விதைகள் தூங்குவதில்லை
விதைகள் தூங்குவதில்லை
" விதைத்தவன் தூங்கினாலும் விதைகள் தூங்குவதில்லை" என்று சொல்வார்கள்.
ஆனால் தூக்கத்தை விரும்பாதோர் யாருமே கிடையாது.
தூங்கியே பெயர் வாங்கிய கும்ம கர்ணன் போன்றோர் பிறந்த பூமி இது.
என்னைவிட்டால் மணிக்கணக்காக தூங்குவேன்.
என்னிடம்போய் விதைகள் தூங்குவதில்லை என்கிறீர்கள் ....கேட்க தோன்றும்.
அது தாங்க உண்மை.
நான் சொல்லலங்க...
இந்த பூமி சொல்லுது....கேளுங்க.
நாள் கணக்காக வானம் பார்த்த பூமி.
வானம் பார்த்து வாய் பிளந்து கிடந்தது. வானத்திற்கு பூமியின் மேல் ஒரு பரிதாபம் ஏற்பட்டது.
இது நாள் வரை தேக்கி வைத்திருந்த நீரை மழையாக பொழிய ஆரம்பித்தது.
பூமி எங்கும் குளிர்ச்சி.
நான்கைந்து நாள்தான் இந்த நிலை.
பூமி எங்கும் பச்சைக் கம்பளம் விரித்தது போன்ற காட்சி.
" அப்பப்பா...இத்தனை அழகை எங்கே மறைத்து வைத்திருந்தாய்?"
பூமியைப் பார்த்து கேட்க வேண்டும் என்று நினைத்தது வானம்.
நேற்றுவரை பெப்பரப்பே என்று வாய் பிளந்து கிடந்த பூமிக்கு உயிர் எங்கிருந்து வந்தது?
நான் வழங்கிய நீருக்கு இத்தனை சக்தியா?
வியந்து பார்த்தது வானம் .
ஆனால் ஒன்று மட்டும் விளங்கவே இல்லை.
மழை நீரால் தான் தளிர்கள் வந்தன என்றால் ...மழைநீர் மலையிலும் விழுந்தது.
கடலிலிலும் விழுந்தது.
அங்கெல்லாம் பச்சைக் கம்பளத்தைக் காணோமே.
அப்படியானால்...அப்படியானால்...மூளையைப் போட்டு கசக்கிப் பிழிந்த வானத்திற்கு ஓர் உண்மை புரிய ஆரம்பித்தது.
எப்போதோ பூமியின்மீது விழுந்த விதைகள் தக்க தருணம் பார்த்து பூமிக்குள் உறங்கி கிடந்திருக்கின்றன.
நீரைக் கண்டதும் புத்துயிர் பெற்று தலை தூக்கி நிற்கின்றன என்ற உண்மை புரிந்தது.
ஆம்... விதைகள் ஒருபோதும் தூங்குவதில்லை.
தக்க தருணம் வரும் வரை காத்திருக்கும்.
அது போன்றதுதான் சொற்களும்.
சொற்கள் உயிருள்ளவை. சொற்கள் ஒரு போதும் மரித்துப் போவதில்லை.
நாம் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் உரிய காலத்தில் அதனதன் பலனை தந்தே தீரும்.
நல்ல சொற்கள் நல்ல பலனைத்தரும்.
ஆலவிதை சிறிதாக இருக்கிறது. அதை விதைத்தவர் யார்?
யாருக்கும் தெரியாமல் என்றோ ஒருநாள் ஏதோ ஒரு பறவை போட்டுச் சென்ற ஆலவிதை பெரிய மரமாக வளர்ந்து நிழல் தரவில்லையா?
அணில் மரத்தில் ஏறி மாம்பழங்களைக் கடித்துத் தின்னும்.
பின்னர் அந்த கொட்டைகளை உருட்டி விளையாடும்.
அத்தோடு நின்றுவிடாது.
கொட்டைகளை எதாவது ஒரு இடத்தில் புதைத்து வைத்துவிடும்.
பின்னர் அந்த கொட்டைகளை எங்கு புதைத்து வைத்தோம் என்ற நினைவு கூட அணிலுக்கு இருப்பதில்லை.
ஆனால் அந்த கொட்டைகள் ஒருநாள் பெரிய மா மரமாக வளர்ந்து அணிலுக்கே மறுபடியும் உணவளிக்கிறது.
இவை யாவற்றிற்கும் காரணம் எங்கோ... என்றோ பூமிக்குள் புதைக்கப்பட்ட விதை.
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.
இது நற்செயலாகவும் இருக்கலாம்.
தீய செயல்களாகவும் இருக்கலாம்.
அதனதன் பலன் அதனதன் காலத்தில் கிடைக்கத்தான் செய்யும்.
" இளமையில் கல்வி பசுமரத்தாணி "என்பார்கள்.
இளம் வயதில் சொல்லப்படும் சொற்கள் அப்படியே நினைவில் தங்கிவிடும்.
"ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்"
சிறுவர்களாக இருக்கும்போது படித்தது.
" அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
ஆலயம் தொழுவது சாலவும் நன்று "என்றோ பள்ளியில் சொல்லித் தந்தது.
" நெஞ்சார பொய் தன்னைச் சொல்ல வேண்டாம் "இரண்டாம் வகுப்பில் படித்தது.
" உண்ணீர் உண்ணீர் என்று ஊட்டாதார் தம் மனையில் உண்ணாமை கோடியுறும்" ஔவை சொன்னது.
" ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு"
கொன்றை வேந்தன் சொல்லித் தந்தது.
"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு"
முதன்முதலாய் படித்த திருக்குறள்.
" கைப்பொருள் தன்னில் மெய்ப்பொருள் கல்வி "
இப்படி பள்ளிகளில் நம்மிடையே விதைக்கப்பட்ட விதைகள் இன்றுவரை நினைவுகூர வைக்கின்றன.
அதனால்தான் "இளமையில் கல் "என்றார் ஔவையார்.
"சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்"
" செய்வன திருந்தச் செய்"
இப்படி எத்தனையோ நல்ல கருத்துகள் நம்மிடையே விதைக்கப்பட்டன.
அப்படியே நல்ல விதைகளை நாளும் விதைத்திருப்போம்.
நல்ல நிலத்தில் விழுந்த விதைகள் நல்ல பலன் தராமல் போவதில்லை.
அதனால் முடிந்தவரை நல்ல கருத்துக்களை விதைத்துக் கொண்டே இருப்போம்.
என்றாவது அது அவர்கள் மனதில் பதிந்து நல்ல பலனைத் தரும்.
அவர்களை விழித்தெழ வைக்கும்.
பாதைக்கு நல் வெளிச்சமாக இருந்து வழி நடத்தும்.
நல்லவற்றை விதைத்திருப்போம்.
நன்மை விளையும் என்று காத்திருப்போம்.
What a wonderful advice it is !
ReplyDelete