மதிப்புப் பன்மை

    மதிப்புப் பன்மை

மதிப்பும் மரியாதையும் மனசில்
இருந்தால் போதும்.
வார்த்தையில் வேண்டாம்.
எங்கோ ....யாரோ சொன்ன ஞாபகம்.
அப்படியானால் பேசும்போது மரியாதை
கொடுத்துப் பேச வேண்டாமா?

அது எப்படி ?
பெரியவர்களுக்கு மரியாதை 
கொடுத்துப் பேசுவதுதானே நமது
பண்பாடு.

மரியாதை கொடுத்துப் பேச வேண்டுமானால்
எப்படி பேச வேண்டும்?

வாருங்கள்.
உட்காருங்கள்
உண்ணுங்கள்
பருகுங்கள்
என்று  கள் சேர்த்துச் சொல்வதுதானே 
மரியாதை!

ஆனால் அது இலக்கணப்படி தவறாகுமே!

' கள்' என்ற விகுதி பற்றி
பல்வேறு விவாதங்கள் உண்டு.
இன்றும் இந்த விவாதம் 
தொடர்ந்து கொண்டுதான் வருகிறது.
.
' கள் 'என்பது அஃறிணை பலலின் பால்
விகுதி அல்லவா? அது உயர்திணைக்கு
எப்படி பொருந்தும்? 

கேள்வி எழலாம்.

முதலாவது மதிப்புப் பன்மை என்றால்
என்ன என்று பார்ப்போம்.

ஆரம்பத்தில் இருந்தே வருவோம்.

திணை இரண்டு வகைப்படும்.

1.  உயர்திணை
2.  அஃறிணை


இதில், 

"மக்கள் தேவர் நரகர் உயர்திணை
மற்றுஉயிர் உள்ளவும் இல்லவும் அஃறிணை"

என்கிறது நன்னூல்.

மக்கள், தேவர் , நரகர் - உயர்திணை
ஏனைய உயிர்களும் உயிர் அல்லாத
பொருட்கள் அனைத்தும் அஃறிணை எனப்படும்
இதுதான் நன்னூலார் உயர்திணை அஃறிணை
இலக்கணமாகக் கூறப்பட்டுள்ளது.பால்

பால் ஐந்து வகைப்படும்

ஆண்பால்
பெண்பால்
பலர் பால்
ஒன்றன் பால்
பலவின் பால்

இவற்றுள் ஆண்பால்,பெண்பால்,
பலர் பால் மூன்றும் உயர்திணைக்கு 
உரியவை.

"ஆண் பெண் பலர் என
முப்பாற்று உயர்திணை"
                  -    நன்னூல்

ஒன்றன்பால்,பலவின்பால் ஆகிய
இரண்டும் அஃறிணைக்கு உரியவை.

"ஒன்றே பல என்று 
இருபாற்று அஃறிணை"

                     -.   நன்னூல்


 ஆண்பால்   - ஒருமை
பெண்பால் -ஒருமை
பலர் பால்  - பன்மை

ஆண்பால் விகுதி அன்.
பெண்பாற் விகுதி அள்
பலர்பால் விகுதி அன் ஆர்
எனப்படித்திருக்கிறோம்.
அதனால் தான் அவள் ,அவன்,
அவர் என்று எழுதி வருகிறோம்.


இந்த ஒருவன் ,ஒருத்தி ,ஒருவர் 
எல்லா இடங்களிலும் அப்படியே
 பயன்படுத்தப்பட்டு வருகின்றதா?
 
நினைவுபடுத்திப் பார்ப்போமா?
அரசன், அப்பா ,ஆசிரியர்
இவர்கள் எல்லாம் ஆண்பால்.அரசன் வருகிறான் .

அப்பா வருகிறான் .

ஆசிரியன் வருகிறான் .

இப்படிச்  சொல்ல முடியுமா?

அதெப்படி சொல்ல முடியும்?

அப்படிச் சொன்னால் மரியாதை இல்லாமல்
பேசுவதாகிவிடுமே என்பீர்க.

பெரியவர்களை மரியாதையாகப் 
பேசுவதுதானே நம்
பண்பாடு என்று இப்போது
உரத்துக் குரல் 
கொடுக்கிறீர்களல்லவா!

தலைவர் வருகிறார்.
அரசர் வருகிறார்.
அப்பா வருகிறார்
ஆசிரியர் வருகிறார்.


இந்தச் சொற்கள் பலர் பால் விகுதியை
ஏற்று வந்தாலும் ஒருமையை அல்லவா
குறிக்கின்றன.?

அப்படியானால் உயர்திணைப் 
பலர்பாலை எப்படி
வேறுபடுத்திக் காட்டுவது என்ற கேள்வி
எழும்போது தான் 'கள்' வந்து ஒட்டிக்கொண்டது.

அப்பா வந்தார்கள்.
தலைவர் வந்தார்கள்.


தலைவர்  வந்தார் என்றால் ஒருமை.
இதனைத் தலைவர் அவர்கள் வந்தார்கள் என்று
என்று எத்தனை கள் போட்டு அழைக்கிறோம்?

இத்தனை 'கள்' போட்டுப் பேசுவதும்
எழுதுவதும் தலைவருக்கு நாம்
கொடுக்கும் மரியாதை
என்று நினைக்கிறோம்.

.
தலைவர் என்பதை ஒருமைக்கு மட்டுமே பயன்படுத்தி
வருகிறோம் . 
அதனால் பன்மையைச் சுட்டிக்காட்ட
தலைவர்கள் 
ஆசிரியர்கள் என்று
பேசுகிறோம்.
எழுதுகிறோம்.

அஃறிணை
பலவின் பாலுக்கு உரிய 'கள்'
இங்கே உயர்திணை
பலர்பாலுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதைத்தான் மதிப்புப் பன்மையாக 
ஏற்றுக்கொண்டுள்ளோம்.

 ஆசிரியர்கள் வந்தார்கள்.
மாணவர்கள் வந்தார்கள். 


தொல்காப்பியர் 
"கள்ளொடு சிவணும் அவ்வியற்
பெயரே" 
என்கிறார்.
அதாவது ' கள் 'அஃறிணை பலவின்
பாலுக்கு உரியது
என்று சொல்லிகிறார்.


அதற்காக 'கள்'ளை விட்டுவிட்டு எழுதலாமா?

அப்பா வந்தார்கள்.
அம்மா வந்தார்கள்.
மாமா வந்தார்கள்.
அத்தை வந்தார்கள் 
என்றுதான் எழுத வேண்டும்.
பேச வேண்டும்.


அப்பா வந்தான்.
அம்மா வந்தாள்.
மாமா வந்தார்.
அத்தை வந்தாள் 
என்று
மரியாதை இல்லாமல் 
பேசிவிடாதீர்கள்.

 ஆசிரியன் வந்தான் என்று சொல்வது
மரியாதைக் குறைபாடாகத் தெரிகிறதல்லவா?
அதனால் ஒரு ஆசிரியர்  வந்தால்
ஆசிரியர் வந்தார் என்று
எழுதுங்கள்.

 ஆசிரியர் நான்கைந்து பேர் வந்தால்
 வேறுபடுத்திக் காட்டுவதற்காக
ஆசிரியர்கள் வந்தார்கள் என்று
கூடுதலாக அர் விகுதியோடு கள்
விகுதியையும் சேர்த்து மரியாதை
கொடுத்து எழுதுங்கள்.

இதுதாங்க மதிப்புப் பன்மை.


அர் என்ற  பலர்பால் விகுதி
ஒருமைக்குப் பயன்படுத்தப்படுவதும்
'கள் 'என்ற பலவின் பால் விகுதி
பலர்பாலுக்குப் பயன்படுத்துவதும்
மதிப்புப் பன்மை என்பதை நினைவில்
வைத்துக் கொள்க.Comments

Popular Posts