சிலேடை சிதறல்கள்

                          சிலேடை சிதறல்கள்


ஒருசொல்லோ சொற்றொடரோ 

இரு பொருள்படும்படி சொல்லப்படுவதை

 சிலேடை என்பார்கள்.

 ஓடு என்றால் பின்னங்கால் பிடறியில் 

அடிக்க ஓடுபவர்களும் உண்டு.

எங்கே ஓடு...எங்கே ஓடு 

என்று அண்ணாந்து கூரையைப் 

பார்ப்பவர்களும் உண்டு.


 ஆடு என்றதும் சிலர் ஜங்...ஜங்...

என்று ஆடித் தீர்த்துவிடும் ஆட்கள் உண்டு.


 எங்கே ஆடு ...எங்கே ஆடு  ....

கொழுத்த ஆடா?

ஆட்டுக் கறி சாப்பிட்டு நாளாகுது என்று 

 ஆட்டைத் தேடுபவர்களும் உண்டு.

இப்படி பல  இரட்டை அர்த்த சொற்களை

நாம் கேட்டிருப்போம். 

அவற்றைத்  தகுந்த இடங்களில் கையாளத் 

தெரிந்தவர்கள்தான் சிறந்த பேச்சாளர்களாக

 இருக்கின்றனர்.புலமை மிக்கவர்களாகவும்

அடையாளம் காணப்படுகின்றனர்.

 இரண்டு பொருள்படும்படி

பேசி மக்களிடம் கைத்தட்டல் வாங்கினால்தான் 

சிறந்த பேச்சாளர் என்ற பெயரும் கிடைக்கிறது.
 

சிலைடையில் பேசி அசத்திய தலைவர்களின்

பேச்சிலிருந்து ஒன்றிரண்டை உங்களுக்காக

தந்துள்ளேன். நீங்களும் சுவைத்து மகிழுங்கள்.


        
☺ஒருமுறை   நடிகர் பார்த்திபன்  

கலைஞரிடம்  தான் எழுதிய 

கிறுக்கல்கள் என்ற புத்தகத்தைக் கொடுத்தாராம்.

சில நாட்கள்  கழித்து  ஐயா, புத்தகத்தைப் 

படித்தீர்களா? என்று கேட்டிருக்கிறார் பார்த்திபன்.

 கலைஞருக்குப் பேசத் தெரியாதா என்ன...

உன் கவிதைகளைப் படித்தேன்.

ஒவ்வொன்றும் படி  தேன்  என்றாராம் கலைஞர்.

கேட்ட பார்த்திபனுக்கு  படி  தேன் உண்ட இன்பம்

 கிடைக்காமலா போயிருக்கும்?


☺ ஒருமுறை ஒரு ஹாக்கி போட்டி 

பரிசளிப்பு விழாவுக்குச் சென்றிருக்கிறார் கலைஞர்.

இரு அணிகளும் சமமான கோல் போட்டதால் 

டாஸ் போட்டு வெற்றி தோல்வியைத் 

தீர்மானிக்க முடிவு செய்யப்பட்டதாம்.

தலை கேட்ட அணி தோற்றுவிட்டது.

இப்போது பரிசளிக்கும் நேரம்.

 பரிசு வழங்குவதற்கு முன்பாக கலைஞர்

  உரையாற்றினார்.

 " இது ஒரு நாணயமான வெற்றி.

நாணயத்தால் தீர்மானிக்கப்பட்ட வெற்றி.

தலை கேட்டவர் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறார்.

 ஏனென்றால் தலை கேட்பது வன்முறை 

அல்லவா! என்று கூறி அனைவரையும்  

சிரிப்பால் அசர வைத்தாராம் கலைஞர்.

கூட்டத்தினரிடையே சிரிப்பொலி அடங்க 

வெகு நேரம் ஆயிற்றாம்.

 பிறகு என்னங்க ...தலையைக் கேட்டால் 

ஜெயிக்கவா முடியும்.?

 ஜெயிலுக்குத்தான் போக முடியும்.

 
   ☺  ஒருமுறை புலவர் ஒருவர் மன்னனைக் காண

அரசவைக்குச்  சென்றிருக்கிறார்.

சற்று நேரத்தில் மன்னர்  அரசியோடு   சேர்ந்து  

அவைக்கு வந்திருக்கிறார்.

அரசியைப் பார்த்ததும் புலவருக்கு 

என்ன   பேசுவதென்று தெரியவில்லை.

ஆர்வ கோளாறில் தங்கச்சி வந்தியா?

 என்று கேட்டுவிட்டார்.

 அவ்வளவுதான் .மன்னருக்கு வந்தது பாருங்க கோபம்.

 அரசி என்ன புலவரின் உடப்பிறந்தாளா 

தங்கச்சி என்பதற்கு?

கோபம் கொண்ட மன்னன்   ம்உம்...என்று

 முறைத்துப் பார்த்தார்.

புரிந்துகொண்ட புலவர் நிலைமையைச் 

சமாளிக்க வேண்டுமே...

என்ன செய்வது?

 சட்டென்று வார்த்தையைப் புரட்டிப் 

போட்டு புது அர்த்தம் கற்பித்துவிட்டார்.

 புலவர்களுக்குத் தெரியாத 

வார்த்தை விளையாட்டா?

 "உங்க தலையில் இருப்பது 

தங்க சிவந்தியா? "என்றுதான் கேட்டேன் 

என்று விளக்கமளித்தார்.

மன்னரும் புலவரின் புலமையை

மெச்சி நகைத்துக் கொண்டார்.

 எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டி 

இருக்கிறது பாருங்க...
     
 
☺  கி.வா.ஜகநாதன் சிலேடைப்புலி .

 வார்த்தைக்கு வார்த்தை இரட்டை அர்த்தம் 

வந்து விளையாட்டு காட்டும்.

ஒருமுறை  கி. வா. ஜகநாதன் தன் நண்பரின்

 கடைத்திறப்பு விழாவிற்குச் சென்றிருக்கிறார்.

விழா முடிந்ததும்  வீட்டில் விருந்துக்கு

 ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கி.வா.ஜகநாதன் நண்பரோடு சேர்ந்து 

பந்தியில் அமர்ந்தார்.

விருந்து பரிமாறப்பட்டது.

கடையில் வேலை பார்த்த சிறுவனை 

 பந்தியில் எங்கும் காணவில்லை.

கடையில் வேலை பார்த்த சிறுவன்

சாப்பிட வரவில்லையா?  கரிசனமாகக் கேட்டார் 

ஜகநாதன்.

அவன்  கடையைப் பூட்டிவிட்டு 

 பிந்தி வந்து பந்தியில் கலந்து கொள்வான் 

என்றாராம் நண்பர்.

ஓஹோ... கடை  சிப்பந்திக்கு  கடைசி  பந்தியா? 

என்று கேட்டாராம் கி. வா. ஜகநாதன்.

 சிப்பந்திக்கு எப்போதுமே கடைசி

 பந்தியில்தான் உணவு வழங்கப்படுமா?

என்று  கேட்டு, சிரிக்க  வைத்ததோடு 

சிந்திக்கவும் வைத்தாராம் கி.வா.ஜ.

பிறகு என்னங்க சமபந்தியே ஆனாலும் 

கடை சிப்பந்திக்குக் கடைசி  பந்தி தானே !
    

 ☺ ஒருமுறை மடாதிபதி ஒருவர்  ஒரு கூட்டத்திற்கு

 ஏற்பாடு செய்திருந்தாராம்.

அதற்கு பல ஊர்களிலிருந்தும் 

புலவர்கள் வந்திருந்தனர் .

 ஆனால் கடைமடை என்ற ஊரிலுள்ள

ஒரு புலவர் மட்டும் மிகவும் தாமதமாக வந்திருக்கிறார்.

 புலவரைப் பார்த்ததுமே மடாதிபதிக்குக் கோபம். 

இவ்வளவு தாமதமாக வந்திருக்கிறாரே என்பதை

வார்த்தையில் வெளிப்படுத்தினார்.

வாரும் கடை மடையரே! .....என்றாராம்  மடாதிபதி.

புலவர் என்றால் சும்மாவா....

அவரும் பதிலுக்கு ... வணக்கம் மடத்தலைவரே!

என்று ஒரே போடாக போட்டு வைத்தாராம்.

கடைமடை ஊரைச் சார்ந்தவரை பிந்தி 

வந்தார் என்பதற்காக கடைமடையரே 

  என்றதும்...

 மடத்தின் தலைவரை....நாலுபேருக்கு முன்னால் 

 மடத்தலைவரே... என்றதும் சரிக்குச் 

சமானமாய் போச்சு.

இதுதான் வாயைக் கொடுத்து 

வாங்கி கட்டிக் கொள்வது என்பதோ!

        
    
☺ இப்படிதாங்க  ஒருமுறை நண்பனைப்

 பார்த்து ஒருவன் அறிவில்லாதவன்

 என்று திட்டிவிட்டானாம்.

 யாரைப்பார்த்து அறிவில்லாதவன் என்று

 சொல்லிவிட்டாய்....

கோபத்தில் வானத்திற்கும் பூமிக்கும்

 குதித்திருக்கிறான் நண்பன்.

அட...போப்பா...நீ  ஒண்ணு... 

நான்  உன்னை அறிவில்  ஆதவன் 

என்று அல்லவா சொன்னேன் .

நீ தப்பாக புரிந்து கொண்டாய் என்று

சொல்லி சமாளித்தானாம் நண்பன்.

ஆதவன் என்றால் சூரியன் என்பது 

நண்பனுக்குத் தெரியாமலா இருக்கும்.?

ஒரு கிலோ ஐஸ்கட்டியைத் தூக்கி

 தலையில் வைத்தது போல அப்படியே 

உருகிப்போய் அசடு வழிய சிரித்தானாம் நண்பன்.

எப்படியெல்லாம் வேலையைக் 

காட்டுறாங்க பாருங்க..

   

 ☺  ஒருமுறை அறிஞர்  அண்ணா கூட்டம் 

முடிந்து ஒரு காரில் வீடு திரும்பி இருக்கிறார்.

 கார் ஓட்டுநரிடம் "சீக்கிரம் போப்பா "என்றாராம்.

இதோ ஒரு நொடியில் விடுகிறேன் 

என்றாராம் ஓட்டுநர்.

சற்று தொலைவு செல்வதற்குள் வண்டி 

ஒரு பள்ளத்தில் மாட்டிக் கொண்டது.

கீழே இறங்கிய அண்ணா ஓட்டுநர்

 அப்பவே சொன்னார் ஒரு நொடியில்

 விடுகிறேன் என்று...

அதுதான் இப்போது நொடியில் 

விட்டுவிட்டார் என்றாராம் வேடிக்கையாக.

நொடியில் என்பதற்கு பள்ளம் என்றும் 

பொருள் உண்டல்லவா...!

வார்த்தைகளை எந்தெந்த நொடியில்

 எல்லாம் போட்டு நொடிக்க வேண்டும்

 என்று அண்ணாவுக்குத் தெரியாதா என்ன...!


       
☺ தமிழில்தான் இத்தனை வார்த்தை

 விளையாட்டுகளா ?
 ஆங்கிலத்தில் சிலேடை இல்லையா?

 என்று கேட்கத் தோன்றும்.

ஏன் ?இல்லை .... இதோ இருக்கிறது

என்று பேசியிருக்கிறார் அண்ணா.

அறிஞர் அண்ணா ஆங்கிலத்திலும் எப்படி 

 விளையாடியிருக்கிறார் பாருங்கள்.

 ஒருமுறை நிருபர் ஒருவர் அண்ணாவிடம் 

பேட்டி எடுக்க வந்திருக்கிறார்.

அப்போது ஆங்கிலத்தில் அண்ணாவிடம்,

 டூ யு நோ யுனொ? என்று கேட்டாராம் நிருபர்.

 ஐ நோ யுனொ.... யு நோ யுநொ

  ஐ நோ யு நோ யுனொ

 பட் ஐ நோ யுனொ பெட்டெர் தேன்

 யு நோ யுனொ என்றாராம் அண்ணா.

நிருபருக்கு ஏன்தான் இந்தக் கேள்வியைக்

கேட்டோம் என்று தலை சுற்றியிருக்கும் போலிருக்கிறது.

எக்ஸ்யூஸ் மீ  ...கொஞ்சம் விளக்கமாக 

கூறமுடியுமா என்றாராம்.

இன்னும் விளக்கமா.....
           
                 (படித்ததில் பிடித்தவை)
     
    

       
          
          
              

Comments

Popular Posts