சங்க இலக்கியத்தில் உவமை

சங்க இலக்கியத்தில் உவமை 

சங்க இலக்கியப் பாடல்கள்
ஒவ்வொன்றும் ஒரு சிறுகதை.
அதைக் கதையாகவும் எழுதலாம்.
கவிதையாகவும் வடிக்கலாம்.
உவமை நயத்தை அள்ளி அள்ளிக் பருகலாம்.
விரும்புபவர்க்கு வழங்கி மகிழலாம்.

ஒரு செய்தியைப் சொல்வதற்காக
அவர்கள் கையாளும் உவமைகள்
அது நடந்த இடத்திற்கே
நம்மை அழைத்துச் செல்லும்.
அதுதானே ஒரு கதையின் இயல்பு.
கவிதையின் இயல்பும் நிகழ்வைக்
கண்முன் கொண்டுவந்து 
நிற்க வைப்பதாக இருந்தால்.....?

ஒரு தலைவனும் தலைவியும்
காதல்வயப்பட்டுவிட்டனர்.
நீயில்லாமல் நானில்லை.
நானில்லாமல் நீயில்லை.
பிரிந்தால் உயிர் தறியேன்
என்று காதல் வசனம் பேசி
நாட்களைக் கடத்தினர்.
எத்தனை நாட்களுக்குத்தான்
இப்படியே காதலித்துக் கொண்டிருப்பது?
திருமணம் என்ற பந்தத்தில்
இணைந்துகொள்ள வேண்டாமா
என்ற நினைப்பு வந்தது.

காதலி எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள்?
என்று மெதுவாகக் கேட்க ஆரம்பித்தாள்.
எதுவரை எதிர்காலம் பற்றிய
சிந்தனை இல்லையோ அதுவரை காதல்
இனிக்கும்.
எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனை
வந்துவிட்டால்....
ஆயிரம் கேள்விகள் முன் வந்து
விடை கேட்டு நிற்கும்.

இப்போது திருமணம் பற்றிய முதல் கேள்வி
தலைவன் முன் வைக்கப்பட்டுள்ளது.
வைத்தவர் வேறு யாருமல்ல.
தலைவியே கேட்டுவிட்டாள்.

இதற்கு தலைவன் பதில் 
சொல்லியே ஆக வேண்டும்.
நாளை நாளை என்று எத்தனை நாள்
தள்ளிப் போடுவது?
என்றாவது ஒருநாள் திருமணம்
செய்து தானே ஆக வேண்டும்.
திருமணம் என்றால் சும்மாவா?
ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்
கொண்டிருப்பதா வாழ்க்கை?
குடும்பம் நடத்த பணம் வேண்டுமே.
பணம் திருமணத்திற்கு 
குறுக்கே வந்து கும்மாளமிட்டு நின்றது.

பொருள் தேட வேண்டும்.
உள்ளுரில் அதற்கு வழியில்லை.
வெளியே சென்று வேலைபார்த்து
சம்பாதித்து வர வேண்டும்.

மெதுவாக தலைவியிடம்
பொருள் தேடசெல்ல இருப்பதைக்
கூறுகிறான்.
முதலாவது அழுது ஆர்ப்பாட்டம் செய்தாள்
தலைவி.
வெகு விரைவில்
வந்துவிடுவேன் என்று சொல்லி 
ஆறுதல்படுத்தி வைத்துவிட்டு
பொருள் தேட சென்றுவிட்டான்.

போய் நாட்கள் பல ஆயிற்று
தலைவன் திரும்பி வந்த பாடில்லை.
தலைவனை எதிர்பார்த்து பார்த்து
தலைவியின் உடல் மெலிய
ஆரம்பித்தது.

தோழியிடம் புலம்ப ஆரம்பித்துவிட்டாள்
தலைவி.
இத்தனை நாள் பொறுத்துவிட்டாய்.
இன்னும் கொஞ்சம்நாள் பொறுத்திரு.
வந்துவிடுவார் என்று தேற்றுகிறாள் 
தோழி.

அதற்குத் தலைவி,

"கான மஞ்ஞை யறையீன் முட்டை
வெயிலாடு முசுவின் குருளை உருட்டும்
குன்ற நாடன் கேண்மை என்றும்
நன்றுமன் வாழிதோழி! உன்கண்
நீயொரு ஓராங்குத் தணப்ப
உள்ளாது ஆற்றல் வல்லுவோர்க்கே"

என்று பதில் சொல்கிறாள்.

காட்டிலுள்ள பாறையில் மயில்
முட்டையிட்டு வைக்கும்.
அப்போது அங்கு வந்து 
விளையாடும் குரங்கின் கண்களில்
மயிலின் முட்டை பட்டுவிடும்.
குரங்கு சும்மா இருக்குமா?
குரங்கு அந்த முட்டைகளை
பாறையில் உருட்டி விளையாடும்.
அப்படிப்பட்ட மலை நாட்டைச்
சேர்ந்தவன் என் தலைவன்.
இதில் எனக்குப் பெருமை உண்டு.
இருந்தாலும் எனது மனதில்
பிரிவைத் தாங்கும் அளவிற்கு
மனவலிமை இல்லையே என்று
சொல்லி வருந்துகிறாள்.

தோழிக்கு தலைவி எதற்காக 
இந்தக் குரங்கு
கதையைக் கூறுகிறாள் என்று புரியவில்லை.

தலைவியிடம் கையைப் பிசைந்து
ஒன்றும் புரியலியே என்கிறாள்.
புரியாவிட்டால் விடு .
இந்தக் காட்சியை நித்தம்
பார்க்கும் மலை நாட்டுக்காரருக்கே புரியவில்லை.
உனக்கும் புரிந்தால் என்ன ?
புரியாமல் போனால் என்ன ?
என்று முகத்தைத் திருப்பி
வைத்துக்கொண்டு சென்றுவிட்டாள்.
தோழியும் பின்னாலேயே சென்று
மறைந்து போனாள்.

அவர்கள் இருவரும் போனால் என்ன?
நம் முன் மயில்முட்டையோடு
விளையாடிய குரங்கு வந்து
விளையாட்டு காட்டுகிறதே?

கையில் பூமாலை கிடைத்தாலே
 நார் வேறு ;
பூ வேறு என்று பிரித்து விளையாடிவிடும்.
முட்டையை மட்டும் பத்திரமாக 
வைத்திருக்குமா இந்தக் குரங்கு?
எப்படியும் கீழே போட்டு உடைக்கத்தான்தான்
போகிறது என்று மனம் திக்திக்கென்று
அடித்துக் கொண்டிருந்தது.

இந்தத் தலைவி ஏன் இந்தக்
குரங்கு விளையாட்டைப்
சொல்லி விட்டுச் சென்றாள்?
தீவிரமான விவாதம் மனதிற்குள்
வந்து முட்டி மோதியது.

ஓ...இப்போது புரிந்து போயிற்று.
முட்டை குரங்கு கையில் அகப்பட்டு
உடைய போவதுபோல 
என் காதலும் ஒரு நாள்....உடைந்து 
போகுமோ என்ற ஐயத்தைத்தான்
தலைவி இவ்வாறு கூறியிருக்கிறாள்.

காதலின் வலி...அது கைகூடாமல்
போய்விடுமோ என்ற அச்சம்
அதை நேரடியாகச் சொல்ல முடியாத
நிலை.... அதற்காக ஒரு குரங்கையும்
மயில் முட்டையையும் பாறையில் வைத்து
உருட்டி விளையாட வைத்து சொன்ன விதம்
என்ன அருமையான உவமை!

யார் இப்படி எல்லாம் இந்தத்
தலைவிக்குப் பேசச் சொல்லிக்
கொடுத்தது?

மலையும் மலையைச் சார்ந்த
இடமும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.
மலை குறிஞ்சி நிலமாயிற்றே.
மலையோடு கவியாடுபவர் யார்?
கபிலராகத்தான்இருக்கும்.
நீங்களும் அப்படித்தான் நினைத்திருப்பீர்கள்
என்று நினைக்கிறேன்.
உண்மை.
 இந்த தலைவியை இப்படிப்
பேச வைத்தவர் கபிலர்தாங்க....

உவமை மூலமாக சொல்ல வந்த
கருத்தில் நம்மைக் கட்டிப் போட்டுவிட்டாரல்லவா?
சொன்ன விதம்...அப்பப்பா
எப்படி எப்படியெல்லாம் சொல்லி
நம்மை தம் பக்கம்
திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்
இந்தக் கபிலர்.

இப்போது என் கவலை 
குரங்கு முட்டையை
உடைத்திருக்குமா?
உடைக்காது விட்டுச் சென்றிருக்குமா
என்பதுதான். 

உங்களுக்கு.....?




Comments

  1. சங்க இலக்கிய உவமையுடன் கருத்தையும் பதிவிட்டு கூறிய கதையின் நிகழ்வு மிக அருமை.

    ReplyDelete

Post a Comment

Popular Posts