மூளையின் இயக்கம்

மூளையை இயக்குங்கள்
"இரும்பை பயன்படுத்தாவிட்டால்
துருப்பிடித்துப் போகும்.
தேங்கிய நீர் தூய்மை இழந்துவிடும்.
அதேபோல் செயல்படாமை
மனதின் சக்தியை உறிஞ்சிவிடுகிறது."
என்பார்  லியர்னடோ டாவின்சி .

நம் எல்லோரிடமும் கண்டிப்பாக
ஒரு திறமை இருக்கும்.
எந்த ஒரு திறமையும் இல்லாதவர் என்று
எவருமே கிடையாது.

எந்த வேலையும் செய்யாமல் சோம்பி
இருப்பவனை மூளை இல்லாதவன்
என்று முத்திரை குத்தி ஒதுக்கி 
வைத்துவிடுவோம்.

நன்றாக படிக்கிற ஒரு மாணவனைப்
பார்த்து அவனுக்கு செம மூளைப்பா...என்று 
சொல்லி பெருமைப்படுத்துவோம்.

அப்படியானால் கடவுள் படைப்பில்
பாரபட்சமா?
 ஒருவருக்கு அதிக மூளையும் இன்னொருவருக்கு
 குறைந்த அளவு மூளையும் வைத்து
 படைக்கப்பட்டுள்ளதா....
 
 சந்தேகம் எழுகிறதல்லவா!

வேடிக்கையான ஒரு கதை ஒன்று 
உண்டு.
கடவுள் மனிதனை உருவாக்கி அழகு 
பார்த்தாராம்.
கை, கால் ,மூக்கு ,கண் என்று ஒவ்வொன்றாக 
சரியாக அதனதன் இடத்தில் வைத்து
முழுமையான மனிததை உருவாக்கினாராம்.

நல்லபடியாக உருவாக்கியாயிற்று 
என்று முடிவு செய்து 
பூமிக்கு அனுப்பி வைத்தார் கடவுள்.

மனிதனைப்  பூமிக்கு அனுப்பிய
பின்னர்தான் ஒரு விசயம் 
ஞாபகத்திற்கு வந்ததாம்.

மனிதனுக்கு மூளை வைக்காமலேயே
பூமிக்கு அனுப்பிவிட்டோமே என்ன செய்வது
யோசித்தார் கடவுள்.

கடவுளுக்கும் மறதியா....வாயைப் பிளக்கிறீர்களா...
நானும் அப்படித்தாங்க ஆச்சரியப்பட்டுப்
போனேன்.

ஞாபகம் வந்ததுமே கடவுள் உதவியாளரை
அழைத்தாராம்.

கையில் மூளை இருந்த ஒரு பாத்திரத்தைக்
கொடுத்து , "மூளை வைக்காமலேயே
மனிதனைப் பூமிக்கு அனுப்பிவிட்டேன்.
உடனே மூளை இருக்கும் இந்தப் பாத்திரத்தை
எடுத்துக் கொண்டு பூமிக்கு ஓடு.
மனிதனுக்கு ஆளுக்கு கொஞ்சம்
மூளை வைத்துவிட்டு வா" என்றாராம்.

உதவியாளர் கையில் மூளை உள்ள பாத்திரத்தைத்
தூக்கிக் கொண்டு பூமிக்கு வந்தாராம்....

"ம்...அப்புறம்  அப்புறம்"

"உங்கள் அவசரம் புரிகிறது...சொல்கிறேன்."

வழியில் பார்க்கும் மனிதர்களுக்கு எல்லாம்
ஆளுக்கு கொஞ்சம் மூளை அள்ளி வைத்து
வைத்து அனுப்பினார் உதவியாளர்.

இப்போது பாத்திரத்தில் குறைவான அளவே 
மூளை இருக்கிறது.

என்ன செய்யலாம்...
ஏதோ நம்மால் முடிந்த மட்டும் ஆளுக்குக் கொஞ்சம்
மூளை வைத்துவிடுவோம் என்று அளவை குறைத்துக்
கொண்டே வந்தாராம் உதவியாளர்.

 பாத்திரத்தில் இருந்த மூளை மொத்தமாக
காலி ஆகிவிட்டது.
 இனி என்ன செய்வது ?
 அவர்கள் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்
என்று திரும்பிப் போய்விட்டார் உதவியாளர்.

இறுதியில் சிலருக்கு மூளை 
கிடைக்காமலேயே போயிற்று.

அதனால்தான் ஒருசிலர் அதிக
 மூளையுள்ளவர்களாகவும்
 இன்னும் சிலர் சராசரி மூளைக்காரர்களாகவும்
 இறுதியாக மூளைக் கிடைக்காமல் போனவர்கள்
 மூளையே இல்லாதவர்களாகவும்
 இருக்கிறார்களாம்.

வேடிக்கையாக இருக்கிறது இல்லையா?

இது தெரிந்திருந்தால் முந்திப் போய்
மூளையை அள்ளிக் கொண்டு வந்திருக்கலாமே...

உங்கள் மனவோட்டம் எனக்குக்
கேட்கிறது.

நானும் அதைத் தாங்க நினைத்தேன்...
முன்னறிவிப்பு இல்லாமல் நடைபெற்றதால்
போக முடியாமல் போயிற்று.

கேட்பதற்கே வேடிக்கையாக இல்லை!

இது கதை தாங்க ...கதைக்கு கண்ணா....மூக்கா...

உண்மையாகவே கடவுள் பாரபட்சம்
பார்க்கிறவரா?

இல்லை என்று நம்புகிறீர்களல்லவா!

அப்படியானால் உங்களுக்கு மூளை இருக்கிறது
என்பதை நம்புங்கள்.

கடவுள் எல்லோருக்கும் ஒரே அளவு மூளைதாங்க
கொடுத்திருக்கிறார்.
அதனைப் பயன்படுத்துவதில்தான்
நமக்குள் வேறுபாடு.

யாரும் முழுமையாக மூளையைப்
பயன்படுத்தியதே இல்லையாம்.

ஏன்...விஞ்ஞானிகள்.... அறிவாளிகள்
இவர்கள் கூடவா....என்று கேட்க வேண்டும்போல் தோன்றுகிறதல்லவா!

அவர்களும்தான்.

அவர்களே இப்படியானால் நாம் 
எத்தனை விழுக்காடு
அறிவைப் பயன்படுத்தியிருப்போம்?

இருக்கிற மூளையைப் பயன்படுத்தாமல்
அப்படியே விட்டுவிட்டால் ....
அப்படியே துருபிடித்துப் போகும். 

அதன்பின்னர் நாம் பயன்படுத்த 
நினைத்தாலும்  செயல்படாது மூளை  மக்கர்
பண்ணும்.

இருக்கிற மூளையைப் பயன்படுத்தி என்ன 
செய்யலாம் என்று சிந்தித்துச்
செயலாற்றுபவன்தான் புத்திசாலி.

 மூளை மணிக்கு நானூறு கிலோ மீட்டருக்கும்
அதிகமாக ஓடுமாங்க...

அடேங்கப்பா... வியப்பாக இருக்கிறதில்லையா?
அதை அப்படியே முடக்கிப் போடுவது
தப்பில்லையா....

மூளை வளர்ந்து கொண்டே இருக்காதாங்க...
இரண்டு வயதில் எந்த அளவு இருக்குமோ 
அதுதான் இருபது வயதிலும் இருக்குமாம்...

"ஓ...அப்புடியா..."

"அப்படித்தாங்க..."

உனக்கு மூளையே கிடையாது என்று யார்
சொன்னாலும் நம்பாதீங்க....

உனக்கு மூளை வளரவே இல்லை என்றால்
நம்பிடவே நம்பிடாதீங்க.....

மூளைதான் இதயத்திற்கு அடுத்தபடியாக
மிகவும் முக்கியமான உறுப்பு.

உடல் இயக்கம் சீராக நடைபெற, 
நினைவாற்றல், ஒருங்கிணைப்பு என்று 
மொத்த செயல்பாடும் மூளையின்
கட்டுப்பாட்டில்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது.

 சிலர் அவனுக்கு என்னப்பா நல்ல
மூளை..என்பார்கள்.
அப்படியானால் உங்களுக்கு இருப்பது
கெட்ட மூளையா...

கிடைத்த மூளையைக் கொண்டு செயல்படுவதை
வைத்துத்தான் அது நல்ல மூளையா...
கெட்டமூளையா...என முடிவு செய்யப்படும்.

நம் மூளையைக் கெட்டதாக்குவதும்
நல்லதாக்குவதும் நம் கையில்தான்
இருக்கிறது.

மெருகேற்றிக் கொண்டே இருந்தால் எந்தப்
பொருளுக்குமே மவுசு கூடத்தான் செய்யும்.
மூளை மட்டும் விதிவிலக்கா..என்ன..

மூளையை மெருகேற்றிக் கொண்டே இருப்போம்.
துருப்பிடித்துப் போனால் பயனற்றுப் போய்விடும்
என்பது எப்போதும் உங்கள் நினைவில்
இருந்து கொண்டே இருக்கட்டும்.


பேட்டரிக்கு சார்ஜ் ஏற்றுவது போல
மூளைக்கும் சார்ஜ் ஏற்றிக் கொண்டே இருக்க
வேண்டும்.

நாளும் புதிய புதியவற்றை அறிந்து 
கொள்ளவேண்டும்
என்ற தேடல் வந்தாலே போதும்.
மூளை எப்போதும் சுறுசுறுப்பாக
இயங்கிக் கொண்டே இருக்கும்.

இயக்கமும் தேடலும் இல்லா மனிதன்
சோர்ந்து போவான். 
மூலையில் முடங்கிப் போவான்.

இருக்கிற மூளையை இயக்கிக் கொண்டே
இருப்போம்.

இந்திய மூளைக்கு எப்போதும் உலக
அரங்கில் மவுசு அதிகம்.
அந்த மவுசு குறையாமல் காப்பது
நம் கையில்தான் உள்ளது.
Comments

  1. மூளையை செயல்பாட்டில் வைத்திருக்கும் நபரில் தாங்களும் ஒருவர் என்பதை தங்கள் பதிவீடுகளே கூறுகின்றன.வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Post a Comment

Popular Posts