வெற்றிக் கணக்கு

வெற்றிக் கணக்கு 

"மனங்களைக் கொள்ளையுங்கள்.
வெற்றி உங்கள் கையில்."
இப்படி ஒரு விளம்பரம்.

ஆஹா....புதுமையான விளம்பரமாக
இருக்கிறதே!

என்னவாக இருக்கும்?
மனதிற்குள் அதைப்பற்றிய
விவாதத்தை ஓடவிட்டேன்.

உண்மைதான்....மனங்களைக்
கொள்ளையடித்தால் வெற்றிதான்
என்ற கருத்தில் எனக்கு உடன்பாடு
ஏற்பட்டுவிட்டது.

என்ன கொள்ளையடிப்பதற்கு
உடன்பாடா?
என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா?

இது என்னப்பா?
மனங்களைக் கொள்ளையடித்தால்
வெற்றியா?

இது என்ன புதுக்கணக்கு?
என்று கேட்கிறீர்களா?

புதுக்கணக்கு மட்டுமல்ல...
புதுமையான கணக்கு....

கொள்ளையடித்து தந்தான் பாருங்களேன்

கொள்ளையடிக்க வேண்டுமா?
மொகலாய மன்னர்கள் கோவில்களில் 
கொள்ளையடித்துச் சென்றார்கள்
 என்று படித்திருக்கிறோம்.
 
 முகமூடிக் கொள்ளையர்கள் கடைகளில்
 கன்னக் கோலிட்டு திருடிச் சென்றதாக 
கேள்விப்பட்டிருக்கிறோம்.
 லாரி லாரியாக மணல் கொள்ளை நடைபெற்று 
வருவதாக வாசித்திருக்கிறோம்.
   
இது என்ன புதுக்கொள்ளை?

இது பொருட்கொள்ளை அல்ல....
மனக்கொள்ளைதான்.
யாருக்கும் தெரியாமல் கமுக்கமாக
கொள்ளையடித்து விடலாம்.

"கமுக்கமாக முடித்துவிடலாமா?
இருந்தாலும் கொஞ்சம் நெருடலாக
இருக்கிறது.
 மனக் கொள்ளை...... வேண்டவே 
 வேண்டாமப்பா....
 ஆளை விடுங்கடா     சாமி....."என்று 
 அலர வேண்டும் போல் தோன்றுகிறதா|
 
 .கொள்ளை என்றாலே ஏதோ தீண்டத் தகாத 
 ஒரு செயல் என்று ஏன் ஓடி 
 ஒளியப் பார்க்கிறீர்கள்?
 
  நீங்கள்  இதுவரை கொள்ளையடித்ததே
   இல்லையா?"     
  
   "அட...போங்கங்க ...உங்கள் வாழ்நாளில் 
   பாதி நாளை வீணாக கழித்து விட்டீர்கள்" 
   என்று உங்களுக்காக  பரிதாப்படுகிறேன்.
   
    " உங்கள் பரிதாபம் யாருக்கு வேணும்? 
    விசயத்துக்கு வாங்க "  என்கிற உங்கள் 
    அவசரம் புரிகிறது.
    
    வருகிறேன்...வருகிறேன்..
    
 பெற்றோர் மீது கொள்ளைப் பிரியம் இல்லையா?
 
  மழலைகளின் சிரிப்பில் உங்கள்
   மனம் கொள்ளைப் போனதில்லையா?
   
  பனி படர்ந்த  புல்வெளியைக் காண்பதில் 
  கொள்ளை மகிழ்வு கண்டதில்லையா?
  
   திருநெல்வேலி அல்வா என்றால் எனக்கு 
   கொள்ளை பிரியம் என்று  நாக்கில் 
   எச்சில் ஊற... ஊற..  பேசியதில்லையா?
   
   இப்படி வண்டி வண்டியாய் கொள்ளையை 
   மனதில் வைத்து கொண்டு கொள்ளைக்கும் 
   எனக்கும் சம்பந்தமே இல்லை 
   என்பது போல் இருக்கிறீர்களே!
   
   யாரை ஏமாற்ற பார்க்கிறீர்கள்?
   
    கொள்ளை நம் கூடப் பிறந்த 
    குணங்க...
    
.கொள்ளையடிக்காத மனிதன் உலகில் 
இருக்கவே முடியாது....

இதை மலைமீது ஏறி நின்றுகூட 
உரக்கக் கத்திச் சொல்லுவேன்.

 எது  எப்படியோ நீங்களும் நானும் 
 கொள்ளையர்கள் தான் என்பதை 
 இப்போதாவது ஒத்துக்கொள்ளுகிறீர்களா?
 
 வேறு வழி இல்லை.
 ஒத்துக்கொண்டு தான் ஆக வேண்டும்.

நாம் அனைவரும் கொள்ளையர்கள் தான்.
 
 நீங்கள் செய்த கொள்ளைக்கு 
 இன்னொரு பெயர் உண்டு.
 
  ' அலாதி 'என்பது தான் அதற்கான பெயர்.
  
" இந்த அலாதியைச் சொல்வதற்குதான் 
இத்தனை அகராதியா?"                         
 என்று முணுமுணுப்பது எனக்குக்
  கேட்கத் தான் செய்கிறது.
  
 அட விடுங்கங்க... எல்லாம் போகட்டும்.
 இப்போது விசயத்திற்கு வருவோம்.
எல்லா செயலிலும் நன்மையும் உண்டு. 
தீமையும் உண்டு.
 ஏன் நோய் நுண்ணுயிரிகளில் கூட 
 நன்மை செய்பவையும் உண்டு.
 தீமைசெய்பவையும் உண்டு என்று 
 நாம் படித்ததில்லையா?
 
 அதுபோல் தான் கொள்ளையிலும் 
 நன்மை தரும் கொள்ளையும் இருக்கிறது. 
 தீமை செய்யும் கொள்ளையும் இருக்கிறது.
 தீமையை விட்டுத் தள்ளுங்கள்.
 நன்மையைக் கையில் எடுங்கள்.
 
  "பொய்மையும் வாய்மையிடத்த புரைதீர்ந்த
    நன்மை பயக்கும் எனின்"
   என்று பொய்க்கு திருவள்ளுவர் 
   வக்காலாத்து வாங்கவில்லையா!

நன்மை பயக்குமானால் பொய்யே 
சொல்லலாமாம்.
நல்லது நடக்குமானால் கொள்ளையடிக்கக்
கூடாதா?

ஏன் கூடாது?

  எதுவும் நல்லது நடப்பதற்காக 
 செய்வோமானால் தப்பே இல்லை.
 வாருங்கள் .
   
கொள்ளையை வீட்டிலிருந்தே தொடங்குவோம்.

எல்லாவற்றிற்கும் தொடக்கப்புள்ளி  
வீடாகத்தான் இருக்கும். 
இருக்கவும் வேண்டும்.

முதலாவது நீங்கள் வைக்கும் குறி 
உங்கள் பெற்றோராக இருக்கட்டும்.

"பெற்றோர் மனதை கொள்ளையடிக்க வேண்டுமா? 
 வேண்டாமடா சாமி...நான் இந்த விளையாட்டுக்கு வரல.
  வேறு எதாவது நடக்கிற காரியமாக கூறுங்கள்.
 இதெல்லாம் முடிகிற காரியமா?
 நல்ல பிள்ளை என்று பெயரெடுத்துவிட வேண்டும் 
 என்று நானும் படாதபாடுபடுகிறேன். 
  ஒன்றும் வேலைக்கு ஆகமாட்டேன் என்கிறது.
  அதுவும் அம்மாவையாவது வசப்படுத்தி விடலாம்.
  இந்த அப்பா இருக்கிறார்களே.....
  எது சொன்னாலும் நம்ப மாட்டார்கள்.
  இப்படி இருக்கும்போது அப்பாவையாவது
  கொள்ளையடிப்பதாவது....?"
  என்ற உங்கள் மனக்குழப்பம் எனக்குத்
  தெரியாமலில்லை.
  
  
இதற்குப் போய் கவலைப்படலாமா?
 பெற்றோர் மனங்களைக் கொள்ளையடிக்கும் 
 மந்திரம் உங்கள் கைவசம் 
 இருக்கும்போது ஏனிந்த சலிப்பு...?
  ஏனிந்த வலிப்பு?
  
  பேச்சுக்குப் பேச்சு... வாய்க்கு வாய் ...
  ஆம் அம்மா .... ஆம் அப்பா ... 
    சரி அம்மா ....சரி அப்பா ....
    என்று சொல்லிப் பாருங்கள். 
    மாட்டேன் என்பதை வந்து செய்கிறேன் 
    அம்மா...இதோ மாலைக்குள்
    முடித்துவிடுகிறேன்  "என்று நாசூக்காக 
    சொல்லப் பழகுங்கள்.
    
  மறுப்போ... வெறுப்போ ....
   கொஞ்சலோடு  சேர்ந்து வெளிப்படட்டும்.
   நீங்கள் பேசும் பேச்சுதான்
   உங்கள் பெற்றோருக்கும் உங்களுக்குமான
   ஒரு பிணைப்பை ஏற்படுத்தும்.

அன்பான சொற்களுக்கு மிஞ்சிய
மந்திரம்... தந்திரம் எதுவும் இல்லை.
   
  இப்படி நடந்துகொண்டால் 
  உங்கள் பெற்றோர் 
  மனம் உங்கள் கைவசம்.
  முயற்சிதான்
  பண்ணிப் பாருங்களேன்.
  
"  ப்  பூ...இவ்வளவு தானா? 
  எப்படி அசத்துறேன் பாருங்கள்
   என்று புறப்பட்டுவிட்டீர்களா?
  களத்தில் இறங்க முடிவு
  செய்துவிட்டீர்கள் அல்லவா!
  
  இனி வெற்றி உங்களுக்குதான்.
  
  முதல் கொள்ளை எளிதாக நடத்தி 
  முடித்துவிடலாம் என்ற நம்பிக்கையோடு
  களத்தில் இறங்குங்கள்.
  
   இனி வரிசையாக  கொள்ளையில் 
   இறங்கிவிட வேண்டியது தான்.
   
 பள்ளிப்பருவத்தில் உடன் பயிலும் 
 மாணவர் மனங்களைக் கொள்ளையடிக்கக் 
 கற்றுக் கொள்ளுங்கள்.
 
 இது ஒன்றும் பெரிய காரியம் அல்ல. 
கொஞ்சம் கரிசனம் எடுத்துப் பேசுங்கள்.
 " நேற்று பள்ளிக்கு வரவில்லையா? 
 உடம்பு சரியில்லையா?" 
 கரிசனமாக விசாரியுங்கள்.
 
  ஏதாவது உதவி தேவைப்பட்டால் 
  வலிய சென்று உதவுங்கள்.
 உங்கள் கரிசனம் அவர்களின் கவனத்தை 
 உங்கள் பக்கம் திருப்பும்.
 
 அவர்கள் மனதை உங்கள் கையில் 
 விழ வைக்கும்.
 
 அடுத்த  கொள்ளை ஆசிரியராக இருக்கட்டும்.
 இருக்க வேண்டும். நம் வாழ்வில்
 நிகழ்த்த வேண்டிய மிகப்பெரிய
 கொள்ளை ஆசிரியர் மனங்களைக் 
 கொள்ளையடிப்பதாகத்தான் இருக்க
 வேண்டும்.
 
 " ஐய்யோடா...சாமி  ....வேறு 
 எது நடந்தாலும் இது மட்டும் 
  நடக்கவே்  நடக்காது.
 வேறு ஆளைப் பாருங்கள்....
 ஓட்டம் பிடிக்கறேன் சாமி. 
 ஆளை விடுங்க .
 ஓட நினைக்கிறீர்களா?
 
  "எங்கே ஓடுகிறீர்கள்?
  ப்ளீஸ் ...ஒரு நிமிடம் கேளுங்கள்.
  ஆசிரியர் என்ன உங்களுக்கு ஆகாதவரா என்ன!
   பெற்றோரையே கொள்ளையடித்து விட்டீர்கள்.
  ஆசிரியர் மனதை மிக எளிதாகக்
  கொள்ளையடித்து விடலாம்.
  
  அது எப்படி என்கிறீர்களா?
  
 பெரிதாக மெனக்கெடத் தேவை இல்லை.
 
 ஆசிரியர் எது செய்து வரச் சொன்னாலும் 
 முதல்  ஆளாய் செய்து வர வேண்டும்.
 நம்மால் முடிந்ததைச் செய்து 
 நம்மை முன்னிலைபடுத்திக் கொள்ள வேண்டும்.
 படிப்பு சரியாக வரவில்லையா...விட்டுவிடுங்கள்.
 
 கையெழுத்தையாவது நன்றாக எழுதி 
 நல்ல பெயர் வாங்குங்கள்.
 அதுவும் முடியலியா..?
 .ஆசிரியர் சொல்லும் சின்ன சின்ன 
 வேலைகளை முன்னே நின்று செய்து
 நல்ல பெயர் வாங்குங்கள்.
  
இது போதும்.கண்டிப்பாக ஆசிரியர் மனதில் 
இடம்பிடித்துவிடலாம்.

 ஆசிரியர் மனத்தைக் கொள்ளையடித்துவிட்டால்..
 ஆசிரியருக்காக எதையும் செய்ய வேண்டும் என்ற
 ஆர்வம் எழும்.
 
 படிக்க வேண்டும் என்ற 
 எண்ணம் தானாய் ஏற்படும்.
 
 இதில் மட்டும் வெற்றி கண்டுவிட்டால் 
 எந்நாளுமே ...எங்கேயுமே ...வெற்றி உங்களுக்குத்தான்.
 களத்தில் இறங்கி பாருங்கள்.
 அசந்து போவீர்கள். 
 ஆச்சரியப்பட்டுப் போவீர்கள்.

மனக்கொள்ளைதான் வெற்றியின் முதற்படி.

 
மக்களின் மனங்களைக் கொள்ளையடிக்கத் 
தெரிந்தவர்தான் நல்ல அரசியல்வாதியாக 
இருக்க முடியும்.

 பார்வையாளர்களின் மனங்களைக் 
 கொள்ளையடிக்கத் தெரிந்தவர் 
 நல்ல பேச்சாளராக இருப்பார்.

 வாசகர்கள் மனங்களைக் கொள்ளையடிக்கத்
 தெரிந்தவர்தான் நல்ல எழுத்தாளராவார்.


 எந்த ஒரு வெற்றிக்கும் மனக்கொள்ளைதான்
 மூலக்காரணமாக இருக்கும்.... 
இருந்து கொண்டிருக்கிறது
என்பது இப்போது புரிந்திருக்குமே!
 
 இப்போது நாமும் கொள்ளையில் 
 இறங்கிவிட வேண்டியதுதான் 
 என்று மனம்  கணக்கு போடுமே!
போடட்டும்..... போடட்டும்!

 உங்கள் கணக்கு எப்போதும் 
 சரியானதாகத்தான் இருக்கும்.
 
 கெட்ட கொள்ளைகளோடு 
 கொள்ளுங்கள் பிணக்கு.
  நல்ல கொள்ளையோடு தொடங்கட்டும் 
  உங்கள் வெற்றி கணக்கு!
    
  
   

Comments

Popular Posts