வண்ணப்பெட்டி

                  வண்ணப்பெட்டி


வண்ணப்பெட்டியைத் தலையில்
 வைத்துக்கொண்டு அலுங்கமாமல் 
குலுங்காமல் நடந்து சென்றாள் சந்திரா.

தலையில் வண்ணப்பெட்டியை வைத்து சுமந்து
செல்வது ஏதோ கிரீடத்தை தலையில் வைத்துச்
சுமந்து செல்வது போன்ற நினைப்பு.
கூடவே அம்மாவும் சின்ன தங்கை  சுமதியும்
நடந்துவர திருவிழாவில் ஊர்ந்து செல்லும்
ரதம்போல மெதுவாக நடந்து சென்றாள் சந்திரா.

இடையிடையே... "கல்லு தட்டிராம....பார்த்துப்போ"
என்று அம்மா டைரக்ட் பண்ணிக் கொண்டிருந்தார்கள்.

"ஏய்...ஏய்...மாடு வருது...ஒதுங்கு...ஒதுங்கு..."
தங்கை சுமதி குரல் கொடுத்தாள்.

போதாததற்கு அம்மா ஓடிவந்து பெட்டியைப்
பிடித்துக் கொண்டார்கள்.

"கையை எடுங்கம்மா...நான் கீழே போடமாட்டேன்.."
சொல்லிப் பார்த்தாள் சந்திரா.

"ஒண்ணும் இல்லை நட...நட.."என்றார் அம்மா..

எதிரே வந்த...தங்கம்....
"என்ன பாட்டி கலியாண வீட்டுக்கா...
மெதுவா....பார்த்துப் போங்க...ஆடுமாடு வருகிற நேரம்
சின்னப்பிள்ளை கீழேப்போட்டு முறுக்கு
உடைத்துடப் போகுது "என்று கரிசனமாகச்
சொல்லி விட்டுச் சென்றார்.

அவ்வளவுதான்  இன்னும் கெட்டியாகப்
பெட்டியைப் பிடித்துக் கொண்டார் அம்மா.

ஒருவழியாக மூவர் ஊர்வலம் திருமண வீட்டின்
முன் உள்ள பந்தலில்  போய் நின்றது.

மூவரையும் பார்த்த சுட்டிப்பெண் ஒருத்தி 
விடுவிடுவென வீட்டுக்குள் ...
ஓடிச்சென்று" ,அம்மா...அம்மா..கீழத்தெரு
பாட்டி முறுக்குப் பெட்டி கொண்டு வந்துருக்காங்க"
என்றாள்.

இரண்டு மூன்று பெண்கள் பந்தலுக்கு வந்து
"வாங்க..வாங்க "என்று வீட்டுக்குள் அழைத்துச்
சென்றனர்.

ஒருபெண் தங்கத்தின் தலையில் இருந்த கிரீடத்தை...இல்லையில்லை..வண்ணப்பெட்டியை
இறக்கி வைத்தாள்.

மூவரையும் ஒரு பெஞ்சில்  அமர வைத்தனர்.
அதற்குள் வீட்டுக்குள் இருந்து வந்த  ஒரு
பாட்டி  கையில் ஒரு குத்துப் பெட்டி நிறைய
முறுக்கை அள்ளி வந்து சந்திராவையும்
சுமதியையும் பார்த்து," எடுத்துக்கோங்க..".என்றார்.

சுமதி படக்கென்று ஒரு முறுக்கை எடுத்துக் கடிக்க
சந்திரா எடுப்பதற்குக் கூச்சப்பட்டு 
அம்மா முகத்தைப் பார்த்தாள்...

"ஏன் அம்மா சொன்னாதான் எடுத்துப்பியா...
நாங்க சொன்னா எடுக்க மாட்டியா.."என்று
கையில் ஒரு முறுக்கை எடுத்து வலுக்கட்டாயமாக 
திணித்தார் பாட்டி.

மறுபடியும் சந்திரா அம்மா முகத்தைப் பார்க்க...
"வாங்கிக்க..." என்பதுபோல தலையை ஆட்டினார் அம்மா.

அதற்குள் ஒரு மாமா அங்கு வந்துவிட
" ஒரு கிண்ணிப்பெட்டியில் வைத்துக் கொடுக்கக் கூடாது...இவ்வளவு பெரிய
குத்துப்பெட்டியைத் தூக்கி வந்துருக்க.."என்றார்
பாட்டியைப் பார்த்து.

இதுதான் சாக்கு என்பதுபோல கையில் மூன்று கிண்ணிப்பெட்டிகளைத் தூக்கி வந்த
 சின்னப் பெண் ஒருத்தி
ஒவ்வொரு பெட்டியிலும் மூன்றுமூன்று முறுக்காக
வைத்துப் பரிமாறினாள்.

"பிள்ளைன்னா இது பிள்ளை....எவ்வளவு அழகாகப்
பரிமாறுது பாரு" என்றபடி பேத்தியின் தலையைத்
தடவிக் கொடுத்தார் தாத்தா.

தாத்தாவின் கையைத் தட்டி விட்டபடி வீட்டுக்குள்
ஓடிச் சென்று மறைந்து கொண்டது அந்த சிறுப்பெண்.

பந்தலின் பின்புறமாக ஓலைப்பாயை விரித்து
அதில் சாதத்தைத் தட்டிக் கொண்டும் ஓலைப் பட்டைகளில்
சாம்பாரை மொண்டு இன்னொரு பாத்திரத்தில்
மாற்றுவதுமாக சாப்பாட்டு வேலை தடபுடலாக
நடந்து கொண்டிருந்தது.
இன்னும் கலியாண வீட்டில் சோறு வைக்க நேரம்
இருக்கிறது..வீட்டிற்குப் போய்விட்டுத் திரும்பவும்
வரலாம் என்று நினைத்தபடி எழும்பினார் அம்மா.

"எங்க எழும்பிட்டீங்க...இருந்து சாப்பிட்டுட்டுப்
போங்க" என்றார் வீட்டுப் பெரியவர்.
"போயிட்டு கண்டிப்பாக வருவோங்க...".என்று எழும்பிய அம்மா..வாங்க என்றபடி
சுமதியையும் சந்திராவையும் பார்த்தார் .

அதற்குள் வீட்டுக்குள் இருந்து ஒரு 
மிட்டாய்ப்பெட்டியைத் தூக்கிவந்த சின்னப்பெண்
ஒரு தேன்குழல் மிட்டாய் எடுத்து கையில்
கொடுத்தபடி "நல்லா இருக்கும் தின்னு "என்றாள்.

வாங்கிக் கொண்ட சந்திராவும் சுமதியும்
 சிரித்தபடியே "வருகிறோம்...."என்று சொல்லி
கை அசைத்து விடை பெற்றனர்.

Comments

  1. வண்ணப்பெட்டிகளின் புழக்கம் மறுபடியும் மக்களிடையே ஏற்பட்டால் சிறப்பாக இருக்கும்.படங்கள் சூப்பர்.

    ReplyDelete

Post a Comment

Popular Posts