ஆரையடா சொன்னாயடா
ஆரையடா சொன்னாயடா
எங்கேயோ கேட்ட குரல்.
அங்கங்கே அடிக்கடி கேட்டுக்
கொண்டிருக்கும் குரல்.
நாளும் நமக்கு ஆர்வத்தைத் தூண்டும் குரல்
அது எந்த குரல் என்று கேட்க ஆசையா?
சொல்கிறேன்..வாருங்கள்.
நீயா ... நானா... என்ற போட்டி வரும்போது
உரசல் ஏற்படுகிறது.
அண்ணன் தம்பிக்குள் போட்டி.
அக்கா தங்கைகளுக்குள் போட்டி.
கட்சிகளுக்குள் போட்டி.
தொண்டர்களுக்குள் போட்டி
தொழிலில் போட்டி.
கடவுள்களுக்குள் போட்டி.
கடவுளைத் தொழுவதில் போட்டி.
உண்பதில் போட்டி .
உடுப்பதில் போட்டி.
ஏன் உறங்குவதில் கூட போட்டி.
பக்கத்து வீட்டுக்காரரோடு போட்டி.
அண்டை மாநிலத்தோடு போட்டி.
வீட்டுக்கு வீடு போட்டி.
நாட்டுக்கு நாடு போட்டி.
இப்படி போட்டியோ போட்டி என்று
போட்டி நிறைந்த உலகில்
போட்டிப் போட்டுக்கொண்டு வாழ்ந்து
கொண்டிருக்கிறோம்.
எல்லா இடங்களில் நான் பெரியவனா?
நீ பெரியவனா? என்பதில்தான்
போட்டி எழும்.
உலகம் இப்படித்தான். இதில் யார்மீது
குறை கூறுவது?
போட்டி இருக்கட்டும்.
அது ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும்.
அப்போதுதான் அது பகையாக மாறாது.
மாறவும் கூடாது.
இரண்டு ஆளுமைகளுக்குள்
எப்போதும் போட்டி இருக்கும்.
அரசியல், பதவி என்று எங்கும்
நீக்கமற நிலவி வரும் போட்டி
அறம் பேசும் புலவர்களையும்
விட்டு வைக்கவில்லை.
இரண்டு புலவர்களுக்குள் நடைபெற்ற
போட்டியை உங்கள் முன்
வைக்கிறேன்.
போட்டி ஆரோக்கியமானதா? இல்லையா?
என்பதை நீங்களே முடிவு செய்து
கொள்ளுங்கள்.
கம்பர் சோழ மன்னனின் ஆஸ்தான கவி.
கம்பர் வாயால் தன்னையும் புகழ்ந்து
பாட வேண்டும் என்று சிலம்பி என்ற
ஒரு பெண்ணுக்கு நெடுநாள் ஆசை.
"ஐந்நூறு பொன் தருகிறேன்...
என்னைப் புகழ்ந்து ஒரு பாடல் பாடுங்கள்"
என்று கம்பரிடம் கேட்டிருக்கிறாள் சிலம்பி.
ஆஸ்தான கவி ஐந்நூறு பொன்னுக்கு
பாடுவாரா என்ன?
"ஆயிரம் பொன் தந்தால்தான் பாட முடியும் "
என்றாராம் கம்பர்.
"ஆயிரம் பொன்னா..".வாயைப் பிளந்திருக்கிறாள்
சிலம்பி.
"தன்னிடம் ஐந்நூறு பொன்தான் இருக்கிறது "
என்று பேரம்பேசிப் பார்த்திருக்கிறாள்.
கம்பர் இறங்கி வருவதாக இல்லை.
"ஐந்நூறு பொன்னுக்குப் பாதி பாடல்தான்
பாட முடியும் "என்று கறாராக
சொல்லிவிட்டார்
குட்டு பட்டாலும் மோதிர கையால்
குட்டுபட வேண்டும்.
கம்பர் வாயால் இரண்டு வரியாவது
தன்னைப் புகழ்ந்து பாடி விட்டால் போதும்.
காலத்திற்கும இதைச் சொல்லிச் சொல்லி
விளம்பரம் தேடிக் கொள்ளலாம் என்ற நினைப்பில்
' சரி 'என்று ஒத்துக்கொண்டு ஐந்நூறு
பொன்னைக் கொடுத்துப்
பாடும்படி கூறினாள் சிலம்பி.
ஐந்நூறு பொன்னுக்கு இரண்டுவரியை
மட்டும் பாடி, அதனை அப்படியே
அவள் வீட்டு சுவரில் எழுதி வைத்துவிட்டு
அவர் போக்கில் சென்று விட்டார் கம்பர்.
பாடல் இரண்டு வரியோடு முடிவு
பெறாமல் கிடக்கிறது.
இருந்தாலும் பரவாயில்லை.
ஒரு நாளைக்கு ஒருமுறையாவது
வாசித்துப் பார்த்துப் பெருமைப்பட்டுக்
கொண்டாள் சிலம்பி.
ஒருநாள் அந்த வழியாக வந்த ஔவை
அதே வீட்டுத் திண்ணையில் அமர்கிறார்.
சோர்வாக வந்த ஔவைக்கு வீட்டிலிருந்த
கூழைக் கொடுத்து
உபசரிக்கிறாள் சிலம்பி.
தன்னைப் பசியாற்றியவளுக்கு ஏதாவது
செய்ய வேண்டுமே.என்ன செய்யலாம்?
தன்னால் இயல்வது பாடல்தான் என்ற
நினைப்பில் சிலம்பியைப் பார்க்கிறார் ஔவை.
அப்போது சுவரில் எழுதி முடிக்கப்படாத
பாடல் ஒன்று இருப்பது கண்களில்
தெரிகிறது.
"பாடல் முடிக்கப்படவில்லையே...
யார் எழுதியது இப்படி அரைகுறையாக?"
என்று சிலம்பியிடம் விசாரிக்கிறார்.
சிலம்பியும் நடந்த கதையை முழுவதையும்
ஔவையிடம் ஒன்றுவிடாமல் ஒப்பிக்கிறார்.
"சரி பரவாயில்லை...போகட்டும் .
நானே இரண்டு வரி எழுதி,
பாடலை முடித்து வைக்கிறேன் "
என்று பாடலை எழுதி முடித்து
வைத்துவிட்டு அங்கிருந்து சென்று
விடுகிறார் ஔவை.
இந்தச் செய்தி கம்பர் காதுகளுக்கு
வந்து சேர்ந்து விடுகிறது.
இப்போது கம்பருக்கு ஔவைமீது
கோபமென்றால் கோபம் கடுங்கோபம்.
" நான் ஐந்நூறு பொன்னுக்கு எழுதிய
பாட்டை வெறும் கூழை வாங்கி
குடித்துவிட்டு எழுதி முடிப்பதற்கு
இந்த கிழவிக்கு என்ன தைரியம்."
என்று ஆத்திரப்படுகிறார்.
இருவருக்கும் ஏற்கெனவே உள்ளுக்குள் ஒரு
புகைச்சல் இருந்து கொண்டே இருந்தது.
அன்றிலிருந்து "கூழுக்குப் பாடுபவள் "
என்று ஔவையைக் கிண்டலாக பேச
ஆரம்பித்தார்.
இந்தச் சூழலில் ஒருநாள் சோழமன்னன்
அரசவையில் ஔவையைப்
பார்க்கிறார் கம்பர்.
"என் பாட்டுக்கு முடிவுரை எழுதி
முடித்து வைத்தாயா?
இப்போது உன்னை மாட்ட வைக்கிறேன் பார்.".. ...
என்று நினைத்தபடி,
தான் ஒரு விடுகதை போட்டுவதாகவும்
அதனை விடுவிக்கும்படியும் ஔவையிடம்
கேட்டுக் கொண்டார்.
ஔவையும் சரி என்று
ஒத்துக் கொண்டார்.
" ஒரு காலடீ நாலிலைப் பந்தலடீ"
என்று ஒற்றை வரியில் ஒரு
விடுகதையைச் சொல்லி
விடையைச் சொல்லும்படிக் கேட்டார்
கம்பர்.
தன்னை "வாடீ... போடீ..." என்பதற்காகவே
கம்பர் இந்த விடுகதையைச் சொல்லுகிறார்
என்பது ஔவைக்குப் புரிந்து போயிற்று.
" வாடா ...வா...என்னையா ... 'டீ ' என்கிறாய்.
டா...டா...போட்டே உன்னை
மடக்குகிறேன் பார்
என்னை அவமரியாதை செய்த
இந்த மனிதருக்கு பதிலடி
கொடுக்க இதுதான் சரியான தருணம்
என்று நினைத்தபடி,
" எட்டைகால் லட்சணமே
எமனேறும் பரியே
மட்டில் பெரியம்மை வாகனமே
முட்டமேல் கூரையில்லா வீடே
குலராமன் தூதுவனே
ஆரையடா சொன்னாயடா"
என்று பாட்டாலேயே பதிலைச்
சொல்லிவிட்டார்.
உச்சந்தலையில் ஒரே போடாகப்
போட்டது போன்ற பதில்.
தமிழ் எண் எட்டு என்பதைக்
குறிக்கும் எழுத்து ' அ'
' வ 'என்ற எழுத்து 1/4 ( கால்)என்பதைக்
குறிக்கும்.
எட்டு , கால் ஆகியவற்றைக் குறிக்கும்
சொற்களான ' அ 'மற்றும் 'வ 'ஆகிய எழுத்துகளைச்
சேர்த்தால் 'அவ' என்று வரும்.
இப்போது எட்டேகால் லட்சணமே என்றால்
அவலட்சணம் என்ற பொருள் கிடைக்கிறது.
எமனேறும் பரியே என்றால் எமனின்
வாகனமான எருமை என்ற பொருள்.
மட்டில் பெரியம்மை வாகனமே என்றால்
மூதேவியின் வாகனமான கழுதை
என்று பொருள்.
கூரையில்லா வீடு என்றால்
குட்டிச் சுவர் என்று பொருள்படும்.
குலராமன் தூதுவனே என்றால்
ராமாயணத்தை எழுதியவனே என்றும்
பொருள் கொள்ளலாம்.
இராமனுக்காக அயோத்திக்குத் தூது
போன அனுமனாகிய குரங்கே என்றும்
பொருள் கொள்ளலாம்.
ஆரையடா சொன்னாயடா என்றால்
நீர் சொன்ன விடுகதைக்கான விடை
ஆரைக்கீரை என்பது ஒரு பொருள்.
இன்னொரு பொருள் யாரைப்
பார்த்துடா சொன்னாயடா?
என்பது இன்னொரு பொருள்.
அவலட்சணமே!
எமன் ஏறிவரும் எருமையே !
மூதேவி வாகனமான கழுதையே!
கூரையில்லா குட்டிச்சுவரே!
குரங்கே!
நீ சொன்ன விடுகதைக்கான பதில்
" ஆரைக் கீரையடா "என்று
சொல்லிவிட்டார்.
ஆரைக் கீரைக்குள்
"யாரைப் பார்த்து சொன்னாயடா"
என்று இன்னொரு பொருளை வைத்துப்
பாடிவிட்டு ஒன்றும் தெரியாதவர்போல்
அமர்ந்து கொண்டார் ஔவை.
அப்பப்பா...
டீ...டீ..க்கு. டா....டா..டட்டடா
என்று எத்தனை டா போட்டுத்
தாக்கிவிட்டார் ஔவை.
இனி கிண்டலடிப்பாரா கம்பர்?
பின்னர் என்னங்க...
ஔவையா...கொக்கா?
எது எப்படியோ. ..
சொற்போரைச் சுவைப்போராக்கி
கவிப்போர் தொடுத்து
சுவைப்போரை
மலைப்போராக்கி
காப்போர் அவையில்
படைப்போர் ஔவையும்
கம்பனும் நிகழ்த்திய
இலக்கியப்போர்
படிப்போர் நினைவில்
என்றென்றும் நிகழ்த்திடும்
இலக்கிய இன்பப்போர்
என்பதை மறுப்பதற்கில்லை.
போட்டி ஆரோக்கியமானதாக இருந்ததா..?..
இல்லையா. ..?.தீர்ப்பு உங்கள் கையில்.
Very interesting competition
ReplyDeleteஅருமையான கதையோடு கூடிய கவிதை.
ReplyDeleteபோட்டிக்கு போட்டி மிக மிக அருமை.மிகவும் ரசனையோடு வாசிக்கத் தூண்டியது.
ReplyDeleteThe competition between two great poets are fantastic. The way of telling the competition through a story is very interesting. Excellent teacher!
ReplyDeleteVery nice
ReplyDelete