நேரமில்லைக்கு நேரமில்லை

                      நேரமில்லைக்கு நேரமில்லை


நேரமில்லைக்கு நேரமில்லையா?
   இது என்னப்பா வேடிக்கை.
  உண்மை தாங்க.
   நேரமில்லை என்று சொல்வதற்கே நேரமில்லை.
   சிலர்   சதா சக்கரத்தைக் கால்களில் கட்டிக் கொண்டு ஓடிக் கொண்டே இருப்பார்கள்.
   அவர்களுக்கு நின்று பேசக் கூட நேரமிருக்காது.
   இது ஒரு ரகம்.
   இன்னொரு ரகத்தினர் உண்டு.
   எதற்கு எடுத்தாலும் எனக்கு நேரமில்லை என்று கூறி வேலையைத் தட்டிக் கழிப்பதிலேயே குறியாக இருப்பர்.
     பள்ளிப் பருவத்தில்  நேரமில்லை..நேரமில்லை...என்ற வார்த்தையைச் சொல்லி எப்படி எப்படி எல்லாம் விளையாட்டுக் காட்டியிருப்போம்.
  நேரமில்லை....   இல்லை...இல்லை..இந்த வார்த்தையைப் பயன்படுத்தி யாரையெல்லாம் ஏமாற்றியிருப்போம்.
    வீட்டுப் பாடம் எழுதி வரவில்லையா....உடனே ஒரு கதை வரும் பாருங்க..
    நேற்று எங்க வீட்டுக்கு விருந்துக்காரங்க வந்துருந்தாங்க...அதுதான் எழுத நேரமே இல்லை.
   " ஏன் படித்து வரவில்லை?"
    நாங்க வெளியில போயிருந்தோமா ...அதுதான் படிக்க   நேரமே இல்லை.
" பள்ளிக்குக் கொண்டு போன சாப்பாட்டை ஏன் சாப்பிடவில்லை."
   " நேரமே இல்லை "
    "ஏன் போன் பண்ணல..."
    விடுதியில் தங்கி படிக்கும் பையன் கூறும் பதில்   'நேரமில்லை.'
   " ஏன் முடி வெட்டி வரவில்லை.?"
    " நேரமில்லை?" அம்மாவிடம் பிள்ளைகள் கூறும் பதில் .
     "   ஏன் துணியை மடித்து வைக்கவில்லை?"
       " நேரமில்லை " அக்காவின் பதில்.
      நேரமில்லை..நேரமில்லை...நேரமில்லை.
      அப்படியானால் இந்த நேரம் எங்குதான் போய் ஒளிந்து கொண்டது.
    "   நாளை என்பது சோம்பேறிகளின் நாள்" என்பார் பாபு ராவ் என்ற அறிஞர்.
    "நேரமில்லை என்று ஒருவர் சொன்னால் அதற்கான காரணம் பொய்யாகவே இருக்கும்"   மேலை நாட்டு ஆய்வு ஒன்று இப்படித்தான்  கூறுகிறது.
    "கொடுக்கல் வாங்கல் இல்லா ஒரே பொருள் நேரம்."
    இந்தா கொஞ்சம் வச்சுக்கோ என்று யாரிடமும் கொடுக்க முடியாது.
கொஞ்சம் நேரத்தைக் கடனாகத் தர முடியுமா என்று கேட்கவும் முடியாது.
    "உங்களுக்காக யாரும் காத்திருப்பது நல்லதல்ல...
    யாருடைய நேரத்தையும் நீங்கள் வீணடிப்பதும் நல்லதல்ல."
    ஓடும் நதியில் ஒருமுறை நாம் தொட்ட நீரை மறுமுறை நாம் தொடமுடியாது.
    நிற்காமல் ஓடிக்கொண்டிருப்பதால் நம்மால் மறுபடி அதே நீரை தொட முடிவதில்லை. 
    அது போன்றதுதான் காலமும்.
    "காலம் பொன் போன்றது
     கடமை கண் போன்றது"
    "இழந்த இடத்தைப் பிடித்துவிடலாம். இழந்த காலத்தைப் பிடிக்க முடியாது."
    ஆண்டாண்டு காலமாக அழுது புலம்பினாலும் மாண்டார் திரும்பி வருவதில்லை.
    அதே போன்றுதான் கடந்து போன காலமும் திரும்பி வராது.
    ஒருமுறை ...மரித்துப்போன  ஒரு மனிதன் இறைவனிடம்
    "ப்ளீஸ்... எனக்கு  இன்னும் ஒரு நாள் மட்டும் கொடுங்க....
  என் கையால நாலு பேருக்கு நல்லது செய்துட்டு வந்துடுறேன்"
   என்று மன்றாடினானாம்.
    "அதை இருக்கும்போதே செய்திருக்க வேண்டியதுதானே" என்றாராம் கடவுள்.
  "  வேலை...வேலை....என்று ஓடியதால் வேறு நல்ல காரியங்களைப் பற்றி சிந்திப்பதற்கே  எனக்கு நேரமில்லை" என்றானாம் அந்த மனிதன்.
" .உனக்காக கொடுக்கப்பட்ட நேரம் முடிந்துவிட்டது.நேரமில்லை...நேரமில்லை என்று கூறி எத்தனையோ நல்ல வாய்ப்புகளைத் தவறவிட்டாய்.இனி உனக்குக் கொடுப்பதற்கு என்னிடம் நேரமில்லை "என்றாராம் கடவுள்.
    நமது ஆயுள் என்பது ஒரு வினாடிகூட அதிகம் எடுத்துக்கொள்ள முடியாத நிர்ணயிக்கப்பட்ட கால அளவைக் கொண்டது.
    நேரம் என்பதுதான் வாழ்க்கை.
    நேரம் கடந்துவிடும்போது நம் வாழ்க்கையும் நம்மைவிட்டுக் கடந்துவிடும்.
    அதனால் நேர விசயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
    நேரத்தை விலை கொடுத்து வாங்கவும் முடியாது. 
    என்னிடம் கொஞ்சம் நேரம் இருக்கிறது.வாங்குறீங்களா என்று யாரிடமும் விற்கவும் முடியாது.
    "கடலையும் காலமும்  யாருக்காகவும் எதற்காகவும் ஒருபோதும் நிற்பதே இல்லை."
    ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்தொன்பதாம் ஆண்டு.
    ஜூலை மாதம் இருபத்தொன்றாம்நாள்.
    உலகமே ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தது.
    அதிகாலை இரண்டுமணி ஐம்பத்தாறு நிமிடத்தில் அந்த விந்தை நிகழ்ந்தே விட்டது.
    நிலவில் நீல் ஆம்ஸ்டிராங் காலடி வைத்துவிட்டார் என்ற செய்தி வந்தது.
     எப்படி இது சாத்தியமாயிற்று. ஒட்டுமொத்த உலகமும் அண்ணாந்து பார்த்தது.
    நேற்றுவரை நிலவில் பாட்டி வடை சுட்டுக்கொண்டிருந்த கதையைக் கேட்டு வளர்ந்த நமக்கு அது நம்ப முடியாத ஒன்றாகவே இருந்தது.
    ஆ...வென்று வானத்தைப் பார்த்தபடி ஆளாளுக்கு ஒரு கதை விட்டுக் கொண்டிருந்தனர்.
    கதை நிஜமாகியது.
    கற்பனை நனவாகியது.
     ஆனால் முதன்முதலில் நிலவில் காலடி எடுத்து வைக்க ஆல்டிரின் என்பவருக்குத்தான் கட்டளை பிறப்பிக்கப்பட்டதாம்.
     அவர் விண் ஓடத்திலிருந்து இறங்க சற்று காலம் தாழ்த்தினார். அவருக்குக் கொடுக்கப்பட்ட நேரம் கடந்துவிட்டது.
     இனி அவருக்காக நேரம் காத்திருக்கப் போவதில்லை.
     அதற்குள் பூமியிலிருந்து மறு கட்டளை.."காலம் தாழ்த்தாதே.
     குயிக்...குயிக்..ஆம்ஸ்டிராங் இறங்குங்கள் "என்று ஆம்ஸ்டிராங்குக்கான நேரம் தொடங்கியது.
     சற்றும் தாமதியாத ஆம்ஸ்டிராங் நிலவில் காலடி வைத்தார்.
   நிலவில் காலடி வைத்த முதல் மனிதன் என்று   வரலாற்றில் இடம்பிடித்துக் கொண்டார்.
   நேரத்தை சரியாகப் பயன்படுத்திக் கொண்டார்.
   தாமதம் பல நேரங்களில் நம்மை பின்னோக்கி தள்ளிவிடும்.
   தாமதமாக வழங்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்பார்கள்.
   தாமதப்படுத்தும் ஒவ்வொரு நிமிடத்திலும் நாம் இரண்டு நிமிடங்கள் பின்னோக்கி தள்ளப்படுகிறோம்.
   நேரமில்லை என்ற வார்த்தை விருப்பமின்மையைத்தான் வெளிப்படுத்தும்.
   முயல் ஆமையிடம் தோற்றமைக்கு முயலாமைதான் காரணம் என்கிறோம்.
   ஆனால் உண்மையில் முயல் ஆமையிடம் தோற்றமைக்குக் காரணம் முயலாமை அல்ல.
முயலுக்கு  நேரத்தைச் சரியாகக் கையாளத் தெரியவில்லை.
    அதுதான் உண்மை.
நேரமில்லை என்பது மனிதர்கள் மட்டுமே பயன்படுத்துகிற வார்த்தை.
    நேரத்தின் அருமை இரண்டு நிமிடத்தில் பேருந்தைத் தவற விட்டுவிட்டு  ஞெ...என்று விழித்துக்கொண்டிருக்கும் போது புரியும்.
    விபத்தில் படுகாயம் அடைந்த நண்பரை மருத்துவமனையில் கொண்டு சேர்க்கிறீர்கள்.
  மருத்துவர் "சரியான நேரத்தில் கொண்டு வந்தீர்கள்.
  இன்னும் ஐந்து நிமிடங்கள் தாமதித்திருந்தால் என்னால் ஒன்றுமே செய்திருக்க முடியாது"என்கிறார்.
  இங்கே  இந்த ஐந்து நிமிட நேரம்தான் ஒரு உயிரைக் காப்பாற்ற உதவியது.
  ஓட்ட பந்தய வீரனுக்குத் தெரியும் ஒவ்வொரு வினாடியும் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது.
  வினாடியில்தான் ஒரு வீரனின்  வெற்றி தோல்வி தீர்மானிக்கப்படுகிறது.
  நேரமி ல்லை என்று பயிற்சியில் ஈடுபடாமல் இருந்தால்  ஒரு வெற்றியாளன் உருவாகவே  முடியாது.
   நேரமில்லை என்று கையைக் கட்டிக்கொண்டு நின்றால் கடுகளவு தூரம்கூட  கால் அகற்றி வைக்க முடியாது.
  இயற்கை யாவும் நேரமில்லை என்று நொண்டி சாக்கு சொல்லி தங்கள் செயல்களைத் தள்ளி வைப்பதில்லை.
  சூரியன் எனக்கு இன்று வருவதற்கு நேரமில்லை என்று ஒரு இரண்டுநாள் தள்ளி போட்டுவிட்டால்....
   செடி கொடிகள் எல்லாம்  காய்ப்பதற்கு நேரமில்லை என்று ஒருவருடத்திற்கு  காய்க்காமல் இருந்துவிட்டால்...
    ஏன் ...காற்று நேரமில்லை என்று நாலு நாள் ஓய்வு எடுத்துக்கொண்டால்....
    அம்மாடியோவ்....வேண்டாமப்பா சாமி என்று கத்த வேண்டும்போல் தோன்றுகிறதல்லவா!
    அச்சப்படத் தேவையில்லை.
    இயற்கை யாவும் அதனதன் காலத்தில் அதனதன் வேலையை செய்து கொண்டுதான் இருக்கும்.
    இயற்கைக்கு நேரமில்லை என்ற சொல்லை சொல்வதற்கே நேரமில்லை.
    நாம் மட்டும் இந்த நேரமில்லையைக் கட்டிக் கொண்டு ஏன்அழ வேண்டும்.
    நேரமில்லையைத் தூக்கிச் சுமப்பது கல்லை கட்டிக்கொண்டு கடலில் குதிப்பதற்குச் சமம்.
    நேரமில்லை ...நேரமில்லை என்று கூறி நாம் இழந்தது போதும்.
    இனி இழப்பதற்கு ஒன்றும் இல்லை.
    இழப்பு அந்த சொல்லுக்கானதாகவே  இருக்கட்டும்.
    நேரமில்லைக்கு இனி உங்களிடம் நேரமில்லை.
    நேரமில்லை என்ற சொல்லோடு கொள்ளுங்கள் பிணக்கு.
    நேரத்தோடு தொடங்கட்டும் உங்கள் வெற்றி கணக்கு.
   
   
 
   
   
    

Comments

Popular Posts