தமிழ்ச்சாமி
தமிழ்ச்சாமி
ரயில் நிலையத்துப் படிக்கட்டுகளில்
சுமதி இறங்கிக் கொண்டிருக்கும்போதே
ரயில் நிலையத்திற்குள்
ரயில் நுழைவது தெரிந்தது.
ரயிலைக் கண்டதும் கால்கள்
தானாக வேகமெடுத்தன.
எப்படியாவது பெண்கள் பெட்டியில்போய்
ஏறிவிட வேண்டும் என்று
ஓட்டமெடுத்தாள்.
கூட்டம் அதிகமாக இருந்ததால்
பெண்கள் அனைவரும்
முண்டியடித்துக்கொண்டு
ஏறிக்கொண்டிருந்தனர்.
இதோ ...கைக்கெட்டிய தூரம்தான்.
வண்டியில் ஏறிவிடலாம்.
அதற்குள் வண்டி மெதுவாக
நகரத் தொடங்கியது.
எப்படியோ கம்பியை எட்டிப்பிடித்து
வண்டிக்குள் ஏறிவிட்டாள்.
ஏறிய வேகத்தில்
ஓடிப்போய் ஒரு இருக்கையில்
உட்காரப் போகும்போது
தடுமாறி அங்கே உட்கார்ந்திருந்த
பெண் தோள்மீது
சாய்ந்து விட்டாள்.
அவ்வளவுதான்....
தன் தோளால் சுமதியை
வேகமாக இடித்துத் தள்ளிய
அந்தப் பெண் அத்தோடு
நில்லாமல்
"குத்தி..சல்...சல்..(நாயே...போ...போ...)"
என்று கையில் வைத்திருந்த
கைபேசியை நீட்டி நீட்டி
அதட்டினார்.
ஒரு விதமான அச்சத்தோடு
குரலுக்குரிய நபரை
நிமிர்ந்து பார்த்த சுமதி
அப்படியே அதிர்ச்சியில் உறைந்து
போனாள்.
நடுங்கியபடி சற்று விலகி
அமர்ந்து கொண்டாள்.
"சலோ....சலோ...நிக்கலோ....நிக்கலோ....
(போ....போ..கிளம்பு....கிளம்பு )"
மறுபடியும் அதே
கையாட்டலும் அதட்டலும்.
வலது பக்க இருக்கையில் இடம்
இருந்ததால் படக்கென்று எழும்பி
அந்தப் பக்கம் போய்
உட்கார்ந்து கொண்டாள் சுமதி.
மனசு மரண பயத்தில்
இருந்தது.
மறுபடியும் அந்தப் பெண்ணைப்
பார்க்கத் திராணி இல்லாமல்
கண்களை மூடிக்கொண்டாள்.
அதற்குள் மறு ஸ்டேசன் வந்துவிட...
"சல்.....சல்....நிக்கலோ....நிக்கலோ"
என்ற அதே அதட்டல் குரல்.
தன்னைத்தான் மறுபடியும்
மிரட்டுகிறாரா?
மெதுவாக கண்களைத் திறந்து
பார்த்தாள் சுமதி.
சுமதியைப் போலவே
இன்னொரு பெண்ணும்
அருகில் போய் அமர....
அவளுக்குத்தான் தற்போதைய
அர்ச்சனை.
பயந்துபோன அந்தப் பெண்ணும்
எழும்பி சுமதிக்கு எதிராக உள்ள
இருக்கையில் வந்து அமர்ந்து
கொண்டாள்.
இப்போது சுமதி அந்தப் பெண்ணை
நிமிர்ந்து பார்த்தாள்.
பதிலுக்கு அந்தப்பெண்ணும் உதடுகளைக்
கடித்தபடியே மெல்ல ஒரு சிரிப்பைப்
பதிலாகத் தந்தாள்.
தன்னைப்போலவே
இன்னொரு பெண்ணும்
பாதிக்கப்பட்டிருக்கிறாள்.
இப்போது சுமதிக்கு
சற்று ஆறுதல்.
எதிரிக்கு எதிரி நண்பனாகிப்
போவது இயல்புதானே.
தனக்குக் கிடைத்த அனுபவத்தை
பகிர்ந்து கொள்வதாக எண்ணி,
"மேர்க்கு பி ஐ சா ஹை
(எனக்கும் இப்படித்தான் )"
என்று மெதுவாகப்
பேச்சைத் தொடங்கினாள் சுமதி.
எப்படித்தான் அந்த பாம்பு
காதுகளுக்குக் கேட்டதோ
தெரியவில்லை.
"ஏய்....குத்தி...கியா போலி....
கியா போலி...."( நாயே...என்ன
சொன்னாய்....என்ன சொன்னாய் ).
கான் கே பிச்சே ஏக் சாப்பட்
தேயகா தோ...(செவுட்டை பெயர்த்துபிடுவேன்)"
என்று கத்தியதில் பெட்டியே அதிர்ந்து
போனது.
அனைவரும் அப்படியே அரண்டு போய்
உட்கார்ந்திருந்தனர்.
அந்தக் குரலும்
அதில் இருந்த ஆணவமும்
சுமதியை அப்படியே
நிலைகுலைய வைத்தது.
எந்த நேரத்தில் தன்னை அடிப்பாரோ
என்ற பயம் வேறு வந்து
தொற்றிக் கொண்டது.
கைகள் நடுங்க ஆரம்பித்தன.
கைக்குட்டையை எடுத்துக்
கசக்கிக் கசக்கி நடுக்கத்தை
கட்டுப்படுத்த முயற்சிசெய்து
தோற்றுப் போய் அமர்ந்திருந்தாள்.
இமைகள் முட்டி வரும் கண்ணீரை
வரப்பு கட்டி தடுக்க கடும்
போராட்டம் நடத்திக் கொண்டிருந்தன.
உதடுகள் ஒப்பாரி வைக்க
ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தன.
கண்டதை எல்லாம் எண்ணி
மனம் தட்டுத்தடுமாறிக் கொண்டிருந்தது.
ரயிலில் இருந்து அடித்து
கீழே தள்ளிவிட்டால்...
நினைத்தாலே ஈரக்குலை எல்லாம்
நடுங்குதே.
இன்று வீட்டிற்குப் போய்
பிள்ளைகளைப் பார்க்க முடியாமலேயே
போய்விடுவேனோ?
மரண பயம் முகத்தில்
அப்பிக் கிடப்பது அப்பட்டமாக
தெரிந்தது.
பயத்தில் இருந்தாள் என்பதைவிட
செத்துக் கொண்டிருந்தாள்
என்றுதான் சொல்ல வேண்டும்.
அந்த நபரோ எதுவுமே நடக்காததுபோல
கையில் வைத்திருந்த
கைபேசியில் பேச்சைத்
தொடர்ந்து கொண்டிருந்தார்.
பேச்சில் சிறு குறுக்கீடு
இருந்ததால் இவரோடு
பேசிக் கொண்டிருந்தவர்
"என்ன பிரச்சினை?"
என்று கேட்டிருப்பார் போலிருக்கிறது.
"ஒன்றுமில்லை .ஒரு
குத்தி பக்கத்தில் வந்து
உட்கார வந்தாள்.
அவளை நாலு வாங்கு வாங்கி
துரத்திட்டேன்.
நடுங்கிட்டு கிடக்கா "என்று
தமிழில் தான் செய்துவிட்ட
இமாலய சாதனையைப் பகிர்ந்து
கொண்டிருந்தார் அந்தப் பெண்.
"தமிழா...." சுமதிக்கு அதிர்ச்சி.
தமிழ்ப்பெண்ணா இப்படி
நடந்துகொண்டார்?
மனம் ஏற்கவில்லை.
இதுவரை அந்நியமொழி பேசும்
மக்கள் வாழும் இடத்தில்
ஒரு தமிழ் வார்த்தை கேட்டுவிட்டால்
போதும். எங்கிருந்துதான் பாசம்
வருமோ?
தமிழ் பேசியவரின் தலை மறையும்வரை
திரும்பித் திரும்பிப் பார்த்துக்
கொண்டு நிற்பாள்.
தமிழ்ப்பேச்சு காதுகளில் வந்து
தேனாய்ப் பாயாதா ...என
எத்தனை நாள் ஏங்கியிருக்கிறாள்?
எந்தத் தமிழுக்காக
ஏங்கினாளோ அதே
தமிழில் இன்று அதிரடி
தாக்குதல்.
ஒரே நொடியில் எல்லாம்
நொறுங்கி சுக்குநூறாகிப்
போனதுபோல் இருந்தது.
மனதுக்குள் ஒரு வெறுப்பு வந்து
குடியமர்ந்து கொண்டது.
ஆனால் எதையும் வெளிக்காட்டிக்கொள்ள
முடியாத சூழ்நிலை.
போன் பேசிக் கொண்டே
இருந்தாலும் அந்தப் பெண்
கண்கள் மட்டும் சுமதி மீதே
இருந்தது.
பார்ப்பதைப் பார்த்தால் இன்று
சுமதியை ஒரு வழி பண்ணாமல்
விடமாட்டார் போலிருக்கிறது.
எப்படியாவது இந்தப் பெண்ணின்
கண்களிலிருந்து தப்பித்தே
ஆகவேண்டும்.
ஒரு முடிவோடு எழும்பி
அடுத்தபக்கம் உள்ள வாசல்
பக்கமாகபோய் நின்று கொண்டாள்
சுமதி.
திக்...திக் திகிலுடன்
ஐந்து ஸ்டேசன் கடந்தாயிற்று.
அடுத்தது சுமதி இறங்கவேண்டிய
ஸ்டேசன்.
முதல் ஆளாக முன்னால் போய்
நின்று கொண்டாள்.
பின்னால் அவள் வந்து நிற்கிறாளா
என்பதை உறுதி செய்வதற்காக
திரும்பிப் பார்த்தாள்.
நல்லகாலம். அவள் இல்லை.
பின்னால் பத்துப் பதினைந்து
பேர் நின்று கொண்டிருந்தனர்.
அப்பாடா....இப்போது நமக்கு
இவர்கள்தான் பாதுகாப்பு என்று
ஒரு சின்ன மகிழ்ச்சிக் காற்று
மனதைத் தொட்டுச் சென்றது.
இறங்கியதும் தப்பித்தேன் பிழைத்தேன்
என்று ஒரே ஓட்டமாக ஓடிவிட
வேண்டும்.
இதோ...சுமதி இறங்க வேண்டிய
ஸ்டேசனுக்குள் ரயில்
நுழைந்துவிட்டது.
ஸ்டேசனில் கூட்டம் அலைமோதியது.
கூட்டத்தைப் பார்த்ததும் பின்னால்
நின்ற பெண்கள் தங்களால் இறங்க
முடியாமல் போய்விடுமோ என்ற
நினைப்பில்
"ஜல்தி உத்ரோ...ஜல்தி உத்ரோ"
(சீக்கிரம் இறங்கு...சீக்கிரம் இறங்கு)
என்று குரல் கொடுத்தனர்.
அவ்வளவுதான்....கம்பியைப்
பிடித்துக்கொண்டு
நின்ற சுமதி
வண்டி நிற்கும் முன்னரே
ஒற்றைக் காலை கீழே வைக்க....
மறு வினாடி... ஓவென்ற அலறல்.
ஒட்டு மொத்த பெண்களும்
"ஏக் ஔரத் கிர் கயா...ஏக் ஔரத்
கிர்கயா....( ஒரு பெண் விழுந்துவிட்டாள்....
விழுந்துவிட்டாள் )"
என்று கத்தினர்.
"ஆத் சோடோ மத்....ஆத் சோடோ மத்...
டரோ மத்...டரோ மத்....
(கையை விட்டுடாதே...பயப்படாதே)"
ஆளாளுக்கு எப்படி எல்லாமோ
சத்தம் போட்டனர்.
சுமதியின் காதுகளில் எதுவும்
விழவில்லை.ஆனால் கம்பியை
பிடித்த பிடியை மட்டும்
அவள் விடவேயில்லை.
வண்டியோடு ஓரிரு நிமிடங்கள்
இழுத்துச் செல்லப்பட்டிருப்பாள்.
கீழே நின்றிருந்த
ஆண்களில் சிலர்
".பிச்சே சலோ...பிச்சே
சலோ...(பின்னால போங்க....
பின்னால போங்க)
என்று குரல் கொடுத்தபடியே
காப்பாற்ற ஓடி வந்தனர் .
இப்போது வண்டி நின்றுவிட்டது.
அதற்குள் முந்தி வந்த ஒரு நபர்
தன் இரண்டு கைகளாலும்
சுமதியை அலாக்காக தூக்கி
ரயில் நிலையத்தில் உள்ள
இருக்கையில் அமர்த்தினார்.
சுமதி யாரையும் பார்க்கும்
மனநிலையில் இல்லை.
உடம்பெல்லாம் நடுங்கிக்
கொண்டிருந்தது.
"குச் உவா நஹீ னா "
(ஒன்றும் ஆகல இல்ல)என்று
ஆளாளுக்குக் கேட்டபடி
தண்ணீர் பாட்டிலை எடுத்து
நீட்டினர்.
சுமதியைத் தூக்கி வந்தவர்
தண்ணீர் பாட்டிலை வாங்கி
குடிக்கக் கொடுத்தார்.
தன் முந்தானையால் சுமதியின்
முகத்தைத் துடைத்து
முதுகைத் தட்டிக் கொடுத்தபடி
"பயப்படாதே...பயப்படாதே..."
என்றார்.
அதே குரல்.....
மெதுவாக நிமிர்ந்து பார்த்தாள்.
கைகள் தானாக கூப்பின.
உதடுகள் எதுவும் உச்சரிக்க
தெரியாமல் துடித்துக்
கொண்டிருந்தன.
சுமதியால் பொங்கி வந்த
அழுகையைக்
கட்டுப்படுத்த முடியவில்லை.
"அதுதான் பிழைச்சிட்டா இல்ல...
பின் ஏன் அழுற....சாமி உன்னை
காப்பாத்திட்டு "என்றார் அந்தப் பெண்.
"என் தமிழ்ச்சாமி காப்பாற்றிவிட்டது"என்று
உரக்க கத்த வேண்டும் போல் இருந்தது.
ஆனால் பேச முடியவில்லை.
"பார்த்து பத்திரமா போ "என்றார்.
ஒரு ஏக்கத்தோடு அவரைப்
பார்த்தாள் சுமதி.
அந்தப் பார்வையில் இந்தத்
தமிழுக்காகதான் ஏங்கினேன்
என்ற ஏக்கம் தெரிந்தது.
இனி எப்போதும் சுமதியின் இதயத்தில்
தமிழோடு தமிழ்ச்சாமிக்கும்
நிரந்தர குடியுரிமை உண்டு.
Comments
Post a Comment