நான் வேலைக்குப் போறேன்
நான் வேலைக்குப் போறேன்
"எனக்கு வேலை கிடைத்திருக்கிறது...
எனக்கு வேலை கிடைத்திருக்கிறது .."
பாலாவிற்கு உரக்க கத்த வேண்டும்
போல இருந்தது.
எத்தனை ஆண்டுகள்
இதற்காக காத்திருந்திருப்பாள்.?
காத்திருந்திருப்பாள் என்பதைவிட
ஏங்கியிருப்பாள்?
இனி எனக்கு வேலையே கிடைக்காதோ என்று
அம்மாவிடம் சொல்லிச் சொல்லி அழுதிருப்பாள்.
நான் ஒரு ஆக்கம் கெட்டவள்
என்று சொல்லிச் சொல்லி புலம்பியிருப்பாள்.
எல்லாவற்றையும் அவள் கையில்
வைத்திருக்கும் ஒற்றை கவர்
மாற்றிவிட்டது.
ஆம்....அவள் கையிலிருக்கும் கவரில்தான்
அவள் தலையெழுத்தை மாற்றி
எழுதிய லட்டர் இருக்கிறது.
கவரைத் திருப்பித் திருப்பி பார்த்தாள்.
கண்களில் ஒற்றிக் கொண்டாள்.
கண்களில் திரண்டு நின்ற கண்ணீர்த்
துளிகள் கவரில் விழுந்து
இனி இந்தக் கண்ணீர்த் துளிகள்
உனக்குரியவை அல்ல என்பதுபோல
காணாமல் போனது
இனி நாளும் எனக்கு மகிழ்ச்சி தான்.
நான் விரும்பிய ஆடை வாங்கி அணியலாம்.
சுதந்திரமாக இருக்கலாம்.
எதற்காகவும் யாரிடமும்
கையேந்த வேண்டியதில்லை.
இனி யாரும் என்னை ஒரு
கேள்வி கேட்க முடியாது....
நான் சுதந்திரப்பறவை....என்று
என்னென்னவோ
கற்பனையில் மிதந்தாள்.
கிழிந்த பாவாடையோடு பள்ளிக்குப்
போன நாட்கள் நினைவு வர
மறுபடியும் அதே கண்ணீர் திரட்சி.
என்ன இது? மகிழ்ச்சியான தருணத்தில்
தேவையில்லாத நினைவெல்லாம்
வந்து வாட்டுகிறது.
எனக்கு வேலை கிடைத்திருக்கிறது....
எனக்கு வேலை கிடைத்திருக்கிறது.
அது மட்டும் போதும்....வேறு எந்த நினைப்பும்
இப்போதைக்கு வேண்டாம்.
யாரிடமாவது சொல்ல வேண்டுமே....
யாரிடமாவது சொல்லாவிட்டால் தலையே
வெடித்துவிடும்போல் இருந்தது.
மெதுவாக கதவைத் திறந்து வெளியில்
வந்து பார்த்தாள் பாலா.
கண்ணுக்கு எட்டிய
தூரம் வரை யாரையுமே காணவில்லை.
"சே...இன்றைக்குப் பார்த்து ஒரு சின்ன
குழந்தைகூட தெருவில் இல்லை."
சலித்துக் கொண்டபடி வீட்டுக்குள் சென்று
நாற்காலியில் அமர்ந்தாள்.
நாலு நிமிடம்கூட தொடர்ந்து அமர்ந்திருக்க
முடியவில்லை.
மறுபடியும் வாசலுக்கு வந்து எட்டிப்பார்த்தாள்.
தொலைவில் பள்ளியில் அவளோடு படித்த
தோழிகள் இருவர்
வந்து கொண்டிருந்தனர்.
"ஆளு கிடைச்சாச்சு...ஆளு கிடைச்சாச்சு "
மனசு குதுகலித்தது.
தோழிகள் பக்கத்தில் வரும்வரை ஆவலோடு
பார்த்துக் கொண்டு நின்றாள்.
பக்கத்தில் வந்த இருவரும் வாசலில்
நிற்கும் பாலாவைக் கண்டு கொள்ளவே இல்லை.
பேச்சு சுவாரசியத்தில் அவர்கள்
பாட்டுக்குப் போய்க் கொண்டிருந்தனர்.
" இங்க ஒரு ஆளு நிற்கிறது கண்ணுக்குத்
தெரியல..."வலிய குரல் கொடுத்து நிறுத்தினாள்
பாலா.
" ஓ....பாலாவா? நான் உன்
தங்கையோ என்று நினைத்தேன்.
பார்க்கலப்பா....பார்த்திருந்தா பேசாம
போவோமா? "
சமாதானமாகப் பேச்சோடு பேச்சைத்
தொடங்கினாள் கலைவாணி.
" ம்...உங்களுக்கு எல்லாம் எங்க
கண்ணு தெரியப் போவுது..."ஏதாவது
பேசி விசயத்துக்கு வர வேண்டும் என்பதற்காக
சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் முன்னுரை
வாசித்தாள் பாலா.
"யாரு...எங்களுக்கா.?
..இது என்ன புது கதையா இருக்கு
உனக்குத்தான் கல்லூரியில் படிக்கப்
போனதிலிருந்தே கண்ணு தெரியாமல் போச்சு..."
என்று குற்றச்சாட்டை திருப்பி பாலாமீது
வீசினாள் வயலா.
"சரி விடு வயலா...
என்ன சமாச்சாரம்....பாலா அம்மையார்
சந்தோசமா இருந்தாப்ல இருக்கு..."
கலைவாணி சரியாகப் பாயிண்டைப் பிடிச்சி
கேட்டாள்.
"அதுவா..அது சும்மாதான்...."
என்று இழுத்தாள் பாலா.
"சொல்லுப்பா....என்ன கலியாணம்
நிச்சயமாகியிருக்கா?"
"இப்பவேயா? அதெல்லாம் இரண்டு வருசம்
கழித்துதான்"
"அப்புறம் வேறு என்ன விசேஷம்?"
"உங்களிடம் சொல்வதற்கு என்ன ...
எனக்கு அரசாங்கத்தில் வேலை கிடைச்சிருக்கு.."
என்று ஒருவழியாக தான் சொல்ல வந்ததைச்
சொல்லி முடித்துவிட்டு தோழிகளின்
முகத்தையே பார்த்தாள் பாலா.
"அரசாங்க வேலை கிடைச்சிருக்கா?
இதைச் சொல்வதற்காக இத்தனை தயக்கம்.?
வா....ஸ்வீட் எடு கொண்டாடு...."
"அதெல்லாம் முதல் மாதம்
சம்பளம் வாங்கின பிறகுதான்."
"அப்போ இன்று வெறும் தகவல்தானா?
.எங்கே....வேலை போட்டுருக்காங்க?"
"சென்னையில்...."
"சென்னையிலா? பாலா கொடுத்து வச்சவதாம்பா...
உனக்கு என்னப்பா...இனி உன்னைக் கையில்
பிடிக்க முடியாது..." என்று ஒட்டில்லாமல்
பேசினாள் வயலா.
"அப்படி எல்லாம் இல்லை...வேலை கிடைச்சா
என்ன பெரிய கொம்பா...நான் என்றைக்கும்
உங்கள் தோழிதான்.... " வாய் ஏதோ பேசினாலும்
மனசு முழுக்க ஒரு கௌரவம் வந்து
கூடுகட்டி உட்கார்ந்து கொண்டது
"சரி வருகி்றோம்...போயிட்டு வா...
எங்களை மறந்துடாத...."
என்றபடி தோழிகள் இருவரும்
அங்கிருந்து நகர்ந்தனர்.
மறுநாள் இரவு ரயிலில் சென்னை
செல்ல வேண்டும்
அம்மாவும் கூட வருகிறார்கள்.
சென்னையில் சித்தி வீட்டில்
ஓரிரு நாள் தங்கிவிட்டு தனி வீடு பார்த்து
அமரலாம் என்று ஏற்பாடு பண்ணியிருந்தார்கள் அம்மா.
மறுநாள்வரை பாலாவுக்கு இருப்பு
கொள்ளவில்லை....
முதல்நாள் வேலைக்குச் செல்லப் போகிறேன்.
எப்படி இருக்குமோ?
புது இடம்...புதுப்புது மனிதர்கள்..
நல்லவர்களாக இருப்பார்களோ என்னவோ?
ஒரு கலக்கம் இருந்தாலும் வேலை கிடைத்திருக்கிறது
என்ற நினைப்பு எல்லா கலக்கங்களையும்
ஒதுங்கித் தள்ளிவிட்டு முந்தி வந்து
உட்கார்ந்து கொண்டது.
மறுநாள் இரயில் பயணம்.
இரவு தூங்கா இரவாகவே
இரயிலில் கழிந்துபோனது...
விடிந்ததும் சென்னையில் சித்தி வீடு
போய் சேர்ந்தாயிற்று.
இனி பாலாவும் சென்னைவாசிதான்
சித்தி மகிழ்ச்சியைத் தெரிவித்தார்.
இன்றே வேலையில் போய்
சேரவேண்டும்.
தடபுடலாக வேலைகள்
நடந்தன.
சித்தி மகன் ஒரு ஆட்டோவைக் கூட்டிட்டு வந்து
ஆட்டோக்காரனிடம் விவரம்
சொல்லிக் கொண்டிருந்தான்.
"அக்கா...வாங்க
தெரிஞ்ச ஆட்டோக்காரர் தான்.
பயப்படாமல் போங்க....பத்திரமாகப் போங்க....
அண்ணே ....அக்கா சென்னைக்குச் புதுசு.பார்த்துப்
பத்திரமா விட்டுட்டு வாங்க....."
என்று கரிசனமாக வழியனுப்பி
வைத்தான் தம்பி.
அம்மா...போயிட்டு வாறேன்
சொல்லிவிட்டு ஆட்டோவில் போய்
அமர்ந்து கையசைத்தாள் பாலா.
பத்திரமா போம்மா.....என்றார் அம்மா.
சரிம்மா....வாறேன் சித்தி
என்று ஆட்டோவுக்குள்
இருந்தபடி கையை அசைத்தாள்.
ஆட்டோ புறப்பட்டது.
பள்ளியை நெருங்க நெருங்க மனசு
படபடவென்று அடித்துக் கொண்டிருந்தது.
பள்ளியை நெருங்கியாயிற்று.
ஆட்டோக்காரர் ஆட்டோவை நிறுத்திவிட்டு
" இதுதாம்மா பள்ளி
இறங்கிக்கிடுங்க.... "என்றார்.
ஆட்டோக்காரரிடம் பணத்தை
எடுத்து நீட்டினாள் பாலா.
"வேண்டாம்மா உங்க சித்தப்பாவிடம்
வாங்கிக் கொள்கிறேன்" என்றபடி
வண்டியை நகர்த்தினார் ஆட்டோக்காரர்.
ஒரு நிமிடம் அப்படியே திரும்பி
பள்ளிக்கட்டிடத்தையே பார்த்துக்கொண்டு
நின்றாள்.
இனி ஒவ்வொருநாளும் இந்தப்
பள்ளிதான் உன்னை வரவேற்கப் போகிறது.
பள்ளிக்குள் புது மருமகள்
காலடி எடுத்து வைப்பது போல மெதுவாக
காலடி வைத்தாள்.
பள்ளி வளாகம் எங்கும்
பன்னீர் மரங்கள் அணி வகுத்து நின்றன.
வழி எங்கும் பன்னீர் பூக்களைத்
தூவி பாலாவை வரவேற்க காத்திருந்தது போல
பூக்களாக கிடந்தன.
இப்போது கூடுதலான மகிழ்ச்சி வந்து
தொற்றிக் கொண்டது.
அழகான மனதுக்கு உகந்த சூழல்.
நான் கொடுத்து வைத்தவள்
மனதுக்குள் சொல்லிக் கொண்டாள்.
தலைமை ஆசிரியர் அறை
கீழ்த்தளத்திலேயே இருந்தது.
அலுவலக வாசலில் நின்று மெதுவாக
எட்டிப்பார்த்தாள் பாலா.
தனக்காகவே காத்திருந்ததுபோல
"வாம்மா..."அன்பான குரல் ஒன்று
வரவேற்றது.
அப்படியே உருகிப் போனாள் பாலா .
"இதுக்குத்தானே ஆசைப்பட்டாய்
பாலகுமாரி?"
என்று கிடைக்கும் சந்தர்ப்பத்தைத் தனக்குச்
சாதகமாக்கி கிண்டலடித்து மனசு.
கலகலவென்ற சிரிப்பொலியும் பேச்சும்
பின்புலத்திலிருந்து கேட்க ...இவ்வளவு மகிழ்வான
இடத்தில் வேலையா...?
ஒரு நிமிடம் அப்படியே
திக்குமுக்காடிப் போனாள்
பாலா.
நாளையிலிருந்து நானும் இப்படித்தான்
பேசிக்கொண்டிருப்பேன் .
"புதுசா வேலையில் சேர வந்திருப்பது நீங்கதானா..."
என்ற தலைமை ஆசிரியரின் குரல் பாலாவின்
மனவோட்டத்திற்குத் தற்காலிக தடையிட்டது.
"ஆமாம்...."என்றபடி ஏதோ வீட்டுப்பாடம்
எழுதிவந்த நோட்டை ஆசிரியரிடம்
நீட்டுவதுபோல....கையிலேயே வைத்திருந்த
அப்பாயின்ட்மென்ட் ஆர்டரை ஆர்வமாக
தலைமை ஆசிரியரிடம் நீட்டினாள் பாலா.
ஆர்டரை வாங்கி கையில் வைத்தபடி நாற்காலியில்
அமர்ந்தார் தலைமை ஆசிரியர்.
ஆசிரியரின் பதிலுக்குக் காத்திருக்கும்
மாணவியைப்போல
அப்படியே மௌனமாக நின்றிருந்தாள் பாலா.
" பாலா....முழுப் பெயரும் பாலா தானா?
நல்ல பெயர்...வாங்கம்மா...வாங்க
கையெழுத்துப் போடுங்க..."என்று வருகைப்பதிவேட்டு
ரிஜிஸ்டரை பாலா பக்கமாக நகர்த்தி வைத்துவிட்டு
பாலா கையெழுத்துப் போடுவதையே பார்த்துக்
கொண்டிருந்தார் தலைமை ஆசிரியர்.
முதல்நாள் ....அரசு வேலையில்
முதல் கையெழுத்து.
எழுதி எழுதிப் பார்த்து பழக்கி
வைத்திருந்த கையெழுத்தைப்
போட்டுவிட்டு நிமிர்ந்தாள்.
கையெழுத்து நன்றாகத்தான் இருந்தது.
இன்றிலிருந்து நாளும் என்
அழகான கையெழுத்தும் இந்தப்
பதிவேட்டில் இருக்கும் .
"எங்கே இருந்து வர்றீங்க..".ஏதோ கேட்க
வேண்டுமே என்பதற்காக கேட்டு வைத்தார்
தலைமை ஆசிரியர்.
ஊரைச் சொல்லிவிட்டு ஆசிரியர்
முகத்தையே பார்த்தாள் பாலா.
..".என்ன ஒரு
கனிவு..."மனசுக்குள் தலைமையாசிரியரைப் பற்றிக்
நல்லபடியாக கணக்குப்போட்டு
பதிவு செய்து வைத்துக் கொண்டாள்.
"நீங்க உங்க வகுப்புக்குப் போகலாம்."
என்றபடி அலுவலக ஊழியரை அழைத்து...
டீச்சருக்கு அவங்க வகுப்பறையைக் காட்டு என்று
பணித்தார்.
மனசு முழுக்க முதல்நாள்
ஆசிரியராக நிற்கப்போகும்
வகுப்பையும் மாணவர்களையும் காணவேண்டும்
என்ற ஆவல் பொங்கி நின்றதால் ...எதிரில் வந்தவர்
எவரும் கண்ணுக்குத் தெரியவில்லை.
கண்களுக்கும் மூளைக்குமான தகவல்
பரிமாற்றம் சரிவர நடைபெறவில்லை.
ஒரு குதுகலத்தோடு வகுப்பிற்குள் நுழைந்தாள்.
குட்மார்னிங் டீச்சர் என்ற மாணவர்களின்
உற்சாக வரவேற்பு பாலாவைத்
திக்குமுக்காட வைத்தது.
வணக்கம் உட்காருங்க....என்று சொல்லிவிட்டு
வகுப்பைச் பார்த்தார்.
மாணவர்கள் ஏதோ மெதுவாக சொல்லியபடி
பாலாவையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
நான்தான் இனி உங்கள் வகுப்பு
ஆசிரியர் ஒரு சிறிய அறிமுகம் செய்து
கொண்டார்.
அதற்குள் அலுவலக உதவியாளர் வந்து
"உங்களை மேடம் அலுவலகத்திற்கு வரும்படி
கூறுகிறார் "என்றார்.
"என்னவாக இருக்கும்.... "என்று சிந்திக்கும்
மனநிலையில் பாலா இல்லை.
துள்ளிக் குதிக்கும் கன்றுக்குட்டிபோல...
ஒரு கம்பீரத்தோடு
அலுவலகத்திற்குள் மறுபடியும்
நுழைந்தாள் பாலா.
அங்கே தலைமை ஆசிரியர் நாற்காலியில்
இன்னொருவர் அமர்ந்திருந்தார்.
யாரவர் என்ற சிந்தனை சிறிதும் எழவில்லை.
அலுவலகத்தில் நுழைந்ததும் "எதற்காக கூப்பிட்டீர்கள்"
என்பதுபோல தலைமை ஆசிரியர் முகத்தையே
பார்த்தாள் பாலா.
அவர் பதிலேதும் சொல்லவில்லை.
தலைமையாசிரியர் நாற்காலியில்
இன்னொருவர்....அப்படியானால்
இது......ஏதோ நினைவில்
பேந்தப் பேந்த விழித்துக் கொண்டு நின்றாள்.
" மேடம் இவங்கதான் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள
ஆசிரியை "என்று பாலாவை நாற்காலியில்
அமர்ந்திருந்தவருக்கு அறிமுகம் செய்து
வைத்தார் தலைமை ஆசிரியர்.
இப்போது நாற்காலியில் இருந்தவரை நேருக்குநேர்
பார்த்த பாலாவின் முகத்தில்
பயம் அப்பிக் கொண்டது.
அதற்குள் "நீங்க எங்கே படிச்சீங்க "என்ற
கேள்வி முன்னே வந்து விழுந்தது.
கேள்வியில் இருந்த விசமத்தைப் புரிந்து
கொள்ளாத பாலா"
எங்கே படித்தேன்?.....எங்கே படித்தேன்?
..பள்ளிப் படிப்பு படித்த
இடத்தை சொல்ல
வேண்டுமா? இல்லை கல்லூரிப் படிப்பு
படித்த இடத்தைச் சொல்ல வேண்டுமா?
என்பதுபோல கேள்வி
கேட்டவரின் முகத்தையே அப்பாவியாகப்
பார்த்துக் கொண்டு நின்றாள்.
"உங்களைத்தான் கேட்கிறேன்...
சொல்லுங்க...எங்க படிச்சிங்க..."
சொற்களில் கடுமை இருந்தது.
வார்த்தைகள் வாயிலிருந்து வர மறுத்தன.
"ஒரு அதிகாரி உட்கார்ந்திருக்கிறேன்...
வணக்கம் சொல்ல வேண்டும் என்ற மரியாதைகூட
தெரியல....எங்கம்மா
படிச்சீங்க......"தொடர்ந்து வார்த்தைகள் கடுமையாக
வந்து விழுந்தன.
குற்றவாளி் கூண்டில் நிறுத்தப்பட்டிருக்கும்
விசாரணைக் கைதியிடம் விசாரிப்பதுபோல
பாலாவிடம் குறுக்கு விசாரணை
நடத்திக் கொண்டிருந்தார் அதிகாரி.
ஏதோ தவறு செய்து விட்டோமோ?
என்று ...குற்றம் செய்தவளைப் போல
கூனிக்குறுகிப் போனாள் பாலா.
"சாரி மேடம் ...எனக்குத் தெரியாது...
வணக்கம் மேடம்"
என்று துண்டு துண்டாக
வார்த்தைகளை ஒட்டுப் போட்டுக்
கொண்டிருந்தாள் பாலா.
"தமிழ்கூட சரியா பேசத் தெரியல
இவங்களை எல்லாம் வேலையில்
சேர்த்துவிட்டு......"சலித்துக் கொண்டார்
அதிகாரி.
"யாரு என்று தெரியலை மேடம்? அதுதான்...."
பாலாவிற்கு அழுகையே வந்துவிட்டது.
"யாரு என்று தெரியலையாம்....என்னைப் பார்த்ததும்
உங்கள் தலைமையாசிரியர் நாற்காலில் இருந்து
எழும்பியதைப் பார்க்கல..." குற்றப்பத்திரிகையில்
அடிஷனலாக குற்றங்களைச் சேர்த்துக் கொண்டிருந்தார்
அதிகாரி.
"நான் யாரோ பேரன்ட் என்று நினைத்தேன் மேடம்...
தெரியாம..."வார்த்தைகள் மறுபடியும் மறுபடியும்
சம்பந்தா சம்பந்தம்
இல்லாமல்
வந்து விழுந்தன.
"இதற்குத்தான் அதிகம் படித்தவர்களை
பள்ளிகளுக்கு நியமனம் செய்யாதீர்கள் என்று
சொன்னேன்...மதிக்க மாட்டார்கள்..."மரியாதை
தெரியாதவள் என்ற முத்திரையைக் குத்த வேண்டும்
என்பதில் உறுதியாக
இருந்தார் அதிகாரி.
இதற்குமேலும் என்ன பேசுவது
என்பது புரியவில்லை.
பாலாவிற்கு தன் காலுக்குக் கீழ் உள்ள நிலம்
நழுவியதுபோல் இருந்தது.
நான் வேலைக்குப் போகிறேன்...நான் வேலைக்குப்
போகிறேன் என்று கொண்டாட்டத்தோடு பள்ளிக்குள்
நுழைந்தவள் மனம் அப்படியே...கூம்பிப் போயிற்று.
"போங்க...வகுப்புக்கு போங்க
போய் பிள்ளைகளுக்காவது ஒழுங்காக
பாடம் சொல்லிக் கொடுங்க...."
துரத்தினார் அதிகாரி.
இப்போது கால்களில் நடப்பதற்கும்
தெம்பில்லாதது போல இருந்தது.மெதுவாக
கதவைப் பிடித்தபடி நடந்தாள்.
பார்த்து...பார்த்து கீழே விழ
இருந்தவளை பிடித்து
வகுப்பிற்குள் கொண்டு வந்து இருத்தினார்
உதவியாளர்.
என்ன இது.....?என்பதுபோல உதவியாளர்
முகத்தைப் பரிதாபமாகப்
பார்த்தாள் பாலா.
"பரவாயில்லை மேடம்....போகப்போக
எல்லாம்
சரியாகிவிடும் "என்று சொல்லிவிட்டு
அங்கிருந்து நகர்ந்தார் உதவியாளர்.
இனி இப்படித்தானா?
மகிழ்ச்சியை முற்றிலும்
தொலைத்துவிட்ட மனநிலையில் அப்படியே
உட்கார்ந்திருந்தாள் பாலா.
Comments
Post a Comment