விதியின் பிழை

விதியின் பிழை

இந்த உலகில் பிறந்தவர் அனைவரும் 

மகிழ்ச்சியாக வாழத்தான் நினைக்கின்றனர்.ஆனால் நாம் நினைத்தபடி வாழ்க்கை அமைந்து விடுகிறதா?

நாம் ஒன்று நினைக்க வண்டி எங்கெங்கோ நம்மை அது போக்கில்  இழுத்துச் செல்கிறது.

சில நேரங்களில் சரியான பாதையில் போய்க்கொண்டிருக்கிறது.

அந்த மகிழ்ச்சியை முழுவதும் அனுபவிக்கும் 

முன்னர் எதிர்பாராமல் எதிலோ முட்டி

நிலைகுலைய வைக்கிறது.

தடுமாறி நிற்க வைக்கிறது.

தலை கீழாக விழ வைக்கிறது.

இவை எல்லாவற்றிற்கும் காரணம் என்ன?

யாரிடம் எல்லாமோ கேட்டுப் பார்க்கிறோம்.

யாருக்கும் சரியாகப் பதில் கூறமுடியவில்லை. ஆனால் பெரும்பாலோனோர் சொல்லும் பதில்

விதி வலியது.

விதிப்படித்தான் வாழ்க்கை.

இப்படித்தான் வாழ வேண்டும் என்று இறைவன் அன்று விதித்த விதியை இன்று

யாராலும் மாற்ற இயலாது என்பதுதான்.

“ நல்லவன் வாழ்வான், கெட்டவன் அழிவான்” – என்பதும் “ வினை விதைத்தவன் வினை அறுப்பான் தினை விதைத்தவன் தினை அறுப்பான்;” – என்பதும் கேட்பதற்கும் சொல்வதற்கும் எழுதுவதற்கும் நன்றாகத்தான் உள்ளது.

ஆனால் நடைமுறையில்? 

நடப்பவற்றிற்கும் நாம் நினைப்பவற்றிற்கும் 

எத்தனை மாறுபாடு?

எத்தனை வேறுபாடு?


எத்தனையோ பேர் வாகனங்களில் பயணம் செய்கின்றனர்.

ஒரே சாலை .ஒரே மாதிரியான வாகனம்.

ஒரே மாதிரியான சூழல்.

ஆனால் திடீரென்று எதிரிலிருந்து வந்த ஒரு 

வாகனம் மற்றொரு வாகனத்தின்மீது  மோதிவிடுகிறது.

வாகனத்தில்  வந்தவருக்கு நடக்கக்கூடாதது ஒன்று

நடந்து விடுகிறது.

இது ஏன் நிகழ்ந்தது?

ஏன் .....ஏன்.... ஏன்....?

இதற்கு முன்னால் வாகனங்கள்  செல்ல வில்லையா?

இவருக்குப் பின்னால் வாகனங்கள் வரவில்லையா?

இவர் வரும்போதுதான் எதிரில் இருந்து வந்த வாகனம் மோத வேண்டுமா?

இதைத்தான் விதி என்கின்றனர்.

விதியை மதியால் வெல்லலாம் என்று சொல்லித்தர வில்லையா என்பீர்கள்.

ஒரு பேச்சுக்குச் சொல்லலாம்.

ஆனால் விதியை மதியால் வென்றவர்

ஒருவரைக் காட்டுங்கள் என்றால் அரைமணி நேரம் யோசிப்பீர்கள்.

ஆளாளுக்கு ஏதேதோ சொல்லி சமாளிப்பீர்கள்.

ஆனால் யாரையும் உங்களால் கை காட்ட 

முடியாது.

விடிந்தால் இராமனுக்கு முடி சூட்டு விழா! அயோத்தி நகரம் முழுவதும் கொண்டாட்டம் ஆரவாரம். மக்கள் மகிழ்ச்சியில் ஆனந்தக் கூத்தாடிக் கொண்டிருந்தனர்.ஆனால் ஒரே இரவில் தசரதனிடம் கைகேயி பெற்ற வரத்தால் இந்த ஆரவாரம் முற்றிலும் அடங்கிப்போயிற்று. கண்ணீராய்க் கதை நீண்டு போயிற்று.


இராமன் கானகம் செல்ல பரதனுக்கு முடி சூட்ட வேண்டும் என்று முடிவாகிறது. இதனைக் கேட்ட இலட்சுமணன் கொதித்து எழுகின்றான். இலட்சுமணனின் கடும் கோபத்தைக் கண்ட இராமன் இலட்சுமணனை நோக்கி – “ தம்பி! ஆறு என்றால் எப்போதும் தண்ணீர் இருந்து கொண்டே இருக்க வேண்டும். இது இயற்கை விதி!


ஆனால் அந்த ஆறே வற்றிப் போனால் ஆற்றின் மீதா குறை சொல்ல முடியும் ?அது போலத்தான் இன்று இங்கு இது நிகழ்ந்தமைக்கு யாருடைய பிழையும் காரணம் இல்லை. விதியின் பிழைதான். இதற்காக நீ கோபம் கொள்ளலாமா? “ என்று இலட்சுமணனின் கோபத்தை ஆற்றுகின்றான். 

இதோ கம்பனின் அந்தப் பாடல்!


நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை அற்றே

பதியின் பிழையன்று பயந்து நமைப் புரந்தான்

மதியின் பிழையன்று, மகன்பிழையன்று மைந்த

விதியின் பிழைஇதற்கு என்கொல் வெகுண்ட தென்றான்

                      - கம்பராமாயணம் ( அயோத்தியா காண்டம் )


மகனே!;   நீர் உள்ள ஆற்றிலே ஒரு சில காலங்களில்  நீர் இல்லாமல் வற்றிப் போவது அவ் ஆற்றின் குற்றம் அன்று.

அது இயற்கை செய்த குற்றம். அதுபோலவே என்னைக் காடு செல்லும்படி சொன்னது தந்தையின் குற்றம் அன்று.  காடு செல்லும்படி வரம்  பெற்றது நம்மைக் காப்பாற்றி வளர்த்தவளாகிய கைகேயியின்   அறிவினது  குற்றமும் அன்று. அவள் மகனாகிய பரதனது குற்றமும் இதில் எதுவும் இல்லை. இவை எல்லாம் இப்படி நடப்பதற்கு விதியின் பிழை என்றுதான் நான் சொல்லுவேன்.அதாவது விதியால்  நமது ஊழ்வினையால் விளைந்த குற்றத்தால்தான் இவை எல்லாம்  நிகழ்ந்திருக்கிறது.. இங்ஙனம் இதனை ஆராயாது   நீ இந்தச் செயலுக்கு இவர்களைக் காரணமாக்கிக் கோபித்துக் கொள்வது  ஏன்?’ 

ஊழ்வினை செலுத்தத் தாயும் தந்தையும்

காரணமாக இருந்து விட்டனர்.

அதைத் தவிர வேறென்ன சொல்வது ?

என்கிறான் இராமன் .

 இராமன்

காட்டிற்குச் செல்ல காரணம் விதி என்று சொன்ன கம்பர் வாழ்க்கையிலும்

விதி விளையாடியிருக்கிறது. 


கம்பர் சொந்த வாழ்க்கையிலும் அதனை சந்திக்க நேரிடுகிறது. கமபனின் ஒரே மகன் அம்பிகாபதி தன் அப்பாவைப் போலவே நல்ல புலமை வாய்ந்தவன். 

அம்பிகாபதி சோழ மன்னனின் மகள் அமராவதியை விரும்புகிறான். அவளும் அவனை விரும்புகிறான். 

இருவரும் காதல் வயப்படுகின்றனர்.

மன்னன் காதுகளுக்கு  இந்தச் செய்தி போகிறது. சாதாரண ஒரு புலவனின் மகனை ஒரு மன்னன் மகள் திருமணம் செய்வதா?

இதனை மன்னன் விரும்புவானா? 

மன்னன் கோபம் கொண்டு அம்பிகாபதிக்கு மரண தண்டனை விதிக்கிறான். 

கம்பர் தன் மகனைக் காப்பாற்ற  எவ்வளவோ முயன்று பார்க்கிறார்.அவரால்  ஒன்றும் செய்ய முடியவில்லை.

இப்படித்தான் நடக்க வேண்டும் என்று விதி இருந்தால் நம்மால் என்ன செய்ய முடியும்?

எல்லாம் உன்னாலே வந்ததுதான்.

இனி நாம் எப்படித்தான் தவித்தாலும்

நடப்பது நடந்தே தீரும்.

நீ முன்பு செய்த வினைப்பயன் தான் இப்படி

உனக்கு நேரக் காரணமாகி விட்டது .

விதியின் பிழை என்பதைத்தவிர

வேறு என்ன சொல்வது என்று கம்பன் மகனைப் பார்த்துப் பாடிய பாடல் இதோ உங்களுக்காக....


"இந்நாள் இதுவிளையும் என்றெழுத்துத் தானிருக்க

என்னாலே ஆவதொன்று மில்லையே; - உன்னாலே

வந்ததுதான் அப்பா, மகனே, தவிப்பவர் ஆர்

முந்தையில்நீ செய்தவினை யே

                        - கம்பர் (தனிப் பாடல்)

ஒரு அப்பாவாக மன்னனிடம் மன்றாடிப் பார்க்கிறார்.
மன்னன் மன்னிப்பதாக இல்லை.
"இனி என்னால் ஆவதொன்றும் 
இல்லையே"

 என்று அவர் பாடும்போது நமது நெஞ்சம் கரைந்து விடுகிறது. 

கம்பன் மகன் அம்பிகாபதிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது.

மகன் வெட்டுப்பட்டு வீழ்ந்து கிடக்கிறான். அப்போதும் கம்பர் விதியை நொந்து பாடிய பாடல்.....


மட்டுப்படாக் கொங்கை மானார் கலவி மயக்கத்திலே

கட்டுப்பட்டாய் என்ன காதல் பெற்றாய் மதன்கை அம்பினால்

பட்டுப் பட்டாயினும் தேறுவை யேஎன்று பார்த்திருந்தேன்

வெட்டுப்பட்டாய் மகனே தலைநாளின் விதிப்படியே

                                                      - கம்பர்  (தனிப் பாடல்)


என்று மகன் வெட்டுப்பட்டுக் கிடக்கும் போதும் வெட்டுப்பட்டாய் மகனே!

தலை நாளின் விதிப்படியே

என்கிறார்.


 “ கம்ப நாடன் கவிதையைப் போல் கற்றோர்க்கு இதயங் களியாதே “ – என்று புகழப் படும் கம்பரின் வாழ்க்கையில் விதி விளையாடிய சோகம் நம்மை

கண்ணீர் கடலில் மூழ்க வைக்கிறது. 

யாரை நொந்து என்ன பயன்?

எல்லாம் விதியின் பிழை.

 வேறென்ன சொல்வது?

 



 






.

Comments