வெட்டனவை மெத்தனவை...
"இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்ப காய்க் கவர்ந்தற்று"
என்பார் வள்ளுவர்.
இனிய சொல் இருக்க ,துன்பம் தரும் சொற்கள் எதற்கு?
ஒரு மரத்தில் நல்ல இனிமையான
பழங்கள் இருக்கின்றன.
அவற்றை விட்டுவிட்டு காய்களைப்
பறித்து உண்ண யாராவது விருப்புவார்களா?
அப்படி ஒருவருக்கு ஒரு விருப்பம் ஏற்படுவது
போன்றதுதான் இன்சொல்லைத் தவிர்த்து
வன்சொல்லைப் பயன்படுத்துவதற்கு
ஒப்பாக இருக்கும்.
இதுதான் வள்ளுவர் சொல்ல வந்த கருத்து.
இதையே வேறொரு கோணத்தில் பார்த்திருக்கிறார் நல்வழி ஆசிரியர்.
வன்சொல் தோற்கும்.
மென் சொல் வெல்லும்.
என்பது நல்வழி நமக்குக் கூறும் கருத்து.
அந்தக் கருத்து பொதிந்துள்ள பாடல்
இதோ உங்களுக்காக...
"வெட்டனவை மெத்தனவை வெல்லாவாம் வேழத்தில்
பட்டு உருவுங்கோல் பஞ்சில் பாயாது-நெட்டிருப்புப்
பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்
வேருக்கு நெக்கு விடும்"
- நல்வழி
யானையின் மீது பட்டு துளைத்துச் செல்லும் அம்பானது, பஞ்சின் மேல் வீசுங்கால் அதே வேகத்தில் பாய்ந்து செல்லாது .
இரும்பை வைத்து அடித்தாலும் பிளக்க முடியாத கரும்பாறையானது பசுமையான மரத்தின் வேருக்கு நெகிழ்ந்து வேர்கள் உட்புக வழி ஏற்படுத்திக் கொடுக்கும்.
இரும்பு கடினமானது .இரும்பை வைத்து அடித்தாலும் பாறையினுள் எளிதாகப் புக முடியாது .
அதுபோல வன்சொற்களால் யாரையும் எளிதாக வென்றுவிட முடியாது.
ஆனால் மரத்தின் வேர்கள் மென்மையானதுதான்.
அவற்றால் பாறைகளில் எளிதாக ஊடுருவிச் செல்ல முடியும்.
அதுபோல மென்சொற்கள் எளிதாக அனைவர் உள்ளத்திலும் தைக்கும் .
அதனால் மென்மையாகப் பேசுபவர்களுக்கு
எல்லா இடத்திலும்
எல்லா நேரங்களிலும் வெற்றியே
கிடைக்கும் .
வன்சொல் தோற்கும்.
மென் சொல் வெல்லும்.
அருமையான கருத்தாழமிக்க பாடல்
இல்லையா?
Comments
Post a Comment