ஆங்காலம் ஆகும்
ஆங்காலம் ஆகும்
"காலம் கருதி யிருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர்” என்பார்
வள்ளுவர்.
உலகத்தைக் கொள்ளக் கருதுகின்றவர் கலங்காமல் அதற்கு ஏற்ற காலத்தைக் கருதிக் காத்திருப்பவர்.
ஆனால் எல்லோருக்கும் காத்திருக்கும்
பொறுமை வராது.
இப்போதே செய்து முடிக்க வேண்டும்.
உடனடியாக பெரிய ஆளாக வேண்டும்.
என்று எதை எதையெல்லாமோ
செய்து பார்ப்பர்.
ஆனால் எதுவும் கைகூடாது.
என்ன இது....
நான் என்ன செய்தாலும்
ஒன்றும் கைகூட மாட்டேங்குதே... என்று
ஒரு விரக்தியான மனநிலைக்குச் சென்றுவிடுவர்.
ஏன் இந்த அவசரம்?
ஆங்காலம் ஆகும்.
என்று நமக்கு உலக எதார்த்தத்தைப் சொல்லித் தருகிறார் ஔவை.
அதைப் பற்றிய ஔவையின் பாடல்
இதோ உங்களுக்காக...
"எண்ணி ஒருகருமம் யார்க்கும்செய் ஒண்ணாது
புண்ணியம் வந்தெய்து போதல்லால் – கண்ணில்லான்
மாங்காய் விழவெறிந்த மாத்திரைக்கோல் ஒக்குமே
ஆங்காலம் ஆகும் அவர்க்கு"
நல்வழி பாடல்-4
கண் தெரியாத குருடன் ஒருவன் மாங்காய் அடிக்க முயற்சி செய்கிறான்.
தன்னால் கூடுமா என்ற சிந்தனை
அவனிடம் இல்லை.
கால நேரம் தெரியவில்லை.
கோலைக் கையாளும் திறனும் அவனுக்கில்லை.
எந்தத் திசையை நோக்கி வீசினால்
மாங்காய் விழும் என்பதையும் அறிய வாய்ப்பில்லை.
ஆனாலும் ஓர் ஆசை.
கையில் வைத்திருந்த கோலை
எடுத்து வீசுகிறான்.
அவன் மாமரத்தை நோக்கி வீச அது
எங்கேயோ போய் விழுகிறது.
ஆனால் மாங்காய் மட்டும் விழவில்லை.
இப்போது கையில் இருந்த கோலும்
போயிற்று.
இனி என்ன செய்வது?
கோலில்லாமல் எப்படி நடப்பது?
வழித்துணைக்கு வேண்டுமே?
எங்கே என் கோல் விழுந்தது?
தட்டுத் தடுமாறுகிறான்.
கோலை எடுக்க முடியவில்லை.
மாங்காய் மீது ஆசைப்பட்டு
உள்ளதையும் இழந்து போனான்.
ஒருவன் கால நேரம் தெரியாமல் ஒரு செயலைச் செய்ய நினைத்தால் அவன் நிலையும் இப்படித்தான் இருக்கும். கையில் உள்ள பொருளையும் இழந்து
தடுமாற நேரிடும். நாம் செய்த புண்ணியத்தின் பலனாக, ஒரு காரியம் கைகூடும் வேளை வரும் வரை நாம் செய்யும் எந்த முயற்சி
செய்தாலும் அது நமக்குப் பலன் தராது,
அதனால் காலம் கருதி ,
உரிய காலம் வரும்வரை காத்திருந்து
அதற்கான காலம் வரும்போது அந்தச்
செயலைச் செய்ய வேண்டும்.
என்கிறார் ஔவை.
"ஆங்காலம் ஆகும்..."
அதுவரை காத்திருங்கள்.
அருமையான வரி இல்லையா?
கருத்துகள்
கருத்துரையிடுக