கண்ணதாசன் பாடல்களில் இலக்கியம்
கண்ணதாசன் பாடல்களில் இலக்கியம்
"பழையன கழிதலும்
புதியன புகுதலும் வழுவல "
அதற்காக முற்றிலுமாக பழைமையைப்
புறந்தள்ளிவிட்டுச் சென்றுவிட
முடியாது.
பழைமையை புதிய கண்ணோட்டத்தில்
எடுத்துச் செல்வது புத்திசாலித்தனம்.
அந்த வகையில் பழைய இலக்கியப் பாடல்களின்
கருத்தாளுமையைத் தங்களது திரையிசைப்
பாடல்களில் புகுத்திய பெருமை திரைப்பட
பாடலாசிரியர்களுக்கு உண்டு.
முன்னைப் பழைமைக்கும் இன்றைய
புதுமைக்கும் பாலமாக இருந்து எழுதியப்
பாடல்கள் மக்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளன.
சொல்லப் போனால் பழைய இலங்கியங்களில்
உள்ள கருத்துக்களை மக்களிடையே கொண்டு
சேர்த்த பெருமை திரைப்படப் பாடலாசிரியர்களுக்கு
உண்டு.
அவர்களில் முக்கியமானவர்கள் என்று கவியரசு
கண்ணதாசன் , கவிப் பேரரசு வைரமுத்து, வாலி
என்று ஒரு சிலரை மட்டும் குறிப்பிட்டுவிட்டு
கடந்து போக முடியாது.
நிறைய பாடல்கள் எழுதிய கவிஞர்களின்
பாடல்களில் மட்டுமல்ல.
ஒரு சில பாடல்கள் எழுதிய கவிஞர்களின்
பாடல்களிலும் கண்டிப்பாக இலக்கிய தாக்கம்
இருக்கும்.
ஒரு கவிஞன் இலக்கியத்தில்
பயணிக்காமல் அடுத்த அனுபவத்திற்குள்
தன்னை ஈடுபடுத்திக் கொள்ள மாட்டான்.
அதனால் எல்லா கவிஞர்களின் பாடல்களையும்
உற்றுநோக்கினால் இலக்கிய வரிகளும்
கருத்துக்களும் அங்கங்கே வந்து எட்டிப் பார்த்து
உள்ளேன் ஐயா என்று நமது கவனத்தை ஈர்த்துச் செல்லும்.
காலத்திற்கு ஏற்ப கவிதை நடை மாறலாம்.
கருத்துக்கள் ஓரளவு ஒன்றிப் போகும்.
காலத்திற்கு ஏற்ப தம் கவிதை நடையை
மாற்றியமைத்தவர் கவியரசு.
சங்கப் பாடல்களை அள்ளித் தெளித்து
அழகிய கோலமாக்கி நம்முன் காட்சிப்படுத்தியவர்
கண்ணதாசன்.
காய்..காய்... என்று காயை வரிசைப்படுத்திய
புலவர்கள் உண்டு.
அது இலக்கியம் படித்தவர்கள் மட்டும்
அறிந்த ஒன்று. அந்தக் காயை எப்படி
எல்லாம் நம் கண்முன் கொண்டுவந்து
காட்சிப் படுத்தியிருக்கிறார் கண்ணதாசன் என்பதைப்
பாருங்கள்.
அத்திக்காய் காய் காய்
ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே _ என்
உயிரும் நீரல்லவோ
கன்னிக்காய் ஆசைக்காய்
காதல்கொண்ட பாவைக்காய்
அங்கே காய் அவரைக்காய்
மங்கை எந்தன் கோவைக்காய்
மாதுளங்காய் ஆனாலும்
என் உளங்காய் ஆகுமோ
என்னை நீ காயாதே
என்னுயிரும் நீரல்லவோ
உருவங்காய்ஆனாலும்
பருவங்காய் ஆகுமோ
என்னை நீ காயாதே
என்னுயிரும் நீரல்லவோ
ஏலக்காய் வாசனைப்போல்
எங்கள் உள்ளம் வாழக்காய்
சாதிக்காய் பெட்டகம் போல்
தனிமை இன்பம் கனியக்காய்
சொன்னதெல்லாம் விளங்காயோ
தூது வழங்காய் வெண்ணிலவே
என்னை நீ காயாதே
என்னுயிரும் நீரல்லவோ!
காய்கள் போதுமா...இன்னும் கொஞ்சம்
வேண்டுமா...என்று போதும் போதும்
என்று சொல்லும் அளவிற்கு காய்களைக்
கொண்டு குவித்துவிட்டார்.
காளமேகப் புலவர் காய் என்ற சொல்லை
வைத்து ஒரு பாடலில் விளையாட்டுக்
காட்டி இருப்பார்.
"கரிக்காய் பொரித்தாள் கன்னிக்காயைத் தீய்த்தாள்
பரிக்காயைப் பச்சடியாய்ப் பண்ணாள்_ உருக்கமுள்ள
அப்பைக்காய் நெய்துவட்ட லாக்கினாள் அத்தைமகள்
உப்புக்காண் சீச்சீ யுமி "
இது காளமைகப் புலவர் பாடல்.
நாலு காய் எடுத்துச் சமைத்த காளமேகத்திடம்
இருந்து ஒற்றைக் காயை எடுத்து
காயால் பந்தல் போட்டுவிட்டார் கண்ணதாசன்.
கண்ணதாசன் பாடலில் இருபத்து ஐந்து
காய்கள் காய்த்து தொங்கியுள்ளன.
காற்று வந்தால் தலை சாயும்
நாணல்
காதல் வந்தால் தலை சாயும்
நாணம்
என்று காதல் வரும்போது கன்னியருக்கு
நாணமும்கூடவே வந்துவிடும்
என்கிறார்.
"அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது "
என்ற வள்ளுவர் கருத்துக்கு வலு சேர்ப்பதுபோல்
அமைந்த பாடல் தங்கப்பதக்கம் என்ற
படத்தில் வரும் ஒரு பாடல்.
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்
அன்புமணி வழங்கும்
சுரங்கம்வாழ்க ...வாழ்க...
என்ற பாடல்வரிகள்மூலம்
அன்புதாங்க வாழ்க்கையின் அடிநாதம்.
அது இருந்தால் போதும். வேறென்ன வேண்டும்?
என்றுவள்ளுவர் கருத்தைத் தன் சொற்களில்
கொண்டுவந்து நிறுத்தி நம்மை
நிமிர்ந்துப் பார்க்க வைத்தவர் கண்ணதாசன்.
விசுவாமுத்திரர் ராமனைப் புகழ்ந்து
பேசும் கட்டம் கம்பராமாயணத்தில் வருகிறது.
அப்போது கம்பர் வண்ணம் என்ற
ஒற்றைச் சொல்லை எடுத்து ஓவியம்
தீட்டி நம்மைத் திரும்பிப் பார்க்க
வைத்திருப்பார்.
"இவ்வண்ண்ணம் நிகழ்ந்த வண்ணம்
இனி இந்த உலகுக் கெல்லாம்
உய்வண்ணம் அன்றி மற்றோர்
துயர்வண்ணம் உறுவ துண்டோ
மைவண்ணத் தரக்கி போரில்
மழை வண்ணத் தண்ணலே நின்
கைவண்ணம் அங்குக் கண்டேன்
கால்வண்ணம் இங்குக் கண்டேன்"
என்று கம்பர் எழுதியப் பாடலில் எட்டுமுறை
வண்ணம் என்ற சொல் வந்திருக்கும்.
ஒரே சொல் மறுபடியும் மறுபடியும்
நம் காதுகளில் வந்து ஒலிக்கும்போது
அது தனிக்கவனம் பெறுகிறது.
இந்தப் பாடலின் சாயலில் பாசம் என்றப்
படத்தில் கண்ணதாசன் பாடிய பாடல் இதோ :
பால்வண்ணம் பருவங்கண்டு
வேல்வண்ணம் விழிகள் கண்டு
மால்வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்
"கண்வண்ணம் அங்கே கண்டேன்
கைவண்ணம் இங்கே கண்டேன்
பெண்வண்ணம் நோய்கொண்டு வாடுகிறேன்"
என்று பன்னிரண்டுமுறை வண்ணத்தால்
தன் கலைக்கு வண்ணம் தீட்டியிருப்பார் கவியரசு.
அத்தோடு விட்டுவிட்டாரா..?
சின்னவளை முகம் சிவந்தவளை நான்
சேர்த்துக் கொள்வேன் கரம் தோட்டு
என்னவளைக் காதல் சொன்னவளை
நான் ஏற்றுக் கொள்வேன் வளையிட்டு...
என்று புதிய பூமிக்காக ஒரு பாடல்
எழுதியிருந்தார்.
இப்பாடல் கம்பரின் தனிப்பாடல் திரட்டில் வரும்
" இருந்தவளைப் போனவளை என்னவளை
பொருந்த வளைபறித்துப் போனான் பெருந்தவளை
பூத்தத் தேன் சொரியும் பொன்னிவள நன்னாட்டில்
மாத்தத்தன் வீதியினில் வந்து "
என்று வளை என்ற சொல்லை அடுக்கி அழகு பார்த்த
கம்பரின் சாயல் தெரியாமல் இல்லை.
பட்டினத்தார் வாழ்க்கையின் நிலையாமையைப்
பற்றி அழகாகப் பாடி அனைவர் கண்களிலும்
கண்ணீர் வர வைத்துவிடுவார்.
"அத்தமும் வாழ்வும் அகத்துமட் டேவிழி அம்பொழுக
மெத்திய மாதரும் வீதிமட் டேவிம்மி விம்மியிரு
கைத்தலம் மேல்வைத் தழுமைந் தரும் சுடு காடுமட்டே
பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே"
என்பது பட்டினத்தார் பாடல்.
இந்தப் பாடலின் தாக்கம் பாத காணிக்கை
என்ற படத்தில்
வீடுவரை மனைவி
வீதிவரை உறவு
காடுவரை பிள்ளை
கடைசிவரை யாரோ
என்று கவியரசு பாடி இருப்பதில் காணமுடிகிறது.
கண்ணதாசனின் தத்துவப் பாடல்களில்
பரசிவன் கழுத்தில் இருந்து
பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா?
யாரும் இருக்கும் இடத்தில்
இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே
கருடன் சொன்னது
அதில் அர்த்தம் உள்ளது...
என்ற பாடலை சொல்லாமல் இருக்க முடியாது.
இன்றுகூட எங்கேயாவது இந்தப் பாடலைக்
கேட்க நேர்ந்தால் அப்படியே கட்டி இழுக்கும்.
கால்கள் அந்த இடத்தைவிட்டு நகர மறுக்கும்.
அப்படி ஒரு மந்திர சக்தி கண்ணதாசனின்
இந்தப் பாடலுக்கு உண்டு.
இதே கருத்து சிவப்பிரகாசர் எழுதிய
நன்னெறியில் உண்டு.
"மெலியோர் வலிய வரவலரை அஞ்சார்
வலியோர் தம்மைத்தாம் மருவில் _ பலிஏர்
கடவுள் அவிசடைமேல் கட்செவி அஞ்சாதே
படர்நிறைப் புள்அரசைப் பார்த்து "
கட்செவி என்பது பாம்பு.
புள் அரசு என்பது கருடன் என்பது அனைவருக்கும்
தெரியும்.
வலியவரோடு சேர்ந்திருந்தால்
மெலியவர் வலியவருக்கு அஞ்ச மாட்டாராம்.
எப்படி சிவபெருமானின் தலையில் இருக்கும்
பாம்புக்கு கருடனைப் பார்த்து
அச்சம் ஏற்படாது. காரணம் பாம்பு இருக்கும் இடம்
அப்படி ஒரு பாதுகாப்பான இடம்.
இதைத்தான் கண்ணதாசன் தன்பாணியில்
அழகாக படைத்து அத்தனைபேரையும்
தன்னைநோக்கி திரும்பிப் பார்க்க வைத்தார்.
நன்னெறி படித்த போதுகூட
ஏதோ படித்தோம். அந்த நேரத்தில் அந்தக் கருத்தில்
உள்ள உண்மையைப் புரிந்துகொண்டு
அப்படியே நகர்ந்திருப்போம்.
இந்தக் கருத்தை நம் ஆழ்மனதில் பதிய
வைத்த பெருமை கண்ணதாசனுக்கு உண்டு.
நளவெண்பாவில் புகழேந்திப் புலவர்
அழகான இலக்கியக் காட்சி ஒன்றை
படம்பிடித்து விருந்தாக்கியிருப்பார்.
அழகான பெண் ஒருத்தி குளத்தின் ஓரத்தில் நின்று மலர்கள்
பறித்துக் கொண்டிருக்கிறாள்.
அப்போது பூவிலிருந்த வண்டு ஒன்று
பறந்து வந்தது. சட்டென்று அந்தப் பெண்ணின்
முகமும் ஒரு தாமரை மலர்தான் என்று எண்ணி
அவள் முகத்தில் அமரச் சென்றது.
அப்போது அந்தப்பெண் தன் கையால்
அந்த வண்டினைத் தடுத்தாள்.
உடனே வண்டு ஆஹா! இது ஒரு அழகிய காந்தள்
மலர் அல்லவோ என்று நினைத்து அவள் முகத்தை விடுத்து கையில் வந்து
அமர்ந்து கொண்டதாம்.
அதைப் பார்த்த அந்தப்பெண்
அப்படியே வியர்த்து, நடுநடுங்கிப்
போனாளாம்.
இது புகழேந்தி தன் பாடலில் வைத்த
அழகிய காட்சி.
இதே கருத்தை தன் பாடலில்
காலத்திற்கு ஏற்ப மக்கள்
ரசனைக்கு ஏற்ப
மெட்டிற்கு ஏற்ப
சிற்சில மாற்றங்கள் செய்து
காதல் வானில் சிறகடிக்க வைத்தார்
கண்ணதாசன்.
நான் மலரோடு தனியாக
ஏனிங்கு நின்றேன்...
....என்று தொடங்கியவர்,
வண்டொன்று மலரென்று
முகத்தொடு மோத
நான் வளைகொண்ட கையாலே
மெதுவாக மூட
என் கருங்கூந்தல் கலைந்தோடி
மேகங்கள் ஆக
நான் பயந்தோடி வந்தேன்
உன்னிடம் உண்மை கூற"
என்று எழுதினார்.பாடலைக் கேட்கும்போது
கருத்தை மட்டும் எடுத்துக் கொண்டு
அதனைச் சிதைக்காமல் செம்மையாக்கித் தந்த
சிறப்பை உணராமல் இருக்க முடியாது.
கண்ணதாசனின் பாடல்கள்மூலம்
இலக்கிய கருத்துக்களை எளிதில் மக்களிடம்
கொண்டு செல்ல முடிந்தது
என்று சொன்னால் மிகையாகாது.
காலத்தை வென்ற காவியமானவன்
கவிகள் இலக்கிய இன்பத்தைச் சுமந்து
நிற்பதால்தான் காலத்தை வென்று இன்றும் அவை
வீறுநடை போட்டுக் கொண்டிருக்கின்றன.
இலக்கியம்
Comments
Post a Comment