மௌனம் பேசும்

மௌனம் பேசுமா?
 வாய் திறந்து பேசுவதுதானே பேச்சு...
 மௌனம் எப்படி பேசியிருக்க முடியும்...
 மௌனம் இதுவரை பேசியதும் இல்லை
 பேசப் போவதும்  இல்லை.
 இது நமது கணிப்பு.
 
 பேசிய வார்த்தைக்கு ஒரு அர்த்தம்.
 பேசாத வார்த்தைக்கு ஆயிரம் அர்த்தம்
 கற்பிக்கப்படும்.
 
 ஒருவரோடு சண்டை போடும்போது எதிராளி
 அமைதியாகப் போய்விட்டால்...
 அதற்கு எதிராளி தாழ்ந்து போய்விட்டார்.
 தனது இயலாமையை ஒத்துக் கொண்டு
 பேசாமல் போய்விட்டார் என்று நினைப்போம்.
 அல்லது பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று
 போயிருப்பாரோ என்று நினைப்போம்.
 
 இன்னும் நான்கு பேரைக் கூட்டி வருவதற்காக
 சென்றிருப்பாரோ...
 என்ன நடக்கும் என்று பார்ப்பதற்காக ஆவலோடு
 காத்திருப்போம்.
 அதுவும் நடக்கலியா... ஏதோ வன்மம் வைத்துக்
 கொண்டு வாய்ப்புக்காக காத்திருக்கிறார் என்று
 புரிந்து கொள்வோம்.
 அதுவும் இல்லையா...எதுக்குமே லாயக்கில்லாதவர்
 என முத்திரை குத்திவிட்டு நம்போக்கில்
 போய்க் கொண்டே இருப்போம்.
 அதுவும் இல்லையா...எவ்வளவு பொறுமைசாலிப்பா...
 என்று புகழாரம் சூட்டிவிட்டுக் கடந்து போவோம்.
இப்படி அமைதியாகப் போவதற்குப் பின்னால்
 பல அர்த்தங்கள் இருக்கும்.

ஆனால் உண்மையில் அந்த  அமைதிக்கு
அர்த்தம் அமைதியாக இருந்தவருக்கு மட்டுமே தெரியும்.
எப்போதுமே அமைதியாக  இருப்பவர்களிடம்
மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
ஒன்றுமே தெரியாதவர்கள் போல் இருப்பார்கள்.
அதைக் கண்டு ஏமாந்து போய்
வம்பில் மாட்டிக் கொண்டவர்கள் ஏராளம்.


பேசுபவர்களால் நாம் சந்திக்கும் பிரச்சினைகளைவிட
பேசாதவர்களால் எமக்கு ஏற்பட்டிருக்கும்
பிரச்சினைகள்தான் அதிகம்.
ஒருமுறை கடந்து வந்த பாதையைத்
திரும்பிப் பாருங்கள் .நான் சொல்வதில் இருக்கும்
உண்மை புரியும்.
நாம் காயப்படக் காரணமாக இருந்தவர்கள்
பல நேரங்களில் அதிகம் பேசாதவர்களால்தான்
இருக்கும்.

மௌனம் வேறு ;அமைதி வேறு.
மௌனம் வார்த்தையால் பேசாது.
செயலால் பேசும். பேசப்பட வைக்கும்.

புத்தர் போன்ற ஞானிகள் எப்போதாவதுதான்
பேசுவார்கள்.
அவர்கள் பேச்சு பேசப்பட வைக்கும்.
அப்படிப்பட்ட மௌனம் சமுதாயத்திற்கு
நல்லது. நன்மையை மட்டுமே செய்யும்
என்பதை உறுதியாக நம்பலாம்.

வாக்கும் மனமும் இரண்டும் மௌனமாம்
வாக்கு மௌனத்து வந்தாலும் மூங்கையாம்
வாக்கும் மனமும் மௌனமாம் சுத்தரே
ஆக்கும் அச்சுத்தத்தை யார் அறிவார்களே!

என்று திருமூலர் தனது திருமந்திரத்தில்
இரண்டுவகையான மௌனம் பற்றிப்
பேசுகிறார்.
ஒன்று வாய் பேசாமல் மௌனமாக
இருப்பது.
இரண்டாவது மனத்தால் மௌனமாக இருப்பது.

சிலருக்கு வாய் மட்டும்தான்
பேசாமல் இருக்கும். ஆனால்
மனம் கண்ட கண்டதை எல்லாம்
சிந்தித்துக் கொண்டிருக்கும்.
மற்றவர்கள் முன்னால் மௌனமாக 
இருப்பதுபோல் காட்டிக்கொள்வார்கள்.
இந்த மௌனம் ஆபத்தானது.
ஆபத்தை விளைவிக்கக் கூடியது.

மனத்தால் மௌனமாக இருப்பது என்பது
அபூர்வமாக ஓரு சிலருக்கு மட்டுமே 
சாத்தியப்படக்கூடிய ஒன்று.

இது பெரும்பாலும் ஞானிகளால் மட்டுமே
சாத்தியமானது. 
மனதைக் கட்டுக்குள் வைத்து
வாயும் பேசாது மௌனமாக இருக்கக் கூடுமா....
என்றால் இருக்கக் கூடும் என்று 
மெய்ப்பித்தவர்கள்தான்
இன்று வரலாற்றில் இடம் பிடித்துள்ள
ஞானிகள் ஆவர்.

பேச்சாளர்கள் நிறைய பேசுவார்கள்.
ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் சட்டென்று
தங்கள் பேச்சை நிறுத்திக் கொள்வார்கள்.

இப்படித்தான் மகாத்மாகாந்தி ஒரு கூட்டத்தில்
பேசிக் கொண்டிருந்தாராம். 
அனைவரும் ஆவலோடு அவர் பேச்சைக்
கேட்டுக் கொண்டிருந்த வேளையில்
படக்கென்று பேச்சை முடித்துக் கொண்டார்.
அனைவரும் இன்னும் பேசுங்கள்...
இன்னும் பேசுங்கள் என்று கத்தினர்.

காந்தியோ தனக்கே உரித்தான புன்சிரிப்போடு, 
ஏப்போது நான் இன்னும் பேசமாட்டேனா என்ற
எதிர்பார்ப்பு உங்களிடம் இருக்கிறதோ அப்போதே என்
பேச்சை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
அதுதான் நியாயம்...எனக்கும் நல்லது.
உங்களுக்கும் நல்லது என்று சொல்லிவிட்டு 
மேடையைவிட்டு இறங்கி சென்று விட்டாராம் 
காந்தியடிகள்.

குறைவாகப் பேச வேண்டும்.
 நிறைய கேட்க வேண்டும்.

மௌனமாக இருந்தே அதிகமாக கேட்க
கேட்க அறிவு பெருகும். சிந்திக்கும் ஆற்றல் வளரும்.
மனம் தூய்மையாக இருக்கும் . இப்படிப்பட்ட
தூய்மையான மௌனம் பேசும்.

மௌனம் நாம் நினைப்பதையும்
பேசும். நினைக்க முடியாததையும் பேசும்.
சிந்தைக்கு எட்டியதையும் பேசும்.
சிந்தைக்கு எட்டாதவற்றையும் பேசும்.

பேசாதவற்றைப் பேசவைக்கும் ஒரே மொழி
மௌனமொழிதான்.

மனதை மௌனமாக வைத்துக் கொள்வோம்.
மௌனம் பேசட்டும்.


 
 
 

Comments

Popular Posts