தீபத் திருநாள்

              தீபத் திருநாள்
தீபாவளி என்றாலே 
அகல் விளக்கு நம் கண்முன் வந்து
நிற்கும்.

தீபத் திருநாள் ... தீபத் திருநாள்
என்று ஊர் எங்கும்
ஒரே விளக்கு மயம்.
கண்கள் கூசுகின்றன.
எவ்வளவு விளக்குகள்...
எங்கு பார்த்தாலும் ஒளி வெள்ளம்.
மகிழ்ச்சியின் வெளிப்பாடா?

தீபத் திருநாளில்  இவ்வளவு தீபங்கள் ஏற்றுவதற்கு
காரணம் ஏதேனும் உண்டா?
நம் முன்னோர்கள் எந்தக் காரணமும்
இல்லாமல் விழாக்களைக் கொண்டாடுவதில்லை.
இதற்கும் ஒரு காரணம் இல்லாமலா
போய்விடும்.

தீபம் ஏற்றிக் கொண்டாடப்படுவதின் வரலாற்றைச்
சற்று திரும்பிப் பார்த்தால் பிரமிப்பாக
இருக்கும்.இப்படியும் நடக்குமா
என்று கேள்வி கேட்க வைக்கும்.

கொண்டாட்டங்கள் மனதிற்கு மகிழ்ச்சி
அளிப்பவையாக இருக்கின்றன.
மாற்றுக் கருத்து இல்லை.

ஏதோ ஒரு துன்பத்திலிருந்து விடுபட்டுவிட்டோம்.
மனது குதுகலிக்கிறது.
அப்பாடா...என்று ஒரு நிம்மதிப் பெருமூச்சு
வெளிவருகிறது.
யாரிடமாவது சொல்லி மகிழ வேண்டும்
என்று கண்கள் யார் யாரையெல்லாமோ தேடுகிறது.
அந்த மகிழ்ச்சிப் பரிமாற்றத்திற்கான வடிகால்
தான் விழாக்களும் கொண்டாட்டங்களும்
என்ற நம்பிக்கை நமக்கு உண்டு.

ஓடி ...ஓடி ஓயாது உழைத்த உடம்பு
சற்று  ஓய்வு கேட்கிறது.
ஓய்வு என்றால் அப்படியே ஓய்ந்து
கிடப்பதற்கல்ல.
உறவுகளோடு நட்புகளோடு கூடி குதுகலமாக
பொழுது போக்குவதற்காக இருக்கலாம்.
அந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் நாள்
திருவிழாக்கள்.

அந்த திருவிழாக்களின் பின்னணியில்
ஏதோ ஒரு வரலாறு புதைந்திருக்கும்.
அவை நெகிழ்ச்சியான உண்மை சம்பவங்களை
கொண்டனவாக  இருக்கும்.

கதைகள் என்பதால் நடந்திருக்குமோ
 நடந்திருக்காதோ 
என்ற ஐயப்பாடு எழலாம்.

எல்லா கதைகளிலும் நம்பும்படியான
ஒரு நிகழ்வு சொல்லப்படுவதால் அதைப்
பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம்
அனைவரிடமும் உண்டு.

நம் முன்னோர்கள்  எதையுமே காரணமில்லாமல்
செய்துவிடுவதில்லை என்பதற்கு இவை
நல்ல எடுத்துக்காட்டுகளாகும்.

இப்படித்தான் தீபாவளி திருநாளில்
விளக்கு ஏற்றப்படுவதற்கும் ஒரு கதை உள்ளது.

ஹிமா என்று ஒரு மன்னர் இருந்தார்.
அவருடைய ஒரே மகனுக்கு மிக இளம்
வயதிலேயே திருமணம் முடித்து வைத்து
அழகு பார்த்து மகிழ்ந்தார் மன்னர்.

ஆனால் அந்த மகிழ்ச்சி நிலைக்கவில்லை.


காரணம் அரண்மனை சோதிடர் இளவரசனுக்கு
திருமணம் ஆன நாலாவது நாள் பாம்பு கடித்து
இறப்பு நிகழும் என்று சொல்லிவிட்டார்.

மன்னர் அதிர்ந்து போனார்.
ஆசை ஆசையாக வளர்த்த மகன்.
தனக்குப் பிறகு நாட்டை ஆளப் போகும்
மன்னன்.
ஏதேதோ கனவுகளோடு வளர்க்கப்பட்ட மகன்.அவனுக்கு இப்படி ஒரு சிக்கல் வரும்
என்று மன்னர் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.. 

மன்னர் எப்படியாவது தன் மகனைக்
காப்பாற்றிவிட வேண்டும் என்று விரும்பினார்.
ஆனால் எப்படி என்பதுதான் தெரியவில்லை.
மகனை எதுவும் அதாவது எந்தத் துர்சக்தியும்
அண்டவிடாமல் காவல் காத்து
கொள்ளவேண்டும் என்பதில் 
கவனமாக இருந்தார்.

இளம் மனைவிக்கு இந்த செய்தி தெரிய வர
பதறிப்போனாள். அழுது புரண்டாள்
எத்தனை நாள் அழுவது?
இன்னும் நாலு நாள்தான் இந்த வாழ்க்கை.

அதன் பின்னர் என் வாழ்க்கை?
நினைக்கவே நெஞ்சு வெடித்துவிடுவதுபோல 
இருந்தது.

எப்படியும் தன் கணவனை 
எமனிடமிருந்து காப்பாற்றிவிட வேண்டும்.
அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?

இதற்காக தான் என்ன செய்யவும் தயாரானாள்.
பாம்பால்தானே தன் கணவனுக்கு மரணம்
நேரிடும் என்று சோதிடர் கூறுகிறார்.
பாம்பை வீட்டுக்குள் வரவிடாமல்
தடுத்துவிட்டால்....
வீட்டை மூடி வைத்து விட்டால்...

கூடுமா?

ஒரு வேளை அதையும் மீறி
பாம்பு வந்து விடுமோ?
என்ன செய்யலாம்?
என்ன செய்யலாம்?
கையைப் பிசைந்து கொண்டு நின்றாள்.

இப்போது மனதிற்குள் ஓர் எண்ணம் ஒளிக்கீற்றாக
வந்து போனது.
ஆம்....அப்படிச் செய்தால் என்ன...?

அதுதான் ஒரே வழி.

உடனே அதற்கான செயல் திட்டத்தை 
வகுத்து நடைமுறைப்படுத்த 
முனைந்தாள்.

அப்படி என்ன பெரிய செயல்திட்டம் என்று
கேட்கிறீர்களா?

தீயைக் கண்டால் பாம்பு கிட்ட அண்டாது
என்று செல்வதைக் கேட்டிருக்கிறாள்.


அதனால் வீடு முழுவதும் தீபத்தை ஏற்றி
வைத்தாள்.

அப்போதும் அவளால் சும்மா
இருக்க முடியவில்லை.

அதோடு மட்டுமல்லாமல் வீட்டின் வாசலில்
தங்க வைர வைடூரிய நகைகள் 
மற்றும் விலை உயர்ந்த கற்கள் யாவற்றையும்
கொட்டி வைத்தால் கண்கள் கூசி பாம்பு
அதற்குமேல் நகர்ந்து விடாது என நினைத்தாள்.

அதன்படி வீட்டு வாசலில் 
வைர வைடூரிய கற்களைக் கொட்டி வைத்தாள்.
இப்போது கண்கள் கூசும் அளவுக்கு 
அரண்மனை முழுவதும் 
ஒளி வெள்ளம் .

அந்த நாலாம் நாளும் வந்தது.
அந்த நேரத்தில் எமன் பாம்பு வடிவம் எடுத்து
அரண்மனைக்குள் வருகிறான்.
அரண்மனை வாசல் வரை வந்தவனுக்கு
அதற்கு மேல் அரண்மனைக்குள் செல்ல 
முடியவில்லை. அரண்மனையின் ஒளி  கண்களில்
பட்டு கண்கள் கூசியதால் நகரமுடியாமல்
அப்படியே பாம்பு வாசலுக்கு
வெளியே  படுத்துவிட்டது.

அந்த நேரத்தில் இளவரசி 
பூஜை அறையில்
தன் கணவனுக்காக இறைவனிடம்
மெய் உருகப் பாடல் பாடிக் கொண்டிருக்கிறாள்.

பாடல் கேட்போரை மெய் மறக்க
வைத்தது.

 பாம்பும்
பாடலைக் கேட்டு தன்னை மறந்து போனது..மெய் மறந்த நிலையில் நெடுநேரம்
நேரம் போவது தெரியாமல் அங்கேயே கிடந்தது.

அதற்குள் பொழுதும் விடிந்தது.
சோதிடர் சொன்ன நான்காம்  நாள்
கடந்து போயிற்று.ஐந்தாம் நாள்
வந்து விட்டது.

பாம்பால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
இளவரசன் உயிரும்
காப்பாற்றப்பட்டு விட்டது.
மனைவியின் தந்திரத்தால்
இளவரசன் காப்பாற்றப்பட்டான்.

அனைவரும் வியந்து போயினர்.
தீபம் ஏற்றி கணவன் உயிரைக்
காப்பாற்ற முடியும் என்று நம்பினர்.

மனைவியின் தந்திரத்தால்  கணவன்
உயிரைக் காப்பாற்றியதால் அந்த நாளைத்
தந்திராஸ் என்று பெண்கள் தீபங்கள்
ஏற்றி இன்றும் கொண்டாடி வருகின்றனர்.

தன் கணவன் நெடுநாள் வாழ வேண்டும்
என்பதற்காக எமனை வழிபடும் நாள்
தந்திராஸ்.

 தங்கள் கணவன் நீண்ட நாள் வாழ
 வேண்டும் என்பதற்காக தீபம் ஏற்றி
 எமனுக்குப் பூஜை செய்வதுதான் தீபாவளிக்கு
 இரண்டு நாட்கள் முன்பாக இன்றும்
 நடைபெறும் விளக்கேற்றும்  விழாவாகும்.
 
தீபம் ஏற்றுவதில் இப்படி ஒரு தந்திரமா...?
மலைப்பாக இருக்கிறதல்லவா?
நம் பெண்கள் நினைத்தால் நினைத்ததை 
அடையாமல் விடமாட்டார்கள் என்பதற்கு 
இதுவும் நல்ல சான்றாக உள்ளது.

தந்திரமோ ...மந்திரமோ... 
நோக்கம் நல்லதாக
இருக்கிறதல்லவா! அது போதும்.

தீபம் ஏற்றி தீயவை அண்டவிடாமல்
செய்யும் தீபத் திருநாள்
வாழ்த்துகள்!



Comments

  1. தந்திராஸ் விழா கொண்டாடுவதில் ஒரு கதை இருப்பதை தங்களது பதிவீட்டின் மூலம்தெரிந்துகொண்டேன்.பெண்களின் சாதனை புராண காலத்திலிருந்தே இருந்து கொண்டுதான் வருகிற என்பதற்கு நல்லதொரு எடுத்துக்காட்டு.மிக்க நன்றி.

    ReplyDelete

Post a Comment

Popular Posts