அடுத்து முயன்றாலும் ஆகும்நாள்....

 அடுத்து முயன்றாலும்.....

வாழும் காலம் கொஞ்சநாள்தான்.
 அந்த குறுகிய காலத்திற்குள்
 செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்
 ஏராளம் உள்ளன.
 
 அவற்றைத் தாராளமாக
 செய்து நல்லவர் என்ற
 பெயரெடுக்க வேண்டும் என்று
 எல்லோருக்கும் ஆசைதான்.
ஆனால் இது முடிகிற
காரியமா ?

அதற்குள் இடையில் வந்து
முட்டுக்கட்டையிட எத்தனையோ 
துன்பங்களும் துயரங்களும்
வந்து துவைத்துப் போட்டுவிடுகின்றன.

இவற்றிலிருந்து விடுபடுவதுதான் எப்படி?
உலகியலைச் சொல்லித் தந்து
வீழ்ந்துவிடாதபடி தூக்கி
நிறுத்த சான்றோர்களின்
அறவுரைகளும் அறிவுரைகளும்
தேவையாக இருக்கின்றன.

அப்படி நமக்கு ஔவையால்
வழங்கப்பட்ட  அறவுரை நூல்தான் 
மூதுரை.

 நல்ல நெறிமுறைகளைக்
 கடைபிடித்து வாழுங்கள் என்று
 முத்தான முப்பது பாடல்களை
 கல் மேல் எழுத்தாக செதுக்கி 
 வைத்துவிட்டுச் சென்றிருக்கிறார்
 ஔவை.
 
முப்பது பாடல்களும் முப்பதுவிதமான
வாழ்வியல் உண்மைகளை 
கற்றுத் தருகிறது.

அறம் தவறாது வாழ வேண்டும்
என்று சொல்லித் தருகிறது.
எது அறம் என்று உணர்த்திச்
செல்கிறது.

சாலையோரமாகஇருந்த ஆலமரத்து
நிழலில்  விவசாயி ஒருவர்
அமர்ந்திருந்தார்.
அந்த வழியாக வந்த ஔவையும்
மர நிழலில் சற்று  இளைப்பாறிச்
செல்லலாம் என்று 
அருகில் வந்து அமர்ந்தார்.
ஆல மரத்தில் சாய்ந்தபடி எதையோ 
வெறித்துப பார்த்தபடி அமர்ந்தார்
விவசாயி .ஔவை வந்ததைக்
கண்டு கொள்ளவே இல்லை.
அவர் முகத்தில் ஆயிரம் 
கவலைக்கோடுகள்
வரையப்பட்டிருந்தன.

 கவலை அப்பிக் கிடந்ததால்
 எதிரில் அமர்ந்திருப்பவரைக்கூட
 அவரால்பார்க்க முடியாமல்
 போனது.

சற்று நேரம் பொறுமை காத்திருந்த
ஔவை," ஐயா..."என்று
மெதுவாக அழைத்து அவரை இயல்பு
நிலைக்குத் திருப்பினார்.

இப்போதுதான் உறக்கநிலையில்
இருந்து எழும்பியவர்போல
வெடுக்கென்று திரும்பிப் பார்த்தார்
விவசாயி.

"தாங்கள் ஏதோ ஆழ்ந்த
சிந்தனையில் இருப்பதுபோல
தெரிகிறதே "என்று புன்னகையோடு
பேச்சைத் தொடங்கினார்.

"என்னங்க சொல்றது? 
யாரிடம் சொல்லி என்ன நடக்கப்
போகிறது?"

"அப்படி என்ன விரக்தி?"

"எல்லாம் தொழில்  பிரச்சினை தாங்க.
நானும் எவ்வளவோ முயற்சி 
பண்ணிதான் பார்க்கிறேன்.
எதுவுமே கைகூடி வரமாட்டேன்
என்கிறது"
என்று  கவலையோடு பேசினார்.

சிரித்தார் ஔவை.
"என் பொழப்பு உங்களுக்கு
சிரிப்பாகத் தெரிகிறதா"

"இல்லை. இவ்வளவு ஆண்டுகள்
வாழ்ந்தும் உலக நடைமுறை
தெரியவில்லையே....என்று
நினைத்தேன். சிரிப்புத்தான் 
வந்தது."

"அப்படி என்ன தெரியாத்தனமாக
இருந்துவிட்டேன் "

"விவசாயம்தானே செய்கிறீர்கள்?"

"அதிலென்ன சந்தேகம்?"

"அப்படி இருந்துமா இப்படி பேசுகிறீர்கள்.?"

"புதிர் போடாமல் விசயத்திற்கு வாருங்கள்."

"வயலில் எத்தனையோ செடி கொடிகளையும்
பழமரங்களையும் நட்டு பராமரித்து
வருகிறீர்கள்.
எல்லாம் உடனடியாக பலனைத்
தந்துவிடுமா?"

"இல்லை."

"காய்த்து கனி கொடுப்பதற்கு
என்று ஒரு காலம் இருக்கிறதல்லவா!"

"ஆமாம். இரண்டு மாதத்திற்குள்
பலன் தரும் செடிகளும் உண்டு.
ஆண்டுக் கணக்காக காத்திருக்க
வைத்து கனி தரும் மரங்களும்
உண்டு"

"அதுபோலத்தான் செயல்களும்.
இந்த உண்மை உங்களுக்கு
எப்படி புரியாமல் போனது?
எவ்வளவு தான் முயற்சி செய்தாலும்
அதற்கு உரிய காலம் வரும்போதுதான்
நாம் பலனை எதிர்பார்க்க முடியும்"
என்று  பதிலளித்துவிட்டு
அங்கிருந்து அடுத்த ஊருக்குப்
புறப்பட்டுச் சென்றார் ஔவை.

ஔவையின் பாடல் இதோ :

" அடுத்து முயன்றாலும் ஆகும்நாள் அன்றி
எடுத்த கருமங்கள் ஆகா - தொடுத்த
உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்
பருவத்தால் அன்றிப் பழா "
                  - மூதுரை

உருவத்தால் உயர்ந்த மரங்களாக
இருப்பினும் தக்க பருவம்
 அடையும்போதுதான்
மரங்களால் பழங்களைத் தர முடியும்.
அதுபோல நாம் எவ்வளவுதான்
தொடர்ச்சியாக முயற்சி 
மேற்கொண்டு வந்தாலும்
தகுந்த காலம் கூடி 
வரும்போதுதான்
அதன் பலனை நாம் எதிர்பார்க்க
முடியும் என்பது
ஔவை பாடிய பாடலின் பொருள்.

நீங்களும் பலமுறை செய்து
இன்னும் கைகூடவில்லையே
என்று சோர்ந்துபோய் இருக்கிறீர்களா? 

இனி நடக்கவே நடக்காது 
என்று வெறுத்துப் போய்விட்டீர்களா?

எவ்வளவு முயற்சி செய்தும்
கைமேல் பலன் கிடைக்கவில்லையே
என்று கவலைப்படுகிறீர்களா?

கவலையை விடுங்கள்.
அதுஅது அந்தந்த நேரத்தில்தான்
நடக்கும். 
இதுதான் ஔவை நமக்குச்
சொல்லித் தந்த பாடம்.

Comments

Popular Posts