தாய்மொழி
தாய்மொழி
தாயிடமிருந்து கற்கும் முதல் மொழி தாய்மொழி.
அதுமட்டுமல்லாது தாயாக இருந்து பண்பாட்டைக் காக்கும்மொழி தாய்மொழி.
அறிதலுக்கும் புரிதலுக்கும் தெரிதலுக்கும் உணர்தலுக்கும் காரணமாக இருப்பது மொழி.
"மலையிடை பிறந்து மாந்தர் தொழ உயர்ந்து
உலகின் இருளைப் போக்கும் ஆற்றல் பெற்ற அரிய சக்தி பெற்றவை இரண்டு மட்டுமே . ஒன்று செங்கதிர் மற்றது செந்தமிழ்"
என்கிறது தண்டியலங்காரம்.
" தொன்மை முன்மை எண்மை ஒண்மை
இயன்மை வியன்மை தூய்மை தாய்மை
இளமை வளமை இறைமை மறைமை
இனிமை தனிமை அம்மை செம்மை "
என்ற பதினாறு பண்புகளும் ஒருங்கே பெற்ற ஒரே மொழி நம் தாய் மொழியாம் தமிழ் மொழி.
உலகில் ஆயிரக்கணக்கான மொழிகள் பேசப்பட்டு வருகின்றன.
தாயால் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட மொழி தாய்மொழி.
அப்பா, தாத்தா,பாட்டி,சித்தப்பா,சித்தி,மாமா,மாமி என உறவுகளை அடையாளம் காட்டி உவந்த மொழி.
இத்தனைக்கும் ஆதாரம் தாயின் நாவசைப்பு மட்டும்தான்.
தாயின் நாவசைப்பிலிருந்து புரிந்து கொண்டவை தான் மொழியாக பரிணாமம் பெற்றிருக்க முடியும்.
மொழிப்பாடம் கற்றுத் தந்த முதல் பேராசிரியை அம்மா.
அம்மாவால் அறிமுகப்படுத்தப்பட்ட மொழி என்பதால் தாய்மொழிக்கு தனி சிறப்பு உண்டு.
நம் உணர்வோடு உயிரோடு கலந்த மொழி தாய்மொழி.
எம்மொழி புலமை பெற்றிருந்தாலும் தாய்மொழிப் புலமைக்கு ஈடாகாது.
"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்"
என்கிறார் பாரதி.
தாய்மொழியால் மட்டுமே சிந்திக்கும் திறனை மேம்படுத்த முடியும்.
இதனால்தான் காந்தியடிகளும் ஆரம்பக்கல்வி தாய்மொழியிலேயே இருக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.
தனது சுயசரிதையையும் தனது தாய்மொழியான குஜராத்தி மொழியிலேயே எழுதினார்.
இரவீந்திரநாத் தாகூரும் தனது கீதாஞ்சலியைத் தாய்மொழியாம் வங்காளி மொழியிலேயே எழுதினார்.
அவரவர் தாய்மொழியில் எழுதப்படும்போதுதான் தாம் சொல்ல வந்த கருத்தை உணர்வு பூர்வமாக அப்படியே படைக்க முடியும்.
இதைத்தான் பாவேந்தரும்
" தமிழ் எங்கள் இளமைக்குப் பால் _ இன்பத்
தமிழ் நல்ல புலவர்க்கு வேல்"
என்கிறார்.
" வீறுடைய செம்மொழி தமிழ்மொழி
உலகம் வேரூன்றிய நாள்முதல் உயிர்மொழி"
என்பது பெருஞ்சித்திரனாரின் கூற்று.
மொழி தாய்க்குச் சமமான ஒன்று. எப்படி தாயை அடையாளம்காட்ட ஒருவரும் வெட்கப்படுவதில்லையோ அதுபோல தாய்மொழியில் பேச
யாரும் வெட்கப்பட தேவையில்லை.
தமிழின் பெருமை அதன் தொன்மையில் மட்டும் இல்லை.
தொடர்ந்து அது பயன்பாட்டில் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.
" சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே _ அதைத்
தொழுது படித்திடடி பாப்பா "
என்கிறார் பாரதி.
" இனிமைத் தமிழ்மொழி எமது _ எமக்கு
இன்பந் தரும்படி வாய்த்த நல் அமுது"
என்பதை நினைவில் கொள்வோம்.
தாய்மொழியில் பேசுவோம்.
தாய்மொழியைக் காப்போம்.
Standard words and nice information.
ReplyDelete