா
தனி மதிப்புதான் என்று உள்ளுக்குள்ளேயே
சிரித்துக் கொண்டபடி
அருகில் போய் தடவிக் கொடுத்தார்.
அவர் கையை முதுகில் வைக்கப்
பொறுக்காமல் துள்ளிக் குதித்து
விலகி ஓடியது கிடாரி.

கிடாரின்னா கிடாரித்தான்.
கையை வைக்க விடமாட்டேங்குது.
கிடாரியையே பார்த்துப் பார்த்துப்
பூரித்துப் போய் நின்றவர் பக்கத்தில்
பூரணி வந்து நின்று செம்பை
நீட்டிக்  கொண்டு நிற்பதைப்
பார்க்கவில்லை.

"அப்பா...எவ்வளவு தேரமா இங்க
நிக்கேன். உங்களுக்கு
கண்ணே தெரியல...அங்க மாட்டுகிட்ட
போயி என்ன செய்யுறிய...
வாங்க வந்து தண்ணிய குடியுங்க.."

"கட்டில் கால் பக்கத்துல கீழ வை.
தவிக்கும்போது எடுத்துக்  குடிக்குறேன்."

"பொய் சொல்லாதுங்க...இப்போதான
தாகமா இருக்கு தண்ணி கொண்டு வா
என்று சொன்னிய .."

"இந்த பசுவுக்கு படப்புல இருந்து
ஒரு அப்பு வைக்கோல் பிடுங்கி
போட்டுட்டு வாறேன்."

"எதுக்கு? இப்போதான் பங்காளி வந்து
மேய்க்க பத்திட்டுப் போவான.."

"சரி தொட்டியில இரண்டு புண்ணாக்குத் துண்டு கொண்டாந்து போடு. ஒரு வாய் தண்ணியாவது குடிச்சுட்டுப் போட்டும் "

"உங்களுக்கு இன்னைக்கு என்னாச்சு.
மேய போற மாட்டுக்கு வைக்கோல
போடணுங்கிய. புண்ணாக்குத் தண்ணி
குடுக்கணுங்கிய...
வந்து கட்டுலுல உட்காருங்க..."
வலுக்கட்டாயமாக இழுத்துப் பிடித்து
வந்து கட்டிலில் உட்கார வைத்தாள்.

"நீ...போ...போ...நான் சித்த கால் நீட்டிப்
படுக்கணும். "

"குறுங்கட்டுலுல எப்படி கால் நீட்டிப்
படுப்பிய...பாட்டிகிட்ட சொல்லி பெரிய
கட்டுல தூக்கிப் போடச் சொல்லட்டுமா?"

"நான் படுக்கல தாயி...கொஞ்ச நேரம்
என்னை தொந்தரவு பண்ணாத"
எரிந்து விழுந்தார் பாலு.

அவருக்கே அவர் செய்வது என்ன
என்று புரியல..
என்ன நடக்குமோ என்ற ஒரு
பதட்டம்.

ஒரு முறையா ?இரண்டுமுறையா ?
நாலுமுறையும் இதே பதட்டம்தான்.

இந்த முறையாவது நல்லது நடக்கணுமே...
இப்போதும் பெண்பிள்ளை பிறந்து
விட்டால்....
தங்கப்பழம் "நாலு பிள்ளைகள்
போதுங்க அரசு ஆஸ்பத்திரியில போய்
குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை
செய்து வாரேன் "என்றாள்.
பாலுவுக்குத்தான் மனசு கேட்கலை.
இந்த முறையாவது ஒரு ஆம்புளப் புள்ளை
பிறந்திறாதா என்ற நப்பாசை.
இந்த ஒருமுறை மட்டும் பார்ப்போம்
என்று பிடிவாதமாக அனுப்ப
மறுத்துவிட்டார்.

நாலுபேர் கொள்ளி வைக்கப் புள்ள
இல்லாதவன் என்று சொல்லிபுட கூடாதாம்.

அப்போது வீட்டுக்குள்ளிருந்து
வெளியே வந்து எட்டிப் பார்த்தார்
நர்ஸ்.
என்ன சொல்லப் போகிறாரோ என்ற
எதிர்பார்ப்பில் கட்டிலிலிருந்து
படக்கென்று எழும்பி நர்ஸை
நோக்கி ஓடினார்.

"பதட்டப்படாதுங்க....இருங்க...
இருங்க...ஒரு பத்து நிமிசத்துல
பொறந்துரும் "என்று சொல்லிவிட்டு
உள்ளே தலையை இழுத்துக் கொண்டார்
நர்ஸ்.
"உன்னை நம்பிதான்
இருக்கிறேன் தாயி "என்று
பூட்டிய கதவை ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டு
நின்றார்.
அதற்குள் மறுபடியும் தலையை நீட்டிய
நர்ஸ்,

"எங்கேயும் போகல இல்ல.....
இங்கேயே உட்கார்ந்துருங்க...
ஒரு ஆத்திர அவசரத்திற்கு ஆம்பிளை ஆளு
ஒண்ணு வேணும் "என்று
சொல்லிவிட்டு கதவை மூடிக் கொண்டார்.

பாலுவுக்கு மனசுக்குள் பக்...பக்...என்று
இருந்தது. எதையும் வெளிக்காட்டிக்
கொள்ள முடியவில்லை.

"அப்பா..." என்றபடி மறுபடியும்
முன்னால் வந்து நின்றாள் பூரணி.

அவள் கையைப்
பிடித்துத் தன் கைக்குள் வைத்துக்
கொண்டு தடவிக் கொடுத்தபடி
கட்டிலில் உட்கார்ந்தார்.

அப்படியே தோளில் சாய்ந்தபடி தலைமுடியைக்
மேல் நோக்கி  இழுத்துப் பார்த்தாள் பூரணி.
" அப்பா... நமக்குத் தம்பிப் பாப்பா
தானேயப்பா பிறக்கும்"

"யாருக்குத் தெரியும்?"

" அப்போ உங்களுக்குத் தெரியாதா?"

"தெரியாது..."

"பள்ளிக்கூடத்துல சியாமளா உனக்குத்
தங்கச்சிப் பாப்பாதான் பொறக்கும்
என்றாள். நான் அவகிட்ட நல்லா
சண்டை போட்டுட்டேம்பா..."

"அப்படியெல்லாம் யார் கிட்டேயும்
சண்டை போடக் கூடாது."

"அவ வீட்டுல மட்டும் தம்பிப்பாப்பா
இருக்கணுமாம். நம்ம வீட்டுல
மட்டும் இருக்கக் கூடாதோ?"

"அதுக்கு அடுத்தவங்க கிட்ட
சண்டை போட்டு என்ன செய்ய
முடியும்?"

"விடுங்கப்பா...எனக்குத் தம்பிப்பாப்பாதான்
வேணும்....உங்களுக்கு?"

எனக்கும் தம்பிப்பாப்பாதான்
வேணும்....அதை எப்படி வெளியில்
சொல்ல முடியும்? உள்ளுக்குள்ளேயே
அடக்கிக் கொண்டார்.

"தம்பி பிறந்தால் என்ன பெயர்
வைக்கணும்பா?" விடாமல் தம்பி
பற்றியே பேசிக் கொண்டிருந்தாள் பூரணி.

"இப்போ அது எதுக்கு?
பேசாமல் இரு"

"அக்கா சொல்லுறா அவளுக்குப்
பிடிச்ச பெயர்தான் வைக்கணுமாம்"

"வச்சுறலாம் ...வச்சுறலாம்"

"அப்போ நான் சொல்லுற
பெயரை வைக்க
மாட்டியளா ?"

"நீ என்ன சொல்லி நான் கேட்காம
இருக்கேன். நீ மூணாவது பிறந்த
முத்துல்லா....நீ பிறந்தப் பிறகுதான்
எல்லாம் வந்தது."

"அக்கா பிறந்தப்போ ஒண்ணுமே
வாங்கலியா?
ஆக்கம் கெட்டவ...ஆக்கம் கெட்டவ..."

"அப்படி எல்லாம் அக்காவ பேசப்பிடாது."

"அவா மட்டும் என்னைப் பார்த்து
சனியனே...சனியனே என்று திட்டுறா"

"திட்டுனா திட்டிட்டுப் போறா...
அவ உன்னைவிட மூத்தவா இல்லையா?

"மூத்தவா பூத்தவான்னு சொல்லி
எப்பவும் நீங்க அவ கரைக்குத்தான்
பேசுவிய.."

"கோவத்தைப் பாரு...அப்புடியே
எங்க அம்ம மாதிரி..."

"பாட்டியும் இப்புடித்தான்
கோபப்படுவாவளா..?.ஏய்...
பாட்டியும் நானும் ஒண்ணு..."
கைதட்டி சிரித்தாள் பூரணி.

"என்ன தகப்பனும் மவளும்
என்ன சொல்லி சிரிக்குறிய...?"
கேட்டபடியே
பக்கத்தில் வந்து உட்கார்ந்தார்
பக்கத்து வீட்டு அன்னம் பாட்டி.

உக்கும்..என்றபடி அப்பாவின்
கையைப் பிடித்து
நெருங்கி உட்கார்ந்து கொண்டாள்
பூரணி.

"மவ என்ன சொல்லுறா?"

"சொரைக்காய்க்கு உப்புல்லன்னு
சொல்லுறா....." முந்தி வந்து
பதில் சொன்னாள் பூரணி.

"பெரியவுங்கள எதுத்துப் பேசப்பிடாது.
அடிபடுவா..." கையை ஓங்கினார்  பாலு.

"விடுவிடு.யாரு சொன்னா ?
நம்ம புள்ள தானே... சொன்னா
சொல்லிட்டுப் போறா. இந்த காலத்துப்
புள்ளைகள்கிட்ட வாய்கொடுத்து
மீள முடியாது. ஆம்புளப் புள்ளைகள
ஒரு கதையில சேர்த்துகிடலாம்.
பொட்டப்புள்ளைகள் இருக்கே....
ஏறுக்குமாறுதான் பேசுவாளுவ...எங்க
வீட்டுலேயும் இவள மாதிரி
ஒண்ணு கிடக்கு...மூத்தவன் மவ
சுமதி. வாயாடி.வாயாடி...
சும்மா கிடையாங்கிழவி இன்னு
வாயைத் திறக்க விடமாட்டா..."

"பாட்டிக்கு ஒரு செம்புல தண்ணீர்
எடுத்துட்டுவா"
மகளை அந்த இடத்திலிருந்து
கிளப்பினார் பாலு.

"இந்த பிள்ளையாவது ஆம்புள
பிள்ளையா பொறக்கணும்....
ஐஞ்சு பெண்பிள்ளை பிறந்தா
அரசனும் ஆண்டிதான்.
சாமிதான் கண் முழிச்சி
பார்க்கணும்."என்றபடி
பாலுவைப் பார்த்தார்
அன்னம் பாட்டி.

பதிலாக எதுவுமே சொல்லாமல்
அமைதியாக இருந்தார் பாலு.

"நாலும் பொட்டப் புள்ளைகளா போயிற்று.
கொள்ளி வைக்க ஒத்தப் புள்ளைய
கொடும் சாமி..." என்று வானத்தை நோக்கி
கும்பிட்டார் அன்னம்.

அதற்குள் வீட்டுக்குள்ளிருந்து
குழந்தை
அழுகிற குரல் கேட்டது.

"பிள்ளை பொறந்துட்டுன்னு நினைக்கிறேன்..."
எழுந்து வாசல் பக்கம் சென்றார்
அன்னம் பாட்டி.

"கதவை திறங்களா...."
குரல் கொடுத்துப் பார்த்தார்.

"கொஞ்சம் பொறுங்க....
அதுக்குள்ள என்ன அவசரம்"
உள்ளேயிருந்து குரல் வந்தது.

"என்ன புள்ளன்னு சொல்லுங்களா...
இங்க குலை நடுங்குது"

"பொம்புளப் புள்ளதான்."

"பொம்பளைப் புள்ளையா?...
ஒண்ணும் பிரச்சினை இல்ல.
ஐந்தாவது பொம்பளப் புள்ளை
வீட்டுக்கு நல்லதுன்னு சொல்லுவாவ.
தம்பி நீ பொழைச்சுகிட்டா...
பொண்ணு பொறந்திருக்காளாம்.
ஐந்தாவது பொண்ணு அறையெல்லாம்
பொன்னு.
இனி உனக்கு ஒரு குறைச்சலும்
இருக்காது. நீ தொட்டதெல்லாம்
பொன்னுதான்."என்று ஐந்தாவது
பெண்பிள்ளையைப் பற்றிய
தன் கருத்தை ஐந்து
நிமிடங்களுக்குள் மாற்றிக் கொண்டார்
அன்னம் பாட்டி.

ஐந்தும் பொம்புள புள்ள
என்பதைத் தவிர வேறு
எதுவும் பாலுவின்
காதுகளில் விழவில்லை.

அப்படியே  வீட்டிலிருந்து
வெளியேறி  எங்கேயாவது
போய்விட வேண்டும்போல்
இருந்தது.

கடைசியா ஒருமுறை இந்தக்
கிடாரியைப் ஈன்ற பசுவைப்
பார்க்க வேண்டும்போல் இருந்தது.
பக்கத்தில் போய்  தடவிக் கொடுத்தார்.

பதிலுக்கு கிடாரி வந்து அவர்
கைகளை நக்கியது.
அந்த ஸ்பரிசம் அவரை
அங்கிருந்து போகவிடாமல்
தடுமாற வைத்தது.

அப்போது பின்னாலிருந்து டமாரென்ற
சப்தம் கேட்க
திரும்பிப் பார்த்தார்.

கையில் கொண்டு வந்த
செம்பு தண்ணீரை கீழே போட்டுவிட்டு,
"வாங்கப்பா...தங்கச்சியை
போய் பார்ப்போம் "
என்று ஓடி வந்து
கையைப் பிடித்தாள் பூரணி.

இப்போது இரண்டு பிஞ்சு உள்ளங்களைக்
கடந்து அவரால் வெளியில் ஒரு எட்டுகூட
எடுத்து வைக்க முடியவில்லை.
காலைச் சுத்தும் பிள்ளைகளை
விட்டு கடக்கவிடாதபடி ஏதோ
ஒன்று  தடுத்து நிறுத்தியது.

கண்கள் ஐந்தாவது பெண்ணைத்
தேடி அறை வாசலில் போய் நின்றது.

Comments

  1. நாம் இருவர் நமக்கு ஒருவர் என்று எண்ணும் மனநிலை நிலவும் தற்காலத்தில் ஆண் குழந்தை தான் வேண்டும் என்று நினைக்கும் மனிதர்கள் ஒரு சிலராகத் தான் இருப்பர் என்று எண்ணுகிறேன்.சிறுகதை மிக அருமை.

    ReplyDelete
  2. This story was good because of the story writer. The couple should realise both the children (boy or girl) are good and they are given by God. The way of telling the story was good.

    ReplyDelete
  3. பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம். கர்ப்பத்தின் கனிஅவரால் கிடைக்கும் பலன்.

    ReplyDelete
  4. அந்த ஆண்மகனின் இதயத்தின் ஆசை வேட்கை விருப்பம் எல்லாம் இறுதியில் காலைச்சுற்றிய குழந்தைகளின் கைகள் மாற்றிவிட்டதல்லவா👧🏼 கடவுள் தந்த குழந்தை எதுவானால் என்ன எல்லாம் ஒன்றுதான்.

    ReplyDelete

Post a Comment

Popular Posts