அளபெடை என்றால் என்ன?

அளபெடை என்றால் என்ன?


செய்யுளின் ஓசை குறையும்போது 
ஒரு சொல்லின்
முதலிலும் இடையிலும் இறுதியிலும் நிற்கும்
நெட்டெழுத்துகள் தமக்குரிய 
இரண்டு மாத்திரை அளவிலிருந்து நீண்டு 
ஒலிக்கும்.
அவ்வாறு நீண்டு ஒலிப்பதை 
அளபெடை என்கிறோம்.


அளபெடையின் வகைகள்:

அளபெடை இரண்டு வகைப்படும்.

1. உயிரளபெடை
2. ஒற்றளபெடை


முதலாவது உயிரளபெடை என்றால்
என்ன என்று பார்ப்போம்.

ஒரு செய்யுளின் ஓசை குறையும்போது
அந்த ஓசையை நிறைவு செய்ய
ஏழு உயிர் நெடில் எழுத்துகளும் அளபெடுத்து
வரும். இதனை உயிரளபெடை என்பர்.

அதாவது உயிர் நெடில் எழுத்துகளான
ஆ., ஈ., இ., ஏ. ,ஐ. ,ஓ. ,ஔ ஆகிய எழுத்துகளின்
இன எழுத்துகள்  அளபெடுத்து வரும்.

இந்த ஏழு உயிர் நெடில் எழுத்துகளுக்கும்
ஐந்து உயிர்க்குறில் எழுத்துகளும்
இன எழுத்துகளாகும்.

அவற்றைப் பார்ப்போம்.

ஆ        -அ  
ஈ           -இ
ஊ      -   உ
ஏ            -எ
ஐ           -இ
ஓ.          - ஒ
ஔ         -உ

நெட்டெழுத்துகளுக்கு அதன்
இன எழுத்துக்களான குறில் எழுத்துகளே
அளபெடையாக வரும்.

'ஈ 'என்ற உயிர் நெடில் எழுத்துக்கும்
'ஐ 'என்ற உயிர் நெடில் எழுத்துக்கும்
இன எழுத்து உயிர்க்குறில் எழுத்தான
'இ 'ஆகும்.


'ஊ' என்ற உயிர் நெடில் எழுத்துக்கும்
'ஔ' என்ற உயிர் நெடில் எழுத்துக்கும்
' உ' என்ற உயிர்க்குறில் எழுத்து
இன எழுத்தாக வரும். 

உயிரளபெடை மூன்று வகைப்படும் .
அவையாவன :

1. செய்யுளிசை அளபெடை
2. இன்னிசை அளபெடை
3. சொல்லிசை அளபெடை


1. செய்யுளிசை அளபெடை:

செய்யுளின் ஓசை குறையும்போது
அந்த ஓசையை நிறைவு செய்வதற்காக
உயிர் நெடில் எழுத்துகள் ஏழும்
தன் இனமாகிய குறில் எழுத்துகளை
அளபெடுத்து தனக்குரிய மாத்திரை அளவிலிருந்து
மிகுந்து ஒலிக்கும்.இதனைச் செய்யுளிசை
அளபெடை என்பர்.

விடாஅது 
அடாஅது

"கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை
விடாஅர் விழையும் உலகு"

இந்தக் குறளில்  கெடாஅ ,விடாஅர்
என்ற சொற்கள் செய்யுளின் ஓசைக்காக
அளபெடுத்து வந்துள்ளன.

கெடாஅ  - சொல்லின் இறுதியில் அளபெடுத்துள்ளது
விடாஅர் - சொல்லின் இடையில்
அளபெடுத்துள்ளது காண்க.

செய்யுளிசை அளபெடையின் வேறுபெயர்
இசைநிறை அளபெடையாகும்.

ஈரசைச் சீர்களாக மட்டுமே வரும்.

2. இன்னிசை அளபெடை:

செய்யுளின் ஓசை குறையாத இடத்திலும்
இனிய ஓசை தருவதற்காக நெடில் எழுத்துகள்
அளபெடுத்தல் இன்னிசை அளபெடை எனப்படும்.

செய்யுளின் இனிமைக்காக அளபெடுப்பது
இன்னிசை அளபெடை.

"கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை"

கெடுப்பதும்
எடுப்பதும் என்று எழுதினாலும்
பொருள் மாறிவிடப் போவதில்லை.

குறள் வெண்பாவுக்கு உரிய
வெண்டளை இலக்கணமும்
மாறாது.

பிறகு எதற்காக 
கெடுப்பதூஉம்
எடுப்பதூஉம்
என்று எழுதப்பட்டுள்ளது?

செய்யுளிற்கு இனிய ஓசை வேண்டும்
என்பதற்காக அளபெடை 
கையாளப்பட்டுள்ளது.
எனவே இது இன்னிசை அளபெடை எனப்படும்.

மூவசைச் சீர்களில் மட்டுமே வரும்.
பெரும்பாலும் ' உ 'என்னும் எழுத்தில் 
முடிவு பெறுவதாகவே இருக்கும்.


3.   சொல்லிசை அளபெடை:

ஒரு பெயர்ச்சொல்லானது
வினையெச்சப் பொருளில்
அளபெடுத்து வருவதினைச் 
சொல்லிசை அளபெடை என்பர்.

"உரனசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
வரனசைஇ இன்னும் உள்ளேன்"

நசை என்பது விருப்பம் என்று பொருள்படும்.
நசைஇ என்றால் விரும்பி என்பது பொருள்.

அதாவது நசை என்னும் பெயர்ச்சொல்
நசைஇ என அளபெடுத்து
வினைடையாக மாறி வந்துள்ளது.

இவ்வாறு பெயர் வினையெச்சமாகவோ
வினையடையாகவோ மாறி
வருவதை சொல்லிசை 
அளபெடை என்பர்.

"குடிதழீஇக் கோல்ஓச்சும் மன்னன் மாநில
அடிதழீஇ நிற்கும் உலகு"

'தழீ' என்றால் 'தழுவுதல்'
 என்னும் தொழிற்பெயர்ச்சொல்.
 
'தழீஇ 'என்றால் 'தழுவி 'என்ற 
வினையெச்சமாகிறது.

ஆதலால் இது சொல்லிசை அளபெடை
ஆயிற்று.

சொல்லிசை அளபெடை பெரும்பாலும்
'இ 'என்ற எழுத்து அளபெடுத்திருப்பதைக்
காணலாம்.


ஒற்றளபெடை:

செய்யுளின் ஓசை குறையும்போது
ங். ,ஞ்   , ண்   , ந்   , ம்., ன்.  ,வ். , ய். , ல். ,  ள்
ஆகிய பத்து மெய் எழுத்துகளும்
'ஃ 'என்னும் ஆய்த எழுத்தும்
குறில் எழுத்துகளை அடுத்து
இனிய ஓசைக்காக அளபெடுத்து வரும்.

குறிலிணை எழுத்துகளை அடுத்தும்
ஒற்றளபெடை வருவதுண்டு.


"எங்ங் கிறைவனுளன் என்பாய் மனனேயான்
எங்ங் கெனத்திரிவா ரில்"

இக்குறள் வெண்பாவில் எங்கு இறைவன்
என்பது எங்ங் கிறைவன் என்று ஆகி
ஓசையை நிறைந்துள்ளது.


"இலங்ங்கு வெண்பிறைசூ டீசனடி யார்க்குக்
கலங்ங்கு நெஞ்சமிலை காண்"

இந்தக் குறள் வெண்பாவில்
இலங்ங்கு
கலங்ங்கு
என்று குறிலிணையை அடுத்து
மெய்யெழுத்து அளபெடுத்து வந்துள்ளது.

நினைவில் கொள்க.

அளபெடை இரண்டு வகைப்படும்.
அவை:

1       உயிரளபெடை,
 2.    ஒற்றளபெடை 

உயிரளபெடை மூன்று வகைப்படும்.
அவை:

1.   செய்யுளிசை அளபெடை அல்லது இசைநிறை அளபெடை
2.    இன்னிசை அளபெடை
3.    சொல்லிசை அளபெடை





Comments

Popular Posts