கைம்மாறு வேண்டா கடப்பாடு...
கைம்மாறு வேண்டா கடப்பாடு....
"கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்ஆற்றுங் கொல்லோ உலகு"
குறள்: 211
கைம்மாறு- எதிர்உதவி
வேண்டா - எதிர்பார்க்காது
கடப்பாடு - கடமை
மாரிமாட்டு - மேகத்திற்கு
என் - என்ன
ஆற்றும் - செய்யும்
கொல்லோ-( அசைச்சொல்)
உலகு - உலகம்
உதவியை எதிர்பார்த்து உதவுவது அல்ல உதவி .
ஒருவர் செய்த உதவியைத் திரும்பச் செய்துதான்
ஆக வேண்டும் என்றால் மழை செய்யும் உதவிக்கு
இந்த உலகம் என்ன
கைம்மாறு செய்துவிடப் போகிறது.?
விளக்கம் :
நீரின்றமையாது உலகம்.
அந்த நீரைத் தருவது மழை.
அந்த மழையின் உதவி இல்லை என்றால்
உயிர்கள் உயிர்வாழ முடியாது.
மழையின் இந்த மிகப்பெரிய
உதவிக்காக நாம் என்ன உதவி
செய்துவிட முடியும்?
எனக்கு திரும்பவும் வேண்டும் நேரத்தில்
இந்த உயிர்கள் உதவி
செய்யும் என்ற ஓர் எதிர்பார்ப்பிலா
மழைபொழிகிறது?
இல்லையே.
உயிர்களுக்கு உதவுவது நம் கடமை
என்ற நோக்கில் தான் மழை பொழிந்து
கொண்டிருக்கிறது.
ஒருவருக்கு ஒருவர் உதவுவது என்பது
ஒரு கடப்பாடு .அதாவது கடமை.
இருப்பவர் இல்லாதவனுக்கு உதவுதல்
என்பது ஒரு கடமை.
கடமை உணர்வோடு
உதவ வேண்டும்.அதுதான் உதவி.
இன்னாருக்கு உதவினால்
அவர் திரும்பச் செய்வார் என்ற ஓர்
எதிர்பார்ப்போடு செய்வதல்ல உதவி.
அப்படி ஓர் எதிர்பார்ப்பை
மனதில் வைத்துக்கொண்டுதான்
உதவி செய்வேன் என்று மழை
கருதி இருக்குமானால்
மழையால் இதுவரை நாம்
பெற்று வந்த உதவிக்குக்
கைம்மாறாக நம்மால் என்ன
உதவியைத் திருப்பிச் செய்துவிட முடியும்?
உதவியானது மழை பொழிவது போல
எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாது
செய்யப்பட வேண்டும்.
மழைக்கு மாற்று உதவி செய்ய முடியுமா?
முடியாதல்லவா?
அதுபோல மாற்று உதவியை எதிர்பாராது
செய்யப்படுவது தான் உதவி என்கிறார்
வள்ளுவர்.
English couplet:
Duty demands no recompense to clouds of heaven
By men on earth what answering gift is given?
Explanation :
Benevolence seeks not a return .What does the world
give back to the clouds?
Transliteration :
"Kaimaaru ventaa katappaattu maarimaattu
Enaatrung kollo utaku"
Comments
Post a Comment