இனிய உளவாக இன்னாத கூறல்....

    இனிய உளவாக இன்னாத கூறல்....

"இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று "

                                        குறள் : 100


இனிய- இனிமை தருகின்ற
உளவாக - இருக்கின்றபோது
இன்னாத - தீமை தருபவை
கூறல் - சொல்லுதல்
கனி- பழம்
இருப்ப - இருக்கும்போது
காய் - பழுக்காத காய்
கவர்ந்து -கொள்வது, உண்பது
அற்று - அத்தன்மையது

இனிமையான சொற்கள் இருக்கும்போது 
அவற்றை விட்டுவிட்டு கடுமையான 
சொற்களைப் பேசுதல் கனிகள் இருக்கும்போது
அவற்றை உண்ணாது காய்களை உண்பற்கு
ஒப்பானதாகும்.

விளக்கம் : 

இனிமையான சொற்கள் ஏராளமாக
உண்டு. அவற்றைத் தாராளமாகப்
பயன்படுத்தலாம். ஆனால் சிலர்
வாயிலிருந்து எப்போதும் கடுமையான
சொற்கள் மட்டுமே வெளிவரும்.
எதெற்கெடுத்தாலும் கடுகடுப்பும்
சிடுசிடுப்பும் மட்டுமே வெளிப்படும்.

என்ன சொன்னாலும் ஏறுக்குமாறாக
இடக்குமடக்காக பேசுவர்.
பிறர் மனதைப் புண்படுத்த வேண்டும்
என்ற நோக்கோடு வார்த்தைகளைத்
தேடித்தேடி குத்தி எடுப்பர்.
அவர்கள் எண்ணம் பிறரைக்
காயப்படுத்த வேண்டும் என்பதாகவே இருக்கும்.
அந்தச் சொற்களைத்தான்
திருவள்ளுவர் காய் என்கிறார்.

இனிமை தரும் சொற்களைக்
கனி என்கிறார்.

நல்ல சொற்கள் ஏராளம் உண்டு.
தாராளமாக பயன்படுத்தலாம்.
பிறரைக் காயப்படுத்துவதால் நமக்கு
என்ன லாபம்?
நிம்மதி இழந்து போவோம்.

மாறாக இனிமையாகப் பேசிப்
பழகிப் பாருங்கள். ஒரு நிம்மதி கிடைக்கும்.
மனதை மகிழ்ச்சியாக வைத்துக்
கொள்ள முடியும்.நம்மைச் சுற்றி
உள்ளவர்களும் மனம் வாடாமல் இருப்பர்.

இனிமையான பழம் இருக்கும்போது
காயைத் தின்னுவது போன்றதுதான்
இனிமையான சொற்கள் இருக்கும்போது
பிறரைத் துன்பத்திற்குள்ளாக்கும்
சொற்களைப் பயன்படுத்துவதாகும்.

ஆதலால் இன்னாத சொற்களைக்
கைவிட்டு இனிய சொற்களைப்
பேசுங்கள். அதுதான் கனி கொடுக்கும்
இனிமையைக் கொடுக்கும் .

இன்பம் தரும் சொற்கள்
இருக்க துன்பம் தரும்
கடுமையான சொற்களைத் தேர்வு
செய்து பேசுவது பழமும் காயும் ஓரிடத்தே 
இருக்க பழத்தை விடுத்து
காயை எடுத்து உண்ணுதலுக்கு
ஒப்பானது என்கிறார்
வள்ளுவர்.

இனிய சொற்களுக்கு கனிகளையும்
கடும்சொற்களுக்குக்  காய்களையும்
உவமையாகக் கூறப்பட்டுள்ளதால்
இந்தக் குறள் உவமை அணிக்கு
சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.


English couplet : 

"When pleasant words are easy , bitter words to use is
leaving sweet ripe fruit,the sour unripe to choose"

Explanation :

To say disagreeable things when agreeable are at hand
is like eating unripe fruit when there is ripe.

Transliteration : 

"Iniya ulavaaka innaadha kooral
Kaniiruppak kaaikavarn thatru "


Comments

Popular Posts