கன்னா பின்னா
கன்னா பின்னா
கன்னாபின்னாவா.....?
வேண்டாமப்பா உங்க கன்னாபின்னா.
ஏதாவது கன்னாபின்னா என்று பேசிப்புடுவேன்..
என்ற உங்கள் குரல்.கேட்கிறது....
கன்னாபின்னா என்று என்னைத் திட்டினாலும்
பரவாயில்லை.
கன்னா பின்னாவைப்பற்றி எழுதாமல்
போவதில்லை என்று முடிவு பண்ணி விட்டேன்.
இந்தக் கன்னாபின்னாவைப்பற்றி
நீங்கள் எங்கெல்லாம் பேசினீர்கள் என்று
சற்று நினைவுபடுத்திப் பாருங்கள்.
வீடு ஏன் கன்னாபின்னா என்று கிடக்குது ?
எத்தனை முறை திட்டியிருப்பீர்கள்.
" என் முன் நிற்காத ஓடிடு.
கன்னாபின்னா என்று அடிச்சுபுடுவேன் "
என்று அப்பா கத்தியிருப்பார்கள்.
தேர்வு எழுதும்போது ' கன்னா பின்னா'
என்று எதையாவது எழுதி வைத்துவிட்டு
தத்தக்குபித்தக்கு என்று விழித்திருப்போம்.
கன்னாபின்னாவென்று எதையாவது
நோட்டு புத்தகத்தில் கிறுக்கிக்கொண்டேயிருப்போம்.
நினைவிருக்கிறதா?
நினைவில்லையா? சரி. போகட்டும்.
" கன்னா பின்னா என்று ஏதாவது பேசுறாம்பா...
ஒரு அறிவும் கிடையாது " அப்பாவிடம் போய்
அண்ணனைப்பற்றி புகார் பத்திரம் வாசித்தது
நினைவிருக்கிறதா?
அதுவும் நினைவில்லையா?
" கன்னாபின்னா என்று எதையாவது
உடுத்திட்டு வருவாள். கண்ட்றாவியாக
இருக்கும்"என்று தோழியைப்
பேசியதே இல்லையா?
நாங்கள் எல்லாம் அப்படி முதுகுக்குப்
பின்னால்பேச மாட்டோம். நல்ல பிள்ளைகள்
என்கிறீர்களா?
வாழ்த்துகள்.
" கன்னாபின்னான்னு ஓடாதே...
பார்த்துப் போ" என்று உங்கள் அம்மா
ஒருமுறைகூட சொன்னதில்லையா?
அட போங்கங்க....நான் எத்தனைமுறை
எத்தனை இடங்களில் கேட்டிருக்கிறேன்.
நீங்கள் இதுவரை கேட்கவில்லை என்றாலும்
பரவாயில்லை. உங்களைக் கேட்க
வைக்காமல்விடப் போவதில்லை என்ற
முடிவோடு வந்திருக்கிறேன்.
கன்னாபின்னாவை கன்னாபின்னா என்று
பயன்படுத்தியிருந்தாலும் உண்மையிலேயே
அதற்குப் பொருள் உண்டா என்றால்....
இதற்கு என்ன பெரிய பொருள்
இருக்கப் போகிறது? என்றுதான் நினைத்திருக்கிறேன்.
கன்னாபின்னா என்றால் கன்னாபின்னாதான்
என்று சொல்லிச் சிரித்திருக்கிறேன்.
நீங்களும் அப்படி நினைத்திருந்தால்
உங்கள் நினைப்பை இன்றோடு
மாற்றிக் கொள்ளுங்கள்.
எல்லா சொல்லும் பொருளுடையதுதான்.
என்று சொல்லும்போது இந்தக் கன்னாபின்னாவிற்கு
எப்படிப் பொருளில்தான் இருக்கும்?
நாம் பேசும் இடத்திற்கு ஏற்ப
பொருள் வேறுபட்டுக் கொண்டே இருக்கும்.
அதனால்தான் ஒரே சொல்லை வெவ்வேறு
பொருளில் வெவ்வேறு இடங்களில்
நம்மால் பயன்படுத்த முடிகிறது.
இன்று நான் சொல்ல வந்த கன்னாபின்னாவே
வேற...வேற...வேறெங்க.
இது இலக்கிய நயமிக்க ஒரு கன்னாபின்னா.
சோழ நாட்டில் மிகவும் ஏழ்மையான
நிலையில் ஒரு மனிதன் இருந்தான்.
நாட்டில் மழைதண்ணி இல்லாததால்
கடும் பஞ்சம் நிலவியது.
சாப்பாட்டுக்கே வழியில்லை.
என்ன செய்வது?
அந்த மனிதன் முட்டைக்கட்டிகிட்டு
ஒருமூலையில் முடங்கி கிடந்தான்.
எத்தனை நாட்களுக்குதான் பட்டினி கிடப்பது.?
தனியாக இருந்தால் ஓரளவு சமாளிக்கலாம்.
திருமணம் ஆகி மனைவியும் இருக்கிறாள்.
ராஜாவைப் புகழ்ந்து பாடி ஏதாவது
சன்மானம் வாங்கி வாருங்கள். "
மனைவி ஒரே நச்செரிப்பு.
"எனக்கு கவிதை எழுத தெரியாதே...!
பிறகு எப்படி பாடுவது? எதைப் பாடுவது?
புலம்பினான் கணவன்.
"நாலுவரி எழுத தெரியாதா " கேட்டாள்
மனைவி.
" கவிதையைப் பற்றிய அரிச்சுவடே தெரியாதே
.அரசவையில் பாட வேண்டும் என்றால் சும்மாவா?
அரசவைப் புலவர்கள் எல்லாம் இருப்பார்கள்.
என்னால் முடியாது. எவ்வளவோ சொல்லிப்
பார்த்தான்.
"என்னசெய்வியளோ ஏது செய்வியளோ ...
நீங்க போயே ஆக வேண்டும். அல்லது நான்
பட்டினியில் சாவ வேண்டியதுதான்"
புலம்பி தள்ளினாள் மனைவி.
மனைவியின் தொணதொணப்புத் தாங்காமல்
வெளியில் புறப்பட்டான் அந்த அப்பாவி மனிதன்.
" கவிதை எழுது...கவிதை எழுது ...என்கிறாள்.
எப்படி எழுதுவது? யாரிடம் கேட்பது?
என்று புலம்பியபடியே வீதியில் நடந்தான்.
நீச்சல் தெரியாதவனை குளத்தில்
பிடித்து தள்ளிவிட்டது போன்ற நிலைமை.
இனி நீந்தித்தான் ஆக வேண்டும்.
கவிதை எழுதித்தான் ஆக வேண்டிய கட்டாயம்.
தெருவில் சிறுபிள்ளைகள் மணல் வீடு கட்டி
விளையாடிக் கொண்டிருந்தனர் .
சிறிது நேரம் விளையாட்டாக அவர்களைப்
பார்த்துக் கொண்டே நின்றான்.
பெண் பிள்ளை ஒருத்தி சிறிய இலையில்
மாப்பிள்ளைக்கு மண் சோறு படைத்து '
இந்தா சாப்பிடு' என்றாள்.
முதல் வரி கிடைத்தாயிற்று. ஆமாம்
மண்ணுண்ணி மாப்பிள்ளையே...
என்றுமுதல் வரியை எழுதிக் கொண்டான்.
அப்படியே காலார நடந்து செல்ல....
அருகில் உள்ள மரத்தில் இருந்து காகம் கரைவதும் .....
குயில்கள் கூவுவதும் ....காதில் வந்து விழுந்தது.
அடுத்த வரியைக் " காவுறியே கூவுறியே"
என்று எழுதிக்கொண்டான்.
அங்கிருந்து சற்று தொலைவில்
ஒரு கோவில் இருந்தது.
கோவிலுக்குள் பெருச்சாளி ஒன்று
ஓடி மறைவதைப் பார்த்தான்.
"உங்கப்பன் கோயில் பெருச்சாளி "என்று
மூன்றாவது வரியையும் சேர்த்து
எழுதிக்கொண்டான்.
இதற்கு மேல் எப்படி எழுதுவது
என்று புரியவில்லை.
நேரே தன் நண்பனிடம்
போய் காட்டினான்.
வாசித்துப் பார்த்த நண்பன் "
என்னடா கன்னா பின்னா என்று
எதையோ எழுதி வைத்திருக்கிறாய்.
மன்னனைப் புகழ்ந்து ஒரு வரி கூட
இல்லையே...." என்று கிண்டலடித்தான்.
சிரித்தான்.
"அட ...அடுத்த வரியும் கிடைத்தாயிற்று.
விறுவிறுவென்று
" கன்னா பின்னா மன்னா தென்னா
சோழங்க பெருமானே!" என்று எழுதி முடித்தான்.
எழுதியதை அரசவைக்குக்
கொண்டு சென்றான்.
அங்கு கம்பர் முதலான பல
புலவர்கள்இருந்தனர். அவர்களைப்
பார்த்ததும் கால் கையெல்லாம் நடுங்க
ஆரம்பித்தது.
அரசன் புதிதாக ஏதோ ஒரு. புலவர்
வந்திருக்கிறாரே....அவர் என்ன பாடப் போகிறார்
என்று கேட்கிபதற்காக புலவரை வரவேற்று
பாடலை வாசிக்கும் படி கூறியிருக்கிறார்.
அரசர் கூறியதும் ஏதோ ஒரு தைரியத்தில்
கடகடவென்று வாசித்து முடித்தான் அந்த மனிதன்.
"மண்ணுண்ணி மாப்பிள்ளையே
காவிறையே கூவிறையே
உங்கப்பன் கோயில் பெருச்சாளி
கன்னா பின்னா மன்னா தென்னா
சோழர்கள் பெருமாளே"
என்பது பாடல்.
படித்ததுதான் தாமதம் அரசவையில்
இருந்த அனைவரும் கொல்லென்று சிரித்து விட்டனர்.
மன்னனைப்போய் இப்படி
கன்னா பின்னா என்று எழுதியிருக்கிறானே என்று
சிலர் முணுமுணுத்தனர்.
பாடியவரனின் முகம் அப்படியே
கூம்பிப் போயிற்று.
பரிதாபமாக அவையோரைப் பார்த்தான்.
கம்பர் நிலைமையைப் புரிந்து கொண்டார்.
தன் வறுமை காரணமாகவே
புலவர் இங்கு வந்திருக்கிறார்.
அவருக்கு ஏதாவது சன்மானம்
கிடைக்கச் செய்யவேண்டும் என்று நினைத்தார்.
" ஏன் சிரிக்கிறீர்கள். ?
அருமையான பாடல்தானே எழுதி வந்திருக்கிறார். "
என்றார் கம்பர்.
" அருமையான பாடலா. ?"
எப்படி .....?அப்படியானால் நீங்களே
பொருள் சொல்லுங்கள்" என்றான் மன்னன்.
சொல்லுகிறேன் . கேளுங்கள்.
"மண்ணுண்ணி மாப்பிள்ளையே என்றால்
மண்ணை உண்ட கண்ணனாகியத்
திருமாலைப்போல உலகைக் காப்பவனே!
என்று உங்களைப் புகழ்ந்து
எழுதியிருக்கிறார் என்றார் கம்பர்.
காவுறியே கூவுறியே என்றால்....
கேட்டார் மன்னர்.
கா இறையே என்பது
சோலைக்குப் தலைவனே எனப்பதாகும்
கூ இறையே என்றால் நிலவுக்குத்
தலைவனே எனப்படும் .
சோலைக்கும் வானுக்கும் தலைவனே
என்று தங்களைக் கூறியுள்ளார்எ
அதெல்லாம் சரி.
உங்கப்பன் கோயில் பெருச்சாளி என்றால்....
இதற்கு என்ன பொருள் சொல்லும் .
கேட்டார் மன்னர்.
உங்கள் தந்தை இந்த அரண்மனையில்
இருந்து ஆண்ட சிங்கம் போன்றவர்.
ம்...அப்படியா பொருள்?
ஆமாம் மன்னா அப்படித்தான்
எழுதி வந்திருக்கிறார்.
கன்னா பின்னா என்று எழுதியிருக்கிறானே?
இந்தக் கன்னாபின்னாவிற்கு
என்ன சொல்ல போகிறார்
என்றுஅனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
கன்னா என்றால் கொடுப்பதில்
கர்ணனைப் போன்றவனே!
பின்னா என்றால் கர்ணனுக்குப் பின்னால்
பிறந்த நீதி வழுவாத தர்மன் போன்றவனே!
தென்னா மன்னா என்றால்
தென்னாட்டை ஆளும் மன்னனே!
என்று பொருள் கூறி அனைவரையும்
அசர வைத்தார் கம்பர்.
அனைவரும் அசந்து போயினர்.
கன்னா பின்னாவுக்குள் இத்தனை
அருமையான பொருள் பொதிந்துள்ளதா?
வியந்துபோன மன்னன் பாராட்டி பரிசளித்து
அனுப்பி வைத்தான்.
அந்த மனிதன் மகிழ்ச்சியோடு
வீடு திரும்பினான்.
கன்னா பின்னா இப்போது
கவிதையாகிப் போனது.
இது தாங்க தமிழ்.
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு"
பாரதிதாசன் இதனால்தான் இப்படி பாடியிருப்பாரோ?
Comments
Post a Comment