செல்லதாயி
செல்லதாயி
"ராசா...ராசா
ராசா வந்திருக்காரா? "
வருகை பதிவேட்டிலிருந்து கண்களை
எடுக்காமலே கேட்டார் சூப்ரவைசர் செல்வி.
"இதோ இருக்கேம்மா." தட்டுத் தடுமாறி
எழும்பினார் ராசா.
"வாங்க வந்து கையெழுத்துப் போடுங்க"
அவசரப்படுத்தினார் செல்வி.
"வாங்க ...வாங்க. எல்லோரும்
வரிசையாக வந்து கையெழுத்துப் போடுங்க."
செல்வி சொல்லியதுதான் தாமதம்
அனைவரும் வரிசையாக வந்து நின்றனர்.
ஒருவர் கையெழுத்துப் போடுவதும்
இன்னொருவர் கைரேகை பதிவு செய்வதும்
என்று முண்டியடித்து வேலை விறுவிறுப்பாக
நடந்ததுகொண்டிருந்தது.
" எல்லாரும் கையெழுத்துப் போட்டாச்சா?
யாரும் பாக்கி இருக்கா ?"
கேட்டபடியே பதிவேட்டை ஆய்வு
செய்தார் செல்வி.
" செல்லதாயி....செல்லதாயி
செல்லதாயி வரலியா?"
கூட்டத்தில் செல்லதாயியைத்
தேடினார் செல்வி.
"வந்திருக்காங்க...வந்திருக்காங்க.
செல்லதாயி பாட்டி அம்மா கூப்பிடுறாங்க .
போங்க... ....போய் கையெழுத்து
போடுங்க "என்று
எழுப்பிவிட்டாள் புஷ்பம்.
"சீக்கிரம் வாங்க .
எனக்கு நேரம் ஆகுது.
அலுவலகத்திற்குப் போய் பதினோரு
மணிக்குள்ளார ரிப்போர்ட் கொடுக்கணும் "
.
செல்லதாயி தட்டுத் தடுமாறி சுவற்றைப்
பிடித்தபடி நடந்தார்.
"நடக்க முடியல. நீங்க எல்லாம் எதுக்கும்மா
வேலைக்கு வாரீங்க" சலித்துக்கொண்டார்
செல்வி.
" கைகுடுங்க பாட்டி ." கையை நீட்டி
பாட்டியைப் பிடித்து கைதாங்கலாக
முன்னே அழைத்துச் சென்றாள்
பக்கத்து வீட்டுப் பெண் பார்வதி.
மேசை அருகே வந்து
கையை ஊன்றிய செல்லதாயி
மேசையில் இருந்த தண்ணீர்
பாட்டிலை கீழே தட்டிவிட
"பாத்து...பாத்து....ஐயோ உங்களை எல்லாம்
என்னத்தைச் சொல்ல....சரி
கைநாட்டு தான" என்று
கையில் வைத்திருந்த பதிவேட்டையும்
கை ரேகை வைக்க மையையும்
நீட்டினார் செல்வி.
மையின் மீது விரல்
மேலும் கீழுமாக கோடிழுத்து
இதயத்துடிப்பை வரைபடமாக்கிக்
கொண்டிருந்தது.
"எம்மா ....கொஞ்சம் விரலைப் பிடிச்சு
மையில அமுக்கிவிடுங்க"
"பெருவிரல அழுத்துங்க பாட்டி...".என்று
விரலை அழுத்திவிட்டாள் பார்வதி.
"உங்க பெயருக்கு நேராக
கைநாட்டு வையுங்க பாட்டி ."
என்று பதிவேட்டை பாட்டி பக்கம்
நகர்த்தினார் செல்வி.
கை வடக்க தெக்க இழுத்து
மேலிருந்த கையெழுத்துக்கு மேல
போயி நின்றது விரல்.
"ஐயோ...கருமம்..கருமம்"
தலையில் அடித்துக் கொண்டார்
செல்வி.
"இனி கை நாட்டுக்கெல்லாம் தனி
பதிவேடு போடுங்க மேடம்.
அப்போதான்
சரியாக இருக்கும்" என்றாள் பார்வதி.
"நம்ம அப்பன் வீட்டு அரசாங்கமில்ல.
நம்ம நினைச்சபடி எல்லாம் கையெழுத்து
வாங்குவதற்கு?"
கோபப்பட்ட செல்வி,
" சரி ...சரி இப்போ எல்லோரும் போங்க.
அவரவருக்கு ஒதுக்கப்பட்ட இடத்துல
போயி வேலையை பாருங்க.
நான் அலுவலகம் போய்விட்டு
மூன்று மணிக்கெல்லாம் வந்துருவேன்.
அதுக்கு முன்னால ஆபீசர் யாரும் வந்தா மாட்டிக்காதீங்க...சொல்லிபுட்டேன்"
என்றபடியே கைப்பையை எடுத்து
தோளில் மாட்டியபடி வெளியேறினார்.
அனைவரும் கையில் மண்வெட்டியை
எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினர்.
வேலை செய்ய ஒதுக்கப்பட்ட இடத்திற்கு
அருகில் சென்றதும் அனைவரும்
தனித்தனி குழுக்களாக
மரத்தடியின்கீழ் போய்
இடம்பிடித்து உட்கார்ந்தனர்.
"ஏ...தாயி பாக்கு இருக்கா...
அவசரத்துல வெறும் வெத்திலைய
எடுத்து வந்துட்டேன்.
இருந்தா குடேன் "
என்றார் ராசா அண்ணன்.
"ஒத்த பாக்குதான் இருக்கு...
வேற யாருகிட்டேயாவது கேட்டு
பாருங்க" கையை விரித்தார்
மரியா.
"செல்லாத்தா ஒத்த பாக்கு
இருக்குமா? "
செல்லாத்தாவை நோக்கி
திரும்பினார் ராசா.
"உமக்கு வேற வேலை இல்ல..
நெதம் நெதம் அது கொண்டுவர
மறந்துட்டேன்...இது கொண்டு
வர மறந்துட்டேன்
என்று இரவல் பொழப்பு நடத்துரீரு "
.
"ஏ...பயண்டாட்டி....என்னா பேச்சு
பேசுறா....உன் சொத்தையா
எழுதி கேட்டுபுட்டேன்.
ஒரு துண்டு பாக்கு கேட்டதுக்கு
இவ்வளவு இழுப்பு இழுக்குதியாக்கும்"
"பாக்கு என்ன சும்மாயா கெடைக்கு?
பைசா குடுத்து வாங்கி வரணும்.
தேடி யாருக்கு வைக்கிறீரு...
விழுந்தா என்னன்னு கேக்க மாட்டான்
உம்ம மவன். ஞாபகம்
வச்சுகிடும்."
"இப்போ எதுக்கு எம் மவன
வம்புக்கு இழுக்குற"
"மன்னிச்சுகிடுமையா...தெரியாம
சொல்லிபுட்டேன்"கும்பிடு போட்டார்
சின்னாத்தா.
"வந்ததும் வராததுமா இரண்டுபேரும்
எதுக்கு சண்டைய வளக்கிய...
பாக்குதான வேணும்.
இந்தாரும். அவகிட்ட போயி
வம்ப விலைகுடுத்து வாங்கிகிட்டு"
என்று பாக்கை
எடுத்து நீட்டினாள் சின்ன பொண்ணு.
"நான் வம்பு வளக்குறேன்...என்ன ?
என்ன பாத்தா உனக்கு வம்புகாரியா
தெரியுதோ? "
"ஏ...ஆத்தா... விடு ஆத்தா..
தெரியாம
சொல்லிபுட்டேன் "
"தெரிஞ்சா இன்னும் ரொம்ப
சொல்லுவியோ?"
"உங்கிட்ட வாயை குடுத்துட்டு
யார் தப்பிக்க முடியும்?
இனி உன் வழிக்கே வர மாட்டேன்
தாயி.."
என்ற சின்ன பொண்ணு
தோள் சீலையை உதறி
விரிச்சி படுத்து கண்களை மூடிக்
கொண்டாள்.
இந்த வம்பு நமக்கு
வேண்டாம்பா என்று நினைத்தவராக
ராசாவும் எழும்பி பக்கத்துல நின்ற ஒரு
வடலி மூட்டுகிட்ட போயி
குத்தவுச்சுகிட்டாரு.
யாரு எக்கேடு கெட்டா எனக்கென்ன என்று
நடுத்தர வயது பெண்கள்
கையோடு கொண்டு வந்திருந்த
பீடி இலையை எடுத்து
பீடி சுற்றத் தொடங்கினர்.
பார்வதிக்கு மட்டும் சும்மா இருந்து
சம்பளம் வாங்க பிடிக்கல.
"வாங்க போய் ஒரு தேரத்து
வேலையயாவது பார்த்துட்டு வருவோம் "என்று
எழும்பினாள்.
"நீ போறேன்னா போ.
நாங்க இன்னும் நூறு பீடி சுற்றணும்.
சாயங்காலம் பீடி கடையில போயி
நானூறு பீடியாவது கொடுக்கணும் "
என்று கருமமே கண்ணாக இருந்து
பீடி சுற்றுவதில் மும்முரமாக இறங்கிவிட்டனர்
ஒருசில காரியவாதிகள்.
"யாரெல்லாம் வாரீகளோ வாங்கப்பா.
நான் போய் என் பங்கு வேலைய
செய்யப் போகிறேன்"
என்று மண்வெட்டியோடு புறப்பட்டாள்
பார்வதி.
செல்லதாயி பாட்டி என்ன நடக்கு?
யாது நடக்கு ?என்று
ஒரு கவலையும் இல்லாமல்
வேப்ப மரத்து நிழலுல நல்லா
படுத்து தூங்கிவிட்டார்.
"குடுத்து வச்ச மகராசி.
தூங்குறத பாரு..."
கிண்டலடித்தாள் வசந்தி.
"சும்மா கெட....
கேட்டுற போவுது....எழும்பி
சாமி ஆடிருவா கிழவி "
என்று சொல்லி சிரித்தாள் புஷ்பம்.
" அவரை எழுப்பாதீர் அப்படியே தூங்கட்டும்"
வசனம் பேசினாள் பாலா.
.
தேரம் சென்றதும் வேலை நடக்கும்
இடத்துக்குப் போயி ஏதோ பெயருக்கு
அப்படியும் இப்படியும் பாவலா காட்டி
மண்வெட்டியைத் திருப்பித் திருப்பி
காட்டிக் கொண்டிருந்தது பீடி கம்பெனி.
முழுதாக ஒருமணி நேரம் கூட ஆகவில்லை.
மறுபடியும் மாநாட்டு அரங்குக்கு வந்து
சேர்ந்தனர்.
" என்னா வெயில் நிற்க முடியல ...
அனல் அடிக்குது.".என்றபடி
சாப்பாட்டு வாளியைத் திறந்தார்
சின்னாத்தா.
" தொட்டுகிட ஒண்ணும் கொண்டு வரல.
ஏ தாயி நீ என்ன வச்சிருக்கா?"
"சுட்ட கத்திரிக்கா துவையலு ஆத்தா.
வேணுமா.?"
"கத்தரிக்கா ஊறலுல்லா எடுக்கும்.
வசந்தி நீ என்னதாயி
எடுத்தாந்தா?"
"நேத்து உள்ள பழைய குழம்பையும்
கூட்டையும் சேத்துபோட்டு
சுண்ட வச்சி எடுத்து வந்தேன்.
பழையதுக்கு தொட்டுகிட
நல்லா இருக்கும்"எடுத்துக்கோங்க பெரியம்மோ
நீட்டினாள் வசந்தி.
"உன் மாமியா அறுத்த கைக்கு
சுண்ணாம்பு வைக்க மாட்டாள
வயிறார சோறு போடுதாளா? இல்லியா?"
என்று வசந்தியை வம்புக்கு இழுத்தபடியே
சுண்ட குழம்பு வாங்க
வாளி மூடியை நீட்டினார் சின்னாத்தா.
"சும்மா இருங்க பெரியம்மோ...
யாராவது போய் வத்தி வச்சுட்டாவன்னா
என்னை வீட்டுல உண்டு இல்லன்னு
பண்ணிபுடுவாவ "
மெதுவாக செல்லாத்தாவின் காதில்
கிசுகிசுத்தாள் வசந்தி.
" ஒருசில்லு தேங்கா வாங்குவதற்கே ஒப்பாரி
போடுவா....பைசா எடுப்பதுக்கு
கையி விளங்காதவ..உங்க மாமியா...."
பேச்சை விடாமல் இழுத்துக்
கொண்டிருக்கும்போதே தூரத்தில்
ஜீப் ஒன்று வருவதைப் பார்த்துவிட
ஆளாளுக்கு தின்னும் தின்னாமலும்
படக்கென்று எழுப்பி நின்றனர்.
அதற்குள் ஜீப் அவர்களைக்
கடந்து சென்று கொண்டிருந்தது.
"நம்ம ஆபீசருங்க இல்ல....கால்வா கரையை
பார்க்க வாரவுக.... "
"ஒரு நிமுசம் நான் பயந்தே
போயிட்டேன்."
"நானும் அப்புடித்தான். மடியில
வச்சிருந்த பீடி இலைய
அப்படியே கீழ தட்டிபுட்டேன்"
"பயந்தது போதும்..புறப்புடுங்க ...புறப்புடுங்க."
"எங்க புறப்படச் சொல்றிய"
"இனி எந்த பய வரப் போறான்.
வீட்டுக்குப் போவோம் "
அதிகாரதொனியில் அதட்டி
புறப்பட வைத்தார் சின்னாத்தா.
"ஏ..இவள....அந்தா படுத்துக்கிடக்கிற
பெரிய மனுஷிய எழுப்பு....
நேரம் தாரப்போவுது"
"பாட்டி....பாட்டி...."
கிட்டப்போயி சத்தம் கொடுத்தாள்
வசந்தி.
"பாட்டி என்ன அனக்கம் காட்டாம
கிடக்காவ."
"நேத்து ராத்திரி மலையில போயி
தீயணைக்க போயிருப்பா கிழவி.
அதான் செத்த தூக்கம்
தூங்குறா.. உசுப்பு...உசுப்பு"
" பாட்டி....பாட்டி "உலுக்கிப் பார்த்தாள்
வசந்தி.
"பெரியம்மோ.... நீங்க வந்து மேல
கை வச்சி பாருங்க...எனக்கு
என்னவோ பயமா இருக்கு"
"கிழவி செத்துகித்து போயிட்டாளா?"
என்றபடி கையை வைத்து
வேகமாக உலுக்கினார்
சின்னாத்தா.
உலுக்கின உலுக்கலில் மல்லாக்கா
போய் விழுந்தார் செல்லதாயி பாட்டி.
"ஆ.."அலறினார் சின்னாத்தா
"என்ன... என்ன என்னாயிற்று "என்றபடி
அனைவரும் ஓடி வந்தனர்.
மூக்கில் கை வைத்துப் பார்த்து
ம்கூம்.....கையைத் திருப்பி ஆட்டினார்
சின்னாத்தா.
ஆளாளுக்கு தொட்டுப் பார்த்து
உதட்டைப் பிதுக்கினர்.
"ராசாண்ணே....ராசாண்ணே
ஓடியாங்க ஓடியாங்க "
உரக்கக் கத்தினாள்
வசந்தி.
ராசா வந்து கையை வச்சு
பார்த்துட்டு "எனக்கு என்னவோ முடிஞ்சி
போன மாதிரிதான் இருக்கு "என்றார்.
"போய் சீக்கிரம் அலுவலகத்தில்
தகவல் சொல்லிடுங்க...
ஓடுங்க ஓடுங்க"
கத்தினார் செல்லாத்தா.
அலுவலகம் நோக்கி ஓடிய ராசா
கையோடு செல்வியை
கூட்டி வந்தார்.
பதற்றத்தோடு வந்த
செல்வியும் செல்லதாயியை
தொட்டுப் பார்த்தார்.
" செல்லதாயி பாட்டி...... பாட்டி"
என்று தன் பங்கிற்கு கூப்பிட்டும்
பார்த்தார் .பதில் ஏதுமில்லை.
நிலைமையைப் புரிந்து கொண்ட செல்வி
"பக்கத்து வீட்டுக்காரங்க யாராவது
இருக்காங்களா?
வீட்டுக்குத் தகவல் சொல்லணும்"
"வீட்டுல யாரும் இல்ல மேடம்.
ரெண்டு பிள்ளைகளும்
வெளியிடத்துல இருக்காவ"
"எங்க இருந்தா என்ன?
இப்போ தகவல் சொல்லி ஆவணும...
போன் நம்பர் ஏதும் இருக்கா.."
"வீட்டுல இருக்கு மேடம் "
"சரி நீங்க வீட்டுல போயி
போன் நம்பர் எடுத்துகிட்டு
ஆஸ்பத்திரிக்கு வந்துடுங்க.
நான் அதுக்கு முன்னால
ஆம்புலன்சுக்குப் போன் பண்ணி
ஆஸ்பத்திரிக்கு பாடியை
எடுத்துப் போறேன்."
"சரி "என்றபடி வீட்டுக்கு
ஓடினாள் பார்வதி.
" நான் மேலே என்ன பார்மாலிட்டீஸ்
எல்லாம் முடிக்கணுமோ அத
முதல்ல முடிக்கணும்.."என்று
பேப்பரும் கையுமாக
ஏதோ எழுத உட்கார்ந்தார் செல்வி.
.
எல்லோரும் ஆளாளுக்கு
அங்கேயும் இங்கேயும் ஓடி தகவல்
தெரிவிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அதற்குள் நூற்றுஎட்டு வந்துவிட
செல்வி தன்னோடு
ராசாவையும் இன்னும் ஒன்றிரண்டு
பெண்களையும் கூட்டிக் கொண்டு
வண்டியில் ஏறப் போனார்.
"மேடம் சின்னாத்தாவ கூப்பிடுங்க....
அவங்கதான் நல்லா பேசுவாவ"
என்றாள் வசந்தி.
"நாம என்ன... பேச்சு வார்த்த
நடத்தையா போறோம்?"என்று
முறைத்த செல்வி.....
"வாங்க சின்னாத்தா...வந்து
வண்டியில ஏறுங்க "என்று
கையைப் பிடித்து இழுத்தார்.
"அங்க போனா...போலீசு அது இதுன்னு
தேரமாவும்...அது நமக்கு
சரிபட்டு வராது. நீங்க போங்க "
என்று மறுத்தார் சின்னாத்தா.
"அதுக்குத்தான உங்கள மாதிரி
ஒருவிவரம் உள்ளவியள
கூப்புடுதோம். வாங்க பெரியம்மோ...
வண்டியில ஏறுங்க..."
வலுக்கட்டாயமாக ஏற்ற
முயற்சி செய்தாள் வசந்தி.
"எனக்கெல்லாம் போலீச கண்டா
பேச்சே வராதுப்பா...".வண்டில
இருந்து கீழ குதிக்கப்
போனாள் புஷ்பம்.
சேலையைப் பிடித்து இழுத்த செல்வி
"இப்போ எங்க போற.?
சாட்சி சொல்ல
நாலுபேர் வேண்டாமா ? "
என்றார்.
"சாட்சி ...யா ?..."வாயைப் பிளந்தனர்
அனைவரும்.
"பின்ன...நீங்க தானே கண்ணால
பார்த்த சாட்சி "
"நாங்க என்னத்த பார்த்தோம்?"
ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்து
பேசினர்.
"மேடம் ...மேடம் சின்னாத்தாவ
விடாதுங்க மேடம்.
அவியதான் யாருக்கும்
அசராம பதில் கொடுப்பாவ"
"சின்னாத்தா வண்டியில வந்து
ஏறுங்க...."
சின்னாத்தாவையும் ஏற்றிக்கொண்டு
நூற்று எட்டு மருத்துவமனை
வாசலில் போய் நின்றது.
" என்ன.. யாது ..என்ன கேஸ்".
என்று விசாரித்தபடி
மீடியா நண்பர்கள் சூழ்ந்து கொண்டனர்.
பணியின்போது
மயங்கி விழுந்து
ஒரு அம்மா இறந்துட்டாங்க....
அவ்வளவுதான். வேறு ஒண்ணும்
இல்ல" என்றார் செல்வி.
அதற்குள் ஒரு நிருபர் செல்லாத்தாவிடம்
மைக்கை நீட்டி... "பெரியம்மா
நீங்க சொல்லுங்க....
என்ன நடந்துச்சி "என்று கேட்க
"வெயிலுல நின்னு வேலை
செய்திட்டு இருக்கும்போது
திடீர்ன்னு தண்ணி தண்ணின்னுட்டு
கீழ சரிஞ்சிட்டா...அவ்வளவுதான்
மூச்சு பேச்சு இல்ல "
கண்களை கசக்கியபடி
பேச்சை நிறுத்தினார் செல்லாத்தா.
."அரசுக்கு என்ன
கோரிக்கை வைக்க நினைக்கிறீங்க?
சொல்லுங்க"என்றார் நிருபர்.
"எங்க வேலைக்கு பாதுகாப்பு
வேணும்.வாரத்துல ஆறுநாளு
வேலை வேணும்.
வேலை இல்லாத நாளுக்கு நாங்க
சாப்பாட்டுக்கு எங்க போவோம் ?
இப்புடி வேலை செஞ்சிட்டு
இருக்கும்போதே செத்த குடும்பங்களுக்கு
அரசு ஆறு லச்சம் பணம் தரணும்.
இல்லன்னா நாங்க இங்கேயே இருந்து
போராட்டம் பண்ணுவோம்.."என்றபடி
தரையில் உட்கார்ந்த சின்னாத்தா,
"வாங்கட்ட அங்க என்ன பாத்துகிட்டு
நிக்கிய...உங்களுக்காகதான பேசிகிட்டு
இருக்கேன் "என்று அனைவரையும்
அழைத்தார்.
"இதுக்குதான் ஆத்தா வேணுங்கிறது"
என்றபடி அனைவரும் பக்கத்தில் வந்து
அமர்ந்து தங்கள் பங்குக்கு
"ஆறுநாள் வேலை கொடு
ஆறு லச்சம் பணம் கொடு"
என்று கோஷம் போட்டனர்.
அதற்குள் போட்டோகிராபர் ஒருவர்
நூற்று எட்டுக்குள் கேமராவை
நுழைத்து வளைத்து வளைத்து
செல்லதாயை போட்டோ
எடுத்துக் கொண்டிருந்தார்.
மறுநாள்....
" வெயில் தாங்க முடியாமல்
சுருண்டு விழுந்து சாலைப் பணியாளர்
மரணம் .இழப்பீடு வழங்கும்படி
பணியாளர்கள் போராட்டம் "
என்ற செய்தியோடு முதல் பக்கத்தில்
புன்னகைத்துக் கொண்டிருந்தார்
செல்லதாயி .
ஆர்வத்தோடு படிக்கத் தூண்டியது செல்லதாயி கதை.மிக அருமை.
ReplyDelete