கமகமக்கும் ஆப்பம் செய்வது எப்படி?


கமகமக்கும் ஆப்பம் செய்வது எப்படி?

       

ஆப்பம் என்றதும் அந்த மணமும்
சுவையும் இப்போதே தின்ன வேண்டும்
என்று ஒரு ஆசையைத் தூண்டும்.
வீட்டு வாசலில் வந்ததுமே இன்று
உங்கள் வீட்டில் ஆப்பமா?
மணம் தெரு முழுவதும் 
மணக்கிறதே என்று கேட்கும்
அளவிற்கு ஆப்பம் நம்மை இழுக்கும்.

ஆப்பம் என்றால் ஏதாவது ஒரு நாள்தான்
செய்ய முடியும் என்று இருந்த
காலம் ஒன்று உண்டு.
ஆப்பம் என்றால் கள் ஊற்ற வேண்டும்
 அப்போதுதான் ஆப்பம் நன்றாக மணக்கும்
 என்று கள் இறக்கும் இடங்களுக்குச்
 சென்று எங்கள் அம்மா சொன்னார்கள்.
ஆப்பத்திற்கு  ஊற்ற கொஞ்சம்போல
 கள் தரணுமாம் என்று கேட்டு வாங்கி
 வந்த காலம் ஒன்று உண்டு. இன்று
 அப்படியல்ல.

நினைத்த உடனேயே கள் ஊற்றிய
மணத்தோடு கமகமக்கும் ஆப்பம்
சுட்டுவிடலாம். கள்ளைத்  தேடி
அலைய வேண்டாம். அதே சுவையில்
அதே மணத்தில் ஓட்டை ஓட்டையான
பஞ்சு போன்று மெத்தென்ற
ஆப்பம் செய்து அசத்தலாம்.

எனக்கெல்லாம் ஆப்பத்தில் ஓட்டை ஓட்டையாக
இருக்க மாட்டேங்குது என்ற
கவலையே உங்களுக்கு வேண்டாம்.

ஈஸ்ட் வாங்கி வைத்துவிட்டால் போதும்.
கமகமக்கும் ஆப்பம் ரெடி.

பிரட், பன் போன்றவை தயாரிக்கப்
பயன்படுத்தும் பொருள்தான்
ஈஸ்ட். இப்போது எல்லா மளிகை சாமான்
கடைகளிலும் கிடைக்கும்.
50 கிராம் அளவு சிறிய அளவு
பாக்கெட்களில் கிடைக்கும்.
ஒரு பாக்கெட் வாங்கி வைத்துக்
கொண்டால் பதினைந்து முறைக்குமேல்
ஆப்பம் செய்ய போதுமானதாக 
இருக்கும்.

இப்போது 
ஆப்பத்திற்குத் தேவையான பொருட்கள்
என்ன என்று பார்ப்போம்.

பச்சரிசி-  இரண்டு கப்
உளுந்து - ஒரு கையளவு
தேங்காய்  -ஒரு மூடி (துறுவியது)
ஈஸ்ட் - பதினைந்து  எண்ணிக்கை
சாதம் அரை டம்ளர்.
உப்பு தேவையான அளவு

அரசியையும் உளுந்தையும் சேர்த்து
இரண்டுமணி நேரம் ஊற
வையுங்கள்.
தேங்காயைத் துருவி வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது ஊற வைத்துள்ள அரிசியையும்
உளுந்தையும் அரைக்க வேண்டும்.
சிறிது அரைபட்டதும் கூடவே துருவி
வைத்த தேங்காய், அரை டம்ளர் பழைய சாதம்
தேவையான அளவு உப்பு போட்டு
நன்றாக அரைத்து வைத்துக்
கொள்ளவும்.

கொஞ்சம் தண்ணீர் அதிகமாக விட்டு
அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.
அவ்வளவுதான் வேலை.

இரவு முழுவதும் மாவு
புளிக்கட்டும்.

அதிகாலையில் ஆப்பம்
சுடுவதற்கு இரண்டு மணி
நேரத்திற்கு முன்பாக 
ஈஸ்ட் பதினைந்து எண்ணிக்கை எடுத்து சிறிது
சுடுதண்ணீரில் போட்டு கரைய விடவேண்டும்.
பின்னர் நீரில் கரைந்த ஈஸ்டை 
மாவோடு சேர்த்து ஊற்றி
நன்றாக கரைத்து வைத்துவிட
வேண்டும்.

பின்னர் அப்படியே மூடி
வைத்துவிடுங்கள்.
இரண்டுமணி நேரம் மாவு
புளிக்கட்டும்.
இரண்டு மணி நேரம் கழித்து
மூடியைத் திறந்து பாருங்கள்.

மாவு புஸ்புஸ் என்று புடைத்துக் 
கொண்டு நிற்கும்.
கரண்டியை எடுத்து நன்றாக
கலக்கி வைத்துவிடுங்கள்.
இப்போது ஆப்பச் சட்டியை
அடுப்பில் வைத்து நன்றாக சூடாக்குங்கள்.

சட்டி நன்றாக சூடாகியதும்
ஒன்றரை கரண்டி மாவு
ஊற்றி நன்றாக ஆப்பச்சட்டியின் இருபக்கமும்
சுட்டுவிடாமல் ஒரு துணியால்
இறுக்கமாகப் பிடித்து இரண்டு சுற்று 
எல்லாப் பக்கமும் ஒரே அளவாக மாவு
ஒட்டும் படியாக சுற்ற வேண்டும்.
மாவு நாலாபக்கமும் நன்றாக
ஒட்டிவிடும். மீதி உள்ள மாவு குழியாக
நடுவில் இருக்கும்.
இப்போது அப்படியே மூடி வைத்துவிடுங்கள்.
அடுப்பு நிதானமாக எரியட்டும்.

சற்று நேரத்தில் மூடியைத் திறந்து
பாருங்கள்.
ஆவ்....என்ன மணம்.!
ஓட்டை ஓட்டையாக கமகமக்கும்
ஆப்பம் தயாராகியிருக்கும்.

வெந்ததும் அப்படியே எடுத்துவிட
வேண்டியதுதான்.
இப்போது கமகமக்கும் 
ஆப்பம் ரெடி.

ஆப்பத்திற்கு கொண்டைக்கடலை 
குருமா வைத்து
சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

தேங்காய் சட்னி பிடிக்கும் என்பவர்கள்
தேங்காய் சட்னி யோடு சேர்த்து
சாப்பிடலாம்.

தேங்காய்த்துருவல் போட்டு அரைத்திருப்பதால்
சுவை  அப்பப்பா...தோசை இதன் சுவையின்
கிட்ட நிற்க முடியாது.

கடையில் இரண்டு ஆப்பம் வாங்கி
சாப்பிட்டு வந்தவர்கள்  நான்கு ஆப்பம் தா
என்று கேட்டு வாங்கி
சாப்பிடுவார்கள்.

தோசை இட்லிக்கு பதிலாக நித்தம்
நித்தம் ஆப்பம் செய்து தாருங்கள்
என்று பிள்ளைகள் கேட்பார்கள்.

ஆப்பம் செய்து கொடுத்து அனைவர் 
அன்பையும் அள்ளுங்கள்.

Comments

Popular Posts