இலக்கியத் தென்றல் - கவிதை
இலக்கியத் தென்றல்
தாலசைத்துத்
தமிழ் ஊட்டி
தாலாட்டிப் பாராட்டி
முதல் இலக்கியம்
முன்மொழிந்து
பாட்டன் பாட்டி உறவுமுறை
உணர்வினில் ஏற்றி
தமிழ்ப் பாலூட்டிய
தாய்க்குத் தலை வணக்கம்!
இனிமை தமிழ் மொழி எனது
இளமை தான் அதன்அழகு
வளமை கொண்ட பொலிவு
வாய்த்தது நற்பே றதுஎனக்கு
தாலசைத்த நாளிலிருந்து
தமிழ்ப் பேச வைத்து
தமிழடி எடுத்து வைத்து
தமிழ் நடை கொடுத்த
தமிழ்த்தாயின் சீரடிக்கு
இச்சிறு பிள்ளையின்
இணைகரம் கூப்பிய வணக்கம்!
சீரமைச் செவிக்கின்பத்
தேனருந்த வந்திருக்கும்
தமிழ்ச் சொந்தங்களுக்கு
கோடானு கோடி வணக்கம்!
மலையைப் பெயர்த்து
மடிப்பைக்குள் வைக்க
நினைப்பதுபோல்
காற்றைப் பிடித்து
கைப்பைக்குள் அடைக்க
விரும்பும் சிறுவன் போல்
வான் நிலவை
நீள்கயிற்றால்
இழுத்திட அலையும்
குரங்கினம் போல்
அலை கடலைச்
சிற்றலகில் அள்ளி
வற்றிட முனையும்
புள்ளினம்போல்
இலக்கியப் பெருங்கடல்முன்
பேராசை கொண்டு
நிற்கின்றேன்!
வெற்றுச் சொற்களோடு
விளையாட்டில் முந்திட
முயல்கின்றேன்!
பேராசை என்று
எண்ணிட வேண்டாம்.
ஓட்டப் பந்தயத்தில்
கலந்திட விழையும்
வீரனின் முதல் முயற்சி
இதற்கு நீங்களெல்லாம்
சாட்சி !
ஐந்து தலைப்பை
முன் வைத்து
தேர்வு உரிமை மட்டும்
உமக்கு உரியது
இல்லை என்றீர்
ஈதென்ன ஞாயம்?
கேட்டிட நினைத்தேன்
கேட்காத விடாதபடி
நாவினைக் கடித்தேன்
இலக்கியம்தான்
உமக்கென்றெதும் இதயத்தை
எங்கெங்கோ அலைய விட்டு
தேடியே அலைந்தேன் !
மலைப்பில் என்னை மறந்தேன்
எங்கே தொடங்கி
எங்கே முடிவது
இலக்கியம் என்ற தேடலில்
நாட்களைத் தொலைத்தேன்!
எதில் இருப்பது இலக்கியம்?
எதில் இல்லை இலக்கியம்?
எதைச் சொல்வது?
எதைச் சொல்லாமல் விடுவது?
அடியும் முடியும் தேடி
விடை காணா
மனநிலையோடு
வெற்று காகிதத்தை
கைகளில் வைத்துக்
கிறுக்கும் மழலைப் பள்ளி
மாணவர்போல
அழகுக் கலை
இதுவென எண்ணி
ஆர்வமொடு மேடைஏறி
நிற்கின்றேன்!
காதல்.. காதலரோடு மட்டும்
கைகோத்துக் கண் சிமிட்டும்
இல்லாததை உரைத்து
இதயத்தைக் களவாடுதல்
மட்டுமே இலக்காக வைக்கும் !
ஆன்மீகம் ... ஆன்மீகவாதிகளின்
தனியுடைமை எனச் சொல்லி
தனித்து நடை போடும்
மற்றவரைப் பாவியெனக் கணித்துப்
பாதாளம் உமக்கென்கும்!
நட்பு ..வட்டம் போட்டு
சுற்றி சுற்றி வந்து
சுட்டித்தனம் பண்ணி
சும்மா இருக்க விடாமல்
கும்மாளம் போட்டிடும் !
உழைப்பு தான்மட்டும்
உயர்வென்று சொல்லி
ஒற்றை மரமாய்
எட்டியே நின்று
எட்டி எட்டிப் பார்க்கும் !
காதல் ...ஆன்மீகம் ....
நட்பு ....உழைப்பு...
அனைத்தையும் ஒட்டுமொத்த
குத்தகைக்கு எடுத்து
ஒன்பான் சுவையூட்டி
எண்பான் கலை புனைந்து
எழில் மிகு கருவாய்
பொருள் மிகு திருவாய்
பொய் புனை கவியாய்
மெய் தரு பொருளாய்
இருள் அகற்றும் ஒளியாய்
இனிமையின் ஊற்றாய்
தத்துவக் கடலில்
விளைந்திடும் முத்தாய்
தந்தவர் நினைவில்
கலைமிகு சொத்தாய்
நேற்றைய நினைவாய்
நாளைய கனவாய்
இன்றைய நனவாய்
என்றென்றும் உறவாய்
இயல்பாய் கலையாய்
இருக்கும் உலகாய்
கற்பனைத் தேராய்
கவின் மிகு காடாய்
காட்சியில் இதயத்தைத்
தொலைந்திட வைத்து
கண்முன் பூத்துக் குலுங்கும்
பூங்காடாய்ப் பூரிப்பு
தருவது இலக்கியம்!
இலக்கியம் மனதினைக்
கட்டியே இழுக்கும்
உணர்வினைச்
சுண்டியே எழுப்பும்!
சொற்போரைச் சுவைப்போராக்கி
கவிப்போர் தொடுத்து
சுவைப்போரை மலைப்போராக்கி
காப்போர் அவையில்
கலைப்போர் படைப்போர்
ஔவையும் கம்பனும்
புகழேந்தியும் ஒட்டகூத்தனும்
நிகழ்த்திய இலக்கிய
வரலாற்றுப்போர்
படிப்போர் நினைவில
என்றென்றும் நிகழ்த்திடும்
இலக்கிய இன்பப்போர்
என்பது இலக்கிய வரலாறு
மறந்திட மறுக்கும்!
நேற்றைய புதினமும்
இன்றைய கதைகளும்
நாளைய தலைமுறையோடும்
நன்னடை பயிலும்
நல்லுரையால் கொஞ்சும்
நற்றமிழ் இலக்கியமாய்
எம்மையே விஞ்சும்!
படைப்பிலக்கிய உச்ச நட்சத்திரம்
கம்பனின் படைப்பின்
கற்பனை நயம்தோய்
கவிதை வரிகள் படிப்போரைக்
கட்டியே இழுக்கும்!
நட்பும் பகையும்
நடத்திய நாடகத்தை
நல்லியல்பு மாறா விருந்தாய்
நம்முன் படைக்கும்
உறவின் மாண்பை
உயர்த்தியே பிடிக்கும்
கடைகோடி பாத்திரமும்
விடைபெற மறுக்கும்!
மறுபடி மறுபடி எனைப் படியென
வருந்தியே அழைக்கும்!
இடையிடை எப்படி
இப்படியென கம்பனை நோக்கி
வியப்பிட வைக்கும்!
அறத்துப்பால் பருகிய
இனிப்பால்
பொருட்பால் மீது கொண்ட
ஈர்ப்பால்
காதல்பால் விழுந்தின்பச்
சுவைப்பால்
அய்யன் வள்ளுவன் மீதுள்ள
மலைப்பால்
மனம் தொலைப்பால்
கவிப்பால்
அருந்தத் தந்தது இலக்கியம்!
பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும்
பதினெண்கீழ்க்கணக்கும்
பேசுமே தமிழரின் வரலாறு- அவை
காதலும் வீரமும் கைகோத்து
கலகலவென ஓடும்
தமிழ்த் தேனாறு!
பக்திச் சுவைச்
சொட்டச் சொட்டப்
பாடிய பக்திப்பாடல்கள்
பக்தி இலக்கியமாக
கிடைத்தது நம் நற்பேறு!
பாமரத் தமிழ் பேசும்
பாட்டியின் உதடுகள்
நாட்டார் இலக்கிய
பயிலரங்கம் - அது
சாமானிய தமிழுக்கு
வீசிடும் சாமரம்!
தாலாட்டுக்கு உண்டு
தமிழ் இலக்கியத்தில்
முதலிடம்!
தாலசைப்பில் பிறந்த
பிள்ளைத்தமிழ்
பத்துப் பருவத்தின்
பிறப்பிடம் -அது
இலக்கியப் பாசறையின்
உறைவிடம்!
கண்ணததாசனும் வைரமுத்துவும்
வாலிப கவிஞர் வாலியும்
பட்டுக்கோட்டையாரும் இன்னபிற
இளங்கவிஞர்களின் இன்பப்
பா யாவும் இசையென்னும் தேரேறி
இரவினில் நம்மைத் தாலாட்டித்
துயில வைக்கும்
இலக்கியம் என்பதில்
யாவருக்குமே உண்டு உடன்பாடு !
பாரதியும் பாரதிதாசனும்
கவிமணியும் நாமக்கல்லாரும்
படைத்தவை யாவும்
பாமரத் தமிழ் பேசி எம்மைப்
படித்திட வைக்கும்
பாமரனின் மீசையை
முறுக்கியே நிற்கும்!
இதுதான் இலக்கியம் என்று
தனி இலக்கணம் பேசி
தனித்துவம் சொல்லி
தனித்து நடை போட்டு நிற்கும்!
காணும் பொருள் யாவும்
கவிக்குள் அடக்கம்
கவிகள் யாவும்
உரைக்குள் நிற்கும்
உரைப்பவை யாவும்
இலக்கியமாக மொழிக்கு
அணியம் செய்யும்
கடல் கடந்து
மொழிகடந்து
மொழிமாற்றுப் படைப்பினையும்
இலக்கியமாய் எம்
இதயம் ஏற்கும்!
நவில்தோறும் நூல்நயம் இயம்பி
பயில்தோறும் பல்பொருள் உரைத்து
அறவுரை தந்து
அறிவுரை உரைத்து
பண்பினை ஊட்டி
புறம்தரு புகழ் பாடி
காலக் கண்ணாடியாய்
பெருங்காப்பியங்கள் பல படைத்து
பேரழியாச் சித்திரமாய்
பெருமிதம் தருவது இலக்கியம்!
காலம் கடந்தும்
காப்பியமாய் வந்து
காதோடு கதை பேசும்
கற்பனையில் வேற்றுக்கிரக
வீதிகளிலும்
வீசி கரம் நீட்டி
உலவிட வைக்கும்.!
உரையிடையிட்ட
பாட்டுடைச் செய்யுளும்- அதன்
பேச்சும் வீச்சும்
இலக்கியத்தில் கோலோச்சும் !
பொதிகைத் தென்றல் போல
நதியில் நாணல் போல
மடியில் மகவைப் போல
கொடியில் மலர் போல
பன்னறு காலமாய்
நன்னறு பொருள் தந்து
எண்ணறு இயம் கவர்ந்து
என்றும் இளமையாய்
எம்கரம் பிடித்து
பீடுநடை போடுவது இலக்கியம்.!
சிந்தனைக் கூடமாய்
செதுக்கிய சிற்பமாய்
செப்பமுறு நடை பயின்று
செப்பிய மொழியாவும்
செவி மடுப்பின்
இலக்கியம் அன்றேல்
வேறென்னவென்று உரைப்பேன்?
செவிக்கு உணவூட்டி
பிணிக்கு மருந்தூட்டி
கணினிக்கும் தீனியூட்டி
கண்டவற்றிற்கு எல்லாம் மொழியூட்டி
காணாதவற்றிற்குப் பொய்யூட்டி
கவிதை எனும் பெயர் சூட்டி
கண்முன் காட்சியாக
சிரித்து நிற்பது இலக்கியம்!
இலக்கியமில்லா பேச்சில்
சுவை இருந்ததில்லை
சுவையில்லா பேச்சினை
பேச்சென்று சொல்வாரும் இல்லை!
அணியாய் அணியம் செய்து
சொல்லுக்கு அழகூட்டித்
தருவது இலக்கியம்!
கற்றையாய் எழுதாமல்
ஒற்றை வரியில்
உணர்வினை சொல்லும்
உள்ளங்களை அள்ளும்
புதுக்கவிதைகள்
காலத்தின் கட்டாயம்
தந்ததொரு இலக்கிய வடிவம்
என்பதை மறுப்பாறும் உளரோ!
வாழ்வே ஒரு இலக்கியம்
நுகர்ந்து பார்
அதன் உண்மை புரியும்!
நன்றி !வணக்கம்!
இலக்கிய கவிதை மிக அருமை.
ReplyDelete