பழமுறத்தால் சாடினாள்...
பழமுறத்தால் சாடினாள்
ஒரு சமயம் ஔவையார் வழி நடந்த
களைப்பு தீர ஓரிடத்தில் அமர்ந்திருந்தார். அவ்வழியாக வந்த ஒரு
மனிதன் ஒரு வயதான அம்மா களைப்பாக இருப்பதைப் பார்த்து அருகில் வந்தான்.
அவர் நிலையைக் கண்டு மிக மனம் வருந்தினான். அவருடைய வாடிய தோற்றம் அவன் உள்ளத்தை உருக்கியது. அவரிடம் "எங்கிருந்து வருகிறீர்கள் அம்மா? "என்று அன்போடு விசாரித்தான்.
ஔவையும், "தான் தொலை தூரத்திலிருந்து வருவதாகவும் நெடுநேரம் நடந்ததால் பசியாக இருக்கிறேன். சற்று அமர்ந்து விட்டு சென்றால் களைப்பு நீங்கிவிடும் என்று அமர்ந்திருக்கிறேன்" என்றார் சோர்வாக.
அந்த அம்மாவின் நிலைமைக்காகப்
பரிதாபப்பட்டு,
அவருடைய பசியைப் போக்க எண்ணி
"அம்மா, தாங்கள் பசியோடு இங்கிருந்து செல்ல வேண்டாம்.
என் வீட்டிற்கு வந்து பசியாற்றிவிட்டு,
அதன் பிறகு செல்லலாம்."என்று
அழைத்தான்.
ஔவை அதிக பசியோடு இருந்ததால் எதைப்பற்றியும் யோசிக்காமல்அவன் கூடவே அவன் வீட்டிற்குச் சென்றார்.
இருவரும் நடந்து வீட்டின் அருகே வந்துஇதுவரை அவன் தன் மனைவியைப் பற்றி அடியோடு மறந்துவிட்டான்.
வீட்டிற்கு அருகில் வந்ததும் அவள் நினைவு வந்து இதயம் படபடவென்று அடிக்கத் தொடங்கியது.
அவள் ஔவையைப் பார்த்ததும் என்ன சொல்வாளோ ஏது சொல்லி கத்துவாளோ?என்று அவன் உள்ளம்
கலங்கிப் போனது.
ஏதோ ஓர் ஆர்வத்தில் இந்த அம்மையாரை அழைத்து வந்துவிட்டேனே..
மனைவியை எப்படி சாமாளிப்பது?
எப்படி சாப்பாடு கொடுக்கச் சொல்வது?
நான் சொன்னாலும் அவள் கேட்பாரா?
இப்படி பல்வேறு கேள்விகள் வந்து
விடை சொல்லி விட்டுப் போ என்று தடுத்தன.
எனினும், மனைவிக்கு அஞ்சி ஔவையை இப்படியே திரும்பிப் போகச் சொல்வதற்கும் அவன் மனம் இசையவில்லை.
அவரைத் தன் வீட்டுத் திண்ணையில் அமரச் சொல்லிவிட்டு,
அம்மா சற்று அமர்ந்திருக்கும்.
நான் இப்போது வருகிறேன் என்று அவன் மட்டும் வீட்டினுள் மெதுவாக நுழைத்தான்.
மனைவியிடம் விருந்துக்கு ஆள் வந்திருப்பதை எப்படிச் சொல்வது? அவள் சீறுவாளே? அவளை எப்படி சமாளிப்பது?அவளருகே சென்று மெல்ல அமர்ந்தான்.
அவள் முகத்தை அன்பாக தடவிக் கொடுத்தான். அவள் தலைவாரிக் கொண்டிருந்தாள். உடனே அவனே ஈரும் பேனும் எடுத்து, தலையை வாரிவிட்டு கூந்தலைப் புனைந்தான். அத்தோடு விட்டு விடவில்லை.அவள் முகத்தை
பொட்டிட்டுப் பொலிவு பெறச் செய்தான்.
அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.
என்ன இது என்றுமில்லாத் திருநாளாக
தன் கணவன் அதிகமாக தன்னிடம் அன்புகாட்டுகிறாரே?
என்னவாக இருக்கும்?
அவன் செயலுக்குகான காரணமறியாமல் அவனைப் பார்த்து மெல்லச் சிரித்தாள்.
இப்போதுதான் கணவனுக்கு"அப்பாடா...அவள் மிக்க மகிழ்ச்சியுடன்
இருக்கிறாள்.
இப்போது ஔவையை அறிமுகம் சேர்த்து வைத்தால் எந்தச் சிக்கலும் எழாது
என்று நினைத்துக் கொண்டான்"
அந்த அப்பாவி கணவன்.
"வாசலில் ஒரு வயதான அம்மா வந்திருக்கிறார்கள் .
அவர்கள் மிக்க பசியாக இருக்கிறார்கள். அவர்களுக்கு நம் வீட்டில் இருக்கும் உணவை அளித்து அவர்களைப் பசியாற்றி அனுப்ப வேண்டும்”
தயங்கித் தயங்கி சொல்லி முடித்தான்.
என்னது பசியாற்றி அனுப்ப
வேண்டுமா?
வருகிறவர் போகிறவருக்கெல்லாம்அ சாப்பாடு போட இது என்ன சத்திரமா? என்று சொல்லியபடி கணவனைக் கோபமாகப் பார்த்தாள். சினங்கொண்டாள். சீறினாள்.
உரக்கச் கத்தினாள்.தன் உடல் வருத்தமுறும் அளவுக்கு எழுந்து நின்று கூத்தாடினாள். அவன்மீது வசை பாடினாள். பழமுறத்தை எடுத்து, வெறிகொண்டவளைப்போல வீட்டிற்குள்ளேயே ஓடஓட விரட்டி அவனைப் புடைத்தெடுத்தாள்.
அவன் என்ன செய்வான்?
சத்தமாக எதுவும் சொல்ல முடியாத
நிலைமை.
வெளியிலோ ஔவை அமர்ந்திருக்கிறார்.
வீட்டிற்குள் நடந்தவற்றை அறிந்தால்
இவனெல்லாம் ஒரு ஆண்மகனா என்று தன்னை இழிவாக நினைப்பார். உள்ளே நடக்கும் கூத்து எதுவும் வெளியே தெரிந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தான். அதனால்தான் வாய் திறந்து அவன் எதுவும் கூறவில்லை., அவள் கொடுமையை எல்லாம் சகித்துக்கொண்டு, வீட்டினுள் கைகளைப் பிசைந்தபடி வளைய வளைய வந்தான்.
ஆனால்
உள்ளே நடந்ததை எல்லாம் ஔவை கேட்டுக் கொண்டுதான் இருந்தார்.
ஐயோ !பாவம் என்று அவன் நிலைமைக்காகப் பெரிதும் பரிதாபப்பட்டார். அந்தப் பெண்ணுடைய நடத்தை அவர் உள்ளத்தில் வெறுப்பை ஏற்படுத்தியது.
அவளின் செயல் எப்படி இருந்தது என்பதை அவளுக்குப் புரிய வைத்தாலாவது தன்னை ஊர் பழிக்குமே என்று கருதி, அவள் கணவன் மீது கொண்ட சீற்றத்தை நிறுத்துவாள் என்று நினைத்தார்.
அதனால்
"இருந்து முகந்திருத்தி ஈரோடு பேன்வாங்கிவிருந்து வந்ததென்று விளம்ப - வருந்திமிகஆடினாள் பாடினாள் ஆடிப் பழமுறத்தால்சாடினாள் ஓடோடத் தான். "
என்று அவளும் கேட்குமாறு
உரத்த குரலில் பாடினார்.
அந்தப் பாட்டினைக் கேட்டதும், அந்தப் பழிகாரி அப்படியே செயலற்றுப்போனாள்.
இத்தனை நேரம் நடந்தவற்றை யெல்லாம்
வெளியிலிருந்த அம்மா கேட்டுக் கொண்டிருந்திருக்காரே!
"யாரது? ஏதோ பெரிய ஆளையல்லவா
இவர் கூட்டி வந்திருக்கிறார். இப்போது என்ன செய்வது?
ஒருவேளை இவர் ஒரு முனிவராக இருப்பாரோ ?
சாபம் ஏதாவது கொடுத்துவிட்டால் ...
ஆ....நினைத்தாலே சற்று நடுக்கம்
ஏற்படுகிறதே .என்ன செய்வது?" என்று நினைத்து நினைத்து நடுங்கினாள்.
"அவரை உள்ளே அழைத்து வாருங்கள். வயிராற சோறு போடுகின்றேன்” என்று தன் கணவனிடம் கூறினாள்.
திடீரென்று இவளிடம் எப்படி இந்த மாற்றம்
ஏற்பட்டது?
அவளை ஏற இறக்கப் பார்த்தான் .
"உண்மையாகவா?" என்று பரிதாபமாகக் கேட்டான்.
"உண்மையாகத்தான் சொல்கிறேன்.
அவரை வீட்டிற்குள் வரச் சொல்லுங்கள்.
உணவு பரிமாறுகிறேன் "என்றாள்.
கணவனுக்கு இப்போதுதான் போன உயிர் திரும்ப வந்தது போல இருந்தது.
சற்றுமுன் நடந்ததை எல்லாம் மறந்தான். மகிழ்வுடன், ஔவையாரை வீட்டிற்குள் வந்து உண்ண அழைத்தான்.
இவ்வளவு சீக்கிரம் இவள் மனம் மாறி விட்டாளா?
சரி என்னதான் நடக்கிறது என்று பார்ப்போம் என்று நினைத்தபடி ,
ஔவையும் அவனோடு வீட்டிற்குள் சென்று உணவருந்த அமர்ந்தார்.
ஔவையைப் பார்த்ததும் அந்தப் பெண் முகத்தில் ஓர் அதிர்ச்சி.
இந்தக் கிழவி தானா என்று
அலட்சியமாக முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
வேண்டா வெறுப்பாக உணவு பரிமாற வீட்டிற்குள் சென்றாள்.
அதன் பின்னர் நடந்த விருந்து
விருந்தாகவா இருந்திருக்கும்?
விருந்து எப்படி இருந்தது?
அதையும் ஔவையிடமே கேட்டு விடுவோம்.
நாளை...
Comments
Post a Comment