ஔவையின் கர்வம் தொலைந்தது
மாடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் நாவல் மரத்தில் ஏறி நாவல் பழங்களைப் பறித்துத்
தின்று கொண்டிருந்தான்.
அவ்வேளை அவ்வழியாக வந்த
ஔவை நாவல் மர நிழலில் வந்து அமர்ந்தார். ஒளவையாரைப் பார்த்ததும் அந்தப் சிறுவன்" பாட்டி, உங்களுக்கு நாவற்பழம் பழம் வேண்டுமா ? "என்று கேட்டான்.
ஒளவையாருக்கோ நல்ல பசி.
" ஆமாம்.பசியாக இருக்கிறேன்.பழம் பறித்துப் போடுப்பா "என்றார் ஔவை..
"உனக்குச் சுட்டப்பழம் வேண்டுமா அல்லது சுடாதப்பழம் வேண்டுமா "என்று கேட்டான் அந்தச் சிறுவன் .
ஒளவைக்கு அந்தச் சிறுவன் கேட்ட கேள்விக்கான பொருளை உடனடியாக புரிந்துகொள்ள முடியவில்லை.
அதென்ன சுட்டப்பழம், சுடாதப்பழம் என்று தனக்குத்தானே கேட்டுக் கொண்டார்.ஆனாலும் தனது அறியாமையை சிறுவனுக்கு முன்னால் காட்டிக் கொள்ள மனமில்லை.
சரி ,எனக்குச் சுட்டபழமே பறித்துப் போடு என்றார்.
உடனே சிறுவன் மிகவும் கனிந்த பழங்களைப் பறித்து கீழே மணல் மீது போட, ஒளவையாரும் அவற்றை எடுத்து அப்பழங்களின்மீது ஒட்டிக்கொண்டிருந்த மணல் போகும்படி வாயால் ஊதிக்கொண்டிருந்தார்.
அச் செயலைப் பார்த்த அச் சிறுவன் "என்ன ....பாட்டி, பழங்கள் சுடுகின்றனவோ?" என்று கிண்டலடித்தான்.
சுட்டப்பழம் என்று அச் சிறுவன் கேட்டதன் அர்த்தம் ஔவைக்கு இப்போதுதான் புரிந்தது.
"ஒரு சிறுவன் தன் பேச்சால் தன்னை ஏமாற வைத்து விட்டானே!
நானும் சற்று தடுமாறி விடமாட்டேன். மதி மயக்கி விட்டேன்" என்று வெட்கமடைந்து போனார்.
இப்போதுதான் ஔவைக்கு ஓர் உண்மை
தெரிய ஆரம்பித்தது.
அந்த நேரத்தில் அவர் பாடிய பாடல்
இதோ உங்களுக்காக....
“கருங்காலிக் கட்டைக்கு நாணாத கோடாலி
சிறுகதலித் தண்டுக்கு நாணும் – பெருங்கானில்
காரெருமை மேய்க்கின்ற காளைக்கு நான் தோற்றது
ஈரிரவும் தூங்காது என் கண்”
என்பது பாடல்.
அதாவது பெரிய பெரிய கருங்காலி மரங்களை எல்லாம் வெட்டித் தள்ளிய உறுதியான இரும்புக் கோடாலியால், இளங் கதலித் தண்டை வெட்ட முடியாது போகும். கதலி என்பது வாழையின் ஒரு வகை. அதாவது கதலி வாழைத் தண்டு நார்நாராக இருப்பதால் கோடரியால் அதனை எளிதாக வெட்ட முடியாது .
அதுபோல பெரும் புலமை வாய்ந்தவள், அறிவாளி என்று நினைத்துக் கொண்டிருந்த நான் இன்று இந்தப் பெருங்காட்டில் மாடு மேய்க்கின்ற ஒரு சிறுவனிடத்தில் தோற்றுப் போனேன்.
சுட்டுப் பழம்
சுடாதப்பழம்
என்ற சொற்களை வைத்து என்
புலமையையே கேள்வி கேட்க வைத்துவிட்டான்.
ஆட்டம் காண வைத்தது விட்டான்.
சிறுவனிடம் தோற்றுப் போன மனக்கவலையால் இன்னும் இரண்டு நாட்களுக்கு என் கண்கள் தூக்கத்தை மறந்து போய்விடும்.உறக்கம் வரவே வாராது "என்று மனம் வருந்திப் பாடினார் ஔவை.
உடனே அச்சிறுவன் முருகனாகத் தோன்றி ஒளவையாருக்குக் காட்சி கொடுத்தான் எனவும் அவரின் பெருமையை ஊர் அறிய வைத்தான் எனவும் கதைகள் உள்ளன.
ஒளவையாரின் மனதிலிருந்த புலமைக் கர்வம் அன்றே அகன்றது. நெஞ்சில் அமைதி குடி கொண்டது. அப்போது ஒளவையாரைப் பார்த்து முருகன், “ஒளவையே உமது அமுதத் தமிழைக் கேட்கவும் சில ஐயங்கள் நீங்கித் தெளிவு
பெறவுமே
நான் வந்தேன். எனது ஐயங்களைத் தங்கள் தமிழ்ப் புலமையினால் போக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டான்.
“ அப்பா! உனது ஐயத்தைப் போக்கும் பெருமை என் தமிழுக்குக் கிடைக்கட்டும்” என்றார் ஒளவையார்.
அப்போது முருகன் உலகில் அரியது, பெரியது, இனியது, கொடியது எவை என்று கேட்டான். அதற்கு ஒளவையார் விடையாக பின்வரும் பாடல்களைப் பாடியுள்ளார்.
அரியது:
“அரியது கேட்கின் வரிவடி வேலோய்அரிதரிது மானிடர் ஆதல் அரிதுமானிடர் ஆயினும் கூன்குருடு செவிடுபேடு நீங்கிப் பிறத்தல் அரிதுபேடு நீங்கிப் பிறந்த காலையும்ஞானமும் கல்வியும் நயத்தல் அரிதுஞானமும் கல்வியும் நயந்த காலையும்தானமும் தவமும் தான்செயல் அரிதுதானமும் தவமும் தான்செய்வ ராயின்வானவர் நாடு வழிதிறந் திடுமே”
என்பது பாடல்.
வடிவேலவனே! இவ்வுலகில் அரியது எது என்று கேட்பாயாகின், இந்த உலகில் மிகவும் அரியது மானிடராகப் பிறப்பது தான்.
அப்படியே மானிடராகப் பிறந்திருந்தாலும் கூன், குருடு, செவிடு, பேடு முதலிய குறைகள் இல்லாமல் பிறத்தல் அரியது.
இந்தக் குறைகள் நீங்கிப் பிறந்தாலும் அறிவும், கல்வியும் விரும்பிக் கற்பவனாக இருத்தல் அரியது.
அறிவும், கல்வியும் விரும்பிப் பெற்றிருந்தாலும் பிறருக்குக் கொடுக்கும் தானமும் தவமும் செய்பவராக இருத்தல் அரியது.
தானமும், தவமும் செய்பவராகவராக
வாழ்ந்தால் மட்டுமே வான்உலகப் பெருவாழ்வு கிடைக்கும்.
பெரியது:
“பெரியது கேட்கின் எரிதவழ் வேலோய்
பெரிது பெரிது புவனம் பெரிது
புவனமோ நான்முகன் படைப்பு
நான்முகன் கரியமால் உதிரத்தில் உதித்தோன்
கரிய மாலோ
அலைகடல் துயின்றோன்
அலைகடல் குறுமுனி கலசத்தில் அடக்கம்
கலசமோ புவியிற் சிறுமண்
புவியோ அரவினுக்கு ஒருதலைப் பாரம்
அரவோ உமையவள் ஒருசிறு மோதிரம்
உமையோ இறைவர் பாகத் தொடுக்கம்
இறைவரோ தொண்டர் உள்ளத் தொடுக்கம்
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே”.
என்பது பாடல்.
"இந்த உலகில் மிகப் பெரியது எது என்று கேட்பாயாகின் இந்த உலகம்தான் பெரியது. ஆனால் இந்த உலகமோ பிரம்மனால் படைக்கப்பட்டது. எனவே பிரம்மன்தான் பெரியவன் என்றால் பிரம்மனோ திருமாலின் உந்தியில் (தொப்புள்) இருந்து உதித்தவன்.
எனவே திருமால்தான் பெரியவன் .
ஆனால் திருமாலோ அலைகடலில் தூங்குகிறவன்.
திருமாலையே அலைகடல்தானே தாங்குகிறது.
அப்படியானால் கடல்தானே பெரியதாக இருக்க முடியும் .
ஆனால் அந்தக் கடலும் அகத்தியனின் கையிலுள்ள கமண்டலத்தில் அடங்கியுள்ளது. எனவே, கமண்டலம் தான் பெரியது என்று ஆகிறது.
ஆனால் அந்தக் கமண்டலமோ இந்தப் பூமியில் உள்ள சிறிதளவு மண்ணால் செய்யப்பட்டது. எனவே, பூமிதானே பெரியதாக இருக்க முடியும்.
ஆனால் இந்தப் பூமியையே ஆதிசேடன் என்னும் பாம்பு தனது தலையில் தாங்கியிருக்கிறது என்கிறோம்.
அப்படியானால் பூமியைத் தாங்கும் ஆதிசேடன் என்னும் பாம்புதான் பெரியது
என்ற எண்ணம் உண்டாகிறது.ஆனால் அந்தப் பாம்பை, உமையவள் தனது கை விரலில் மோதிரமாக அணிந்துள்ளாள். எனவே உமையவள்தான் பெரியவள்
என்பதுதானே உண்மை .
ஆனால் அந்த உமையவளோ சிவனது உடலின் ஒரு பாதியில் ஒடுங்கியிருக்கிறாள். எனவே சிவன்தான் பெரியவன் .
ஆனால் அந்தச் சிவனும் அடியவர்களின் உள்ளத்தில் ஒடுங்கியிருக்கிறான். எனவே அடியவர்களின் பெருமைதான் உலகில் பெரியது ஆகும் "என்கிறார் ஔவை.
தொண்டர்கள் பெருமை பெரிது
என்பது ஔவையின் முடிவான கருத்து.
இனியது:
“இனியது கேட்கின் தனிநெடு வேலோய்இனிது இனிது ஏகாந்தம் இனிதுஅதனினும் இனிது ஆதியைத் தொழுதல்அதனினும் இனிது அறிவினர்ச் சேர்தல்அதனினும் இனிது அறிவுள் ளாரைக்கனவிலும் நனவிலும் காண்பது தானே”
என்பது பாடல்.
"இந்த உலகில் மிகவும் இனியது எது என்று கேட்பாயாகின் இந்த உலகில் மிகவும் இனிமையானது, தனிமையில் இருப்பதுதான். என்றுதான் சொல்வேன். ஆனால் அதைவிடவும் இனிமையானது இறைவனை வணங்குவது.
இதுவும் என் மூடினான் கருத்து அல்ல.இறைவனை வணங்குவதை விட அறிவு உடைய மனிதர்களுடன் சேர்ந்து வாழ்வது இனிமையானது.
ஆனாலும் இவை எல்லாவற்றைவிடவும் இனிமையானது கனவிலும் நனவிலும் அறிவு உடையவர்களை எண்ணிக் கொண்டு இருப்பது ஆகும்." என்றார் ஔவை.
ஔவையின் கருத்துப்படி கனவிலும்
நனவிலும் அறிவுடையவர்களைக் காண்பது
இனிமையானது.
கொடியது:
“கொடியது கேட்கின் நெடியவெல் வேலோய்!
கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினும் கொடிது இளமையில் வறுமை
அதனினும் கொடிது ஆற்றொணாத் தொழுநோய்
அதனினும் கொடிது அன்பிலாப் பெண்டிர்
அதனினும் கொடிது இன்புற அவர்கையில் உண்பது தானே”.
என்பது பாடல்.
நெடிய வேலினைக் கையிலேந்தியுள்ள வேலவனே!
உலகத்தில் கொடியது எதுவென என்னிடம் வந்து கேட்பாயாகின் நான் கூறுவேன் வறுமையே மிகவும் கொடியதாகும். வறுமை கொடியதுதான்
மாற்றுக்கருத்து இல்லை.
எனினும் கொடியது இளமைப் பருவத்தில் நிலவும் வறுமை .
வறுமையிலும் கொடியது ஒன்று உண்டு.
அது தீர்க்கமுடியாத நோயினால் பீடிக்கப்படுவது ஆகும் .
இது கூட பரவாயில்லை .அதனினும் கொடிது அன்பிலாப் பெண்டிர்.
அன்பு ,பாசம் எதுவுமே இல்லாத பெண்களுடன் வாழ்வது கொடுமையிலும் கொடுமையானது.
இங்கு பெண் என்பது தாய், மனைவி அல்லது நாம் சேர்ந்து வாழும் பெண்கள் எனப் பொருள்படும்.
இறுதியாக அதனினும் கொடிது
ஒன்று உண்டு கேட்பாயாக.
அது என்னவென்றால் அன்பில்லாப்
பெண் இன்புற அவர் கையால் உண்பது என்பது கொடிதினும் கொடிது"” என்று சொல்லி முடித்தார் .
அருமையான கருத்தாழமிக்க பாடல்கள் இல்லையா?
Comments
Post a Comment