சிலப்பதிகாரம் சொல்லும் மூன்று உண்மைகள்
சிலப்பதிகாரம் உணர்த்தும் மூன்று உண்மைகள்
சிலப்பதிகாரம் உணர்த்தும் மூன்று உண்மைகள் பற்றி படிக்காமல்
பள்ளிப் பருவத்தைக் கடந்து வந்திருக்க முடியாது .
பள்ளியில் படிக்கும் போது கேள்விக்கு பதில் எழுதுவதற்காக இதனைப் படித்திருப்போம்.
அதன் பிறகு அதைப் பற்றி பெரிதாக எந்தச்
சிந்தனையும் எழுந்திருக்காது.
ஆனால் இவை அனைத்தும் மதிப்பெண்ணுக்காகப் படித்துவிட்டு
அப்படியே கடந்து போவதற்காகச் சொல்லப்பட்டவை அல்ல.
வாழ்க்கைப் பாடங்கள்.
அந்த மூன்று உண்மைகளையும் பற்றி
இக்கட்டுரையில் காண்போம்.
1.அரசியல் பிழைத்தோருக்கு அறங்கூற்றாகும்”.
2.உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்.
3.“ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்”
என்ற மூன்று உண்மைகளையும்
உரைப்பது சிலப்பதிகாரம்.
1. அரசியல் பிழைத்தோருக்கு அறங்கூற்றாகும்:
தவறு செய்தால் தண்டனை உண்டு.
அந்தத் தண்டனை வெளியிலிருந்து யாரும் வந்து கொடுக்கப் போவதில்லை.
அந்தத் தண்டனையிலிருந்து சாதாரண
மக்கள் முதல் மன்னன் வரை யாரும்
தப்ப முடியாது.
மன்னனே ஆயினும் தவறு செய்தால்
தப்ப முடியாது என்பதைத்தான்
"அரசியல் பிழைத்தார்க்கு அறம் கூற்றாகும்”
என்கிறார் இளங்கோவடிகள்.
இதில் உள்ள இந்த அறம்
எதைச்
சொல்கிறது?
சிலப்பதிகாரத்தைப் பொறுத்தமட்டில் அது பாண்டிய மன்னனுடைய ஆட்சியைப் சுற்றித்தான் நடக்கிறது.பாண்டிய மன்னனுடைய மனச்சாட்சிதான் இங்கே அறம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உண்மையை ஆராயாமல் தவறு செய்துவிட்ட மன்னன் அவன். தான் செய்தது தவறு என்று உணர்ந்ததும் தனக்குத்தானே தண்டனையும் கொடுத்துக் கொள்கிறான்.
மனச்சாட்சி என்பது அரசியலில் செத்துப் போய்விட்டதென்றால், அதனால் ஏற்படும் இழப்பு குடிமக்களாகிய நமக்குத்தான். இங்குள்ள சக மனிதர்களான நமக்குத்தான்.
காவல்துறை கண்காணிப்பதனால்தான்
மனிதன் ஒழுங்காக இருக்கிறான்.
யாரும் கண்காணிக்க மாட்டார்கள் என்றால் ஆளாளுக்கு தங்கள் மனம் போன போக்கில் வாழ ஆரம்பித்துவிடுவர்.
பாதிக்கப்படுபவர் யாராக இருந்தால் என்ன வாழ்வது நானாக இருக்க வேண்டும் என்ற
சுயநலம் சார்ந்த எண்ணம் மேலோங்கி விடும்.மனசாட்சியை ஓரமாகத் தூக்கி
வைத்துவிட்டு உல்லாச நடைபோடுவர்.
ஆனால் மனசாட்சி உள்ள ஒருவரால்
யார் எக்கேடு கெட்டுப் போனால் என்ன
என்று இருக்க முடியாது.
தெரியாமல் தவறு செய்து விட்டாலும்
அது தவறு என்று அறிய வரும்போது
அவரது மனசாட்சியே அவரைக் கேள்வி கேட்கும்.
உறங்கவிடாமல் துரத்தியடிக்கும்.
கொல்லும்.
அப்படி மனசாட்சி கேள்வி கேட்டதால் தான் பாண்டிய
மன்னன் உயிர்விட நேரிடுகிறது.
மன்னன் தீர்க்க முடியாத பெரும் பிழை
செய்து விட்டான். அதனால்
அவன் மனசாட்சியே அவனைக் கொன்று
போட்டது.
இதுதான்
சிலப்பதிகாரம் சொல்ல வந்த முதல்
உண்மையான " அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்" என்பதாகும்.
2.”:உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்"
இந்த இரண்டாவது பேருண்மையும் நம்மைச் சிந்திக்க வைக்கிறது.
சிலப்பதிகாரத்தில் நாம் சந்தித்த பெண்கள் பலர் உண்டு . தேவந்தி, வயந்தமாலை,
இடைச்சேரியிலே கண்ணகி தங்கியிருந்த மாதரி குடும்பத்து மகளிர் , கோவலனின் கொலைக்குக் காரணமான பொற்கொல்லனின் மனைவி
இப்படி பல பெண்களை இளங்கோவடிகள் நமக்கு அறிமுகப்படுத்தினாலும் அவர்கள் யாருக்கும் இல்லாத தனிச்சிறப்பு
கண்ணகியிடம் இருந்தது.
அதனால்தான் அவள் இன்றுவரை
போற்றப்படுகிறாள்.
வணங்கப்படுகிறாள்.
சிலப்பதிகாரம் என்றதும் கண்ணகி நம் நினைவிற்கு வருகிறாள்.. கணவனை இழந்தவளாகிவிட்ட, இளம் பெண் கண்ணகி பட்ட துயரம் கவலைக்குரியது.
அந்தக் கவலையான சூழலிலும் தன் கணவன் மீது விழுந்த பழியைத் துடைக்க அவள் வெகுண்டெழுகிறாள்.
தன் கணவன் கள்வன் அல்லன் என்ற உண்மையை உலகறிய
வைக்கிறாள்.
கற்புக்கும் அத்துயரத்துக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை
என்றாலும் அவளது மன உறுதி
அவளை கொண்டாட வைக்கிறது.
அதைத்தான்
"உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்தல்" என்ற நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தியது என்கிறார் இளங்கோவடிகள்
3. ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்:
"உப்பு தின்றவன் தண்ணீர் குடிப்பான்
தப்பு செய்தவன் தண்டனையை
அனுபவிப்பான்"
என்று சொல்கிறோம்.
தப்பு செய்தவனுக்குத் தண்டனை உண்டு.
இது நமது நம்பிக்கை.
இப்பிறவியில் தண்டனை உண்டு .
ஆனால் ஊழ்வினை என்று முற்பிறவியில் செய்த தப்புக்கும் தண்டனை உண்டு
என்கிறாரே இளங்கோவடிகள் .
நாம் முற்பிறவியில் செய்த நற்செயல் அல்லது தீய செயல்களுக்கு இப்பிறவியில் அதன் பலன்கள் வந்து சேரும் என்பது சமண மதக் கொள்கை.
இளங்கோவடிகள் சமண மதத்தைச் சார்ந்தவர் என்பதால்
சிலப்பதிகாரத்தில் மூன்றாவது உண்மையாக இதனை வலியுறுத்திப் சொல்லியிருக்கிறார்.
அதற்கான காரணங்களும் சொல்லப்பட்டிருக்கின்றன.
ஊழ்வினை என்பது முன்பிறவியில் செய்த பாவ வினைகள். அது முன்னோர்களாலோ தன்னாலோ ஏற்பட்டிருக்கலாம். அதிலிருந்து தன்னை எப்படிக் காத்துக்கொண்டாலும் அந்த வினையின் தாக்கம் நம்மை வந்து அடைந்தே தீரும் அதை அனுபவிப்பது
என்பது விதி . அதைத்தான்
"ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்"
என்கிறார் இளங்கோவடிகள்.
சிலப்பதிகாரம் சொல்லும் மூன்று
உண்மைகளான
1.அரசியல் பிழைத்தோருக்கு அறங்கூற்றாகும்”.
2.உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்.
3.“ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்”
என்று அப்படியே மனதில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.
Comments
Post a Comment