குறளும் குயிலும்

குறளும் குயிலும்

சேவற்கோழி ஒன்று வயல்வெளியில்
இரை பொறுக்கிக் கொண்டிருந்தது.
தொலைவில் பெட்டைகோழிகள்
 இரை தேடிக் கொண்டிருந்தன .சேவலின் 
 தோற்றம் பெட்டையைவிட சற்று
  கம்பீரமாக தெரியும்.
  
நான் தான் அழகு என்று சேவல் 
கொண்டையைக் 
கொண்டையை ஆட்டும் .
நாளும் ஒரு தடவையாயாவது
 தன் அழகைப்பற்றி 
தம்பட்டம் அடிக்காவிட்டால் சேவலுக்கு 
தலையே வெடித்துவிடும் போல் இருக்கும்.
        
இன்றும் அந்த பெருமையோடு  
வயலைச் சுற்றி ச்சுற்றி வந்தது சேவல். 

அப்போது தொலைவில்...      

"அங்கே...யாரது?  ...   
  நம்பவே முடியவில்லையே.
  எத்தனை அழகு? ....எத்தனை  அழகு? ...
  என் கண்களையே  என்னால் நம்ப முடியவில்லையே?
  யாராக இருக்கும்?"


மெதுவாக பக்கத்தில் போய் பார்த்து
யார் என்பதைக் கண்டுவரச்
சென்றது சேவல்.

"ஆஹா.. என்னைவிட  கொள்ளை அழகுதான்."
தன்னை மறுபடியும் ஒருமுறைப்
பார்த்துக் கொண்டது சேவல்.

"உண்மையிலேயே என்னைவிட
அழகுதான்" 
பொறாமை வந்து எட்டிப்பார்த்து
புலம்ப வைத்தது.

" என்னைவிட  அழகான   ஒருவர் 
நம்ம ஏரி்யாவில்
இருப்பதா?
கூடாது...கூடவே கூடாது.
இது எனக்கு ஆபத்து...."
தனக்குள் ஏதேதோ எண்ணம் வந்து
குமைத்துக் கொண்டிருந்தது.


 " இது மயிலல்லவா?
இந்த மயில் இப்படி இங்கு வந்தது?
இதுவரை இந்த மயில் நம்ம 
 இடத்திற்கு வந்ததில்லையே.
 அம்மாடியோவ்...இந்த மயிலைப் பார்த்தால் 
  இந்த கோழிகள் என்னை திரும்பி 
கூட பார்க்காதே....
என்ன செய்யலாம்....என்ன செய்யலாம்."
குறுக்கும் நெடுக்குமாக நடக்க 
ஆரம்பித்தது சேவல்.


"ஏதாவது செய்யணுமே....ஏதாவது செய்யணுமே
நாளை மற்றநாள்  இந்த மயில்
இந்தப் பக்கமாக வராமலிருப்பதற்கு
என்ன செய்யலாம் ?"

இந்த       மயிலைப் பார்க்க ....பார்க்க 
சேவலுக்கு உடலெல்லாம் எரிய
ஆரம்பித்தது. உள்ளுக்குள் உதறல்
எடுத்தது. மறுநாள் அதிகாலையில்
கூவுவதே மறந்து போயிற்று.
மண்டைக்குள் மயில் வந்து உட்கார்ந்து
சேவலின் நிம்மதியைக் கெடுத்துக்
கொண்டிருந்தது.

பெண்ணைக் கோழி ஒன்று வந்து
என்ன....அண்ணே...ஏதோ பதற்றத்தில்
இருப்பதுபோல் இருக்கிறது?
ஏதாவது பிரச்சினையா? என்று மெதுவாகக்
கேட்டது.

அதெல்லாம் ஒன்றும் இல்லை.
என்னிடம் எதுவும் கேட்காத....
என்னைக் கொஞ்சம் 
தனியாக இருக்க விடுறியா?
சீறியது சேவல்.

என்னாயிற்று இந்த சேவலுக்கு...?
என்றபடி அங்கிருந்து சென்றது பெட்டை.

மயிலின் அழகிற்கு முன்னால் 
சேவல் தன் அழகை இழந்து
நிற்பது போன்ற உணர்வு.
தன் குரலும் தோற்றமும் குன்றிப்
போனது போன்ற நினைப்பு.
அந்த நினைப்பில் வேறு எந்த
நினைப்பும் இல்லை."
  
 " ம்...இப்படி செய்தால் என்ன?"
 அதுதான் சரியான வழி.
 இந்த பிரச்சினைக்கு  இதுதான் நிரந்தர     
தீர்வாக இருக்கும்."

ஒரு முடிவோடு களத்தில் இறங்கி வேலை 
செய்ய ஆரம்பித்தது சேவல்.
 இரவு முழுவதும் தூக்கமே வரவில்லை. 
       
மயில் தோகை விரித்து ஆடும் காட்சி 
கண்முன்னே வந்து  சேவலைப்
படாதபாடுபடுத்திக் கொண்டிருந்தது.

ஐயோ நினைக்க... 
நினைக்க  . தூக்கமே வரமாட்டேங்குதே!
தானாகத் தரையில் கிடந்து உருண்டது
சேவல்.

 பொறாமைத் தீ ...தக தகவென்று பற்றி எரிய ...
 சேவல் வெம்பிக் கொண்டிருந்தது.
 
  இந்த மயிலை தீர்த்துக் கட்டிவிட வேண்டியதுதான்."
கங்கணம் கட்டி வேலையில் 
இறங்கியது சேவல்.

"வேண்டாம்...வேண்டாம்...பாவம்...
தோகையை மட்டும் வெட்டிவிட்டு விடுவோம்.
தோகையில்லாத மயில் பார்ப்பதற்கு
அழகில்லாமல் போகும். அதற்குப் பிறகு
இந்த மயில் வந்தால் என்ன ?வராமல்
போனால் என்ன? யார் எட்டிப்பார்க்க
போகிறார்கள்.?"
     

விடியும் முன்பாக சிறுவர்கள் பட்டம் விடுவதற்காக 
 வைத்திருந்த மாஞ்சா கயிற்றை எடுத்துக்கொண்டு 
 வயலுக்குப் புறப்பட்டது சேவல்.
 
  மயில் நேற்று இங்கேதான் வந்து ஆடியது.
  நாளையும் இங்கு வரும்.வரட்டும்...வரட்டும்.
மயில் வந்து ஆடிய இடத்தில் குறுக்கும் நெடுக்குமாக 
மாஞ்சா கயிற்றை கட்டி வைத்து விடுகிறேன்.
       
" மயில் எப்படியாவது வயலுக்கு வரும்.
 தோகையை விரித்து அங்கேயும்
 இங்கேயும் ஆட்டும்.
இறகுகள் மாஞ்சாவில் மாட்டிக் கொள்ளும்.
அதிலிருந்து மீள்வதற்காக மயில் 
பறக்க முயற்சிக்கும்.
அப்போது இறகுகள் வெட்டுபட்டு கீழே விழும்.
 இறகுகள் இல்லா மயில் எப்படி இருக்கும்?  
 மொட்டை மயில்..., மொட்டை மயில் ..
 என்று பார்ப்பவர்கள் சிரிப்பார்கள்"

ஹா...ஹா...ஹா
எனக்கே சிரிப்பை அடக்க முடியவில்லை.

"இரவோடு இரவாக  மாஞ்சா கயிறை
கட்டி வைத்தது சேவல்.

"விடியட்டும்..... விடியட்டும்...
நாளைய பொழுது மயிலுக்கு 
மரண பொழுதுதான்..

ஹா...ஹா...ஹா."

மனசு படபடத்தது. விடியும்வரை
காத்திருக்க வேண்டுமே!
அன்றைய இரவு சேவலுக்கு
தூங்கா இரவாகவே முடிந்தது.

அதிகாலை.....
வயலில் போய் பார்த்து வருவோம்....
"மொட்டை மயிலு...மொட்டை மயிலு
உன் தோகை பார்த்தியா?
இரட்டை வாலு குருவிப்  போல
குட்டை ஆக்கியது யாரு 
கேட்டியா?"
பாடிய படியே வயலை நோக்கிச்
சென்றது சேவல்

இன்று நான் மகிழ்ச்சியாக
இருக்கிறேன்.
"
"இன்பநாள் இன்று   இன்ப நாள்
அழகு  மயிலு
அலங்கோலமான நாள்
ஹா...ஹா...ஹா..""
என்று பாடியபடியே வயலில்
கயிறு கட்டி வைத்திருந்த இடத்திற்கு
அருகில் சென்றது சேவல்.

"என்ன ஒரு அரவமும் இல்லை..
மயிலு தோகை வெட்டுபடுவதற்குப் பதிலாக 
கழுத்தே வெட்டுபட்டு விட்டதா?
நம்ம எதிரி முழுவதுமாக தொலைந்து
போனதா? 
அதுவும் நல்லதுக்குத்தான்.....பார்ப்போம்......"
என்றபடி அங்குமிங்கும் மயிலைத் தேடியது
சேவல்.

"போச்சா ...போயே ...போச்சா...
பார்க்கணுமே இந்த மயில் செத்துக்
கிடப்பதை என்
கண்ணால் பார்க்கணுமே......"
ஏகப்பட்ட எதிர்பார்ப்போடு
தேடியது சேவல்.

" எங்கும் காணலியே....
மயில் வரலியா?

வந்திருந்தால் இந்நேரம்
தோகை வெட்டுப்பட்டிருக்கணுமே

ஒருவேளை ....
செடிகளுக்குள் விழுந்து கிடக்குமோ?"
கிடக்கலாம்.....கிடக்கலாம்..."
வயலுக்குள் இறங்கி தேடியது சேவல்.

       
" கயிறு இங்கே தானே கட்டினேன்.
பிறகு எப்படி?......மயிலைக்
 காணலியே.....தலையை கீழே
 போட்டு நன்றாக தேடியது சேவல்.

"ஆ...ஆ..அம்மா.
 யார் என் குரல்வளையை ...
ஆ...ஆ....."

அதற்குமேல் சேவலிடமிருந்து
எந்த சத்தமுமில்லை.

மாஞ்சா கயிறு சேவலின்
 கழுத்தில் மாட்டிக்கொள்ள
சேவல் அங்குமிங்கும் துள்ளியது.

துள்ளிய வேகத்தில் தலை அறுபட்டு
 ரத்தம் சொட்ட ஆரம்பித்தது.
இருந்தாலும் வலியோடு மேலும்
 பலம் கொண்ட
 மட்டும் துள்ளிப் பார்த்தது சேவல்.
 
 அந்தோ....பரிதாபமாக தலை தனியாக 
 கீழே விழ...
 தலையில்லா சேவல் சற்று நேரம் துடிதுடித்து...
 அப்படியே அடங்கிப் போனது. 
 
 தலையில்லா சேவலைப் பார்க்கப்
  பரிதாபமாக இருந்தது.
  
  பாவம்...சேவல். 
  பொறாமையால் தான் விரித்த  வலையில் 
  தானே மாட்டிக் கொண்டு மாண்டு போனது.
  
 பொறாமை இத்தனை கொடியதா? 
 
 இவற்றை எல்லாம் பக்கத்திலிருந்த
தென்னை மரத்திலிருந்து பார்த்துக்
கொண்டிருந்த குயில்
 பதைபதைத்துப் போனது.
   
 அந்தோ...பொறாமை கொண்ட
 சேவல் தன் சாவுக்கு தானே
 காரணமாகிவிட்டதே!
இந்த சேவலுக்கு இது தேவைதானா?
அதுபாட்டுக்கு மயில் வந்து ஆடிட்டுப்
போகட்டுமே ! 
நீ கூவிட்டுப் போயேன்....உனக்கென்ன?....
உன்னை மாதிரி மயிலால் கூவ முடியுமா?

பார்த்தியா.....இப்போது உன் அழிவுக்கு
நீயே காரணம் ஆகிவிட்டியே...."
சேவலுக்காகப் பரிதாபப்பட்டது குயில்.

 
பொறாமை கொள்ளாதுங்கப்பா
பொறாமை உங்களையே அழிந்தேவிடும்.

"அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்று
 தீயுழி உய்த்து விடும்"
என்று அய்யன் வள்ளுவர் 
 இதற்காகத்தான் சொல்லி வைத்தாரோ!

இருக்கலாம்.... இருக்கலாம்.

பொறாமை  வந்தால்
சேவலுக்கு நேர்ந்த கதிதான்
உங்களுக்கும்.....
ஆமை  புகுந்த வீடும்
அமீனா நுழைந்த வீடும் 
உருப்படாது என்பார்கள்.
பொறாமை வந்து குடி கொண்டுவிட்டால்....
போச்சு...போச்சு....எல்லாமே
போச்சு.

ஊருக்கெல்லாம் கேட்கட்டும் என்று 
உரக்க  பாடிக் கொண்டே   
பறந்து சென்றது குயில்.
       
       
       
       



Comments

Popular Posts