கன்னா பின்னா
கன்னா பின்னா
எனக்கொரு ஆசை.
எப்படியாவது கவிதை எழுதி
அரசரிமிருந்து பரிசு
வாங்கிவிட வேண்டும்.
அதனை நாலு பேரிடம் காட்டி
எனக்கும் கவிதை எழுத வரும்
என்று சொல்லி
பெருமைப்பட வேண்டும்.
அனைவரும் மெச்ச வேண்டும்.
ஆனால் இதெல்லாம் நடக்கிற காரியமா?
தமிழில் நாலு நல்ல சொற்கள்
சரியாக எழுதத் தெரியாத எனக்கு
கவிதை எழுத ஆசை வரலாமா?
கூடாது....கூடாது
எனக்கு வரக் கூடவே கூடாது.
கூடாது கூடாது என்று குந்தி இருந்துவிட்டால்
எல்லாம் முடிந்துவிடுமா?
நாளைய சோற்றுக்கே வழியில்லையே...
உனக்கெல்லாம் குடும்பம் எதற்கு?
குந்திக் தின்ன நாலு காசு
தேடி வைத்திருக்கிறீரா?
இல்லை... தோட்டம் துறவு என்று
வாங்கித்தான் போட்டுருக்கிறீரா?
நாளையப் பாட்டுக்கு உலை வைக்க
ஆழாக்கு அரிசி இல்லை.
புலவன் புலவன் என்று சொல்லி விட்டுத்
திரிந்தால் போதாது.
எங்கேயாவது போய் பாடி
வயித்துப் பாட்டுக்கு ஏதாவது
கிடைக்குமா என்று பாரும்.
நேற்று மனைவி திட்டியது
மறுபடியும் மறுபடியும் தீட்டிய
கூராயுதமாக நெஞ்சில் வந்து
தைத்துப் போனது.
எல்லோரும் அரசரிடமிருந்து பரிசுப்
பொருட்கள் வாங்கி வரும்போது
எனக்கு மட்டும் அந்த ஆசை இருக்காதா என்ன?
ஏதேதோ நினைவுகளோடு
கவிதை எழுதும் கனவோடு
கண்ணிமைக்க மறந்து
கற்பனையைத்தேடி
ஓடிக்கொண்டிருந்தான் இந்த மனிதன்.
பல நாட்கள் கவிதையைத் தேடியது தான் மிச்சம். முதல் வரி கூட
கிடைக்கவில்லை.
முதல் சொல்லைக் கூட எழுத முடியாமல் எங்கேயோ முட்டிக்கொண்டு நின்றது.
வார்த்தைகள் வறண்டு போய்
நின்ற இடத்திலேயே நிற்க வைத்து
வேடிக்கை காட்டியது.
எவ்வளவுதான் முயன்றாலும் சரியான சொற்கள் மட்டும் கிடைப்பேனா
என்று விளையாட்டு காட்டியது.
மனைவியோ"வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடக்காமல் ஆறு, கடல்,காடு,கழனி என்று சுற்றித் திரிந்தால் தானே கவிதை வரும். இயற்கைக் காட்சிகளைக் கண்டு ரசியுங்கள்.கவிதை தானே வரும்'' என்று அந்த மனிதன் வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதை விரும்பாமல் வெளியில் துரத்த ஆரம்பித்தாள்.
இப்போதுதான் அவன் மனதில் ஏதோ ஒன்று தைக்க ஆரம்பித்தது .
உள்ளுக்குள் ஓர் உற்சாகக் கீற்று
உதயமாகி எட்டிப் பார்த்தது.
அவள் சொல்வதிலும் உண்மை
இருக்கத்தான் செய்கிறது.
வெளியில் சென்று இயற்கையைப் பார்த்தால்
அதன் எழிலை கண்டு
இதயத்தில் வார்த்தைகள்
வராமலாப் போய்விடும்?
கவிதை எழுதிவிடலாம்.
என்னால் கூடும்.
என்னால் கவிதை எழுதக்கூடும்.
நான் கவிதை எழுதுவேன்.
அந்தக் கவிதையை மன்னனிடம் காட்டி பரிசு வாங்கி வருவேன் என்று நம்பிக்கையோடு வீட்டைவிட்டு
வெளியேறினான்.
கையில் சில ஏடுகளையும், எழுத்தாணியையும் எடுத்துக்கொண்டு
கால் போன போக்கில் நடந்தான்.
ஒரு தெரு கூட கடந்திருக்க மாட்டான்.
அதற்குள் தெரு முடிவில் ஒரு வீடு கட்டுவதற்காக
மணல் குவித்து வைக்கப்பட்டிருப்பதைப்
பார்த்தான்.
அங்கு ,சிறுவர் சிறுமியர்
சிறு வீடுகட்டி
விளையாடிக் கொண்டிருந்தனர்.
அங்கே நின்று வேடிக்கை பார்க்க
ஆரம்பித்தான்.ஒரு சிறுவனையும் சிறுமியையும்
அருகருகே உட்காரவைத்து
இலை, பூ, தழைகளாலான மாலைகளை இருவர்க்கும் அணிவித்து
ஒரு திருமணத்தையே
நடத்திக் கொண்டிருந்தனர் சிறுவர்கள்.
சிரட்டையில் ஈரமணலைச் சேர்த்து பணியாரங்களைச் செய்து மணமக்களுக்கு விருந்தளித்து மகிழ்ந்தனர். மணமக்களாக இருந்த சிறுவர்கள்
அதனை எடுத்து எடுத்து உண்பதுபோல பாவனை செய்துகொண்டிருந்தனர்.
அதைப் பார்த்த மற்ற சிறுவர்கள் "மண்ணுண்ணி மாப்பிள்ளையே! மண்ணுண்ணி மாப்பிள்ளையே!' என்று கேலிக்குரல் எழுப்பி சிரித்துக் கொண்டாடினர்.
கவிதை எழுதச் சென்றவனுக்கு
"மண்ணுண்ணி மாப்பிள்ளையே "என்ற சொற்றொடர் காதில் தேனாய்ப் பாய்ந்தது.
"ஆகா! என்ன அருமையான வரிகள்."
உதடுகள் "மண்ணுண்ணி மாப்பிள்ளையே "என்று உச்சரிக்க ஆரம்பித்தன.
அதையே கவிதைக்கு முதல் வரியாக எழுதி
வைத்துக் கொண்டான்.
இப்போது மனதிற்குள் தன்னால்
கவிதை எழுத முடியும் என்ற
ஒரு நம்பிக்கை வந்துவிட்டது.
தொடர்ந்து சிந்தித்த வண்ணம் ஊரின் எல்லையிலுள்ள சோலையை
வந்தடைந்தான்.
சுற்றும்முற்றும் பார்த்தான்.
அங்கே ஒரு பழைய கோவில் இருந்தது.
அந்தக் கோயில் வாசலருகே அமர்ந்துகொண்டு அருகில் நிற்கும் மரங்களை அண்ணாந்து பார்த்தான்.
மரத்திலிருந்து காகங்கள் கரைந்து கொண்டிருந்தன.
பக்கத்திலிருந்த தென்னை மரத்திலிருந்து குயில்கள் கூவின.
ஆஹா....அருமை அருமை.
இதனைக் கவிதையின் இரண்டாவது வரியாக எழுதினால் என்ன?
உடனே "கா இறையே, கூ இறையே' என்று எழுதி வைத்துக் கொண்டான்
அந்நேரத்தில், கோயிலருகே ஒரு பெருச்சாளி ஓடி வந்து,
கோவிலினுள் சென்று மறைந்து
போனது.
இப்போது கோவிலின் உள்ளே பெருச்சாளி.
உடனே, "உங்கப்பன் கோயில் பெருச்சாளி' என்று உதடுகள் உச்சரிக்க ஆரம்பித்தன .அதையும் கவிதையின் மூன்றாம் வரியாக எழுதி
வைத்துக் கொண்டான்.
அதன்பின் வெகுநேரம் சிந்தித்து சிந்தித்துப்
பார்க்கிறான்.
ஊஹூம்.... ஒன்றுமே தோன்றவில்லை.
எப்படிக் கவிதையை முடிப்பது?
ஒன்றும் புரியவில்லை.
முழுமை பெறாத கவிதையைக்
கையில் எடுத்துக்கொண்டு
வீட்டுக்குப் புறப்பட்டான்.
வழியில் நண்பன் ஒருவன் எதிரே
வந்துகொண்டிருந்தான்.
அவனை நிறுத்தி,
"நான் ஒரு கவிதை எழுதியிருக்கிறேன்
கேளேன் "என்றான்.
"என்னது...
நீ கவிதை எழுதியிருக்கிறியா?
சும்மா போவியா..".என்று நக்கலாக
சிரித்தபடி கடந்து போகப் பார்த்தான்.
அவனைத் தடுத்து நிறுத்தி"ஏய்....ஒரு நிமிடம் கேளேன்"
கெஞ்சினான்.
"உன்னால் பெரிய தொல்லையாக இருக்கிறது. கேட்க மாட்டேன் என்றால்
விடவா போகிறாய். சரி சரி..வாசி"
சலித்துக் கொண்டான் நண்பன்.
நண்பனிடம் உற்சாகமாக தன் கவிதையை வாசித்துக் காட்டினான்.
""எப்படி என் கவிதை?'' என்று
கண்களால் கேட்டான்.
""என்ன கவிதை எழுதியிருக்கிறாய்? கன்னா பின்னா
என்று இருக்கிறது.
கன்னா பின்னா என்று எழுதி வைத்திருக்கிற கவிதையை
மன்னன் முன்னால் கொண்டுபோய்
மன்னா தென்னா இதோ என்
கன்னா பின்னா கவிதை
என்று நீட்டிக்கொண்டு நிற்கப் போகிறாயா?'"
என்று கிண்டலாகக் சொல்லிவிட்டு அவன்
போய்விட்டான்.
"ஆகா! கன்னா பின்னா
மன்னா தென்னா .அருமையாக இருக்கிறதே ,!இதையே நான்காவது அடியாக
சேர்த்துக் கொள்ளலாம் போலிருக்கிறதே என்று இதையும் எழுதி இணைத்துக் கொண்டான்.
வீட்டுக்கு வந்ததும் மனைவியிடம் கவிதையைப் படித்துக் காட்டினான். கேட்டவள் முகத்தில் மலர்ச்சி இல்லை. "இவ்வளவு எழுதியும் சோழ மன்னன்
பெயர் எங்கும் வரவில்லையே "என்றாள் .
"அப்படியா சொல்கிறாய்....
முயன்று பார்க்கிறேன் "என்றான்.
வெகுநேர யோசனைக்குப் பிறகு
கடைசியாக "சோழங்கப் பெருமாளே' என்று இறுதி அடியாகச் சேர்த்துக் கொண்டான்.
இப்போது கவிதை முழுமை பெற்றுவிட்டது.கவிதை எழுதிய ஓலையைக் கையில்
எடுத்துக்கொண்டு அரண்மனையை நோக்கி நடந்தான்.
எனக்கு கிடைக்கும் ...
எனக்கு கிடைக்கும்....
எனக்கு பரிசு நிச்சயம் கிடைக்கும்....மகிழ்ச்சியில் மனம்
துள்ளாட்டம் போட்டது.
அதோ அரண்மனை...வாயில் காவலரிடம் தன்னை ஒரு புலவன்
என்று பெருமையாக அறிமுகம்
செய்து கொண்டான்.
புதிய புலவரின் வருகையை வாயில் காவலன் அரசனுக்குத் தெரிவிக்க அரசனிடமிருந்து அழைப்பும் வந்தது.
அவையில் கம்பர் முதலான புலவர்
பெருமக்கள் பலர் இருந்தனர். புலவரை வரவேற்ற மன்னன்,
"புலவரே! தாங்கள் எழுதிய வந்திருக்கும் கவிதையை வாசியுங்கள் பார்க்கலாம் "
என்றான்.
புலவரும் கவிதையை
உற்சாகமாக வாசித்துவிட்டு
நிமிர்ந்து பார்த்தார்.
பாடலைக் கேட்டதும் அவையில் இருந்த
அனைவரும் கொல்லென்று சிரித்து விட்டனர்.
புலவருக்கு அவமானமாகப் போய்விட்டது.கம்பர் மட்டும் அமைதியாக இருந்தார்.
மன்னனுக்கு கம்பர் மட்டும் ஏன் அமைதியாக இருக்கிறார் என்பது புரியவில்லை.
கம்பரை நோக்கிய மன்னன், ""கம்பரே! தங்களுக்கு இந்தப் பாடல் புரிகிறதா?'' என்று கேட்டான்.
புதிதாகக் கவிதை எழுதியவரின் முயற்சியைப் பாராட்ட எண்ணிய கம்பர்,
"நன்றாகப் புரிகிறது .
அருமையான பொருள் பொதிந்த பாடல்" என்றார்.
"என்ன....பொருள் பொதிந்தப் பாடலா?" அனைவரும் ஒரே குரலில்
வியப்போடு கேட்டனர்.
"ஆமாம் ...பாடலில் நல்ல பொருள் இருக்கிறது" என்று கம்பர் மறுபடியும் தன் கருத்தை உறுதிப்படுத்தினார்.
"கன்னா பின்னா மன்னா தென்னா என்று எழுதிய பாடல் அருமையான பொருளுடையதா?
எங்களுக்குப் புரியவில்லையே?" என்று அனைவரும் புலவரைப் பார்த்தனர்.
புலவருக்கு என்ன சொல்வது ?எப்படி சொல்லி நிலைமையைச்
சமாளிப்பது என்று ஒன்றும் தெரியவில்லை.
புலவரின் நிலைமையைப் புரிந்துகொண்ட கம்பர் "அக்கவிதைக்கான பொருளை
நானே கூறுகிறேன் கேளுங்கள் "
என்று விளக்க ஆரம்பித்தார்.
"மண்ணுண்ணி மாப்பிள்ளையே"கண்ணன், மண்ணை உண்டபோது யசோதை வாயைத் திறந்து காட்டுமாறு கேட்க, "உலகமே கண்ணனது வாயில் தெரிந்தது' என்பது புராணக்கதை. "அந்தக் கண்ணனாகிய திருமாலைப்போல மக்களைக் காப்பவன் அரசன்' என்ற பொருளில்தான் மண்ணுண்ணி மாப்பிள்ளையே என்று முதல்வரியில்
புலவர் எழுதியிருக்கிறார்.
அடுத்து,"கா இறையே' என்பது சோலைகளுக்குத் தலைவன் என்றும்
;"கூ இறையே' என்பது உலகுக்கெல்லாம் தலைவன் என்றும் பொருள்படும்.
"உங்கப்பன் கோயில் பெருச்சாளி' என்றால், "உங்கள் தந்தை இந்த அரண்மனையில் இருந்து ஆண்ட
வீரமுள்ள பெரிய சிங்கம் போன்றவர். அவருக்குப் பிறந்த நீயும் சிங்கக்குட்டி போன்றவன்தான்
என்பதைத்தான் "உங்களப்பன்
கோவில் பெருச்சாளி " என்று எழுதியிருக்கிறார் என்றார்.
எல்லா வரிகளுக்கும் பொருள் சொல்லிவிட்டு இறுதியில் கன்னாபின்னாவுக்கு வந்தார் கம்பர்.
கன்னா பின்னாவுக்கு என்ன விளக்கம் சொல்ல போகிறார் என்று அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
"கன்னா என்றால் கொடுப்பதில் கர்ணனைப் போன்றவனே!
பின்னா என்றால் கர்ணனுக்குப் பின்னால் பிறந்த நீதி வழுவாத தர்மன் போன்றவனே!
தென்னா மன்னா என்றால் தென்னாட்டை ஆளும் மன்னனே!
இதைத்தான் புலவர் கன்னா பின்னா மன்னா தென்னா என்று எழுதியிருக்கிறார் "
என்று பொருள் கூறி அனைவரையும் அசர வைத்தார் கம்பர். அனைவரும்
வாயடைத்துப் போய் நின்றனர்.
கன்னா பின்னாவுக்குள் இத்தனை அருமையான பொருளா ?
மன்னனும் மகிழ்ந்து போனான்.
புலவரைப் பாராட்டி ஏராளமான பொருளைப்
பரிசாகக் கொடுத்து அனுப்பி வைத்தான்
கன்னா பின்னா இப்போது கவிதையாகிப் போனது.
பாடல் இதோ உங்களுக்காக...
""மண்ணுண்ணி மாப்பிள்ளையே
மண்ணுண்ணி மாப்பிள்ளையே!
கா விறையே கூ விறையே!
உங்கப்பன் கோயில் பெருச்சாளி,
கன்னா பின்னா மன்னா தென்னா
சோழங்கப் பெருமாளே''
அருமையான பாடல்.
Comments
Post a Comment