காணாமல் போகிறதா போர் தர்மம்?

காணாமல் போகிறதா போர் தர்மம்?


"அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை"

என்பார் வள்ளுவர்.

அறத்திற்கு மட்டுமே அன்பு வேண்டும்
என்று சொல்பவர்கள் அறியாதவர்கள்.
மறத்திற்கும் அதாவது வீரத்தை வெளிப்படுத்தும்
இடங்களிலும் அன்புதான் துணையாக
நிற்கும். நிற்க வேண்டும்.
அதுதான் அறம்.
இதுதான் வள்ளுவர்  நமக்குச் சொல்லித்
தந்த வேத பாடம்.

வள்ளுவருக்கு என்ன?
அவர்பாட்டுக்குச்
சொல்லி விட்டுப் போய்விட்டார்.
போர் செய்யும் இடம் 
எப்படி அன்பு காட்டும் இடமாக
இருக்க முடியும்.?

எதிரி என்றால் எதிரிநாட்டு உயிர்களும்
எமக்கு எதிரிகள்தான். அதனால் யார் எவர்
என்று பார்க்காதே. கண்ணிவெடி வைத்தோ
ஏவுகணை வீசியோ எதிரி நாட்டை
அழிக்க வேண்டும். அதுதான் எமது
இலக்கு . இதில் யார் தொலைந்தால்
என்ன? யார் மாய்ந்தால் என்ன?
என்பதுதான் இன்றைய
போர் தர்மம்...இல்லை....இல்லை. 
போர் அதர்மம்.

இன்றைய போர்க்கள காட்சிகளும்
நிகழ்வுகளும் நம்மை இப்படித்தான்
நினைக்க வைக்கின்றன.
மனம் வெம்பிப் பேச வைக்கின்றன.


உக்ரைன் போரில் பெற்றோரை இழந்து
அநாதையாய் அழுதுகொண்டு திரிந்த
ஒரு சிறுவனைத் தொலைக்காட்சியில் 
பார்த்ததிலிருந்து இரண்டு மூன்று நாள்களாக
என்னால் தூங்க முடியவில்லை.
இவனுடைய இந்த நிலைக்கு  யார்...
யார் காரணம்?
எனக்குள்ளேயே ஆயிரம் கேள்விகள்.
போர்க்காலத்தில் இப்படிப்பட்ட
காட்சிகள் சாதாரணமானவை தான் என்று
என்னால் எளிதாகக் கடந்து போக முடியவில்லை.

அப்போதுதான் நம் தமிழக மன்னர்கள்
பக்கம் எனது கவனத்தைத் திருப்பினேன்.

எல்லா மன்னர்களுக்கும் எதிரிகள்
உண்டு. தமிழ் மன்னர்களுக்கும்
எல்லைப் பிரச்சினைகள்
உண்டு.
அதனால் போர் மூண்ட வரலாற்று நிகழ்வுகள்
நாம் அறிந்த ஒன்று.
அந்தப் போர்க்களக் காட்சிகள்
இப்படித்தான் இருந்திருக்குமா?
வேறு எப்படியேனும்  இருந்திருக்குமா?
என்னும் கோணத்தில் சிந்தித்துப்
பார்த்தேன்.

தமிழக ஆட்சியாளர்களின் வரலாற்றுப்
பக்கங்களைப் புரட்டிப் பார்க்கும்போது
அவர்களுக்கென்று ஒரு
போர் தர்மம் உண்டு என்பது
புரியும்.

"தமிழர் என்றோர் இனமுண்டு
தனியே அவர்க்கொரு குணமுண்டு"

என்ற நாமக்கல் கவிஞர் ராமலிங்கம்
அவர்களின் பாடலை வாசிக்கும்போது
வாசித்துவிட்டு அப்படியே கடந்து போய்விடுவோம்.

இந்த இரண்டு வரிக்குள் எவ்வளவு உண்மைகள்
பொதிந்து கிடக்கின்றன என்பது சற்று
ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால்தான் புரியும்.


தமிழர் என்றாலே மற்றவர்களிலிருந்து
வேறுபட்டவர்கள் .அதுமட்டுமல்ல
சற்று மாறுபட்டவர்களுங்கூட
என்பது புறம் சார்ந்த ...அகம் சார்ந்த
தமிழ் இலக்கியங்களைப் படிக்கும்போது 
புரியும்.


அண்மையில் தமிழர்களின் போர்
அறம் பற்றிய சிந்தனை வந்தபோது
நாமக்கல்லாரின் பாடல் வரிகள்
சொல்லும் உண்மையை முழுமையாகப் 
புரிந்து கொண்டேன்.

அப்படி என்ன புரிந்து கொண்டீர்கள் 
என்கிறீர்களா?

தமிழக மன்னர்கள் போரையும்
அறம் சார்ந்த கண்ணோட்டத்தோடு தான்
அணுகியிருக்கின்றனர்.
அதனால்தான் தமிழருக்கு என்று ஒரு
குணம் உண்டு என்கிறார் நாமக்கல்லார்.

அதென்ன குணம்?
போரில் கூட அறத்தைப் பேணும்
குணம்.

போரில் அறமா?
போர் என்றாலே மறம்.
மறத்தில் அறமா? என்று கேள்வி
கேட்க வைக்கிறதல்லவா?
அதுதாங்க தமிழ் மன்னர்களுக்கும்
மற்ற மன்னர்களுக்குமான வேறுபாடு.

புறநானூற்றில் போர் எப்படி
நடைபெற்றது என்பதைச் சொல்கிறார்
 நெட்டிமையார் என்னும் புலவர்.
பாண்டியன் பல்யாகசாலை
முதுகுடுமிப் பெருவழுதி என்ற
மன்னனை வாழ்த்திப் பாடும்போது
 நெட்டிமையார் மன்னனின் அறம்
 சார்ந்த போர் மாண்பினைச் சொல்லி
 பெருமிதம் கொள்கிறார்.

மன்னனை வாழ்த்த வேண்டும். 
நீடூழி வாழ்க என்று வாழ்த்திவிட்டு
செல்வது புலவர்களின் வழக்கம் அல்ல.

புலவர்கள் என்றால் புகழ்தல் இருக்கும்.
அந்தப் புகழ்தலில் ஒரு வரலாறு
இருக்கும்.அந்த வரலாற்றில் 
உண்மை இருக்கும்.
அழகிய உவமை அந்தப் பாடலை
அணி செய்வதாக இருக்கும்.

நெட்டிமையார் பாடல் மட்டும்
அதற்கு விதிவிலக்காக இருக்கப் 
போகிறதா என்ன?

பாடலைப் படியுங்கள். உங்களுக்கே புரியும்.

"ஆவும்  ஆனியற் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்
தென்புல வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஆ தீரும்
எம்அம்பு கடிவிடுதும் நும்அரண் சேர்மின் என
அறத்து ஆறு நுவலும் புட்கை
மறத்தின் 
கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு
நிழற்றும்
எங்கோ ,வாழிய குடுமி! தங் கோச்
செந்நீர்ப் பசும்பொன்  வயிரியர்க்கு ஈத்த
முந்நீர் விமலின்,பெரியோர்
நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே"
                   புறநானூறு பாடல்- 9

என் மன்னன் முதுகுடுமிப் பெருவழுதி
எப்படிப்பட்டவன் தெரியுமா?
போர் புரிவதிலும் ஓர் அறத்தைக்  கடை
கடைபிடிப்பவன்.

என்ன அறம் என்று கேட்கிறீர்களா?
என் மன்னனுடைய அம்பு ஒருபோதும்
பசுக்களையோ பசுபோன்ற இயல்புடைய
அந்தணரையோ கொன்றுவிடக் கூடாது.
பெண்கள் பக்கம் விழுந்துவிடக்கூடாது.
நோய்வாய்ப்பட்டவர்களை மேலும்
துன்பப்படுத்திவிடக்கூடாது. 
இறந்த முன்னோர்களுக்கு
ஈமக்கடன் செலுத்த ஒரு குழந்தைப்பேறு
இல்லாதவரை ஒருபோதும் தொட்டுவிடக்கூடாது
என்பதில் கவனமாக இருப்பவன்
என் கோ குடுமிப் பெருவழுதி.

போர் தொடங்குவதற்கு முன்னால்
போர் தொடங்கப்போகிறது.
நீவிர் எல்லாம் பாதுகாப்பான இடங்களுக்குச்
சென்று விடுங்கள் என்று அறிவிப்பு
செய்து  அவர்கள் பாதுகாப்பான 
இடங்களுக்குச் சென்ற பின்னர்
அறநெறி நின்று போரிடும் பாங்குடையவன்
என் மன்னன். 

என் மன்னன் குடுமியான் மலைக்குச்
சொந்தக்காரன்.பஃறுளி ஆறு பாயும்
நாட்டுக்குத் தலைவன்.
பாணர்களுக்குப் பொன் அணிகளை 
வழங்கி மகிழச் செய்தவன்.

இத்தனை நற்பண்புகள் கொண்ட என்
மன்னன் எப்படி வாழ வேண்டும்
தெரியுமா?

நூறாண்டு காலம் வாழ்க!
நோய்நொடியின்றி வாழ்க!
என்று குறைவான  நாட்கணக்கைச்
சொல்லி வாழ்த்த எனக்கு
விருப்பமில்லை.

பஃறுளி ஆற்று மணலின் எண்ணிக்கையை விட
அதிக நாட்கள் வாழவேண்டும் என்கிறார்
நெட்டிமையார்.

எவ்வளவு பேராசை இந்த 
நெட்டிமையாருக்கு?

பசு, பார்ப்பனர்,பெண்டிர்,
பிணியுடையோர்,பிள்ளைப்பேறு
இல்லாதவர் இவர்களுக்குத்
துன்பம் கொடுக்காத போராக
போர் இருக்க வேண்டுமாம்.
நமது மன்னர்கள் போரிலும் எவ்வளவு 
மனிதநேயம் மிக்கவர்களாக
இருந்திருக்கிறார்கள் என்பது
இதிலிருந்து தெரிகிறதல்லவா?

இவர்கள்தாங்க மனிதர்கள்.
இவர்கள்தாங்க  தமிழர்கள்.

இப்போது
"தமிழர் என்றோர் இனமுண்டு
தனியே அவர்க்கொரு குணமுண்டு"
என்ற பாடல் வரிகளை
இங்கே  பொருத்திப்
பாருங்கள்.

பெருமிதம் ஏற்படுகிறதல்லவா!

நெட்டிமையார் பாடலில் பாண்டிய மன்னனின்  
அறம் சார்ந்த போர் மரபு 
உலகுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதுதாங்க போரிலும் 
தமிழ் மன்னர்கள்
பேணும் அறம் .
இன்றைய ஆட்சியாளர்கள்
நம் தமிழ் 
மன்னர்களிடமிருந்து கற்றுக்கொள்ள
வேண்டிய அறம்.

தர்மநெறியினின்று பிறழ்ந்து
அதர்மத்தை நோக்கிச் சென்று
கொண்டிருக்கும் 
உலகு தமிழக
மன்னர்களின் போர் தர்ம 
வரலாற்றைப் புரட்டிப் பார்க்கும் 
காலம் வருமா?
வரும்.
வர வேண்டும்...

தமிழக மன்னர்களிடமிருந்து
உலகம் பாடம் கற்க வேண்டும்.

Comments

Post a Comment

Popular Posts