இரவு நடத்தும் நாடகம்
இரவு நடத்தும் நாடகம்
கயிற்றுக் கட்டிலில்
மல்லாந்து கிடந்து
அண்ணாந்து பார்க்கையில்
பஞ்சான மேகங்கள்
துஞ்சாமல் ஓட்டம் காட்டும் _ மேகங்கள்
துஞ்சாமல் ஓட்டம் காட்டும்.!
கொஞ்சமாய் ஒளி சிந்தி
கஞ்சமாய் சிரித்து
மிஞ்சும் நேரத்தில்
விஞ்சும் மொழி பேசி
கொஞ்சித் துயில் கெடுக்கும் _ விண்மீன்கள்
கொஞ்சித் துயில் கெடுக்கும்.!
ஊதக் காற்றும்
உரசி என்றன் காதோடு
ஊமைக் கதைகள் பேசி
உள்ளம் குளிர
உறவாடி நடுங்க வைக்கும் _ காற்று
உறவாடி நடுங்க வைக்கும்.!
கார்மேகம் தேடி
கண்கள் ஓடுகையில்
வெற்று உடம்பைக் காட்டி
சற்றும் கள்ளம் இல்லை
சொல்லாமல் சொல்லி நிற்கும் _ வானம்
சொல்லாமல் சொல்லி நிற்கும்.!
தடாகத்தில் நீந்தி
தத்தளிக்கும் நிலவுப் பெண்ணை
அள்ளி கையில் எடுக்கையில்
துள்ளி ஒளிந்து நின்று
கள்ளமாய்ச் சிரித்து நிற்கும் _ நிலவு
கள்ளமாய்ச் சிரித்து நிற்கும்!
சிங்கார மெட்டிசைத்து
சிலுசிலுவெனக் கொம்பசைத்து
சிலிர்க்க வைக்கும் காற்றோடு
சிருங்கார இசை கலந்து
சீரான பாட்டிசைக்கும் _சிள்வண்டு
சீரான பாட்டிசைக்கும்.!
பின்னிரவு நேரத்தில்
பிய்த்து வைத்த பஞ்செடுத்து
புல் பூண்டு முகமெங்கும்
பூசி குளிர வைத்து
பூரிப்பு காட்டி நிற்கும் _பனித்துளிகள்
பூரிப்பு காட்டி நிற்கும்.!
கீழ்வானம் சிவக்கும் முன்னே
கூரை ஏறி நின்று
கட்டில் விட்டெழும்புவென
கொக்கரக்கோ....கொக்கரக்கோவென
கூவி எமை எழுப்பும் _ சேவல்
கூவி எமை எழுப்பும் !
Comments
Post a Comment