நான் வேலைக்குப் போறேன்
நான் வேலைக்குப் போகிறேன்
"எனக்கு வேலை கிடைத்திருக்கிறது...
எனக்கு வேலை கிடைத்திருக்கிறது .."
பங்கஜத்திற்கு தனது மகிழ்ச்சியை
யாரிடமாவது சொல்லாவிட்டால் தலையே
வெடித்துவிடும்போல் இருந்தது.
மெதுவாக கதவைத் திறந்து வெளியில்
வந்து எட்டிப் பார்த்தாள் பங்கஜம் ...
கண்ணுக்கு எட்டிய
தூரம் வரை யாரையுமே காணவில்லை.
"சே...இன்றைக்குப் பார்த்து ஒரு சின்ன
குழந்தைகூட தெருவில் இல்லை."
சலித்துக் கொண்டபடி வீட்டுக்குள் சென்று
நாற்காலியில் அமர்ந்தாள்.
நாலு நிமிடம்கூட தொடர்ந்து அமர்ந்திருக்க
முடியவில்லை.
மறுபடியும் வாசலுக்கு வந்து எட்டிப்பார்த்தாள்.
தொலைவில் ஒரு பெரியவர் தோளில் மண்வெட்டியோடு
வந்துகொண்டிருந்தார்.
என் நேரம்....மண்வெட்டி தான்
குறுக்கே வருது.
என் கிரகம் இப்படியா இருக்கணும்.?
பல்லை நறநறவென்று கடித்தபடி
கதவில் கையால் குத்தினாள்.
ஐயோ...என் தலையே வெடித்துவிடும் போல்
இருக்கிறதே.....மெதுவாக வீட்டிற்குப்
பின்னால் இருக்கும் தொழுவத்தில் குச்
சென்றாள்.
அங்கு தூணில் கட்டிப் போட்டிருந்த
கன்றுக்குட்டி யின் முதுகை மெதுவாகத்
தடவியபடி" அக்கா நாளையிலிருந்து
எனக்குத் தண்ணி காட்ட மாட்டேன்.
இரை போடமாட்டேன்....சரியா"
என்றாள்.
கன்றுக்குட்டி ஏதோ புரிந்தது
போல் தலையை ஆட்ட ,ஏன் என்று கேட்கிறியா?
அக்காவுக்கு வேலை கிடைச்சிருக்கு "
என்று தனது மகிழ்ச்சியை முதன்முதலாக
கன்றுக்குட்டியோடு பகிர்ந்து கொண்டாள்.
என்ன இது....பைத்தியக்காரிபோல
கன்றுகுட்டியிடம்போய் சொல்லிக்
கொண்டிருக்கிறேன்....பைத்தியம் பைத்தியம்
தன் தலையிலேயே அடித்துக் கொண்டாள்.
மறுபடியும் மெதுவாக வாசல் பக்கம் வந்தாள்.
தொலைவில் பள்ளியில் அவளோடு படித்த
தோழிகள் இருவர்
வந்து கொண்டிருந்தனர்.
"ஆளு கிடைச்சாச்சு...ஆளு கிடைச்சாச்சு "
மனசு குதுகலித்தது.
தோழிகள் பக்கத்தில் வரும்வரை ஆவலோடு
பார்த்துக் கொண்டு நின்றாள்.
பக்கத்தில் வந்த இருவரும் வாசலில்
நிற்கும் பங்கஜத்தைக் கண்டு கொள்ளவே இல்லை.
பேச்சு சுவாரசியத்தில் அவர்கள்
பாட்டுக்குப் போய்க் கொண்டிருந்தனர்.
" இங்க ஒரு ஆளு நிற்கிறது கண்ணுக்குத்
தெரியல..."வலிய குரல் கொடுத்து நிறுத்தினாள்
பங்கஜம்.
" பார்க்கலப்பா....பார்த்திருந்தா பேசாம
போவோமா? சமாதானமாகப் பேச்சோடு பேச்சைத்
தொடங்கினாள் கலைவாணி.
" ம்...உங்களுக்கு எல்லாம் எங்க
கண்ணு தெரியப் போவுது..."ஏதாவது
பேசி விசயத்துக்கு வர வேண்டும் என்பதற்காக
சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் பேச்சை
நீட்டினாள் பங்கஜம்.
"யாரு...எங்களுக்கா...இது என்ன புது கதையா இருக்கு
உனக்குத்தான் கல்லூரியில் படிக்கப்
போனதும் கண்ணு தெரியாமல் போச்சு..."
என்றாள் வயலா.
"சரி அதைவிடு...இப்போ என்ன சமாச்சாரம்
ஆளு ரொம்ப சந்தோசமா இருந்தாப்ல இருக்கு..."
கலைவாணி சரியாகப் பாயிண்டைப் பிடிச்சி
கேட்டாள்.
"அதுவா..அது சும்மாதான்....என்று இழுத்தவள்
உங்களிடம் சொல்வதற்கு என்ன ...
எனக்கு அரசாங்கத்தில் வேலை கிடைச்சிருக்கு.."
என்று ஒருவழியாக தான் சொல்ல வந்ததைச்
சொல்லி முடித்துவிட்டு தோழிகளின்
முகத்தையே பார்த்தாள்.
"அரசாங்க வேலையா.. ..எங்கே....
உனக்கு என்னப்பா...இனி உன்னைக் கையில்
பிடிக்க முடியாது..." என்று ஒட்டில்லாமல் பேசினாள்
வயலா.
"அப்படி எல்லாம் இல்லை...வேலை கிடைச்சா
என்ன பெரிய கொம்பா...நான் என்றைக்கும்
உங்கள் தோழிதான்.... " வாய் ஏதோ பேசினாலும்
மனசு முழுக்க ஒரு கௌரவம் வந்து
கூடுகட்டி உட்கார்ந்து கொண்டது
"சரி வருகி்றோம்..."
என்றபடி தோழிகள் இருவரும்
அங்கிருந்து நகர்ந்தனர்.
பங்கஜத்திற்கு மறுநாள்வரை இருப்பு
கொள்ளவில்லை....
முதல்நாள்...முதல் அனுபவம்.....எப்படி இருக்கும்...
புது இடம்...புதுப்புது மனிதர்கள்....
நினைக்க...நினைக்க ... ஏதோ வானத்தில்
பறப்பதுபோல கற்பனையில் மிதந்தாள் பங்கஜம்.
அன்றைய இரவு தூங்கா இரவாகவே கழிந்துபோனது...
விடிந்ததும் தடபுடலாகப் புறப்பட்டாள் பங்கஜம்.
அம்மா...போயிட்டு வாறேன் எட்ட நின்று
சொல்லிவிட்டுச் சிட்டாகப் பறந்தாள்.
கால் தரையில் நிற்கவில்லை...
நேரே ரயில் நிலையத்தில் போய் நின்றாள்.
நாளையிலிருந்து நானும் உங்களோடு
தினமும் பயணிப்பேன் என்பதுபோல
அங்கே நிற்பவர்கள் முகத்தை மாறி...மாறிப்
பார்த்தாள்.
முதல்நாள் வேலைக்குப் போகிறேன்...
அந்தப் பூரிப்பைத் தவிர அவளிடம் வேறெதுவும்
இப்போது இல்லை.
மனசுக்குள் குதுகலப் பேச்சு வார்த்தை
நடந்து கொண்டிருந்ததால்
கண்கள் காட்சிகளைக் காண மறுத்தன.
ரயிலில் இருந்து இறங்கி பள்ளி இருக்கும்
சாலையில் நடக்கும்போது காரணமில்லாமல்
நடையில் ஒரு தொய்வு ஏற்பட்டது.
பள்ளியை நெருங்க நெருங்க மனசு
படபடவென்று அடித்துக் கொண்டிருந்தது.
பள்ளியை நெருங்கியாயிற்று.
அலுவலக வாசலில் நின்று மெதுவாக
எட்டிப்பார்த்தாள் பங்கஜம்.
தனக்காகவே காத்திருந்ததுபோல
"வாம்மா..."அன்பான குரல் ஒன்று வரவேற்றது.
அப்படியே உருகிப் போனாள் பங்கஜம்.
"இதுக்குத்தானே ஆசைப்பட்டாய் பங்கஜம்"
என்று கிடைக்கும் சந்தர்ப்பத்தைத் தனக்குச்
சாதகமாக்கிப் பேசியது மனசு.
கலகலவென்ற சிரிப்பொலியும் பேச்சும்
பின்புலத்திலிருந்து கேட்க ...இவ்வளவு மகிழ்வான
இடத்தில் வேலையா...ஒரு நிமிடம் அப்படியே
சந்தோசத்தில் திக்குமுக்காடிப் போனாள்
பங்கஜம்.
"புதுசா வேலையில் சேர வந்திருப்பது நீங்கதானா..."
என்ற தலைமை ஆசிரியரின் குரல் பங்கஜத்தின்
மனவோட்டத்திற்குத் தற்காலிக தடையிட்டது.
"ஆமாம்...."என்றபடி ஏதோ வீட்டுப்பாடம்
எழுதிவந்த நோட்டை ஆசிரியரிடம்
நீட்டுவதுபோல....கையிலேயே வைத்திருந்த
அப்பாயின்ட்மென்ட் ஆர்டரை ஆர்வமாக
தலைமை ஆசிரியரிடம் நீட்டினாள் பங்கஜம்.
ஆர்டரை வாங்கி கையில் வைத்தபடி நாற்காலியில்
அமர்ந்தார் தலைமை ஆசிரியர்.
ஆசிரியரின் பதிலுக்குக் காத்திருக்கும்
மாணவியைப்போல
அப்படியே மௌனமாக நின்றிருந்தாள் பங்கஜம்.
" பங்கஜம்...நல்ல பெயர்...வாங்கம்மா...வாங்க
கையெழுத்துப் போடுங்க..."என்று வருகைப்பதிவேட்டு
ரிஜிஸ்டரை பங்கஜம் பக்கமாக நகர்த்தி வைத்துவிட்டு
பங்கஜம் கையெழுத்துப் போடுவதையே பார்த்துக்
கொண்டிருந்தார் தலைமை ஆசிரியர்.
முதல்நாள் ....முதல் கையெழுத்துப் போடுவதில்
அப்படியே பூரித்துப் போனாள் பங்கஜம்.
இன்றிலிருந்து நாளும் என் கையெழுத்து இந்தப்
பதிவேட்டில் இருக்கும் .
இரவு முழுவதும் போட்டுப் போட்டுப் பழகி
வைத்திருந்த கையெழுத்தை அப்படியே
அச்சு பிசகாமல் போட்டுவிட்டு தலை நிமிர்ந்தாள்
பங்கஜம்.
"எங்கே இருந்து வர்றீங்க..".ஏதோ கேட்க
வேண்டுமே என்பதற்காக கேட்டு வைத்தார்
தலைமை ஆசிரியர்.
ஊரைச் சொல்லிவிட்டு ஆசிரியர்
முகத்தையே பார்த்தாள் பங்கஜம்..".என்ன ஒரு
கனிவு..."மனசுக்குள் தலைமையாசிரியரைப் பற்றிக்
ஒரு கணக்குப் போட்டுப் பார்த்தது மனசு.
நீங்க உங்க வகுப்புக்குப் போகலாம்.
என்றபடி அலுவலக ஊழியரை அழைத்து...
டீச்சருக்கு அவங்க வகுப்பறையைக் காட்டு என்று
பணித்தார்.
மனசு முழுக்க முதல்நாள் ஆசிரியராக நிற்கப்போகும்
வகுப்பையும் மாணவர்களையும் காணவேண்டும்
என்ற ஆவல் பொங்கி நின்றதால் ...எதிரில் வந்தவர்
எவரும் கண்ணுக்குத் தெரியவில்லை.
கண்களுக்கும் மூளைக்குமான தகவல்
பரிமாற்றம் சரிவர நடைபெறாததால் ...
கண்கள் தவறிழைக்க நேரிட்டது.
ஒரு குதுகலத்தோடு வகுப்பிற்குள் நுழைந்தாள்.
குட்மார்னிங் டீச்சர் என்ற மாணவர்களின்
உற்சாக வரவேற்பு பங்கஜத்தைத் திக்குமுக்காட
வைத்தது.
ஐந்து நிமிடம்கூட அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை.
அதற்குள் அலுவலக உதவியாளர் வந்து
"உங்களை மேடம் அலுவலகத்திற்கு வரும்படி
கூறுகிறார் "என்றார்.
"என்னவாக இருக்கும்.... "என்று சிந்திக்கும்
மனநிலையில் பங்கஜம் இல்லை.
துள்ளிக்குதிக்கும் கன்றுக்குட்டிபோல...
மகிழ்ச்சியில் திக்குமுக்காடி ஒரு கம்பீரத்தோடு
அலுவலகத்திற்குள் மறுபடியும் நுழைந்தாள்.
அங்கே தலைமை ஆசிரியர் நாற்காலியில்
இன்னொருவர் அமர்ந்திருந்தார்.
யாரவர் என்ற சிந்தனை சிறிதும் எழவில்லை.
அலுவலகத்தில் நுழைந்ததும் "எதற்காக கூப்பிட்டீர்கள்"
என்பதுபோல தலைமை ஆசிரியர் முகத்தையே
பார்த்தாள் பங்கஜம்.
தலைமையாசிரியர் ...நாற்காலியில் அமர்ந்திருந்தவரைப்
பார்க்க,.... நாற்காலியில் அமர்ந்திருந்தவர்
பங்கஜத்தையே முறைக்க....அப்போதும் பங்கஜத்திற்கு
எதுவும் புரியவில்லை.
பேந்தப் பேந்த விழித்துக் கொண்டு நின்றாள்.
நிலைமையைச் சமாளிப்பதற்காக" மேடம்
இவங்கதான் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள
ஆசிரியை "என்று பங்கஜத்தை நாற்காலியில்
அமர்ந்திருந்தவருக்கு அறிமுகம் செய்து
வைத்தார் தலைமை ஆசிரியர்.
இப்போதுதான் பங்கஜம் முதன்முறையாக
நாற்காலியில் இருந்தவரை நேருக்குநேர் பார்த்தார்.
அதற்குள் "நீங்க எங்கே படிச்சீங்க "என்ற
கேள்வி வந்து விழுந்தது.
கேள்வியில் இருந்த விசமத்தைப் புரிந்து
கொள்ளாத பங்கஜம்" எங்கே படித்தேன்
என்று சொல்வது...பள்ளிப் படிப்பு படித்த
இடத்தையா... இல்லை கல்லூரிப் படிப்பு
படித்த இடத்தையா..".என்பதுபோல கேள்வி
கேட்டவரின் முகத்தையே அப்பாவியாகப்
பார்த்துக் கொண்டு நின்றாள்.
"உங்களைத்தான் கேட்கிறேன்...
சொல்லுங்க...எங்க படிச்சிங்க..."
இப்போது சொற்களில் இருந்த கடுமையைப்
புரிந்துகொள்ள முடிந்தது.
"ஒரு அதிகாரி உட்கார்ந்திருக்கிறேன்...
வணக்கம் சொல்ல வேண்டும் என்ற மரியாதைகூட
தெரியல...."தொடர்ந்து வார்த்தைகள் கடுமையாக
வந்து விழுந்து கொண்டே இருந்தன.
குற்றவாளி் கூண்டில் நிறுத்தப்பட்டிருக்கும்
விசாரணைக் கைதியிடம் விசாரிப்பதுபோல
பங்கஜத்திடம் குறுக்கு விசாரணை
நடத்திக் கொண்டிருந்தார் அதிகாரி.
ஏதோ தவறு செய்து விட்டோமோ என்று குழம்பிப்போன
பங்கஜம் குற்றம் செய்தவளைப் போல கூனிக்குறுகிப்
போனாள்.
" சாரி மேடம் ...எனக்குத் தெரியாது...
வணக்கம் மேடம்"
என்று துண்டு துண்டுகளாக ஒட்டுப்போட்ட
வார்த்தைகளைப் போட்டு ஒட்டுப் போட்டுக்
கொண்டிருந்தாள் இந்தக் கிராமத்து பேதை.
"நான் யார் என்று தெரியலியா...
இல்லை வணக்கம் சொல்லக் கூடாது என்ற திமிரா...."
பேச்சில் அதிகாரி என்ற திமிர் இருந்தது.
"யாரு என்று தெரியலையாம்....என்னைப் பார்த்ததும்
உங்கள் தலைமையாசிரியர் நாற்காலில் இருந்து
எழும்பியதைப் பார்க்கல..." குற்றப்பத்திரிகையில்
அடிஷனலாக குற்றங்களைச் சேர்த்துக் கொண்டிருந்தார்
அதிகாரி.
"நான் யாரோ பேரன்ட் என்று நினைத்தேன் மேடம்...
தெரியாம..."வார்த்தைகள் மறுபடியும் மறுபடியும்
சம்பந்தா சம்பந்தம்
இல்லாமல் வந்து விழுந்தன.
"இதற்குத்தான் அதிகம் படித்தவர்களை
பள்ளிகளுக்கு நியமனம் செய்யாதீர்கள் என்று
சொன்னேன்...மதிக்க மாட்டார்கள்..."மரியாதை
தெரியாதவள் என்ற முத்திரையைக் குத்த வேண்டும்
என்பதில் உறுதியாக இருந்தார் கல்வி அதிகாரி.
இதற்குமேலும் என்ன பேசுவது என்பது புரியவில்லை.
அதிகாரிக்கு முன்னால் நியாயத்தைக்கூட
எடுத்து வைக்க உரிமை கிடையாது
என்பது மட்டும் புரிந்து போயிற்று.
பங்கஜத்திற்கு தன் காலுக்குக் கீழ் உள்ள நிலம்
நழுவியதுபோல் இருந்தது.
நான் வேலைக்குப் போகிறேன்...நான் வேலைக்குப்
போகிறேன் என்று கொண்டாட்டத்தோடு பள்ளிக்குள்
நுழைந்தவள் மனம் அப்படியே...கூம்பிப் போயிற்று.
ஒரு சாதாரண வணக்கம்கூட சொல்லத்
தெரியாதவளாக இருந்திருக்கிறேனே...என்ற நினைப்பு
நெஞ்சைப் பிசைய அவமானத்தில்
தலைகுனிந்து நின்றாள் பங்கஜம்.
முதல் நாள் ...முதல் அனுபவம்...முட்டி
நின்ற கண்ணீரோடும் அவமானத்தோடும்
தொடங்கியது.
சிலருக்கு இப்படியும் கசப்பான அனுபவம் ஏற்படலாம் என்பதை பதிவிட்டது மிக அருமை.
ReplyDelete