சொல்லாமலே...

சொல்லாமலே...

நெடுநேரம் யோசித்துப் பார்த்தாள்.
ஒன்றும் புரியவில்லை.
கலங்கலான நீருக்குள் கிடக்கும் கல்போல
தெரிந்தும் தெரியாமலும் 
உள்ளுக்குள்ளே கிடந்து ஒரு விளையாட்டு காட்டிக் கொண்டிருந்தது.

கேள்விகள் அடுக்கடுக்காக வந்து வரிசை கட்டி நிற்கின்றன.
எந்தக் கேள்விக்கும் தன்னிடம் 
சரியான விடையில்லை.
விடை இல்லை என்பதை விட 
விடை காணத் தெரியவில்லை.
நிகழ்ந்தவை யாவும் புரிந்தும் புரியாமலும் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல் இருந்தது.

என்ன சொல்வது?
ஒன்றும் புரியாத மனநிலையில் அப்படியே மனதிற்குள் போட்டுப் புதைத்துவிட்டு 
ஒன்று தெரியாதவள் இருப்பதுதான் சரி என்ற முடிவோடு இருந்தாள் .

பத்து நிமிடம் கூட சும்மா இருக்க முடியவில்லை. உள்ளுக்குள் ஏதோ குடைவதுபோல இருந்தது.
கால்கள் எங்கெங்கோ இழுத்துச் 
சென்றன.
மனம் நிலை கொள்ளாதபடி
மறுபடியும் மறுபடியும் அந்த இடத்திலேயே போய் நின்றது.

விரல்கள் கோணல்மாணலாக 
நாட்டியம் ஆடியது.
கால்களில் வியர்ப்பது போன்றிருந்தது.
அன்றிலிருந்து இன்றுவரை 
அந்த நினைவுகள் அவளை அலைக்கழித்துக் கொண்டிருந்தன.

ஆனால் அந்தநாள்.... நினைவுகள் உள்ளுக்குள் ஓர் இன்பத்தைக் 
கொடுத்தன என்பது தான் உண்மை.

இன்னும் கொஞ்சம் வேண்டும் வேண்டும் 
என்ற கெஞ்சல் இருக்க விடாமல்
நடக்க விடாமல் ...

ஐயோ அந்த உணர்வா இது?
எப்படி?
இதற்குப் பெயர்தான்...
இல்லை...இல்லை...இருக்காது.
எனக்குள் அப்படியொரு உணர்வு வரக்கூடாது.

எம்மோ.... வீட்டில் யாருக்காவது தெரிந்தால்...
நம்மைத் தொலைந்து விடுவார்கள்.

பயமாக இருக்கிறது.
பாவாடைக்குள் தண்ணீரை அள்ளி
நிரப்பப் பார்த்தது போல
உள்ளுக்குள்ளே உணர்வுகளைப் போட்டு
பூட்டி வைக்கப் பார்த்தாள்.

 பாவாடைக்குள் அள்ளிய நீர் அங்குமிங்கும் பொத்துக்கொண்டு 
ஓடுவதுபோல அந்த நினைவும் 
வெளியே பிய்த்துக்கொண்டு 
எங்கெங்கோ இழுத்துச் சென்றது.

அந்த நினைவு எனக்கு வரக்கூடாது.

ஏன் கூடாது...யார் சொன்னது
வரக்கூடாது என்று....?
மனம் குறுக்குக் கேள்வி கேட்டு
குமைத்து எடுத்தது.

 அதனை
அப்படியே மறந்துவிட
 வேண்டியதுதான்.
மனம் தற்காலிக விடுப்பு எடுத்து
ஒதுங்கி நின்றது.

அப்பாடா என்று பெரு மூச்சு
விட்டு தன்னை சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டாள்.

ஒரு வாரம் இருக்கும்
வெளியே ஏதோ சலசலப்பு.
மெதுவாக எட்டிப் பார்த்தாள்.
அவள் தலையைக் கண்டதும் 
அப்பா சற்று உரக்க கத்த ஆரம்பித்தார்.
என்னவாக இருக்கும்.?

காதை சற்று கூர் நீட்டிக்கொண்டு 
கேட்டாள்.

படிக்கப் போறீங்களா வேறு எதுக்கும் 
போறீயளா...அப்பாவின் குரல்
உரக்க வந்து விழுந்தது.

அப்பா அண்ணனைப் பார்த்து...ஏன் இப்படிக் கேட்கிறார்?

அண்ணனையே இந்த கேள்வி
கேட்கிறார் .என் பக்கம் திரும்பி விட்டால்...
மனசு திக் ...திக்... என்று அடித்து கொண்டு இருந்தது.
வெளியில் மையம் 
கொண்டிருக்கிறது புயல்.

ஐயோ...சாமி..அந்தப் புயல்
என் பக்கம் 
எப்போது திரும்பி வீசப்போகிறதோ?
வீசினால்...

கதை கிழிந்து கந்தலாகிவிடும்.
உள்ளுக்குள்ளேயே பொத்திப் பொத்தி
வளர்த்த அந்த உணர்வு...

வீசும் காற்றில் காணாமல் 
போய்விடுமா?

வீசாது...வீசாது... நீதான் யாரிடமும்
எதுவும் சொல்லலியே...
சொல்லாமலே வளர்த்த பிறகு
எப்படி வெளியே தெரியப்போகிறது...

சற்று ஆறுதல்....

அதற்குள் அக்கா வந்து இங்கு என்ன எட்டிப்
பார்த்துக்கொண்டு நிக்குற...போ அடுத்து
உனக்குத்தான் என்று சொல்லி நமட்டுச் 
சிரிப்பு சிரித்தாள்.

ஐயோ...மூச்சே நின்றுவிடும் போல
இருந்தது.

நான் ஒண்ணும் பண்ணலக்கா..
அவன்தான் வந்து...
சம்மன் இல்லாமலேயே ஆஜராகி நின்றாள்.

",இப்போ சொல்லத் தெரியுது இல்ல...
அப்பவே ஏன் சொல்லல...நீயும்
கூட்டு களவாணிதான.."

",என்னக்கா சொல்ற...நான்...
இல்ல அவன்தான் வீட்டுல
சொல்லாதன்னு சொன்னான்"

"ஓஹோ ...அவன் அப்படி வேற சொல்லித்
தந்தானா?"

"நான் என்ன சொல்றேன். நீ என்ன சொல்றா?"

"சரி விடு...அவன் அப்படி சொன்னான் இல்லை.
அதை என் கிட்டேயாவது சொல்வதற்கு என்ன ?"

பதில் சொல்ல முடியாமல் மலங்க ..
மலங்க விழித்தாள்.
கண்களில் இருந்து நீர் வடிந்தது.

"அழாத...விடு விடு பேசி கிடலாம்."

"யாரு சொன்னாக்கா?"

"வேறு யாரு சொல்வா....
அவன்தான் சொல்லியிருக்கான்"

"அவனா..."
அதிர்ச்சியில் அக்காவைப்
பார்த்தாள்.

"அவனேதான்"

"என்கிட்ட நான் யாருகிட்டேயும்
சொல்ல மாட்டேன் என்றான்"

"அப்படித்தான் சொல்லுவானுவ...
உன் மனசு ஆழம் பார்க்க...."

"நான் எதுவுமே பேசலக்கா"

"தெரியும். ஆனால் அவன்வேறு மாதிரியில்லா சொல்லியிருக்கார்."

"வேறு மாதிரியின்னா..."

"உனக்கும் அவன பிடிச்சிருக்காம்.
அதான் நீ வீட்டுல சொல்லலியாம்"

"அவன் சொல்லாமலே இப்படி
சொல்லியிருக்கானா...."

"அதுதான் யாரையும் நம்பக்கூடாது."

"அக்கா நான் அப்படியாக்கா...."
கேட்டாளே தவிர உள்ளுக்குள் 
ஏதோ உறுத்தல்.
அவனை முற்றிலும் துடைத்துப்
போட முடியாத படி எங்கோ ஓர்
மூலையில் இருந்து சுருக் சுருக்கென்று 
தைத்துக் கொண்டிருந்தது.

நான் வீட்டில் சொல்லாதற்கு கூட அதுதான் 
காரணமாக இருக்குமோ?

ஒரு வாரமாக மனதைப் போட்டு
குடைந்தெடுத்த கேள்விகளுக்கு
விடை.... தனக்கும் 
அதில் விருப்பம் என்றுதானே சொல்லியிருக்கிறது.

சொல்லாமலே வந்த காதல்.

சொல்லாமலே...
சொல்ல வைத்தக் காதல்.
உள்ளுக்குள் எண்ணி எண்ணி 
மகிழ வைத்த காதல்.

"என்ன திருதிருன்னு முழிக்கிறா..

அம்மாவும் சேர்ந்த கள்ளிதான் போல
இருக்கு."

"அப்படி எல்லாம் இல்ல."
உதடுகள் உச்சரித்த வார்த்தைகளுக்கு
உள்ளம் சம்மதம் வழங்க மறுத்தது.

சொல்லாமலே உள்ளுக்குள் 
ஒரு காதல் பூ பூத்திருந்தது ..















Comments