கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை....


கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை....


கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை
உள்ளினும் உள்ளம் சுடும்"
                        குறள் : 799

கெடுங்காலை- துன்பப்படுகின்ற காலத்து
கைவிடுவார்-  விட்டு விலகிச் செல்பவர்
கேண்மை - நட்பு
அடும் - வருத்தும்
காலை- இறுதிக் காலத்தில்
உள்ளிடும் - நினைத்தாலும்
உள்ளம் - நெஞ்சம்
சுடும் -  எரியும்,வலிக்கும்

துன்பப்படுகின்ற காலத்தில் கைவிட்டுவிட்டு 
சென்றவருடைய நட்பை வாழ்வின்
இறுதிக் காலத்தில் 
நினைத்துப்பார்த்தால் கூட
உள்ளம் வலிக்கும்.

விளக்கம் :

நகுதல் பொருட்டல்ல நட்பு.
தோழன் என்றால் ஒரு துன்பம் வரும்போதும்
தோள் கொடுத்து நிற்க வேண்டும்.

நண்பனுக்கு ஒரு துன்பம் வரும்போது
விட்டுவிட்டு ஓடி மறைந்து கொள்வது
உண்மையான நட்பிற்கான
அடையாளமாக  இருக்க முடியாது.

 தன் உற்ற நண்பன் தனக்கு
ஒரு கேடு வந்தபோது கைவிட்டுவிட்டுச்
சென்றுவிட்டான் என்பதை நினைக்கும்போதே
உள்ளம் வலிக்கும்.

எந்தத் துன்பமும் துயரமும்
சிறிது காலம் துன்பத்தைத் தருவதாக
இருக்கும்.
காலம் ஆக ஆக அந்த நிகழ்வு
நெஞ்சை விட்டு மறைந்து 
கடைசியில் காணாமலேயே போய்விடும். 
இப்படி ஒரு மறதி இருப்பதால்தான்
நாம் பல கவலைகளைக் கடந்து
வந்திருந்தாலும் இன்றும் மகிழ்ச்சியாக
வாழ்ந்துகொண்டிருக்க முடிகிறது.

இப்படி எதை வேண்டுமானாலும் மறந்து
போகலாம்.
ஆனால் துன்ப காலத்தில் கண்டும்
காணாமல்
கடந்து போகிற நண்பனின் செயலை
சாதாரண செயலாகக் கருதி
கடந்து போய்விட முடியாது.

அப்படி ஒரு நண்பன் கேடு காலத்தில்
விட்டுவிட்டு சென்று விட்டால்
அந்த நிகழ்வு
 சாகும் வரை  நெஞ்சுக்குள்ளேயே இருந்து
 அறுக்கும். வலியையும் வேதனையையும்
 கொடுக்கும்.

அதாவது சில வலிகள் காலத்தால்
மறந்து போகக்கூடியவை.
ஆனால்  இடர் வரும்
காலத்து கையை உதறிவிட்டுச்
செல்வது என்பது நண்பர்கள்
செய்யும் செயலல்ல.
அதையும் மீறி அப்படி
ஒரு செயல் நடந்துவிட்டால்
அது காலம் முழுவதும்
மறக்க முடியாத ஒரு வேதனையைக்
கொடுக்கும் 
என்கிறார் வள்ளுவர்.

English couplet :

"Of friends deserting us on ruin's brink
'Tis torture e'en in life's last hour to think"

Explanation:

The very thought of the friendship of those who have
deserted one at the approach of adversity
will burn one's mind at the time of death'.

Transliteration :

"Ketungaalaik kaivituvaar kenmai atungaalai
Ullinum ullanj chutum"



Comments

Popular Posts