தந்தையைக் கொண்டாடுங்கள்

                   தந்தையைக் கொண்டாடுங்கள்


ஜூன் மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை.
உலக தந்தையர் தினம்.


"மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்"


.மகன் தந்தைக்குச் செய்யத்தக்க உதவி
யாதெனில் இவன் தந்தை 
இவனை மகனாகப்
பெறுவதற்கு என்ன தவம் செய்தாரோ?
 என்று உலகம்
புகழ்ந்து பேச வேண்டும்.
அந்தப் பெருமையை ஒரு மகன்
பெற்றோருக்கு வாங்கித்
தர வேண்டும் என்கிறார் வள்ளுவர்.


 முந்நூறு நாள் சுமந்து
முழு உலகை கண்முன் காட்டி
முட்டி வரும் சொல்லுக்கு  முழு வடிவம்
கற்பித்து, எட்ட நிற்கும் நிலவினையும்
கட்டி இழுத்து வந்து கட்டிலில்
கட்டி வைத்து , கதைகள் பல பேசி,
 காதோடு உறவு கூறி, கன்னம் உரசி
 கன்னல் மொழியாம் தாய்மொழியை
அறிமுகம் செய்து ,
 உயிராய் உணர்வாய் உலகமாய் 
இருப்பவர் அம்மா.
 
நமக்கும் அப்பாவுக்குமான உறவு
யார் இவர் என்பதுபோல
புருவம் உயர்த்திப்
பார்ப்பதிலேயேதான்  தொடங்கும்.
அப்பாவை அறிமுகம் செய்து வைத்தவர்
அம்மா.
அதன் பின்னர் நம் உலகம்
அப்பாவைச் சுற்றிச் சுற்றியே
 இருந்திருக்கும்.
தோள்மீது சுமந்து  ,
மார்மீது கிடத்தி,
கரம் பிடித்து கூடவே 
நடக்க வைத்து
உறவு காட்டி,உலகம் காட்டி
அனைத்தையும் அறிமுகம்
செய்து வைத்தவர் அப்பா.


தோழனாய் உடன் நடப்பார்.
தலையெழுத்தைக்  கொடுத்து
தலைநிமிர வைக்க 
தன்னால் இயன்றவரை கூன் குறுக்கு
ஒடிய உழைப்பார்.
அந்த உழைப்பு மட்டும் இல்லை என்றால்
இல்லத்தின் இயக்கம் 
என்றோ நின்று போயிருக்கும்.

அப்பாவின் உயிர்த்துடிப்பு
இருக்கும்வரை மட்டுமே
இல்லம் இல்லமாக இருக்கும்.
நம் வாழ்வும் வளங்களும்
அப்பாவின் கொடை.

அப்பா இல்லை என்றால் இந்தக்
கல்வி இல்லை. இந்த மரியாதை இல்லை.
தலையெழுத்து தடமாறிப் போகும்.
.இடம்மாறி போகும்.

ஆனால் இந்தச் சிந்தனை எத்தனை பேர்
உள்ளங்களில் இருந்திருக்கும்? .....இல்லை...
இல்லை...இருக்கும் என்று 
நினைக்கிறீர்கள்.?


வளர்ந்து ஆளாகும் வரைதான்
அப்பா தேவை.
நாம் உழைக்கக் தொடங்கிவிட்டால்....
சிறகு முளைக்கத் தொடங்கிவிட்டால்....
சிந்திக்கத் தொடங்கிவிட்டால்...
இதுவரை கரம்பிடித்துக் கூடவே 
நடந்து வந்த அப்பாவின்
கைகளை உதறிவிட்டு
தனியாகப் பறக்க நினைப்போம்.

தட்டிக் கேட்டால் எதிர்த்து 
நிற்போம்.
எட்டடி தள்ளி நின்றுதான்
பேசுவோம்.
சற்று உரக்கச் சொல்லிவிட்டால்
 வீட்டைவிட்டு
ஓடிவிடுவேன் என்று எச்சரிப்போம்.
தோளுக்கு மேல் வளர்ந்த 
பிள்ளையை இதற்குமேல்
என்ன செய்துவிட முடியும் என்று
கைகளைப் பிசைந்து ஊர் உலகத்துக்காக
வாய்பொத்தி ....கைகளை மடக்கி
மௌனம் காப்பதைத் தவிர
அவரால் வேறு ஒன்றும்
செய்திருக்க முடியாது.

அவரின் மௌனத்தை 
கையாலாகாதத்தனம்
என்று தப்புத் கணக்குப் போட்டு
தப்புத் தப்பாக யோசித்திருப்போம்.

குடும்பம் கண்ணீர் தெரியாமல்
வளர வேண்டும் என்பதற்காக
தன் கண்ணீரை குடும்பத்திற்குத்
தெரியாமல் மறைத்து வைப்பார்.
அவர்தான் அப்பா.

அப்பாவின் சமபாதி அம்மா.
அன்பில் சமபாதி கிடைக்காத 
ஆதரவற்ற குழந்தைதான் அப்பா.
இந்தச் சிந்தனை என்றாவது எழுந்ததுண்டா?

அம்மாவிற்கு கொடுப்பதற்கு நம்மிடம்
அன்பு தாராளமாய் உண்டு.
அப்பாவுக்குத் தருவதற்கு மட்டும்
வம்பையும் வீம்பையும் தவிர
வேறு எதுவும் இருப்பதில்லை.

அப்பாவிடம் எல்லைக்கோடிட்டு
 எட்டி நின்று
பேசி நிற்போம்.


அப்பாவுக்குத் தெரிந்ததெல்லாம்  கண்டிப்பு.
 அதனால்தான்   எழுந்ததோ
அப்பாவுக்கு எதிராக  
இப்படியொரு எதிர்ப்பு.?

 அப்பா ஓர் அபூர்வ ராகம்.
அதனை அனுபவித்து மகிழத் தெரிந்திருக்க 
வேண்டும்.அதனைத் தெரிந்த
வைத்திருப்பவர்கள் பெரும்பாலும்
பெண்பிள்ளைகளாகத்தான் இருக்கும்.
விலகியே நிற்பதுபோல் இருக்கும்.
நெஞ்சம் முழுவதும் பிள்ளைகளின்
எதிர்காலம் பற்றியே இருக்கும்.

அதிகம் பேசமாட்டார்.
விழிகளால் மட்டும் பேசுவார்.
அதில் உங்களைப் பற்றிய அக்கறை இருக்கும்.
தொடர்பு எல்லைக்கு அப்பால் 
தொலைவில் இருந்தாலும் 
தொடர்பில் இருக்கும் 
தொலைத்தொடர்பு சாதனம்
அப்பா.

கையில் கிடைத்ததைக்
கை நனைக்க விரும்பாமல்
கையோடு கொண்டு வந்து தந்து
கடைசிவரை உண்பதைக்
கண்குளிர பார்த்து 
கண்கள் நனைவதை
கண்ணுக்குள்ளே மறைத்து
நிற்பவர்தாங்க  அப்பா.
அப்பா வெறுங்கையோடு வீட்டுக்கு
வர நினைக்கவே மாட்டார்.

விரல்கள் காய்த்துப் புடைத்து
வியர்வை குளியல் நடத்தி
வீதியில் வாழ்க்கை நடத்தி
பிள்ளைகளை வீதிக்கு வர விடாமல்
காக்கும் அப்பாவைக்
கொண்டாடுங்கள்.

அம்மாவுக்கு ஒரு தினம்
இருக்கும்போது அப்பாவுக்கு
ஒரு தினம் கொடுக்க வேண்டாமா?

வேண்டும்...வேண்டும் என்று
மனம் உரக்க உரைத்ததால்
 உதயமானதே தந்தையர் தினம்.

தந்தையர்தினம் கொண்டாட வேண்டும்
என்ற எண்ணம் தோன்றியதே ஓர்
அன்னையர் தினத்தில்தான் என்பது
சுவாரசியமான வரலாறு.

அமெரிக்காவின் வாஷிங்டன் நகருக்கு
 அருகிலுள்ள ஸ்போகன் என்ற இடத்திலுள்ள
 ஒரு தேவாலயத்திற்கு ஞாயிற்றுக்கிழமை
சென்றாள் சோனோரா என்ற பெண்.

 தேவாலயத்தில் அன்னையர் தின
 சிறப்பு பிராத்தனைக் கூட்டம்
 நடைபெற்றுக் கொண்டிருந்தது.
 அனைவரும் தங்கள் தாயின்
 கைகளைப் பற்றிக் கொண்டு
 படு உற்சாகமாகக் காணப்பட்டனர்.
   
சோனோரா மட்டும் தனியாக உட்கார்ந்திருந்தாள்.
போதகர் அன்னையின் பெருமைகளைப்பற்றி
அழகாகப் பேசிக் கொண்டிருந்தார்.
அன்னை என்றால் அன்பு.
அன்னை என்றால் தியாகம்.
அன்னை என்றால் கனிவு.
அன்னை என்றால் பாசம்.
அன்னை என்றால் அழகு.
இப்படி அன்னைக்கான பண்புகளை
அடுக்கடுக்காக அடுக்கிக் கொண்டே
போனார்.
அன்னைக்கு இத்தனை குணங்கள்
உண்டா?
கேட்ட சோனோரா அசந்து போனார்.
தன்னை மறந்து போனார்.
அவர் நினைவெல்லாம் அம்மையும்
அப்பனுமாய் இருந்து தம்மை
பாதுகாத்த தன் தந்தைமீதே இருந்தது.
பாதிரியார் கூறும் இத்தனைக்கும் 
பொருத்தமான
ஆள் யார் ....யார்?
என்ற கேள்வி மனதை வேறு
எங்கும் செல்ல விடாமல் தடுத்தது.

என் அப்பாவைத் தவிர வேறு
யாராக இருக்க முடியும்? 
பதினாறு வயதில் அன்னையை 
இழந்து அரவணைக்க ஆளின்றி
நின்ற போது தோளோடு கரம்
கொடுத்து தோழனாய்,
தாதியாய் ,தக்கதொரு பாதுகாவலனாய்
நின்றிருந்தவர் என் அப்பா.
எனக்கும் என் தம்பி தங்கைகளுக்கும்
அப்பாவும் அம்மாவும் ஆசானும்
ஆண்டவனுமாய் இருந்து
காத்து வழி நடத்தியவர் என் அப்பா.

எங்களுக்காக தன் வாழ்க்கையையே
தியாகம் செய்தவர்
என் அப்பா.

நினைத்து நினைத்து நெஞ்சம்
நெகிழ்ந்து போனார் சோனோரா.

அம்மாவின் அத்தனை தகுதிகளும் கொண்ட
என் அப்பாவிற்கும் அம்மாவுக்குக்
கிடைக்கும் இத்தனை 
பெருமைகளும் 
கிடைத்திட வேண்டும்.
இதற்கு நான் ஏதாவது 
செய்திட வேண்டும் என்ற
எண்ணம் உள்ளுக்குள் 
அனலாய் மூண்டது.

என்ன செய்யலாம்?
என்ன செய்யலாம்....கைகளைப்
பிசைந்து நின்றார்.

ஆறு உடன்பிறப்புகளையும் வளர்க்க
அப்பா பட்ட கஷ்டங்கள்
நெஞ்சில் நினைவலைகளாக
வந்து முட்டி முட்டி  முன்னே தள்ளின.
என் அப்பாவின் நினைவாக நான் ஏதாவது
செய்தே ஆக வேண்டும்.

என்  அப்பா வில்லியம் சாக்சனை 
கௌரவிக்க மகளாக நான் என்ன
செய்யப்போகிறேன் என்ற கேள்வி
சோனோராவைத் தூங்க விடாமல்
துரத்தியது.

அதனால் 1910 ஆம் ஆண்டு 
ஜூன் மாதம் 
மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை நாளில்
அப்பாவின் நினைவாக 
ஒரு சிறப்பு பிரார்த்தனை கூட்டத்திற்கு
 ஏற்பாடு செய்திருந்தார்.

நிகழ்ச்சி தொடங்கியது.
அன்றைய நிகழ்ச்சியின்போது
தனது அப்பாவைப் பற்றிய நினைவலைகளை
அனைவர் மத்தியிலும் பகிர்ந்து கொண்டார்.
கண்ணீர் கன்னங்களில் உருண்டோடியது
உணர்ச்சிப் பூர்வமான அவரது
பேச்சு அனைவர் இதயங்களையும்
தொட்டது.

பேசிக் கொண்டிருக்கும்போதே
இந்தநாள் என் அப்பாவுக்கான
நாளாக ஏன் இருக்கக் கூடாது?
இப்படி ஒரு கேள்வி மனதிற்குள்
மாறிமாறி வந்துபோய்க்  கொண்டிருந்தது.
இப்படியே அந்தநாளும் கடந்து போயிற்று.

அதைப்பற்றி அறிந்தவர்கள்
தெரிந்தவர்களிடம் எல்லாம் கருத்து
கேட்க ஆரம்பித்தார்.

 சோனோராவின் இந்த
எண்ணத்திற்குப் பலர் பாராட்டும்
ஆதரவும் தெரிவித்தனர்.

அதனால் அப்பாவின் நினைவாக
அதே மூன்றாம் ஞாயிற்றுக் கிழமையில்
மற்றுமொரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார்.

அந்த  நிகழ்ச்சியின்போது
அனைவர் மத்தியிலும்
 தந்தையர் தினம்
பற்றிய தன் கருத்தை  முன்மொழிந்து
வைத்தார். வந்திருந்தவர்களுக்கு
சோனாரா அப்பாமீது கொண்டிருந்த
அன்பையும் மரியாதையையும்
 புரித்து கொள்ள முடிந்தது.
அனைவரும் சோனோராவின்
தந்தையர் தின முன்னெடுப்புக்கு
ஆதரவு தெரிவித்தனர்.

இப்படி சோனோராவால் 
தொடங்கப்பட்டதுதான் தந்தையர்தினம்.     
     
 ஆனால் இது அதிகாரப் பூர்வமாக
 அறிவிக்கப்பட பல ஆண்டுகள் 
 காத்திருக்க வேண்டியதிருந்தது.
 
 ஆரம்ப காலத்தில்  தந்தையர் தினம்
 என்றதும் வேடிக்கையாகப்
 பேசியவர்கள் உண்டு.
விமர்சையாகக் கொண்டாட
எவரும் முன் வரவில்லை.
 சில பத்திரிகைகள்கூட
 தந்தையர் தினத்தை விமர்சித்ததோடு
 கிண்டலும் நையாண்டியும் செய்து 
 செய்திகள் வெளியிட்டன.
 
ஆனால் 1913 ஆம் ஆண்டு இதற்கான 
மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில்
 தாக்கல் செய்யப்பட்டது.
 
 முதன்முதலாக  அமெரிக்க ஜனாதிபதி 
 கால்வின் கூலிட்ஜ் என்பர் 1924 ஆம் ஆண்டு
தந்தையர் தினத்திற்கு ஆதரவு தெரிவித்துப்
பேசினார்.

இதனைச் சட்டமாகக் கொண்டுவர 
1930 ஆம் ஆண்டு  தேசிய குழு  
ஒன்று அமைக்கப்பட்டது.
ஆனால் அதுவும் சில காரணங்களால்
நடைமுறைப்படுத்த முடியாமல் போயிற்று.
இப்படியே பல ஆண்டுகள் தந்தையர்
தினம் பற்றிய சிந்தனை கிடப்பில்
போடப்பட்டது.

சட்டப்படி நடைமுறைக்கு வர 
1966 ஆம் ஆண்டு வரை காத்திருக்க 
வேண்டியதாய் இருந்தது.

 ஜனாதிபதி லிண்டன் ஜான்சன் 
 தந்தையர் தினத்திற்கு பெடரல் விடுமுறை 
 என அறிவித்தார்.
 
 1972ஆம் ஆண்டு ஜனாதிபதியாக இருந்த 
  ரிச்சர்டு நிக்சன் ஜூன் மாதம் மூன்றாவது
  ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினமாக 
  கொண்டாடப்படுவதை உறுதி செய்தார்.
  
  அந்தநாள் முதல்   இன்றுவரை தந்தையர்தினம் 
  ஜூன் மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையில்
  கொண்டாடப்பட்டு வருகிறது.

 அன்னையர்தினம் போன்று 
தந்தையர் தினத்தைப் பிரபலமாக 
 கொண்டாடுகிறோமா என்றால் ....
 இல்லை என்றுதான் சொல்லுவேன். 
 அம்மாவிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை  
 பல வீடுகளில் அப்பாவுக்கு கொடுப்பதில்லை.
அதனால் தந்தையர் தினம் தனிக்கவனம் 
பெறுவதில்லை.

வேராக இருந்து நாம் விழுந்து
விடாமல் காத்தவருக்கு மரியாதை செய்ய
ஏன் இந்தத் தயக்கம் ?
தலையெழுத்து தந்தவரை
தலை நரைத்த பின்னர்
தடுமாற விடலாமா?உண்ணும் பருக்கையில்
இருப்பவர் நம் அப்பா.
உடுத்தும் உடையின்
அழகில் தெரிவது  
அப்பாவின் உழைப்பு.
படிக்கும் புத்தகத்தின்
எழுத்தெல்லாம் அப்பாவின் 
வியர்வைத் துளிகள்.
வீட்டில் இருக்கும் 
அத்தனைப் பொருளிலும்
அப்பாவின் உடல் மணம் கமழும்.

அப்பா என்றால் பாதுகாப்பு.
அப்பப்பா இவர்தான்
என் அப்பா என்று
சுணக்கம் இல்லாது
இணக்கமாய் அப்பாவின்
 கரம் பிடித்து
 அப்பா உங்களை நேசிக்கிறேன்
என்று சொல்வதுதான்
 இந்த தந்தையர் தினத்தில்
நீங்கள் அப்பாவிற்கு செய்யும் மரியாதை.

"தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்
தந்தை அன்பின் முன்னே
தாலாட்டுப் பாடும் அன்னையின் அன்பும்
தந்தை அன்பின் பின்னே...."

    ...... - கவிஞர் நா. முத்துகுமார்

எவ்வளவு பெரிய உண்மை!"அனைவருக்கும் தந்தையர் தின
நல்வாழ்த்துகள் "
 
 
 

Comments

 1. மிக மிக அருமையான கட்டுரை. தியாகங்கள் பல செய்து தனது குழந்தைகளைக் காப்பாற்றிய அனைத்து அப்பாக்களுக்கும் ,தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🌺🌺🌺❤❤❤🌺🌺🌺🌺

  ReplyDelete
 2. Very good and meaningful article Selvabai.Excellent job. God bless you.

  ReplyDelete
  Replies
  1. நன்றி டீச்சர்.
   தொடர்ந்து
   ஆதரவு அளித்து
   வருவதற்கு
   நன்றி.


   Delete
 3. கண்டிப்போடு பாசத்தையும் அள்ளித் தரும் அப்பாவைப் பற்றி பதிவிட்டது மிக அருமை.

  ReplyDelete
 4. அப்பாவின் அன்பு, பாசம், அரவணைப்பு, தலைமைத்துவம், மாதிரி, உழைப்பு, முயற்சி என்றென்றும் தன் குழந்தைகளுக்கே என்று அழகாக எழுதிய செல்வபாய் ஆசிரியைக்கு நன்றி. தொடரட்டும் உங்கள் பணி. "தந்தை சொல் மிக்க மந்திரமில்லை"

  ReplyDelete

Post a Comment

Popular Posts