பாராட்டும் இடங்கள்
பாராட்டும் இடங்கள்
யாரை எங்கே எந்த இடத்தில் பாராட்ட வேண்டும்
என்று தெரிந்திருக்க வேண்டும்.
உற்சாக மிகுதியால் பாராட்டுகிறேன் என்று கண்ட இடத்தில் யாரையும் பாராட்டிப் பேசிவிடக் கூடாது.
அதற்கென்று சில நெறிமுறைகள் உண்டு.
தான் செய்யும் செயலுக்கான
அங்கீகாரத்தை எதிர்பார்ப்பது
இயல்பு.
ஒரு பள்ளி மாணவனை ஆசிரியர் சக மாணவர்கள் முன்னிலையில் புகழ்ந்து
பேசி முதுகில் தட்டிக் கொடுத்துவிட்டால்
போதும். அவனுக்கு யாரோ தன் தலையில் கிரீடம் வைத்துவிட்டது
போன்ற உணர்வு ஏற்படும்.
இன்னும் நம் ஆசிரியரிடமிருந்து
பாராட்டினைப் பெற்றுவிட வேண்டும்
என்று முனைப்போடு படிப்பான்.
அந்தப் பாராட்டுகளைக் காலம் உள்ளவரை மறக்க மாட்டான்.
ஒருவரின் சொல் அல்லது செயல்
நம்மைப் பெரிதும் கவர்கிறது.
மகிழ்ச்சிப்படுத்துகிறது என்றால் நம் மனது தானாக அவர்களைப் பற்றி புகழத் தொடங்கி விடுகிறது.
அந்த மனதின் ஒப்புதல் பாராட்டுப் பத்திரம் வாசிக்க வைக்கிறது.
ஒருவரை அப்போதைக்கப்போது பாராட்டலாமா என்றால் ....கூடாது என்கிறார் ஔவை.
ஒருவரைப் பாராட்டுவதற்குக்கூட
நேரம் காலம் பார்த்துதான்
பாராட்ட வேண்டுமாம்.
பாராட்டுவதற்கும் நேரம் பார்க்க வேண்டுமா?
ஆமாம். அப்படித்தான் சொல்கிறார் ஔவை.இதோ அவர் சொல்லி வைத்த அந்தப் பாடல் உங்களுக்காக...
"நேசனைக்கா ணாவிடத்தில் நெஞ்சார வேதுதித்தல்ஆசானை எவ்விடத்தும் அப்படியே - வாசமனையாளைப் பஞ்சணையில் மைந்தர்தமைநெஞ்சில் வினையாளை வேலைமுடி வில்"
இந்தப் பாடலில் ஔவை ஐந்து பேரைக் குறிப்பிட்டு அவர்கள் எந்தெந்த இடங்களில் பாராட்டப்பட
வேண்டியவர்கள் என்று சொல்லித் தந்திருக்கிறார். கேளுங்கள்.
முதலாவதாக நண்பனை நேரில் புகழ்வது சிறப்பன்று என்கிறார்.
நேரில் பாராட்டினால் நம் முன்னால்
வைத்துப் பாராட்டுகிறானே ஏதாவது எதிர் பார்க்கிறானோ என்ற தவறான எண்ணத்தை ஏற்படுத்தி விடும். அப்படி தவறாக கருத நாமே இடமளித்துவிடக்
கூடாது. அவனைப் பாராதபோது, நெஞ்சாரப் போற்றிப் பேசுதலே சிறந்தது.
காணாத இடத்துப் பாராட்டப்பட வேண்டியவன் நண்பன்.
இரண்டாவதாக நமக்குக் கல்வி கற்பித்த
ஆசிரியரை எப்படிப் போன்ற வேண்டும் என்கிறார் என்று கேளுங்கள்.
கல்வி கற்பித்த ஆசிரியரை நேரிலும் போற்ற வேண்டும்; காணாத இடத்தும் போற்றுதல் வேண்டும்.
பார்க்கும் இடத்தில் மட்டுமின்றி
அவர் இல்லாத இடத்தும் பாராட்டபட வேண்டியவர் ஆசிரியர்.
எங்கும் எப்போதும் போற்றுதலுக்குரியவர்
ஆசிரியர்.
மூன்றாவதாக காதல் மனையாளை
தனியாக இருக்கும்போதுதான் பாராட்ட வேண்டுமாம் .
.மணம் கமழும் பஞ்சணையில், அவளுடன் கலந்து உறவாடி இருக்கும்போது போற்றுதல் வேண்டும்.மனதாரப் பாராட்ட வேண்டும்.புகழ்தல் வேண்டும்.
அது அவளுடனான நெருக்கத்தை அதிகப்படுத்தும்.
நான்காவதாக பிள்ளைகளை வெளிப்படையாகப் பாராட்டி விடக் கூடாதாம்.
உள்ளத்துக்குள்ளேயே பாராட்டிக் கொள்ள வேண்டுமாம் .
நேரில் பாராட்டுவது கூடாது என்கிறார் ஔவை.
நேரில் பாராட்டிவிட்டால் ஒருவித மமதை வந்து மயக்கிப் போட்டுவிடும்.
அவர்களை ஊக்கமாக எந்த செயலிலும் ஈடுபட விடாது முடக்கிப் போட்டுவிடும்.
அதனால் அவர்கள் வளர்ச்சி தடைபட்டுப் போகலாம்.அதனால் பிள்ளைகளை வெளிப்படையாகப் பாராட்டி விடாதீர்கள் என்கிறார் ஔவை.
ஐந்தாவதாக வேலைக்காரர்களை
எப்படிப் பாராட்ட வேண்டும் என்கிறார் கேளுங்கள்.
ஒருவேலை முடிந்த பின்பே பாராட்டுதல் வேண்டும். வேலை நடுவில் பாராட்டினால், எஞ்சியுள்ள வேலை முடிக்கப்படாமல் போகலாம். அதிகமான கூலியை எதிர்பார்க்க வைத்துவிடலாம்.
கூலிக்கு அதிகமாகவே வேலை செய்து விட்டோமோ என்ற நினைப்பை ஏற்படுத்தி விடலாம்.
அதனால் பொறுமையாக வேலை முடிந்த பின்னர் வேலைக்காரர்களைப் பாராட்டுக்கள் என்கிறார் ஔவை.
பாராட்டுவதிலும் இவ்வளவு செய்திகள்
இருக்கின்றனவா,?
அது தெரியாமல் போய்விட்டதே என்கிறீர்களா?
அதனால் என்ன? இப்போது தெரிந்து கொண்டீர்களல்லவா!
இனி,
நண்பனை அவனைக் காணாத இடத்திலும், ஆசிரியரை எல்லா இடங்களிலும், மனங்கொண்ட மனையாளைப் பஞ்சணையிலும், பிள்ளைகளைத் தம் உள்ளத்திலும், வேலையாட்களை வேலையின் முடிவிலுமே மனமாரப் பாராட்டுதல் வேண்டும் என்பதை அப்படியே மனதில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.
பாராட்டுக்கள்.
Comments
Post a Comment