கருப்பும் சிவப்பும்
கருப்பும் சிவப்பும்
"ஏல....ஏ...சின்னவள
அந்த கருப்பி அக்கா கடையில
போயி ஒரு தேங்காய் சில்லு வாங்கிட்டு
வா மக்களே "
"நான் கருப்பி கடைக்கும்
போகல்ல...சிகப்பி கடைக்கும்
போகல....போம்மா"
சொல்லிவிட்டு அங்கிருந்து சிட்டாக
பறந்து ஓடிவிட்டாள் பரணி.
"எம்மோ அவ என்ன சொல்லிட்டு
போறா பார்த்தியளா?
கருப்பி....சிகப்பி...
நல்லா இருக்குல்ல..."
என்று சொல்லி சிரித்தாள் அக்கா.
இதுவரை
கருப்பி என்று சொன்னோமா?
கறுப்பி என்று சொன்னோமா?
குழப்பமாக இருக்கிறதல்லவா!
எனக்கும் அதே குழப்பம்தான்.
நீங்கள் இதுவரை உச்சரித்து வந்தது
கருப்பி என்பதுதான்.
வல்லின றகரம் போட்டு
சொன்னீர்களா இல்லை இடையின
ரகரம் போட்டு சொன்னீர்களா என்பது
உச்சரிக்கும் போதே புரிந்திருக்கும்.
புரியவில்லை என்றால்
யரவவழள
கசடதபற
உச்சரிப்பு வேறுபாட்டை
கவனித்துப் பாருங்கள்.
கருப்பியா? கறுப்பியா?
என்பது புரியும்.
நாமும் இந்த கருப்பி ,சிகப்பி
என்ற வார்த்தைகளை எத்தனை
முறை பயன்படுத்தியிருப்போம்.
இப்படி உச்சரித்து எழுத்து
வேறுபாட்டைக் கவனித்ததில்லையே
என்று தோன்றுகிறதா?
சரி போகட்டும். விட்டுவிடுங்கள்.
கிராமப்புறங்களில் இருப்பவர்கள்
இப்படிப்பட்ட சொற்களை
கேட்காமல் கடந்து வந்திருக்க முடியாது.
"மேகம் கறுத்துட்டு ...இப்போது மழை
பெய்துவிடும் "இது மழைக்கால
பேச்சாக இருக்கும்.
"எதுக்கு கறுங்கறுன்னு நிக்குறா...."
என்று கோபப்படுபவரைப் பார்த்து
கேட்கும் கேள்வி இதுவாகத்தான்
இருக்கும்.
"என்னைப் பார்த்தாலே கறுவிக்
கொண்டுதான் நிற்பாள் "என்று
பொறாமை கொண்டவர்களைப்
பற்றிய விமர்சனம்
இப்படித்தான் இருக்கும்.
அட்ட கறுப்பு என்ற சொல்லைப்
பயன்படுத்துவதைக் கேட்டிருப்போம்.
கறுப்பு என்றால் சினம், வெறுப்பு
என்பதைக் குறிக்கவே பெரும்பாலும்
பயன்படுத்தி வந்திருக்கின்றனர்.
அதற்கு மட்டுமல்ல வண்ணத்திற்கும்
அதனைப் பயன்படுத்தலாம் என்று
பரிந்துரை செய்திருக்கிறார் ஒருவர்.
பிங்கல நிகண்டு என்ற அகராதி நூலில்
"கருநிறமும் சினக் குறிப்பும் கறுப்பே "
என்று கறுப்புக்குப் பொருள்
கூறப்பட்டுள்ளது.
இதன்படி பார்த்தால் கறுப்பு என்பது
கருமை நிறம் , சினம்
இரண்டிற்கும் கறுப்பு என்ற
சொல்லைப் பயன்படுத்தலாம்
என்கிறது நிகண்டு.
திருக்குறளில்,
"கறுத்தின்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள் "
என்கிறார் வள்ளுவர்.
"ஒருவன் பொறாமையினால் தீங்கு
செய்தாலும் நாமும் அவனுக்கு
அத்தகைய தீங்கினை
திரும்பச் செய்யாமல் பொறுத்துக்
கொள்ளுதலே குற்றமற்ற மனிதர்களின்
செயலாக இருக்கும்" என்கிறார்
வள்ளுவர்.
கறுத்தின்னா என்பது பொறாமையினால்
செய்யும் தீங்கு என்ற பொருளில்
கூறப்பட்டுள்ளது.
கருவிழி
கருங்கனி நாவல்
கார்வண்ணன்
கரிய செம்மல்
கன்னங் கரிய
கருந்தேள்
காரிருள்
இந்தச் சொற்களில் எல்லாம்
கருமை நிறம் இடையின ரகரம்
பயன்படுத்தியே எழுதப்பட்டுள்ளன.
இவை இலக்கிய சான்றுகள்.
நிலக்கரி , அடுப்புக்கரி என்று
எழுதுகிறோமே தவிர
நிலக்கறி, அடுப்புக்கறி
என்று வல்லின றகரம் இட்டு
எழுதும்போது தவறாகத்
தெரிகிறதல்லவா!
கரி என்பது கருமை ஆகும்.
கறுமை ஆகாது என்பது
நமக்குத் தெரியும்.
அப்படியானால் கருப்பு
சரியாகத்தானே இருக்க வேண்டும்.
அதனால்தான் கறுப்பு என்று
வல்லின றகரம் இட்டு எழுதும்போது
தவறாக இருக்குமோ என்ற ஐயம்
எழுகிறது.
இந்த ஆய்வு ஆளுக்கு ஆள் மாறுபட்டுக்
கொண்டே முடிவில்லாமல் சென்று
கொண்டிருக்கிறது.
கருப்பண்ணசாமியை கறுப்பண்ணசாமி
என்றா எழுதுவோம்.?
அப்படி எழுதிவிட்டால் கோவக்காரசாமி
என்றல்லாவா பொருள்படும்
என கேட்போரும் உண்டு.
இப்போது கருப்புப்பணம் என்று
எழுத வேண்டுமா?
கறுப்புப் பணம் என்று
எழுத வேண்டுமா என்று
இன்னொரு விவாதமும் கூடவே
எழுகிறது.
கருப்புப் பணம் என்று
எழுதுவதுதான் சரி.
பணம் கருப்பாகவா
இருக்கிறது என்ற கேள்வி எழும்.
"கறுப்புப்பணம் என்பது தவறு.
கரிய இருட்டில் அதாவது மறைவாக
வாங்கும் பணம் ...அல்லது மறைத்து
வைக்கப்பட்டிருக்கும் பணம்.
வரி ஏய்ப்பு செய்து இருட்டடிப்பு
செய்த பணம்.
இது மறைவான என்ற பொருளில்
வருவதால் இருட்டு அதாவது
கருமையோடு ஒப்பிடப்பட்டு
கருப்புப் பணம் என்று
எழுதுவதுதான் சரியாக
இருக்கும்.
கோபத்தால் முகம் சிவக்கும்.
சில நேரங்களில் கறுக்கவும் செய்யும்.
"கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள
நிறத்துரு உணர்த்தற்கும் உரிய என்ப"
என்கிறது தொல்காப்பியம்.
அப்படியானால் கறுப்பும் சிவப்பும்
சினம் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டு
வந்தாலும் நிறத்திற்கும் பயன்படுத்தலாம்
என்பதை தொல்காப்பியரே ஒத்துக்
கொண்டுவிட்டார்.
ஆதலால் கறுப்பும் சிவப்பும்
வண்ணத்தைக்
குறிப்பிடுவதற்காக பயன்படுத்துவதில்
பிழை ஏதுமில்லை என்பது
தொல்காப்பியர் கருத்து.
தொல்காப்பியர் கூறும்
"பயிலாதவற்றைப் பயின்றவை சார்த்தி
தத்தம் மரபிற் சென்றுநிலை மருங்கின்
எச்சொல்லாயினும் பொருள் வேறு கிளத்தல்"
என்ற நூற்பாவும் இங்கு நோக்கத்தக்கது.
"அடிக்கடி பயன்படுத்தாத சொற்கள்
அவற்றை அடிக்கடி பயன்படுத்தும்
சொற்களுடன் சாத்தி எச்சொல்லாயினும்
வேறு சாயலான பொருள் தருதல் இயல்பு"
என்கிறார் தொல்காப்பியர்.
ஆதலால் கறுப்பு கருப்பாகிப் போதல்
தவறாகக் கொள்ளப்படாது என்றுதானே
எடுத்துக்கொள்ள வேண்டும்.
கறுப்பு - கருப்பு
சிவப்பு - சிகப்பு
என்று மாற்றி மாற்றி எழுதுவதற்கு
இதுவும் காரணமாக இருக்கலாம்.
கருமை நிறத்தைக் குறிப்பதால்
நிறத்தைக் குறிப்பிடும்போது கருப்பு
என்று எழுதுவதுதான் ஏற்புடையது
என்பது எனது கருத்து.
சிகத்தல் என்று ஒரு வினைச்சொல்
இல்லை.
சிவத்தல் வினைச்சொல்லாகும்.
வெட்கத்தால் முகம் சிவக்கும்.
"முகம் சிகக்கும் "என்று எழுதப்படுவதில்லை.
கண் சிவக்கும்.
கண் சிகப்பதில்லை.
ஆதலால் சிகப்பு என்பது தவறு.
சிவப்பு என்பதுதான் சரியாக இருக்க
வேண்டும்.
நிறத்தைக் குறிப்பிடும்போது கருப்பு
என்றும்
சினம், பஞ்சம் , வெறுப்பு
போன்ற பிற பொருள்களைப்
பற்றி எழுதும்போது கறுப்பு என்றும்
எழுதி வருவோமானால் எந்தவித
குழப்பமும் எழாது என்பது
எனது முடிவான கருத்து.
கருப்பு-சிவப்பு very interesting.
ReplyDeleteஉதாரணங்கள் பல தந்து கருப்பும் சிவப்பும் பிழையின்றி எழுத பதிவிட்ட கட்டுரை மிகச் சிறப்பு.வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅதிக குழப்பம் தரும் சொற்களை எப்படிக் கையாளலாம் என தெளிவுபடுத்திவிட்டீர்கள். அருமை👏👏
ReplyDeleteநல்ல ஆராய்ச்சி
ReplyDelete