சாது மிரண்டால்...


                          சாது மிரண்டால்....

"சாது மிரண்டால் காடு கொள்ளாது "
என்பது முதுமொழி.

இயற்கையாகவே சிலர் அமைதியான
குணம் கொண்டவர்களாக இருப்பர். 
அவர்களுக்கு எளிதாக கோபம் வராது.
 எத்தனைமுறை நாம் சீண்டினாலும் 
 பொறுத்துக் கொள்வர்.
ஆனால் ஒருவரின் தன்மானத்தைச் சீண்டிப் 
பார்க்கும்போது யாருமே அமைதியாக
 போனால் போகட்டும் போடா 
 என்று விட்டுவிடுவதில்லை.
 
பொங்கி எழுந்து விடுவர்.எல்லா நேரங்களிலும்
எல்லோராலும் பொறுமையாக இருக்க முடியாது.
கோபமே வராதவர்களைக் கோபப்படுத்திப்
பார்த்தால் அதனால் ஏற்படும் எதிர்விளைவுகளை 
நம்மால் தாங்கிக் கொள்ள முடியாது. 

இதைத்தான் இந்த முதுமொழி
வலியுறுத்துகிறது.

ஓர் ஊரில் சுயம்பு என்றொரு விவசாயி இருந்தார்.
தான் உண்டு தன் வேலை உண்டு என்று
யாருக்குமே தொந்தரவு இல்லாமல் வாழ்ந்து வந்தார்.
அக்கம்பக்கத்தினரிடம் எந்த வம்புதும்புக்கும்
போகமாட்டார்.
மிகவும் சாதுவானவர் என்று பெயரெடுத்து
வைத்திருந்தார்.
அவருடைய சாதுவான குணம் அவரை பலவீனமானவர்
என்றும் பிழைக்கத் தெரியாத மடசாம்பிராணி
என்றும் பிறரால் இழிவாக பேசும் நிலைக்குத்
தள்ளியது. 
இருப்பினும் அவர் இதனைப் பெரிதாக
எடுத்துக் கொள்ளவில்லை.

காட்டு விலங்குகளுக்குக் கூட அவரால்
தீங்கு நேரிடாது.நாள்தோறும்
கையில் கவணோடு காட்டிற்குச் சென்று 
தன் வயலில் விளைந்த சோளக் கதிர்களைத் 
தின்னவரும் பறவைகளை விரட்டுவார்.
ஆனால் மறந்தும் எந்த விலங்குக்கும்
 தீங்கு செய்ய மாட்டார்.
 எந்த விலங்கு மீதும் கவணிலிருந்து விடப்படும்
 கல் பட்டுவிடக் கூடாது என்பதில் கவனமாக
 இருப்பார்.
 
 பார்க்கும் விலங்குகளுக்கு எல்லாம்
 ஒரே கொண்டாட்டம்.
 கண்ணெதிரே கிடைக்கும் வாய்ப்பைப்
 பயன்படுத்திக் கொள்ளத் தெரியாத
 முட்டாள் என்று பட்டம் கொடுத்து
 நக்கலடித்து வந்தன.
 
ஒருநாள் அவர் ஒரு மர நிழலில் 
தூங்கி கொண்டிருந்தார்.
அதனால் எதிரில் என்ன நடக்கிறது என்பது
தெரியாது என்ற நினைப்பில் எல்லா விலங்குகளும்
அவரைச் சுற்றி சுற்றி விளையாடிக் கொண்டிருந்தன.

இதுவரை தங்களுக்குள் விளையாடிக் கொண்டிருந்த
 விலங்குகளுக்கு இப்போது ஒரு விபரீத
ஆசை. நாம் சற்று இந்த மனிதரோடு 
விளையாடிப் பார்ப்போமே எனக்
குதர்க்கமாக யோசிக்க ஆரம்பித்தன.

முதலாவதாக, முயல் வந்து அந்த மனிதர் மீது ஏறி
மறுபக்கமாகத் தாவித்தாவி விளையாடியது.
அவருக்கு விழிப்பு வந்தது. ஆனாலும்
கண்களைத் திறக்காமல் அப்படியே கிடந்தார்.

இரண்டாவதாக  எலி வந்து காலில் கடித்துப்
பார்த்தது. அவர் காலை உதறிவிட்டுவிட்டுப்
படுத்துக் கொண்டார்.

அடுத்து குரங்கு வந்து மார்பின்மீது 
உட்கார்ந்து சேட்டை செய்து பார்த்தது.
ம்..கூம்...ஒரு அசைவையும் காணோம்.

என்ன...இந்த மனிதருக்கு உணர்வே கிடையாதா...
என்று சொல்லியபடி யானை வந்து அந்த மனிதரின்
தாடியைப் பிடித்து  இழுத்துப் பார்த்தது.
இப்போது அந்த மனிதர் மெதுவாகக் கண்களைத் 
திறந்து பார்த்தார்.

இருப்பினும் வாயைத்திறந்து ஒரு 
வார்த்தைகூட சொல்லவில்லை. 
இன்னுமா இந்த மனிதருக்குச் சுரணை இல்லை ...
என்றபடி காகம் ஒன்று அவர் தலைமீது
அமர்ந்து எச்சிலிட்டது.

அதுவரைப் பொறுமையாக இருந்த மனிதர்
கோபமாக தன் கையிலிருந்த கவணால்
ஒவ்வொரு விலங்கையும் பட்பட்டென்று
போட்டுத் தள்ளிவிட்டு ஒன்றுமே நடக்காததுபோல்
அமர்ந்து கொண்டார்.

மனிதர் சாதுவானவர்தான். ஒரு ஈ எறும்புக்குக்கூட
தீங்கு நினைக்காதவர்தான்.
ஆனால் அவரின் பொறுமைக்கும் ஒரு
 எல்லை உண்டல்லவா !
 தனக்கு எதிரான தாக்குதல் எல்லை மீறிப்
 போகும்போது  சாதுவாக இருந்தாலும்
 தாங்கிக் கொள்ளமாட்டார்.
 எதிர்த் தாக்குதல் உக்கிரமாகத்தான் இருக்கும்.
 
இதைத்தான் சாது மிரண்டால் காடு கொள்ளாது 
என்பர்.
 பொறுமை ஒரு எல்லைவரைதான்.
 எல்லை தாண்டி நாம் ஆட்டம் காட்டினால்
 தாங்க முடியாத எதிர் விளைவுகளைச்
 சந்திக்க நேரிடும்.
 
மௌனமாக இருப்பவர்களையும் பொறுமையாக
இருப்பவர்களையும் ஒருபோதும் குறைவாக
மதிப்பிட்டுவிடக் கூடாது.
மௌனம் விலை மதிப்புள்ளதுதான்.
ஆனால் ஆபத்தானதும்கூட...
அவர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக
இருக்க வேண்டும்.

வாய் பேசுகிறவர்கள் அப்படிச் செய்துவிடுவேன்...
இப்படிச் செய்துவிடுவேன் என்று 
வாயால் பேசிவிட்டு சென்றுவிடுவர்.
மௌனமாக இருப்பவர்கள்
ஆபத்தானவர்கள்.

பொறுமையானவர்களை இந்த ஆளெல்லாம்
நாம் என்ன செய்தாலும் திருப்பி
அடிக்க மாட்டார் என்று தவறாக கணித்துவிடக்
கூடாது.
பொறுமைசாலிகள் கடைசிவரை பொறுமையாகத்தான்
இருப்பார்கள் என்று  முடிவு பண்ணிக் கொண்டால்...
அது உங்களின் கணிப்பு தப்பானது
என்பதை ஒருநாள் உணர்த்தும் .

பொறுமைசாலிகளைக் கோபப்படுத்திப்  பார்த்தால்.... 
விளைவு எதிராளியால் தாங்கமுடியாத அளவு 
கடுமையாக இருக்கும்.

இதனை நாம் எப்போதும் மனதில் கொள்ளுதல்
வேண்டும்.ஒரு சின்ன நாய்க்குட்டிகூட தன் வழியில்
அதுபாட்டுக்குப் போய்க் கொண்டிருக்கும்.
அதனை மறித்து இடையூறு செய்தால்
தன்னைக் காப்பாற்றிக் கொள்ள எதிர்த்து நிற்கும்.

திருப்பித் தாக்கத் தெரியாதவர்கள்
என்று யாருக்கும் தீர்ப்பு எழுதி வைத்துவிடாதே!
யாரையும் குறைவாக எடை போடாதே.!
யாரையும் மறுபடியும் மறுபடியும்
முதுகில் குத்தாதே.!
சாது மிரண்டால் காடு கொள்ளாது.
 Comments

Post a Comment

Popular Posts